Friday, September 1, 2017

The Conformist (IL CONFORMISTA)- இத்தாலிய சினிமா - அறிமுகம்


தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் ஒரு சினிமாவைப் பார்க்கிறார். ‘படம் பிடிக்கலை..இதுவொரு குப்பை’ என்று சொல்கிறார். உடனே அவர் கடும் மிரட்டலுக்கு ஆளாகிறார். அவர் வீட்டுப் பெண்களைப் பற்றி வசைமழை பொழிகிறார்கள். தன் அடையாளத்தைக் குறிப்பிட்டே, ‘உன்னை கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார்கள். அவர் அந்த படத்தின் ஹீரோவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார், உங்கள் ரசிகர்களைக் கண்டியுங்கள்..அவர்களால் என் உயிருக்கு ஆபத்து என்று. அங்கேயிருந்து எந்த பதிலும் இல்லை. கனத்த மௌனம். ஒரு எழுத்தாளனின் உயிரைவிட ஒரு கமர்சியல் படத்தின் வசூல் முக்கியம் இல்லையா? அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போது விமர்சனம் எழுத, எழுத்தாளர் யோசிக்க வேண்டும் இல்லையா? 

‘நேர்மை என்றால் ஹமாம்’ என்பது போல் நல்லவர் என்றால் அந்த நடிகர் தான் எனும் பிம்பம், மீடியாக்களால் கடந்த பத்து வருடங்களாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. கிளிப்பிள்ளை மாதிரி எல்லோருமே இன்று அவர் நல்லவர் என்று ஒத்துக்கொள்வார்கள், நீங்கள் உட்பட. பாசிடிவ் செய்திகளைத் தவிர வேறு எதுவுமே எங்கேயும் வெளிவரவில்லை. நெகடி செய்திகளும் உடனடியாக நீக்கப்பட்டன, மறைக்கப்பட்டன. தற்போதுகூட ஒரு பிரபல இணையதளத்தில் அந்த படத்தின் விமர்சனம் ‘திருத்தி’ எழுதப்பட்டது. முதல்நாள் மோசமான படம் என்ற விமர்சனம், அடுத்த நாளே அருமை என்றது. இப்படி பாசிடிவ் செய்திகளை மட்டுமே கேட்டு பழகிப்போன ரசிகர்களுக்கு, திடீரென ஒரு படம் குப்பை என்று நெகடிவ் விமர்சனம் வரவும், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ‘என் தலைவன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்..அவர் படத்தையே குறை சொல்றியா?’ என்று மிரட்டலில் இறங்கிவிட்டார்கள்.

ஏன் விமர்சித்த எழுத்தாளனுக்கு ஃபோன் செய்து ‘கொன்று விடுவேன்’ என்று ‘சொன்னார்கள்’? ஏனென்றால் கையில் அதிகாரம் இல்லை, எனவே ‘சொன்னார்கள்’. இல்லையென்றால் செய்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில நல்லவர்களில் ஒருவர் என்று மீடியாக்களால் முன்னிறுத்தப்படும் நடிகரின் ரியாக்சனே இப்படி என்றால், மற்றவர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தனக்கு எதிரான கருத்தை யாரும் வெளியிட்டுவிடக்கூடாது, அந்த கருத்தும் கருத்தைச் சொல்பவரும் சமூகத்தில் இருந்தே ‘நீக்கப்பட’ வேண்டியவர்கள் என்பது தான் பாசிசம். இது சென்ற வாரத்தில் இங்கே நடந்த வரலாறு!

ஹிட்லர், முசோலினி போன்ற தனிமனிதர்களால் எப்படி ஒரு கூட்டத்தையே வெறிபிடிக்க வைக்க முடிந்தது என்பதற்கான பதில், இந்த சமகால நிகழ்வுகளில் ஒளிந்திருக்கிறது. எழுத்தாளரை மிரட்டியவர்கள் யார் என்று பார்த்தால், மிகப் பெரிய ரவுடியாகவெல்லாம் இருக்க மாட்டார்கள். சாமானியர்கள். அன்றாடங்காய்ச்சிகள். சுய அடையாளம் இல்லாதவர்கள். தன் தலைவனைப் பற்றியோ தலைவன் சம்பந்த விஷயங்களைப் பற்றியோ எதிர்மறைக் கருத்தை சகித்துக்கொள்ள முடியாத மனநிலைக்கு தள்ளப்பட்டவர்கள். மிகத் தீவிரமாக தன் தலைவனை நேசிப்பவர்கள். ஆனால் இவர்களை விடவும் மோசமான ஆட்கள் உண்டு, அவர்கள் தான் Conformists.


ஒரு சாதாரண திரைப்படத்திற்காக ஒரு இலக்கியவாதி மேல் தாக்குதலே நடந்தாலும், ஒன்றுமே நடக்காதது போல் கமுக்கமாக இருப்பவர்கள். அந்த நடிகராலோ அல்லது அவர்களின் ரசிகர்களாலோ கிடைக்கும் ஆதாயங்களை இழக்க விரும்பாதவர்கள். தனக்கு பயன் கிடைக்கும் என்று தெரிந்தால், ரசிகர் கூட்டத்துடன் இணைந்து தாக்குதலில் இறங்கக்கூடியவர்கள். இவர்களுக்கு ஃபாசிச தலைமையின் கொள்கை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெஜாரிட்டி ஆதரவு எந்தப் பக்கம் இருக்கிறதோ, எந்தப் பக்கம் இருந்தால் சௌகரியங்கள் கிட்டுமோ அந்தப் பக்கம் நிற்கக்கூடியவர்கள். ஃபாசிச தலைமையை விட, அவர்களை ஆதரிக்கும் கூட்டத்தை விட ஆபத்தான ஆட்கள் இந்த Conformists.

