Saturday, June 17, 2017

த்ரில்லர் படங்களின் சாபம்...

சமீப காலமாக சில நல்ல த்ரில்லர் படங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கின்றன. துருவங்கள் பதினாறு, மெட்ரோ, 8 தோட்டாக்கள், அதே கண்கள், மாநகரம் போன்ற படங்கள் ஃபேஸ்புக்கிலும் மீடியாக்களிலும் நல்ல பாராட்டைப் பெறுகின்றன. இவற்றில் துருவங்கள் பதினாறு தவிர மற்ற படங்கள் போட்ட காசை வசூலிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. துருவங்கள் பதினாறும் ஏழு கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல்.

நண்பர்கள் வட்டாரத்திலும் உறவுகளிடமும் இந்த படங்களைப் பற்றிக் கேட்டால் பெரும்பாலும் தெரிவதில்லை. தெரிந்தவர்களும் ஆன்லைனில் டவுன்லோடு தான் பார்த்திருக்கிறார்கள். ’நீங்கள் என்னென்ன படங்களை தியேட்டரில் போய்ப் பார்த்தீர்கள்?’ என்று கேள்வியைக் கேட்டால், அதில் த்ரில்லர் படங்களுக்கு இடமே இல்லை. ரஜினி-விஜய்-அஜித் படங்கள், ரஜினி முருகன், பாபநாசம், பவர் பாண்டி, சிவலிங்கா(!) என்று தான் லிஸ்ட் போடுகிறார்கள். பாபநாசம் பார்த்தவர்கள்கூட தூங்காவனத்தை கண்டுகொள்ளவில்லை.

இன்னும் எளிமைப்படுத்தினால், தங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்காத அல்லது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களையே பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். ஃபேமிலி டிராமா, காதல், நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் போதிய வரவேற்பு இருக்கிறது. த்ரில்லர் படங்கள் எல்லாம் பிரபல ஹீரோக்கள் நடிக்காவிட்டால், கவிழ்ந்துவிடுகின்றன. ஆனால் அது இங்கே மட்டுமே நடக்கும் விஷயம் அல்ல.

த்ரில்லர் படங்களின் ஆதிமூலம், ஃபிலிம் நுவார் படங்கள் தான். 1940களில் பிரபலமான இந்த ஜெனரின் சிறப்பம்சமே, லோ பட்ஜெட் படங்கள் என்பது தான். இவையெல்லாம் பி கிரேடு (இரண்டாம் தர) படங்களாகவே பார்க்கப்பட்டன, தயாரிக்கப்பட்டன. இரவு நேர நகரம் + மனிதர்களின் இருண்ட பக்கம்+குறைவான கேரக்டர்கள்+ஆனால் டெக்னிகலாக சிறப்பான கேமிரா & எடிட்டிங் அமைந்தால், அதுவே ஃபிலிம் நுவார். இவையே பின்னாளில் த்ரில்லர் என்று பரிணாமம் பெற்றன.

குறைந்த செலவில் படமெடுத்து குறைந்த லாபத்துடன் தப்பிப்பது தான் ஃபிலிம் நுவாரின் சிறப்பம்சமே. சில படங்கள் பெருவாரியான மக்களின் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்துவிடுவதுண்டு. ஆனாலும் ஏ செண்டர் மக்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட பி கிரேடு(!) படங்கள் தான் ஃபிலிம் நுவார் அல்லது த்ரில்லர் படங்கள். பிற்காலத்தில் நியோ-நுவாராக ஃபிலிம் நுவார் ஆகி, ஹிட்ச்காக் படங்கள், Blade Runner போன்ற படங்கள் எல்லாம் ஏ கிரேடுக்கு நகர்ந்தன...அதாவது மெயின்ஸ்ட்ரீம் படங்களாக ஆகின.

மனிதன் சினிமா பார்க்க ஆசைப்படுவது சந்தோசத்திற்குத்தான் எனும் அடிப்படை உண்மை தான் த்ரில்லர் படங்களின் சாபம். அந்த அடிப்படையைத் தகர்த்து வெற்றி பெறுவது தான் த்ரில்லர் படங்களின் முன் இருக்கும் சவால். திருட்டு விசிடி பிரச்சினை மட்டும் இல்லையென்றால், மேலே சொன்ன படங்கள் இன்னும் கொஞ்சம் வசூலை வாரியிருக்கலாம். இரண்டு/மூன்று கோடியில் தரமான த்ரில்லரை எடுத்து மூன்று/நான்கு கோடி வசூலுடன் தப்பிக்கும் படங்கள் அதிகம் வந்திருக்கலாம்.

டிக்கெட் பிரச்சினையைக் காரணம் காட்டி, பைரஸியை பலர் ஆதரித்தாலும் நல்ல சிறுபட்ஜெட் படங்களை திருட்டு விசிடியும் தியேட்டர் கட்டணங்களும் சேர்ந்து காலி செய்வதே யதார்த்தம். இதனால் என்ன ஆகும் என்றால் பேய்க்காமெடி, நாய்க்காமெடி, புனிதக்காதல், பஞ்ச் டயலாக் என சேஃபர் ஜோனிலேயே தயாரிப்பாளர்கள் விளையாட நினைப்பார்கள். நாம் திருட்டு விசிடியில் 8 தோட்டாக்கள் பார்த்துவிட்டு, விஜய்/அஜித் படங்களை கலாய்த்துக்கொண்டிருப்போம். மலையாள சினிமாவில் இதை கச்சிதமாகச் செய்து, ஜெயிக்கிறார்கள். கம்மாட்டிப் பாடம், அங்கமாலி டயரீஸ் என சின்ன பட்ஜெட்டில் தைரியமாக அவர்களால் படமெடுக்க முடிகிறது. நம்மால் அது முடியாதென்பதே யதார்த்தம்.

இவ்வளவு பிரச்சினை இருந்தும் புதிய படைப்பாளிகளுக்கு த்ரில்லர்கள் மீது தீராத மோகம் இருந்துகொண்டே இருக்கிறது. முக்கியக் காரணங்கள், வித்தியாசமான படம் செய்யும் அரிப்பும் டெக்னிகலாக எக்ஸ்பரிமெண்ட்களை செய்துபார்க்கும் வாய்ப்பும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், கொஞ்சம் பிரபல நடிகர் இல்லையென்றால் த்ரில்லர் ஜெனர் என்பது தற்கொலை முயற்சிக்கான எளிய வழி என்பதே யதார்த்தம்.

எனவே நாம் எப்போதும் போல் ‘கொரியாப் படம் மாதிரி வருமா?’ என்று பேசிக்கொண்டே காலத்தைக் கழிப்போம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.