Saturday, December 7, 2013

2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்

தமிழ் சினிமாவிற்கு ஒருவகையில் இந்த ஆண்டு நல்லபடியாக அமைந்தது என்று சொல்லலாம். மசாலாப் படங்களுக்கு நடுவே பல வித்தியாசமான புதிய முயற்சிகளும் செய்யப்பட்டன. அதில் முக்கியமானது நேரம் மற்றும் சென்னையில் ஒருநாள். இரண்டுமே மலையாளத்தில் இருந்து வந்தவை என்பதால் நமது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இந்த லிஸ்ட்டில் இருந்து தள்ளி வைக்கிறோம்.

அதே போன்றே மூடர் கூடம் மற்றும் விடியும் முன் ஆகிய படங்கள், முற்றிலும் புதிய களத்தில் கதை சொல்லி நம்மை அசத்தின. துரதிர்ஷ்டவசமாக இரண்டுமே காப்பி என்பதால், அதே போன்ற தரத்தில் அந்த இயக்குநர்கள் அடுத்த படத்தை சுடாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அவற்றையும் தள்ளி வைக்கிறோம். மிஞ்சிய ஐந்து படங்கள் பற்றிய பார்வை இங்கே:
நல்ல படம் #5: தங்க மீன்கள்
கற்றது தமிழிற்குப் பிறகு ராம் எடுத்த படம் என்பதால், நல்ல சினிமாவை விரும்புவோர் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு. தியேட்டர் வேறு கிடைக்காமல் பிரச்சினையாக, படத்திற்கு ஆதரவு நம் மனதில் பெருகியது. ஆனால் படம் வெளியானபின் பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

தந்தையை மையப்படுத்தி சில படங்களே வந்திருக்கின்றன. அந்த கேட்டகிரியில் வந்த படம் என்பது தான் இதன் தனிச்சிறப்பு. தேவையற்ற சைக்கோத்தனம் நிரம்பிய கேரக்டர், தந்தை-மகள் பாசத்தைப் பேச ஆரம்பித்து தனியார் பள்ளிகளே எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று முடித்து நம்மை சோதனைக்குள்ளாக்கினார் ராம்.

இன்னும் நன்றாகவே கொடுத்திருக்கலாம் என்பதே படம் பார்த்த பலரின் அபிப்ராயமாக இருந்தது. அதற்குக் காரணம், ராம் மேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை. அடுத்த படத்திலாவது காப்பாற்றுகிறாரா என்று பார்ப்போம். (இந்த இடத்தில் நேரம் படம் வருவது தான் நியாயம் என்று நினைக்கிறேன்!)

நல்ல படம் #4: ஹரிதாஸ்
ஆட்டிசம் குறைபாடு பற்றி அருமையாகப் பேசிய படம். இது பற்றி மக்களிடையே உள்ள அறியாமையை நீக்குவதாக, இந்தப் படம் அமைந்தது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பையனாக நடித்த ப்ரித்விராஜும், சிநேகாவும் நடிப்பில் கலக்கியிருந்தார்கள். கல்யாணமான பிறகும், சிநேகா தான் அந்த கேரக்டர் செய்யவேன்டும் என்று இயக்குநர் பிடிவாதமாக இருந்து நடிக்க வைத்தார். படம் பார்த்தபோது, அவரை விடவும் அந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகை யாரும் இல்லை என்றே தோன்றியது.
ஆனாலும் கமர்சியலாக படம் தோல்வியைத் தழுவியது. பிரபலமான ஹீரோ நடிக்காமல் நல்ல நடிகரான கிஷோர் நடித்தது பி&சி ஏரியாவில் எடுபடவில்லை. மேலும் படம் சில குறைகளோடு தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆட்டிசம் குறைபாடு கொன்டவர்களை சரியான முறையில் நடத்த வேன்டும் என்று ஒரு பக்கம் வாதிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் கிஷோர், தன் டிரைவர் சூரியை நடத்தியவிதம் மட்டமாக இருந்தது. 

காமெடிக்கு என்று செய்தது, அந்த கிஷோர் கேரக்டரின் மீதான பரிதாபத்தைக் குறைத்தது. மேலும், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எனும் கிஷோரின் வேடமும் தர்க்கரீதியில் தவறானது. மாற்று சிந்தனையாளர்களுக்கு என்கவுன்ட்டரும், ஆட்டிசம் உள்ளவரை இழிவாக நடத்துவதும், டிரைவரை மரியாதையின்றி நடத்துவதும் ஒன்று தான். இரு தவறுகளை நியாயப்படுத்திக்கொண்டே, ஒரு தவறைப்பற்றி மட்டும் பேசியதில் படத்தின் தரம் குறைந்து போனது.

