Tuesday, October 10, 2017

NETWORK (1976) - சினிமா அறிமுகம்






நீ இயற்கையின் ஆதார சக்திகளுடன் விளையாடிவிட்டாய் மிஸ்டர்.பேல்..ஒரு பிஸினஸ் டீலை நிறுத்திவிட்டதாக நீ நினைக்கிறாய். அப்படி இல்லை..அரபிகள் பில்லியன் கணக்கான டாலர்களை இங்கிருந்து வெளியே எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போது அதை அவர்கள் திரும்ப இங்கே கொண்டுவர வேண்டும்.

 இது அலையின் ஏற்றமும் இறக்கமும் போல…இயற்கைச் சமநிலை. நாடுகள், நாட்டு மக்கள் எனும் பார்வையில் சிந்திக்கும்  கிழவன் நீ.

நாடு என்று எதுவும் இல்லை. ரஷியன் என்று யாரும் இல்லை. அரபிகள் என்று யாரும் இல்லை. மூன்றாம் உலக நாடுகள் என்று எதுவும் இல்லை. மேற்குலகு என்று எதுவும் இல்லை.

இங்கே இருப்பது எல்லாம் டாலரின் புனிதமான சிஸ்டம்களின் சிஸ்டம்ஸ் மட்டுமே..ஒரு பரந்து விரிந்த, பெரிய, ஒன்றோடொன்று நெய்யப்பட்ட, ஒன்றையொன்று கலந்துகொள்ளும், பலவகைப்பட்ட, சர்வதேச டாலரின் காலனிகள் மட்டுமே!

பெட்ரோ டாலர்ஸ், எலக்ட்ரோ டாலர்ஸ், மல்டி-டாலர்ஸ்..ரீச்மார்க்ஸ், ரப்ள்ஸ், ரின், பவுண்ட் & ஷெக்ள்ஸ்.

சர்வதேச பணம் தான் இந்த பூமிக்கிரகத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிப்பது. அது தான் அனைத்தின் இயற்கையான ஒழுங்கு.

இன்று, அது தான் பொருட்களின் அணு அமைப்பு. நீ அந்த இயற்கையின் ஆதார சக்திகளுடன் விளையாடிவிட்டாய். நீ அதை சரிசெய்தே ஆகவேண்டும். புரிகிறதா, மிஸ்டர்.பேல்?

நீ உனது சின்ன 21 இன்ச் டிவி ஸ்க்ரீனின் எழுந்து நின்றுகொண்டு, அமெரிக்காவைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் அலறுகிறாய். இங்கே அமெரிக்கா என்று ஏதுமில்லை. இங்கே ஜனநாயகம் என்று ஏதுமில்லை.
     
இங்கே இருப்பது எல்லாம் ஐபிஎம், ஐடிடி, டவ், யூனியன் கார்பைடு போன்ற கார்ப்போரேசன்ஸ் தான். இவை தான் இன்றைய உலகின் நாடுகள்.

 

ரஷ்யாக்காரன் கார்ல் மார்க்ஸ் பற்றியா இன்று அவர்கள் கவுன்சிலில் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறாய்?

நம்மைப் போலவே, லினியர் புரோக்ராமிங் சார்ட்களையும், புள்ளிவிவர தியரிகளையும் எடுத்துக்கொண்டு, முதலீடுகள் & பணப் பரிமாற்றங்களைப் பற்றி கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் கொள்கைகளையும் நாடுகளையும் சார்ந்த உலகில் வாழவில்லை, இனி வாழப்போவதுமில்லை.

இந்த உலகம், யாராலும் தடுக்க முடியாத பிஸினஸ் சட்டங்களால் முடிவுசெய்யப்படுகிற கார்போரேசன்களின் பல்கலைக்கழகம்.

பிஸினஸ் தான் உலகம், மிஸ்டர்.பேல்!

--
1976ல் வெளியான Network படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் இது. சட்டயர் காமெடி மூவியாக உருவாகி, இன்று எதிர்காலத்தை முன்பே கணித்துச் சொன்ன காவியமாக போற்றப்படுவது நெட்வொர்க் .

12 ஆங்க்ரி மென் – க்குப் பிறகு இயக்குநர் சிட்னி லுமெட்டின் படங்களின் எனக்கு மிகவும் பிடித்த படம்.

ஒரு டிவி அலுவலம் தான் கதைக்களம். டி.ஆர்.பிக்காக எந்த அளவிற்கு டிவி உலகம் இறங்கும் என்ற கணிப்பில் உருவான படம். ஒரு காமெடிக்காக எழுதப்பட்ட காட்சிகள் எல்லாம் இன்று உண்மையிலேயே நடந்தேறி, சீரியஸ் படமாக இன்று நெட்வொர்க் ஆராதிக்கப்படுவது வேதனையான வேடிக்கை.


Network, சினிமா வரலாற்றில் வந்த பத்து சிறந்த திரைக்கதைகளில் ஒன்று, 100 சிறந்த சினிமாக்களில் ஒன்று!

உயிரைக் கொடுத்து நடிப்பது என்பதற்கு நடிகர் பீட்டர் ஃபின்ச் (மிஸ்டர்.பேல்), இந்த படத்தில் நடித்தது தான் சரியான உதாரணமாக இருக்க முடியும். இந்த படத்தில் நடித்ததாலேயே சீக்கிரம் மண்டையைப் போட்டார் மனுசன்!

ஹீரோயின் Faye Dunaway வெளுத்து வாங்கியிருப்பார்.
Gone with wind படத்திற்குப் பிறகு, மிகவும் சிக்கலான ஹீரோயின் பாத்திரம் இது. இந்த இரண்டு நடிகர்களுமே ஆஸ்காரை தட்டிச் சென்றது ஆச்சரியம் இல்லை.

டிவி உலகம் / டிஆர்பி கதைக்களத்தில் சமீபத்தில் தமிழில் வந்த மொக்கைப்படங்களால் புண்பட்டவர்கள், இந்த படத்தைப் பார்க்கலாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.