Saturday, December 29, 2018

2018 - எனக்கு ‘மிகவும்’ பிடித்த படங்கள்


சென்ற புத்தாண்டு சபதமாக எழுதியது இது : // இந்த ஆண்டு சபதமாக, ஒரு படம் நல்ல படம் என்று உறுதியாகத் தெரிந்தால் தான் தியேட்டர் பக்கம் போவது என்று முடிவு செய்திருக்கிறேன். சிந்திய ரத்தமெல்லாம் போதும். முடிந்தவரை இந்த புத்தாண்டு சபதத்தை காப்பாற்றுவேன். ஜெய் ஜக்கம்மா! //

90% இந்த சபதத்தை நிறைவேற்றியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார், சுந்தர்.சி போன்ற எனக்குப் பிடித்தவர்களுக்காக பார்த்தவை மீதி 10%.

இந்த வருடம் சுமாராகவே ஆரம்பித்தது. முதல் நான்கு மாதங்களில் வந்த படங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. மே மாதம் வந்த இரும்புத்திரை தான் இந்த வருடத்தின் முதல் ஹிட் மூவி. வருடத்தின் இரண்டாம்பாதியில் தான் நல்ல படங்கள் வரிசையாக வந்து நம்மை அசர வைத்தன.
பார்த்ததில் பெஸ்ட் மூவீஸ் என்று 8 படங்கள் ரிலீஸ் வரிசையில்...

1. இரும்புத்திரை :
டிஜிட்டல் இந்தியாவின் ஆபத்தை கமர்சியலாகச் சொன்ன படம். டெக்னாலஜியை வைத்து படம் செய்யும்போது, புரியா விதத்தில் சொல்லிசொதப்புபவர்களே அதிகம். ஆனால் இயக்குநர் மித்ரன் சாமானியனுக்கும் புரியும்படி எளிமையாகவும் வலிமையாகவும் திரைக்கதையை அமைத்திருந்தார். இதுவொரு விழிப்புணர்வுப் படமாகவும் ஆனது. படம் பார்த்த பலரும் மொபைல் ஃபோனில் இருக்கும் ஆபத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப வருடங்களுக்கு அப்புறம், விஷாலுக்கும் ஒரு ஹிட்.

2. நடிகையர் திலகம் :
ஜெமினி போர்சனில் சொதப்பினாலும், ஒரு நல்ல பயோபிக் படம். வெறும் புகழ்ச்சிப்படமாக இல்லாமல், ஈகோவும் மதுவும் எப்படி திறமைசாலிகளைக்கூட அழிக்கின்றன என்று விரிவாக பதிவு செய்திருந்தார்கள். கீர்த்தி சுரேஷ் ,வெறும் இமிட்டேசனாக முடிந்து போகாமல், சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டியிருந்தார். இப்போதும் எந்த சீனை நினைத்தாலும்,சாவித்திரி முகம் தான் நினைவுக்கு வருகிறது. கீர்த்தியின் கரியரில் பெஸ்ட் மூவியாக இது எப்போதும் இருக்கும்.

3. கடைக்குட்டி சிங்கம் :
இன்றைக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை கத்துக்குட்டி இயக்குநர்களுக்கும் பாடம், இந்தப் படம். ’ஃபேமிலிசெண்டிமெண்ட் எல்லாம் எடுபடாது ,அதெல்லாம் சீரியல் கான்செப்ட்’ என்ற மாயையை உடைத்து, குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று நிரூபித்த படம். இப்போது எல்லாருமே பெரிதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று ‘ஹை-கான்செப்ட்’ தேடி அலைகிறார்கள். இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்று எல்லாருமே ‘பெருசா, ஆ-ன்னு அசந்து போற மாதிரி’ கதை தேடி அலைகிறார்கள். விளைவு, ஏ செண்டரில் அல்லது ஃபேஸ்புக்/ட்விட்டரில் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். கொரியன் படங்கள் பாதிப்பில் இந்த மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்பட்டு வரும் படங்களே இப்போது அதிகம்.

ஆனால் கடைக்குட்டி சிங்கம் ஒரு எளிமையான, இந்த மண்ணின் கதை. ‘ஹீரோ தன் அக்கா பெண்களை விட்டுவிட்டு, ஹீரோயினை காதலிக்கிறான். குடும்பம்/உறவு பிரிகிறது. அக்காக்களின் சம்மதத்தை வாங்கினானா, குடும்பம் ஒன்று சேர்ந்ததா?’ என்பது தான் கதை. இதை யாராவது புது இயக்க்குநர் வேறு தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தால், ‘இதெல்லாம் கதையா?’ என்று அடித்துவிரட்டியிருப்பார்கள். இந்த கதையில் இருந்த செண்டிமெண்ட்டை சூர்யாவும் கார்த்தியும் நம்பியதாலே, மக்களுக்கு நெருக்கமான இந்தப் படம் உருவனாது; எதிர்பார்த்தபடியே ஹிட் ஆனது.

