Friday, October 20, 2017

மெர்சல் - ஆக்கினார்களா?



’உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று முன்பெல்லாம் டைட்டில் போடுவார்கள். நிறைய நட்சத்திரங்கள் நடிக்கும்போது, இப்படிப் போடுவது வழக்கம். அட்லி படங்களைப் பொறுத்தவரை ‘உங்கள் அபிமான திரைப்படங்கள் பங்குபெறும்’ என்று தாராளமாக டைட்டில் போடலாம். 

சிவாஜியில் ஆரம்பித்து, தலைவாவிற்குப் போய், மூன்றுமுகத்தை மிக்ஸ் செய்து, கத்தியைத் தொட்டு, பழைய எம்ஜிஆர் படங்களையெல்லாம் ஞாபகப்படுத்தி, ரமணா, டங்கல், பாகுபலியைக் கூட விடாமல் டச் செய்து, அபூர்வ சகோதரர்களின் கதையைச் சொல்லியிருக்கிறார் அட்லி. கொஞ்சம்கூட புதிதாக எதையும் செய்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்திருக்கிறார்கள். 

முதலில் ஒரு சமூக அக்கறையுள்ள மெசேஜை கொடுத்ததற்காக விஜய் & அட்லியை பாராட்டியே ஆகவேண்டும். விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் சில விஷயங்களைப் பேசும்போது, அதனுடைய ரீச் அதிகம். டிமானிடைசேசன், ஜிஎஸ்டி, மனிதம் இழந்துவிட்ட மருத்துவத்துறை என்று பொளந்துகட்டுகிறார்கள். 

கேட்டுச் சலித்த ஒரு பழிவாங்கும் கதை. அப்பாவை வில்லன்கள் கொன்றுவிட, பிள்ளைகள் வளர்ந்து ஃபாரின் போயாவது பழிவாங்கி முடிக்கிறார்கள். 

மூன்று வேடங்களில் ஹீரோ என்றால், மூன்று ஹீரோயின்கள் இருந்தே ஆக வேண்டுமா? அப்படியே இருந்தாலும், மூன்று பேருக்கும் லவ் சீன்ஸும் டூயட்டும் வைத்தே தீர வேண்டுமா? காஜல் அகர்வால் வர்றதே நாலு சீன்..எப்படியும் மூணு-நாலு கோடி சம்பளம் கொடுத்திருப்பார்கள். ராம.நாரயாணன் ஆவி இந்நேரம் தற்கொலை செய்துகொண்டிருக்கும்.

இன்னொரு பக்கம், பரிதாபமாக ஏ.ஆர்.ரகுமான். படம் ஒரு ரேஞ்சில் போய்க்கொண்டிருக்க, பாட்டு & பிண்ணனி இசையில் டப்பாவை உருட்டலாமா, வேண்டாமா என குழப்பத்திலேயே மியூசிக் என எதையோ செய்துவைத்திருக்கிறார். நமக்கு எதுக்கு பாய் விஜய் படமெல்லாம்? ஆளப் போறான் பாட்டே விஷுவல்ஸால் தான் தப்பிக்கிறது. மற்ற பாட்டெல்லாம் கொடூரம்.

மூன்று பேர் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். அதற்காக இம்புட்டு நீளமா? ஏத்துன டிக்கெட் விலைக்கும் சேர்த்து, எக்ஸ்ட்ராவா படம் காட்டுற உங்க நல்ல மனசுக்கு தேங்க்ஸ்..ஆனாலும் வேணாம், முடியல. 

நமக்கு வருத்தமே, துப்பாக்கி மாதிரி சூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம் இது. வெற்றி-மாறன் - வெற்றிமாறன் என மூன்று ரசிக்க வைக்கிற கேரக்டர்ஸ், தளபதி எபிசோடு, காளி வெங்கட் ஃப்ளாஷ்பேக், ரசிகர்களை விலடிக்க வைக்கும் பல காட்சிகள்/வசனங்கள் என பல நல்ல விஷயங்களை வைத்துவிட்டு, வழவழா, கொழகொழாவென்று இழுத்து இழுத்து கதை சொல்கிறார்கள். கொடுமையாக, கிளைமாக்ஸுக்குப் பிறகும் படம் ஓடுகிறது. கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால், கில்லி-போக்கிரி வரிசையில் மெர்சலும் சேர்ந்திருக்கும்.

