சினிமாவில் எப்போதும் ஜெயிக்கிற சில கதைகள் உண்டு; டபுள் ஆக்ட்டிங், பழி வாங்குதல் போல, தேவதாஸ் கதைக்கு அழிவே கிடையாது. ஒரு உன்னதமான காதல், அதன் தோல்வியால் விரக்தியில் வாடும் ஹீரோ, இறுதியில் இணையும் அல்லது சாகும் ஜோடி என்பதை வைத்து பலவிதங்களில் தேவதாஸ் கதை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
தேவதாஸ், வசந்த மாளிகை, வாழ்வே மாயம் எல்லாம் இன்றும் பேசப்படும் கதைகள். சேதுவின் கதையும் அடிப்படையில் தேவதாஸ் கதை தான். தமிழ் சினிமாவையே உலுக்கிய சேது வெளியாகி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியாக தேவதாஸ் கதை மீண்டும் ஜெயித்திருக்கிறது.
தேவதாஸ், வசந்த மாளிகை, வாழ்வே மாயம் எல்லாம் இன்றும் பேசப்படும் கதைகள். சேதுவின் கதையும் அடிப்படையில் தேவதாஸ் கதை தான். தமிழ் சினிமாவையே உலுக்கிய சேது வெளியாகி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியாக தேவதாஸ் கதை மீண்டும் ஜெயித்திருக்கிறது.
பாசம், காதல், கோபம் என எல்லா உணர்ச்சிகளையும் அதிரடியாக வெளிப்படுத்தும் ’சேது’ கேட்டகிரி ஆள், அர்ஜுன் ரெட்டி. ஆர்த்தோ சர்ஜியனாகவும் குடிகாரனாகவும் பெண்களுடன் சல்லாபிப்பவனாகவும் அறிமுகமாகிறார் ஹீரோ. ‘என்னடா, இப்படிப்பட்ட ஆளாக இருக்கிறானே’ என்று நாம் அதிர்ச்சியாகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் ஒரு அழகான காதல் கதை மலர்கிறது. இத்தகைய படங்களின் கமர்சியலுக்கு வெற்றிக்கு அடிப்படையே, இந்த காதல் அழுத்தமாகச் சொல்லப்படுவது தான். இதில் சொதப்பினால், பின்னால் வரும் எமோசனல் சீன்ஸ் எதுவுமே எடுபடாது.
அதை அர்ஜூன் ரெட்டியில் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இது ‘அன்பே...ப்ராணநாதா’வகை புனிதக் காதல் அல்ல என்பது தான் விஷேசம். ஐயாயிரத்திற்கு மேற்பட்ட முத்தங்களுடனும் 549 கலவிகளுடன் இந்த காதல் சொல்லப்படுகிறது. ‘எனக்கு அவளைப் பார்த்தால் தப்பாவே தோணினது இல்லை மச்சி’ என்பது போன்ற டுபாக்கூர் போலித்தனங்களை விட்டுவிட்டு, இறங்கி அடித்திருக்கிறார்கள்.
இந்த காதல் பிரிவில் முடிவதும், தேவதாஸாக அர்ஜூன் ரெட்டி வாழ்வதையும் டீடெய்லாக பதிவு செய்கிறது படம். ஒரு முழு வாழ்க்கையைப் பார்த்த ஃபீலிங்கை கொண்டுவந்துவிடுகிறார்கள்.
கழிவிரக்கம் என்பது இருப்பதிலேயே மோசமான விஷயம். தனக்கு மட்டும் தான் கெட்டது நடப்பதாகவும், தான் மட்டுமே கைவிடப்பட்டதாகவும் நினைத்து நினைத்து, தன்னையே உருக்கி மாய்த்துவிடும் விஷயம், கழிவிரக்கம். மற்ற தோல்விகளைவிட, காதல் தோல்வி தான் எளிதாக கழிவிரக்கத்திற்கு இட்டுச் செல்லும். ‘இது மற்றவர்களுக்கும் நடந்த ஒரு விஷயம் தான். இதை கடந்து செல்வோம்’ என்று இல்லாமல், அந்த புள்ளியிலேயே வாழ்க்கையை உறைய வைத்துவிடும் கழிவிரக்கம்.