எனினும் கமர்சியல் குப்பைகளுக்கு நடுவே, இதுவொரு நல்ல முயற்சி. அந்தவகையில் இயக்குநர் குமாரவேல் பாராட்டப்பட வேண்டியவர்.

நல்ல படம் #3:ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
தனக்கென்று தனித்த திரைமொழியை உருவாக்கிக்கொண்ட லோன்லி வுல்ஃப் மிஷ்கின் தயாரித்து, இயக்கிய படம். குண்டடி பட்டுக்கிடக்கும் ஓநாயை, மருத்துவக் கல்லூரி ஆட்டுக்குட்டி ஒன்று காப்பாற்ற, அதனைத் தொடர்ந்து ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வந்தது.

மிஷ்கினின் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது, நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்ன காரணத்திற்காக இந்த ஓட்டம் என்று இறுதியில் கண் இமைக்காமல் மிஷ்கின் கதை சொன்னாலும், அது நம்மை திருப்திப்படுத்தவில்லை.
வில்லனிடம் வேலை செய்யும் மிஷ்கின், தவறுதலாக ஒரு ஆளைக் கொன்றுவிடுகிறார். இறந்தவரின் குடும்பத்தில் எல்லாருமே கண் பார்வையற்றவர்கள். எனவே மிஷ்கின், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக, வில்லனிடம் பார்த்த பே-கில்லர் வேலையை விடுகிறார். அதனால் கடுப்பாகும் வில்லன் மிஷ்கினை அழைக்க, மிஷ்கின் மறுக்க அந்த குடும்பத்தின்மீது வில்லன் பாய்கிறான். அதை மிஷ்கின் தடுத்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே விரிவான கதை. இதில் ஒரு குழந்தையைத் தவிர அனைவருமே கொல்லப்படுகிறார்கள். மிஷ்கின், இந்த குடும்பத்தை விட்டு விலகி இருந்தாலே போதும். நல்லது செய்கிறேன் என்று போய், மொத்தக் குடும்பத்தையும் ஒழித்துக்கட்டியது தான் மிச்சம். இப்படி ஒரு லாஜிக் இல்லாத கதையால், நாம் ஏமாற்றமே அடைந்தோம்.

ஆனால் இந்தக் கதை கிளைமாக்ஸில் தான் சொல்லப்படுகிறது. அதுவரை மிஷ்கின் அதகளம் பண்ணியிருந்தார். செம மேக்கிங். ஒவ்வொரு சீனிலும் பெர்பக்சன் தெரிந்தது.(குறியீடும் தெரிந்ததாகக் கேள்வி.) படம் ஆரம்பித்தது முதல் விறுவிறுப்பாகச் சென்றது. 

இளையராஜாவின் முன்னணி இசை என்று பிரபலப்படுத்தியதே நமக்கு தொந்தரவாக அமைந்தது. நந்தலாலாவை ஒப்பிடும்போது, இதில் இசையின் வீச்சு, குறைவு தான். நம்மை படம் முழுக்க திருப்திப்படுத்தாவிட்டாலும், ஒரு முறை பார்க்கும்படியே இருந்தது. ஆனாலும் கமர்சியலாக ஓடவில்லை, ஓடாது!

நல்ல படம் #2: ஆறு மெழுகுவர்த்திகள் (6)
மிகவும் பதைபதைத்துப் போய் பார்த்த படம். காணாமல்போன மகனைத் தேடி கிளம்பும் தந்தையின் பயணமும், அந்த பயணத்தில் ஹீரோ சந்திக்கும் பயங்கர உலகமுமே படம். நடிகர் ஷாம், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.
ஹீரோயின் கேரக்டரும் கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே வந்தது. ஒரு தரமான படத்தைக் கொடுக்கவேண்டும்  எனும் இயக்குநர் துரையின் ஆர்வம், ஒவ்வொரு சீனிலும்  தெரிந்தது. கமர்சியல் அம்சமும் வேன்டும் என்பதால், ஹீரோவை பத்து பேர் வந்தாலும் அடித்துத் தள்ளும் வீரனாக காட்டியது தான் ஒரே குறை. அதைத் தவிர்த்து படத்தில் பெரிதாக  குறை இல்லை.