4.மேற்குத் தொடர்ச்சி மலை :
நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழில் ஒரு யதார்த்தப் படம். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல், நாம் அருகே இருந்து பார்ப்பது போல், அப்படியே பதிவு செய்திருந்தார்கள்.அதிசயமாக, எல்லா மீடியாக்களும் மக்களும் இந்த படத்தைக் கொண்டாடினார்கள். மேலும் நல்ல படங்கள் வருவதற்கான உத்வேகத்தைக் கொடுத்த படம்.

5. பரியேறும் பெருமாள் :
மக்கள் மீதான அன்பும் அக்கறையும் தான் ஒரு படைப்பாளிக்கான முதன்மைத் தகுதிகள். அப்படிப்பட்ட படைப்பாளியாக மாரி.செல்வராஜ் அறிமுகமான படம். இந்த மண்ணில் நிலவும் சாதிவெறியை அப்பட்டமாக, பக்கச்சார்பின்றி, நேர்மையாக பதிவு செய்த படம். எதிராளியின் மனசாட்சியையும் தட்டி எழுப்பிய கதை சொல்லும் பாணி தான் இந்த வருடத்தின் முக்கியமான படமாக பரியேறும் பெருமாள்(மேல ஒரு கோடு)-ஐ ஆக்கியது.

6.96 :
’ஜானு, ஜாணூ’ என்று மக்களை கிறுக்குப்பிடித்து அலைய வைத்த படம். ஆட்டோகிராஃபின் அப்டேட்டட் வெர்சன். விஜய் சேதுபதி கரியரில் பெரிய ஹிட் மூவி. த்ரிஷா கரியரில் பெஸ்ட் மூவி. ஹீரோ & ஹீரோயினின் நடிப்பால் மட்டுமே இத்தகைய படங்களை வெற்றிபெற வைக்க முடியும். அதை சிறப்பாக இருவரும் செய்திருந்தார்கள். அதிரடியாக எதுவும் இல்லாமல், மெல்லிய மயிலறகால் வருடுவது போன்ற படமாக்கல் மூலமே
ஜெயித்தார்கள்.

சமீபத்தில் ஒரு ஹிந்தி விமர்சகர் யூ-டியூபில் இந்தப் படம் பற்றி பேசியிருந்தார். ‘ காதல் படம் என்ற பெயரில் கண்றாவிப் படம் எடுக்கும் ஹிந்தி இயக்குநர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்.' என்று சொல்லியிருந்தார். கீழே கமெண்ட்டில் ஹிந்திவாலாக்கள் இந்தப் படத்தை தமிழிலேயே பார்த்து, கொண்டாடியிருந்தார்கள். இந்த படத்தில் இருந்த ஃபீல், மொழி தாண்டி அனைவரின் மனதையும் தொட்டிருந்தது.

(இந்தப் படம் ஒரு உதவி இயக்குநரின் கதையைத் திருடி எடுக்கப்பட்டதாக புகார் கிளம்பியது. அதில் உண்மையிருக்க 50% வாய்ப்பு இருப்பதாகவே உணர்கிறேன். பாதிக்கப்பட்டவருக்குச் சொல்வதெல்லாம் ‘இந்த உலகம் இப்படித்தான்..இதிலேயே தேங்கிவிடாமல் மீண்டு வாருங்கள்!’)

7. ராட்சசன் :

தமிழில் ஒரு முழுமையான த்ரில்லர். பதற வைத்த படம். முண்டாசுப்பட்டி போன்ற காமெடிப்படம் கொடுத்த இயக்குநரிடம் இருந்து இவ்வளவு வீரியமான படத்தை எதிர்பார்க்கவில்லை. தமிழில் இருக்கும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக, ராட்சசன் அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. முனீஷ்காந்த்தும், விஷ்ணு விசாலும் கிறிஸ்டோபராக நடித்தவரும் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொடுத்திருந்தார்கள். எளிதில் மறக்க முடியாத படம், ராட்சசன்.

8. வட சென்னை :
தியேட்டரை விட்டு வரும்போது, மிரண்டு போய் வந்தது இன்னும் நினைவிருக்கிறது. புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு நம்மை மிரட்டிய ஒரு கேங்ஸ்டர் மூவி. ஒவ்வொரு சீனையும் செதுக்கியிருந்தார்கள்.
தேவையில்லாத கெட்டவார்த்தைப் பிரயோகங்களும் வெற்றிமாறனின் கனவுப்படம் எனும் அதீத எதிர்பார்ப்பும்தான் நெகடிவ்.
அற்புதமான மேக்கிங், ஜிலேபியை பிய்த்துப்போட்டது போல் பிணைந்து பிரியும் திரைக்கதை, தனுஷ், ஆண்ட்ரியா,அமீர், சமுத்திரக்கனி என ஏறக்குறைய எல்லா நடிகர்களின் சிறந்த நடிப்பு என்று பல பிளஸ் பாயிண்ட்கள். மொத்தத்தில் டெக்னிகலாக மிகச் சிறந்த படம் இது. புதுப்பேட்டை மாதிரியே கால ஓட்டத்தில் கல்ட் மூவி ஆகும் வாய்ப்பு உண்டு.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.