சினிமாக்களில் ஃபாசிச தலைமையைப் பற்றி படங்கள் வந்திருக்கின்றன. அவர்களை ஆதரிக்கும் கூட்டத்தைப் பற்றி, எதிர்க்கும் கூட்டத்தைப் பற்றி, பாதிக்கப்பட்ட கூட்டத்தைப் பற்றியெல்லாம் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த வகைகளில் சேராமல், சுயநலத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்காத, அதே நேரத்தில் கெட்டவர்கள் என்றும் ஒதுக்கிவிட முடியாத Conformists பற்றி இலக்கியங்களோ, சினிமாக்களோ அதிகம் பேசியதில்லை. காரணம், இதுவொரு சிக்கலான மனநிலை. ‘நிம்மதியாக, ஊரோட ஒத்து வாழ நினைக்கும் அப்பாவிகள்’ என்றும் இவர்களைச் சொல்லலாம், சுயநலத்திற்காக ஒரு தவறுக்கு துணை போகிறவர்கள் என்றும் சொல்லலாம். இந்த சிக்கலான கேரக்டரை காட்சிப்படுத்துவது மிகவும் கஷ்டம். அதை வெற்றிகரமாகச் செய்த படம் ‘ The Conformist (IL CONFORMISTA)'. 

இந்த படத்தின் ஹீரோவின் ஒரே லட்சியம், ஊரோடு ஒத்து வாழ்வது தான். சிறுவயதில் நடந்த சில மோசமான நிகழ்வுகளால், இயல்பான வாழ்க்கையில் இருந்து விலகிப்போனவன் அவன். எனவே ஒரு ’இயல்பு வாழ்க்கை’ வாழ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய விழைகிறான். 

பெரும்பாலான மக்கள் சர்வாதிகாரியின் பக்கம் நிற்கிறார்கள்; அவனும் அங்கே சேர்ந்துகொள்கிறான்.

பெரும்பாலான மக்கள் திருமணம் செய்து வாழ்கிறார்கள்; அவனும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். 

திருமணத்திற்கு முன் பாவ மன்னிப்பு கேட்கும் வழக்கம் இருக்கிறது; அவனும் போய் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறான். ஆனாலும் அதுவரை செய்த தவறுகளைத் தொடர்கிறான்.

ஹனிமூன் ட்ரிப்புக்கு அவன் கிளம்புகையில், அவனுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. ஃபாசிசத்திற்கு எதிர் கருத்து கொண்ட அவனது கல்லூரிப் பேராசிரியரைக் கொல்ல வேண்டும். அவனுக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் அவர். ’அதனால் என்ன?’ என்று ஹனிமூன் ட்ரிப்பின் ஆன் தி வேயில் அவரைக் கொலை செய்ய ஃப்ரான்ஸ் போய் இறங்குகிறான். அங்கே சிக்கல், ‘அன்னா’ வடிவில் வருகிறது.

அவளைப் பார்த்ததும் காதலில் விழுகிறான். அன்னா ஒரு பேரழகி. ஆனால் வயதான பேராசியரின் இளம் மனைவி. இப்போது காதலுக்காக(!) பின்வாங்குவதா? அல்லது தனது இயல்பு வாழ்க்கை தொடர பேராசியரை போட்டுத்தள்ளுவதா? புது மனைவியை என்ன செய்வது? அன்னாவும் சில நாட்களில் அவன் பேராசியரைக் கொல்ல வந்தவன் என்று புரிந்துகொள்கிறாள். அவளை மீறி, பேராசியரைக் கொல்ல வேண்டும். தேவைப்பட்டால், அவளையும் கொல்ல வேண்டும்! என்ன செய்வான் ஹீரோ?
ஃபாசிசம் எந்த அளவிற்கு மோசமானது என்று அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளும், கிளைமாக்ஸும் நமக்குச் சொல்கின்றன. படம் முடிகையில் திகைத்துப்போய்த் தான் அமர்ந்திருக்கிறோம். கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டாலும் நாமும் ஒரு Conformist ஆக மாறும் அபாயம், நம் வாழ்க்கையில் இருப்பதை படம் சுட்டிக்காட்டுகிறது.

இத்தாலிய சினிமாக்களில் பை சைக்கிள் தீவ்ஸ், சினிமா பாரடைசோ பற்றிப் பேசப்பட்ட அளவிற்கு, ஏனோ இந்தப் படத்தைப் பற்றிப் பேசப்படவில்லை. இந்த படத்தின் ஒளிப்பதிவு, உலகப் புகழ்பெற்றது. பல ஃபிலிம் இன்ஸ்டுயூட்களில் ஒளிப்பதிவிற்காக ஸ்டடி செய்யப்படுவது!

என்னைப் பொறுத்தவரை இது தான் இத்தாலிய சினிமாக்களில் பெஸ்ட் என்பேன்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

  1. நண்பரே நலமா , தங்கள் நினைவு வந்தது வந்தேன், நீண்ட கருத்து. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நலம் நண்பரே..எத்தனை நாட்களாகிவிட்டது...ஃபேஸ்புக்கில் இருக்கிறேன். நம் மொத்த கூட்டமும் அங்கே தான் கிடக்கிறது. முடிந்தால், இணைந்துகொள்ளுங்கள்.

      Delete
  2. Fb I'd தாருங்கள் நண்பரே

    ReplyDelete
  3. அதிலும் செங்கோவி என்றே உள்ளது நண்பரே லைக் குடுத்து அறிமுகம் செய்து கொண்டேன்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.