நடிகர் ஷாம் இந்த படத்திற்காக சேது விக்ரம் ரேஞ்சிற்கு கஷ்டப்பட்டிருந்தார். ஆனாலும் பெரிய அளவில் படம் வெற்றியடையாமல் போனது. இறுதிக்காட்சியில் தந்தையை அடையாளம் தெரியாமல் மகனும், மகனை அடையாளம் தெரியாமல் தந்தையும் நிற்கும் இடத்தில் அசத்தியிருந்தார்கள். உண்மையான தங்கமீன்கள் என்று பாராட்டப்பட்ட, அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம்.

நல்ல படம் #1: ஆதலால் காதல் செய்வீர்

அருமையான கதைக்கருவுடன், சுசீந்திரன் இயக்கத்தில் வந்த படம். விடலைப் பருவக் காதலின் விபரீதத்தை பொட்டில் அடித்தாற்போன்று சொல்லியது. தலைப்பு காதல் செய்யத் தூண்டினாலும், படம் நேரெதிர் கருத்தைச் சொன்னது. உண்மையாக காதல் செய்யுங்கள் என்பதைத் தான்  இயக்குநர், அப்படி தலைப்பில் சொல்கிறார் என்றும் சிலரால் விளக்கப்பட்டது.
இந்த தலைமுறை எவ்வளவு கேஷுவலாக உடல் கவர்ச்சியில் விழுகிறது, அதனால் சமூகத்தில் உண்டாகும் விளைவு என்ன என்று அதிக சினிமாத்தனம் இல்லாமல் பேசிய படம். பெண் கர்ப்பமானது தெரிந்து பதறும் தந்தையின் வேதனையும், பேரம் பேசும் காட்சிகளும் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. 

படத்தில் நம்மை நிலைகுலைய வைத்தது, கடைசி ஐந்து நிமிடம் தான். இவ்வளவு அழுத்தமான கிளைமாக்ஸை நாம் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பாடலுடன், நம்மை உருக்கியபடி படம் முடிந்தது. இந்த ஆண்டின் சிறந்த படம் ஆதலால் காதல் செய்வீர் தான்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

 1. நல்ல அலசல்...

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இது போங்காட்டம்.. தங்க மீன்கள் மொக்கை.. பரதேசி இந்த பக்கமும், தங்க மீன்கள் அந்த பக்கமும் போட்ருக்கலாம்..

  ReplyDelete
 3. வித்தியாசமான தெரிவு வரிசைப்பட்டியல்.

  ReplyDelete
 4. இந்த ஆண்டின் சிறந்த படங்களை சுட்டிக்காட்டி
  அருமையான விமர்சனம் கொடுத்தீர்கள் நண்பரே...
  அதிலும் தங்கமீங்களின் == ஆனந்த யாழை மீட்டுகிறாய்===
  இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...

  ReplyDelete
 5. ஓரளவு உடன்படுகிறேன். முக்கியமாக அட்டைக்காப்பி படங்களை இந்த லிஸ்டில் இருந்து ஒதுக்கி வைப்பதாக சொன்னது டிரிபிள் ஷாட்...!

  555 படத்தை இந்த லிஸ்டில் சேர்க்காவிட்டாலும் அதுவும் கொஞ்சம் வித்தியாசமான படம் என்பது எனது அபிப்ராயம். 6 மெழுவர்த்தி படம் கூட 'Taken ' படத்தின் தழுவல் என்று எங்கேயோ படித்தேன். நிச்சயமாக தெரியவில்லை.

  ReplyDelete

 6. இதில் என்ன கொடுமை என்றால் நீங்கள் குறிப்பிடும் அனைத்து படங்களும் கமர்சியலாக தோல்வியைத் தழுவிய படங்கள். 2013-ல் புதிய முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த மரண அடி. இதன் நீட்சியாக அடுத்த வருடங்கள் எந்த புதிய முயற்சிகளும் இல்லாமல் போகலாம்.... இதை தமிழ் சினிமாவின் சாபக்கேடு என எடுத்துக்கொள்ளலாமா... :-)))

  ReplyDelete

 7. வன்மையாகக் கண்டிக்கிறேன்... இந்த 'வித்தியாசமாக முயற்சி செய்த' லிஸ்டில் 'புல்லுக்கட்டு முத்தம்மா' வுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை .

  ReplyDelete
 8. //சே. குமார்said...
  நல்ல அலசல்..வாழ்த்துக்கள்.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 9. //ஹாரி R. said...
  இது போங்காட்டம்.. தங்க மீன்கள் மொக்கை.. பரதேசி இந்த பக்கமும், தங்க மீன்கள் அந்த பக்கமும் போட்ருக்கலாம்..//

  பாலாகிட்ட நான் அதிகம் எதிர்பார்க்கிறதும் காரணமா இருக்கலாம் ஹாரி.

  ReplyDelete
 10. //தனிமரம்said...
  வித்தியாசமான தெரிவு வரிசைப்பட்டியல்.//

  நன்றி நேசரே.

  ReplyDelete

 11. //மகேந்திரன்said...
  அதிலும் தங்கமீங்களின் == ஆனந்த யாழை மீட்டுகிறாய்=== இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...//

  ஆமாம் பாஸ்..அருமையான பாடல் அது.

  ReplyDelete
 12. Manimaran said...

  //555 படத்தை இந்த லிஸ்டில் சேர்க்காவிட்டாலும் அதுவும் கொஞ்சம் வித்தியாசமான படம் என்பது எனது அபிப்ராயம்.//

  அது தனியாக வேறொரு லிஸ்ட்டில் வருகிறது மணிமாறன். (எத்தனை லிஸ்ட்டு!)

  // 6 மெழுவர்த்தி படம் கூட 'Taken ' படத்தின் தழுவல் என்று எங்கேயோ படித்தேன்.//

  மிகத் தவறான தகவல். டேக்கன் கண்டிப்பாகப் பார்க்க வேன்டிய ஆக்சன் பிலிம். நம் மகாநதியை காப்பிஅடித்து, ஆக்சன் படமாக எடுத்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். மகாநதியில் ரஜினி நடித்திருந்தால்...அது தான் டேக்கன்!

  டேக்கன் முதலில் வந்து மகாநதி இரன்டாவது வந்திருந்தால், கமல் காப்பி அடித்தார் என்று ரகளை செய்திருப்பார்கள். உல்டாவாக ஆனதால், போலீஸ்கார் எல்லாம் கப்சிப்!

  ReplyDelete
 13. //Manimaran said...

  இதில் என்ன கொடுமை என்றால் நீங்கள் குறிப்பிடும் அனைத்து படங்களும் கமர்சியலாக தோல்வியைத் தழுவிய படங்கள். 2013-ல் புதிய முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த மரண அடி. இதன் நீட்சியாக அடுத்த வருடங்கள் எந்த புதிய முயற்சிகளும் இல்லாமல் போகலாம்.... இதை தமிழ் சினிமாவின் சாபக்கேடு என எடுத்துக்கொள்ளலாமா... :-))) //

  உண்மை தான் பாஸ்..இந்த வருடம் நல்ல படங்கள் வந்தாலும், கமர்சியல் வெற்றி இல்லை. இதில் ஓநாய்.ஆதலால் போன்ற படங்கள் போட்ட காசை எடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.(டிவி ரைட்ஸையும் சேர்த்து.)

  ReplyDelete
 14. //Manimaran said...

  வன்மையாகக் கண்டிக்கிறேன்... இந்த 'வித்தியாசமாக முயற்சி செய்த' லிஸ்டில் 'புல்லுக்கட்டு முத்தம்மா' வுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை .//

  புல்லுக்கட்டு முத்தம்மாவுக்கு என் இதயத்தில் இடம் கொடுத்துவிட்டேன் கண்மணிகளே!

  ReplyDelete
 15. அண்ணே, நீங்க சொன்ன வரிசையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ஆறு மெழுகுவர்த்திகள் ரெண்டையும் பார்க்க முடியலை.... மற்ற மூணு படங்களுமே என் மனத்தைக் கவர்ந்தவையே....

  ReplyDelete
 16. //ஸ்கூல் பையன் said... [Reply]
  அண்ணே, நீங்க சொன்ன வரிசையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ஆறு மெழுகுவர்த்திகள் ரெண்டையும் பார்க்க முடியலை.... மற்ற மூணு படங்களுமே என் மனத்தைக் கவர்ந்தவையே....//

  ஆறு பாருங்கள்.