அதற்காக, பைரவா கேட்டகிரியும் இல்லை; அதற்கும் மேலே தான்.

‘நான் பெரிய ஸ்டார்..நான் சும்மா வந்து குறுக்க மறுக்க நடந்தாலே போதும்’ என்று நினைக்காமல், மூன்று வேடங்களுக்காக விஜய் கொட்டியிருக்கும் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும். குறும்பான வெற்றியும், சற்று இறுக்கமான மாறனுமாக அவர் காட்டியிருக்கும் நுணுக்கமான நடிப்பு, முந்தைய படங்களில் இல்லாதது. ஃப்ளாஷ்பேக்கில் மாறன் வரும்போது, தியேட்டர் தெறிக்கிறது. நித்யா மேனன் சாகும் காட்சியில், விஜய்யின் நடிப்பு அட்டகாசம். ஏ சூப்பர்ப்பா, நீ இப்படில்லாம் நடிச்சு பார்த்ததில்லைப்பா! 

விஜய்யின் வசனங்களிலும் அனல் பறக்கிறது. ஒரு நல்ல மெசேஜை விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் பேசும்போது கிடைக்கும் ரீச் அதிகம். விவசாயம், கல்வி, மருத்துவம் என தொடர்ந்து தன் படங்களில் சமூகப் பிரச்சினைகளை விஜய் கதைப்பொருளாக எடுத்துக்கொள்வதை பாராட்டியே ஆகவேண்டும்.

மூன்று ஹீரோயின்களில் நித்யா மேனனுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அவ்வளவு பெரிய ஸ்க்ரீனில் அவ்வளவு பெரிய நித்தியைப் பார்க்க கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஜோதிகா நடித்திருக்க வேண்டிய கேரக்டர். கடைசி நேரத்தில் அவர் காலைவாரிவிட, நித்தியை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். சமந்தாவின் ‘ரோஸ் மில்க் வாங்கித் தர்றேண்டா’ சீன்களும், அந்த டயலாக் டெலிவரியும் செம ரகளை. மற்ற சீன்களில் காஜல் மாதிரியே இவரும் வேஸ்ட்!

’சுடலை’ சூர்யாவிற்கு இதெல்லாம் சப்பை கேரக்டர். ‘இன்னும் முப்பது வருசத்தில் நார்மல் டெலிவரின்னா ஆச்சரியப்படுவாங்க’ என்று சொல்லும் இடத்தில் மட்டும் ஸ்கோர் செய்கிறார்.

கோவை சரளா, சத்யராஜ், வடிவேலு எல்லாம் இருக்கிறார்கள். இப்போதே ஏறக்குறைய மூணு மணிநேரம். இவர்களையும் ஒழுங்காக பயன்படுத்தியிருந்தால், விடிந்திரிக்கும். ஆனாலும், டிமானிடைசேசன் பற்றி வடிவேலு பேசும் டயலாக்கிற்கு தியேட்டரே அதிர்ந்தது. ‘வீ ஆர் ஃப்ரம் இண்டியா...ஒன்லி டிஜிட்டல் மணி..நோ கேஷ்..ஆல் பீப்பிள் ஸ்டேண்டிங் க்யூ..உங்கிட்ட சொல்றதுக்கு என்ன, எல்லாம் நக்கிட்டுத் திரியறோம்’ என சைகையுடன் வடிவேலு பேசும்போது கிடைக்கும் கைதட்டல்கள், மக்கள் எவ்வளவு கடுப்பில் இருக்கிறார்கள் என்று காட்டுகின்றன.

மொத்தத்தில், இழுவையான சில சீன்களையும் தேவையற்ற சில சீன்களையும் பொறுத்துக்கொண்டால்...................

குடும்பத்துடன் பார்த்துக் கொண்டாடக்கூடிய படம் தான், மெர்சல்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.