Saturday, September 16, 2017

துப்பறிவாளன் - திரை விமர்சனம்

முகமூடிக்குப் பிறகு மீண்டும் ஒரு கமர்சியல் ஹீரோவுடன் கமர்சியல் படம் என்று மிஷ்கின் அறிவித்தபோது, கொஞ்சம் பயமாகவே இருந்தது. இருந்தாலும், முகமூடி சொதப்பிவிட்டதை மிஷ்கினே ஒத்துக்கொண்டதால், பழைய தவறுகளைக் களைந்து தரமான கமர்சியல் படமாக வரும் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை கணியன் பூங்குன்றனாக தமிழ்ப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது மிஷ்கின் டச். துப்பறிவாளன் கேரக்டருக்கு இது முதல் படம்(பார்ட்) என்பதால், கணியன் யார், எப்படிப்பட்டவன் என்று நமக்கு புரியவைக்க கொஞ்சம் அதிக நேரத்தையே படம் எடுத்துக்கொள்கிறது. ஆனாலும் கணியனின் புத்திசாலித்தனத்தையும், கிறுக்குத்தனத்தையும் நாம் புரிந்துகொண்டால் தான், இரண்டாம்பகுதி பரபரப்ப்பில் கணியன் செய்யும் சிறு நகாசு வேலைகளைக்கூட நாம் புரிந்து ரசிக்க முடியும். உதாரணம், ஹோட்டல் ரிசப்சனில் மொட்டை மறைந்ததும் ஜான் விஜய்க்கு ஆபத்து என்று ஓடுவது.

பெரிய பெரிய கேஸ்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லும் ஹீரோ, ஒரு சிறுவனின் நாய்க்குட்டி கேஸை எடுத்துக்கொண்டு துப்பறிவது தான் கதை. மிக எளிமையான கேஸ் என்று தோன்றுவது, தேன் கூட்டில் கைவைத்தது போல் பல சிக்கல்களுக்குள் ஹீரோவையும் நம்மையும் கொண்டு செல்கிறது. முதல் ஃபைட் சீனில் ஆரம்பித்து, கிளைமாக்ஸ்வரை ரோலர் கோஸ்டர் பயணம் தான்.

டெவில் குரூப்பின் வேலைகளை ஹீரோ துப்பறிந்து நெருங்க, நெருங்க, டெவில் குரூப் தன்னைத்தானே ஓவ்வொருவராக அழித்துக்கொள்வது தமிழுக்கு புதுமை தான். ஹீரோவோ போலீஸோ வில்லன் குரூப்பை கொல்வதில்லை. அவர்களே தங்களை கொன்றுகொல்கிறார்கள்; மெயின் வில்லன் டெவில் மட்டுமே எஞ்சி ஹீரோ கையால் சாகிறான்.

கமர்சியல் ஆடியன்ஸுக்காக இதில் மிஷ்கின் நிறைய இறங்கி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பாக்கியராஜ் நெஞ்சில் குத்தப்படும்போது, நெஞ்சுவலி என்று பாக்கியராஜ் ‘நடித்த’ ஷாட் வந்து போவது ஒரு உதாரணம். இந்த மாதிரி ஸ்பூன் ஃபீடிங் வேலைகள், மிஷ்கின் ரசிகர்களுக்குத் தேவையில்லை. கால்களை காட்டும் ஷாட் இல்லாதது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எங்குபோனாலும் அறிவுஜீவிகள் கால்களைப் பற்றியே கேட்டு, மிஷ்கினை வெறுப்பேற்றிவிட்டார்கள் போல. ஒருவர் சினிமாவில், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. மணிரத்னம் என்றால் இருட்டு, ரஜினி என்றால் தலை கோதுதல் என்று கஷ்டப்பட்டு ஒரு அடையாளத்தை பிடித்து வைத்தால், அறிவுஜீவிகளுக்கு அது பொறுப்பதில்லை. ‘ஏன் இருட்டுலயே படம் எடுக்கிறார்?...ஏன் கமல் மாதிரி நடிக்க மாட்டேங்கிறார்...ஏன் காலையே காட்டுகிறார்’ என்று கிளம்பி வந்துவிடுகிறார்கள். இதற்கு மிஷ்கின் இறங்கிப்போவது சரியல்ல.