கழிவிரக்கம் சுகமானது என்பதாலேயே எளிதில் அதிலிருந்து வெளியேறவும் முடியாது. குடும்பம், நண்பர்களின் விஷேச கவனம் கிடைப்பதும் தொடர்ந்து இந்த சகதியிலேயே உருள முக்கியக் காரணம். இதை நாம் எல்லோருமே உள்ளுக்குள் விரும்புவதாலேயே, ‘யாருக்காக....வாழ்வே மாயம்’ போன்ற சோகப் பாடல்களும் படங்களும் ஹிட் அடிக்கின்றன. அர்ஜூன் ரெட்டியும் விதிவிலக்கல்ல.
ஆனால் கழிவிரக்கம் முழுக்க சுயநலமான விஷயம். தன்னைத் தவிர வேறு எதைப் பற்றியும் மனதை யோசிக்கவிடாத அயோக்கியத்தனம். உலகத்தில் தான் மட்டுமே கஷ்டப்படுவதாக நினைத்து, சுற்றியிருக்கும் உலகைப் பார்க்க மறுக்கும் மூடத்தனம்.
அர்ஜூன் ரெட்டி எங்கே காவியம் ஆகிறதென்றால், கிளைமாக்ஸில் ஹீரோயின் வந்து நிற்கும்போது! ஹீரோவின் கஷ்டங்களே பெரிய விஷயம் என்று நாம் உச்சு கொட்டிக்கொண்டிருக்கும்போது, அதைவிட மோசமான காலகட்டத்தை அவள் தாண்டி வந்து அவனை பளார் என்று அடிக்கும் இடத்தில், படம் வேறு லெவலுக்குப் போய்விடுகிறது.
சில போராளிகள், கிளைமாக்ஸ் ஒரு பழமைவாதம் என்று பொங்கியிருந்தார்கள். ஆனால் இயக்குநர் சொல்ல விரும்பியது, நான் மேலே விளக்கியிருப்பதைத் தான். படத்தின் மையமே, அந்த ஆணின் கன்னத்தில் விழும் அடி தான். நீண்ட நேரம், ஹீரோயின் என்னென்ன கஷ்டங்களை எல்லாம் சந்தித்திருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.
தமிழில் படம் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் நடிக்க, பாலா இயக்குகிறார்!
பாலா, ஒரு வீணாக்கப்பட்ட பொக்கிஷம். என்னைப் பொறுத்தவரை, அவர் எடுத்த ஒரே ஒரு நல்ல ‘சினிமா’ சேது தான். சசிக்குமாருக்கு சுப்ரமணியபுரம் போல், பாலாவிற்கு சேது. நந்தாவில் அகதிகள் பிரச்சினையை பாலா தொட, ‘பாலா என்றால் விளிம்புநிலை மனிதர்களைத் தான் படமெடுப்பார்’ என்று அறிவுஜீவிகள் ஏற்றிவிட, பாலாவும் வெறியேறி நம்மை கடித்துக் குதறியது வரலாறு. இதைச் சொல்வதற்காக பல நண்பர்களின் எதிர்ப்பை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனாலும் நமக்குத் தேவை ‘சேது’ பாலா தானே ஒழிய தாரை தப்பட்டை பாலா அல்ல.
அர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்ய, ’சேது’பாலாவை விட வேறு நல்ல இயக்குநர் கிடையாது. அர்ஜூன் ரெட்டியின் பல காட்சிகளில் சேது ஞாபகம் வந்தது உண்மை.
பாலா மீண்டும் தன்னைக் கண்டடையவும், நமக்கு ‘சேது’ பாலா திரும்பக் கிடைக்கவும் இதுவொரு நல்ல வாய்ப்பு. ‘சேது’ பாலாவின் ரசிகனாக, அதை எதிர்நோக்கி இருக்கிறேன்!
Beautiful review.. Thanks
ReplyDelete