  ReplyDelete
 17. அண்ணே, சூது கவ்வும் இந்த லிஸ்ட்ல வராதா?
  அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம், இதுல இருக்குற அஞ்சு படங்களையும் நாம பார்க்கல! என்ன ஒரு ரசனை, நமக்கு!

  ReplyDelete
 18. @??.???? (Real Santhanam Fanz )

  மொக்கை, அது டாப் ஹிட் படங்கள்ல சேர்ந்திடுச்சு!

  ReplyDelete
 19. நல்ல அலசல்!ஊரில் இல்லாததால் தானும் பார்த்து/படித்து(?)கருத்து சொல்ல முடியவில்லை.நேரம்.........விலக்கப்பட்டது,வருத்தமே!நம்,(காவிய)நாயகி நடித்த படமில்லையா?ஹி!ஹி!ஹீ!!!

  ReplyDelete
 20. 6 மறக்க முடியாத படம்..!
  ஒவ்வொரு காட்சிகளும்
  இன்னும் மனதை விட்டு அகல
  வில்லை..!

  ReplyDelete
 21. 6 மறக்க முடியாத படம்..!
  ஒவ்வொரு காட்சிகளும்
  இன்னும் மனதை விட்டு அகல
  வில்லை..!

  ReplyDelete
 22. நண்பரே!

  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் Salvo படத்தின் பாதிப்புதான்.

  http://www.imdb.com/title/tt1971514/

  ஹரிதாஸ் திரைப்படம் Marathon என்ற கொரியன் படத்தின் பாதிப்புதான்.

  http://www.imdb.com/title/tt0448621/?ref_=nv_sr_3


  இருந்தும் ஏன் இரண்டையும் தேர்ந்தெடுத்தீர்கள்.

  மற்றும் விடியும் முன் திரைப்படம் London to Brighton திரைப்படத்தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கி ரீமேக் பண்ணிய திரைப்படம். அதை நீங்கள் சேர்த்திருக்கலாம்.

  ReplyDelete
 23. //
  Subramaniam Yogarasa said...
  நல்ல அலசல்!ஊரில் இல்லாததால் தானும் பார்த்து/படித்து(?)கருத்து சொல்ல முடியவில்லை.நேரம்.........விலக்கப்பட்டது,வருத்தமே!//

  நேரம் நல்ல படம் தான்..ஆனாலும் டமில் வாழ்க.

  ReplyDelete
 24. //
  December 9, 2013 at 12:11 AM

  நான் வேற மாதிரி..said...
  6 மறக்க முடியாத படம்..!
  ஒவ்வொரு காட்சிகளும்
  இன்னும் மனதை விட்டு அகல
  வில்லை..! //

  உண்மை தான் நண்பரே..பதற வைத்த படம்.

  ReplyDelete
 25. //
  க.வேல்முருகன்said...
  நண்பரே!

  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் Salvo படத்தின் பாதிப்புதான்.

  ஹரிதாஸ் திரைப்படம் Marathon என்ற கொரியன் படத்தின் பாதிப்புதான்.

  இருந்தும் ஏன் இரண்டையும் தேர்ந்தெடுத்தீர்கள்.

  மற்றும் விடியும் முன் திரைப்படம் London to Brighton திரைப்படத்தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கி ரீமேக் பண்ணிய திரைப்படம். அதை நீங்கள் சேர்த்திருக்கலாம்.
  //

  எந்த பாதிப்புமே இல்லமால் சுயமாக உருவாகும் படங்கள் குறைவு பாஸ்..காப்பி என்பது சீன் பை சீன் அடிப்பது. ஒரு கருவை உள்வாங்கி தமிழுக்கு ஏற்றாற்போல் தருவதில் தவறில்லை என்பது என் நிலைப்பாடு.

  விடியும் முன் திரைப்படத்தில் அந்த ஆங்கிலப்படத்திற்கு ஒரு நன்றி கார்டுகூட போடப்படவில்லை. நம் இணைய நண்பர்கள் கன்டுபிடித்துச் சொன்னபிறகே, 'ஆமாம்..ஆனால் அனுமதி வாங்கி இருக்கிறோம்' என்றார்கள். அந்த ஸ்டேட்மென்ட்டை நான் நம்பவில்லை. அனுமதி வாங்கியிருந்தால் முதலிலேயே சொல்லி இருக்கலாம்..படத்திலும் குறிப்பிட்டிருக்கலாம்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.