விஷாலுக்கு இதுவொரு முக்கியமான படம். ஆரம்பக் காட்சிகளில் கணியன் பூங்குன்றனாக மிஷ்கின் சேட்டைகளுடன் வெடுக்,வெடுக்கென அவர் நடப்பதும் பேசுவதும் பீதியூட்டினாலும், கொஞ்சநேரத்தில் அந்த கேரக்டர் நம் மனதில் உட்கார்ந்துவிடுகிறது. இரண்டாம்பாதியில் வரும் ஆக்சன் சீகுவென்ஸ், விஷாலுக்கு சரியான வேட்டை என்று தான் சொல்ல வேண்டும். மவுத் ஆர்கன் ஃபைட்டும் சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஃபைட்டும், பைக் சேஸிங்கும் விஷால் இறங்கி அடிக்கும் களங்கள்.


ஒருமுறை ஜாக்கிசான் ஃபைட் சீன்ஸ் பற்றிப் பேசும்போது ‘அதில் ஒரு ரிதம் இருக்கும். அதுவும் ஒருவகை நடனம் தான்’ என்று சொல்லியிருந்தார். அவரது சைனீஸ் படங்களில் அதை நாம் பார்க்கலாம். ஆனால் ஹாலிவுட் படங்களில் அந்த ரிதம் இருக்காது. துப்பறிவாளன் சண்டைக்காட்சிகளில் அந்த ரிதத்தை உணர முடிந்தது. சைனீஸ் ரெஸ்டாரண்ட் சண்டைக்காட்சியில், மியூசிக்கும் கருப்பு-சிவப்பு-வெள்ளை கலர் பேலட்டும் மயிர்க்கூச்செறியும் ஃபாஸ்ட் மூவ்மெண்ட்டும் நம்மை கிறங்கடிக்கின்றன. அதிலும் ஷூ-விற்கு க்ளோசப் வைத்து ஒரு சின்ன டிரம்ஸ் பீட் போட்டிருக்கிறார்கள்..கொன்னுட்டாங்க!

பிரசன்னா தான் நமக்கு காமிக் ரிலீஃப் கொடுப்பது. நிறைய காட்சிகளில் அவரது ‘ம்..ஆ’போன்ற ஒற்றை வார்த்தை ரியாக்சனுக்கே சிரிப்பலை எழுகிறது. பவர் பாண்டிக்கு அடுத்து இதிலும் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக பிரசன்னா ஜெயித்திருப்பது சந்தோசம்.

ஹீரோயின் அனு இமானுவேல், நல்ல அறிமுகம். மருண்ட பார்வையுடன் விஷாலை அவர் எதிர்கொள்வதே அழகு. ‘கடைசிவரை’ பிக்பாக்கெட்டாக இருந்து, நம்மை கொள்ளை கொள்கிறார். மிஷ்கின், கால்களை கைவிட்டாலும் ஹீரோயினின் கைகளுக்கு இரு முக்கிய இடங்களில் க்ளோசப் வைக்கிறார். ஒன்று, ஹீரோ கைகளில் முத்தமிடும்போது...அடுத்து, வினய்யை ஹீரோயின் வீட்டுக்குள் அழைக்கும்போது. ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரின் வேலையே, இப்படி பார்வையாளர்களின் சப்-கான்ஸீயஸ் மைண்டுடன் விளையாடுவது தான். ராபர்ட் ப்ரெஸ்னனின் பிக்பாக்கெட் மூவியில், கைகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இதிலும் அதிகம் அப்படி எதிர்பார்த்தேன். இரு இடங்களில் மட்டும் வலுவாக ‘பிக்பாக்கெட்டின்’ கைகளை காட்டி முடித்துவிட்டார்.

ஹீரோயினை வேலைக்கு அழைக்கும் ஹீரோ, அவரது பிக்பாப்பெட் மூளையை துப்பறிவதற்கு பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்த்தால், வீட்டு வேலைக்காரி ஆக்கியது  கொடுமை.

மிஷ்கினை நாம் நேசிப்பதற்குக் காரணம், ஒவ்வொரு சீனையும் அழகாக்கவும் நேர்த்தியாக வடிவமைக்கவும் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தான். ஹீரோவின் வீடு வடிவமைக்கப்பட்ட விதமும், அதன் க்ரீன் - ப்ரொவ்ன் கலர் பேலட்டும் ஒரு புதிய லுக்கை கொடுக்கின்றன. கதை சென்னையில் தான் நடக்கிறது. முடிந்தவரை பேக்ரவுண்டை ப்ளர் ஆக்கி, காட்சிகளை அழகாக்குகிறார். ஒரு சீனில் அவர் காஃபி போட வேண்டும். அது சாதாரண காஃபி அல்ல. மரணத்திற்கான தூது. அந்த இடத்தில் வெர்மீரின் கிச்சன் மெய்ட் (மில்க் மெய்ட்) பெயிண்டிங்கை பயன்படுத்துகிறார்.

சினிமா என்பது பல கலைகளின் சங்கமம் ஒரு நல்ல கலை ரசிகன் ஃபிலிம் மேக்கர் ஆகும்போது, உலகில் உள்ள கலைகளையும் சாத்திரங்களையும் தன் படைப்பினுள் கொண்டுவருகிறான். வான்கோவின் ஓவியங்களும் வெர்மீரும் ஓவியங்களும் பல காட்சிகளுக்கு இன்ஸ்பிரேசன் ஆகியிருக்கின்றன. அகிரா குரசோவாவின் ட்ரீம்ஸ் ஒரு நல்ல உதாரணம். ஒரு தமிழ் படத்தில் வெர்மீரின் ஓவியத்தையும், அதை பிரதிபலிக்கும் ஷாட்டையும் பார்த்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ( இதையும் ஒரு இணைய அறிவுஜீவி, காப்பி என்று கிண்டல் அடித்திருந்தார். தலையில் அடித்துக்கொண்டேன்! )

வினய்-ஆண்ட்ரியா-பாக்கியராஜ்-மொட்டை-தாடி-ஜான் விஜய் என்று வில்லன் கும்பலையும் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பையும் படம் அழகாக பதிவு செய்கிறது. மொட்டை தற்கொலை செய்யும் காட்சி கவிதை என்றால், பாக்கியராஜ் சாகும் காட்சி சோகம். வில்லன் என்றாலும் பாக்கியராஜுக்குள் ஒரு மனிதம் இருக்கும். தனக்கு நெஞ்சுவலி என்று பதறிய கார் டிரைவருக்கு பணம் கொடுப்பதும், அவன் சாகப்போவது தெரிந்து திரும்பிப் பார்த்தபடி போவதும், மனைவிக்கு விடுதலை கொடுப்பதும் டச்சிங்கான சீன்ஸ். பாக்கியராஜை பேசவிட்டால் சொதப்பிவிடும் என்று ஒரு வரி டயலாக்கிலேயே மேனேஜ் செய்திருப்பது மிஷ்கினின் புத்திசாலித்தனம்.

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்......................

ஆரம்ப காட்சிகள் நீளமாக, பொறுமையைச் சோதிக்கின்றன. ஹீரோயின் கேரக்டரைத் தவிர வேறு எந்த கேரக்டருமே நம் மனதைத் தொடுவதில்லை.

துப்பறிவாள் வில்லனைப் பிடிக்கிறார். அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள், இது முழுமையாக என்ன கேஸ் என்பது தான் ஆடியன்ஸுக்கு சுத்தமாக விளங்கவில்லை. எல்லாவற்றையும் வசனத்திலேயே சொல்ல, கமலேஷ் யார், ராம் ப்ரசாத் யார் என்று நாம் யோசிப்பதற்குள் படம் முடிந்துவிடுகிறது.

துப்பறிவாளன் என்ன கண்டுபிடித்தார் என்று கேட்டால் ‘கமலேஷ் காசு கொடுத்தான். சொர்ணவேல் பையன் செத்தான். சிம்ரனை விட சொர்ணவேல் பொண்டாட்டி அழகு. அது தெரிஞ்ச சிம்ரன் புருசனும் செத்தான். சொர்ணவேல் ஃபீல் ஆகிட்டான். அவனை டெவில் கொன்னுட்டான். டெவில் யார்னா, டெவில் டெவில் தான். நாயை டெவில் போட்டான். அப்புறம், ஆரணி ஜான் விஜய்யை கொன்னுட்டாள். ஜான் விஜய் சோஃபா கொண்டுவந்தவன். ஆனால் அதுக்குள்ள இருந்த பணம், ராம் பிரசாத் கொடுத்தது. ராம் பிரசாத் சிரிச்சு செத்தார். பாக்கியராஜ் தவண்டு செத்தார். டெவில் காஃபி குடிச்சான். டர்ர்னு சொர்ணவேலை அறுத்துக் கரைச்சான். விக்டர் ஹெல்ப் பண்ணான். ஆரணியை டெவில் போட்டான். பிச்சாவரம் போய்
ஃபாரின் போக பார்த்தான். பாவம், சாரி கேட்டு செத்தான் டெவில்’. இது தான் நடந்தது. புரிஞ்சதா?

படம் முழு திருப்தி தராமல் போகக் காரணமே, என்ன எழவு நடந்தது என்றே புரியாமல் போனது தான். இதை மட்டும் இன்னும் தெளிவாகச் சொல்லியிருந்தால், துப்பறிவாளன் எல்லா செண்டரிலும் ஹிட் ஆகியிருக்கும்.

இருப்பினும், ஒரு விறுவிறுப்பான & தரமான ஆக்சன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு துப்பறிவாளன் செமயான விருந்து தான்...தாராளமாகப் பார்க்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.