Wednesday, April 18, 2018

Revisiting…… சின்னத்தம்பி (1991)


அபூர்வ சகோதரர்கள், சின்னக்கவுண்டர் போன்ற பழைய, நல்ல கமர்சியல் சினிமாக்கள் பற்றி எழுதும்படி அவ்வப்போது நண்பர்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். புத்தாண்டு சபதமாக, அவற்றைப் பற்றி எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். புத்தாண்டு சபதம் என்பதால், எப்படியும் இரண்டு மாதத்திற்காவது சபதம் தாக்குப்பிடிக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்!

செங்கோவி வலைப்பூ தூசு தட்டப்பட்டு இங்கேயும் பதிவேற்றப்படும்!


தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை லிஸ்ட் போட்டால், சின்னத்தம்பியை தவிர்க்க முடியாது. திருவிழா போன்று கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டரை நோக்கி ஓடினார்கள். பேசிப் பேசி மாய்ந்தார்கள். இளையராஜாவின் இசையும் பாடல்களும் பாமர மக்களையும் பைத்தியம் ஆக்கின. இயக்குனர் பி.வாசு & ஹீரோ பிரபுவின் சினிமா வாழ்வில் உச்சமாக சின்னத்தம்பி அமைந்தது.

நம்ப முடியாத கதையை நம்பக்கூடியவகையில் சொல்வது எப்படி என்பதற்கு சின்னத்தம்பியை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

ஜோதிடர் ‘ஹீரோயின் காதல் திருமணம் தான் செய்வாள்’ என்று சொன்னதால், அண்ணன்களின் அன்புச்சிறையில் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கப்படும் ஹீரோயின். யாரும் தங்கையை நிமிர்ந்து பார்த்தால்கூட, அடித்து துவைக்கும் அண்ணன்கள். அப்படிப்பட்ட ஹீரோயினுக்கு, கல்யாணம் என்றால் என்னவென்றே தெரியாத ஹீரோ மேல் காதல் வந்தால்?..யாருக்கும் தெரியாமல் (ஹீரோவுக்கே தெரியாமல்!) அவள் ஹீரோவைத் திருமணம் செய்தால் என்ன ஆகும்?

கிராமத்து பெரிய வீட்டுக்கதை என்றாலே சினிமாவில் பெரும் கூட்ட த்தைக் கூட்டிவிடுவார்கள். ஆனால் த்ரில்லர் படங்களில் வருவது போல், கச்சிதமாக குறைவான முக்கிய கேரக்டர்களைக் கொண்டு எழுதப்பட்ட து சின்னத்தம்பி திரைக்கதை. ஹீரோயின் வீட்டில் பத்துப் பேர், வெளியே பத்துப்பேர் என்று கதைக்குத் தேவையான, அதிலும் தேவையான நேரத்தில் மட்டுமே வந்துவிட்டுப் போகும் கேரக்டர்கள்.

முதல் காட்சியே ஹீரோயின் பிறப்பதில் ஆரம்பிக்கிறது. ‘ஐயாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு’என்று ஒரு வேலையாள் சொல்கிறார். அய்யாவும் காட்டப்படுவதில்லை; அம்மாவும் காட்டப்படுவதில்லை. மூன்று அண்ணன்கள் மட்டுமே காட்டப்படுகிறார்கள். பட த்தின் அடிநாதம், அண்ணன்களின் அளவுக்கு மீறிய பாசமே எப்படி வேலியாகிறது என்பது தான். ஆகவே அண்ணன் X தங்கை என்பதிலேயே நம் கவனம் நிலைநிறுத்தப்படுகிறது.

வருவதை முன்கூட்டியே சொல்வது என்பது சினிமாவில் முக்கியமான உத்தி. அது நடக்குமா, எப்படி நடக்கும், அப்படி நடந்தால் என்ன ஆகும் என்று ஆடியன்ஸ் மனதில் 
ஆர்வத்தை தூண்ட இது பயன்படும்.

உதாரணமாக அமெரிக்கன் பியூட்டி(1999)யில் முதல் காட்சியிலேயே ஹீரோவின் டீனேஜ் மகள், ஹீரோவைக் கொல்வது பற்றி தன் பாய் ஃப்ரெண்டிடம் பேசுகிறாள். அடுத்து வாய்ஸ் ஓவர் வசனம் ‘ I'm forty-two years old. In less than a year, I'll be dead.’ என்று வரும். ஹீரோ சாகப்போகிறானா, மகள் தான் கொல்லப்போகிறாளா? ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் ஆர்வத்தையும் இது தூண்டிவிடும். இந்த முதல் சீனை கட் செய்துவிட்டால், படமே டல் ஆகிவிடும். அந்தளவுக்கு இந்த உத்தி முக்கியமானது.
சின்னத்தம்பியிலும் இந்த உத்தியை ஜோதிடர் கேரக்டர் மூலம் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘அரண்மனையில் எவ்வளவு பாசம் காட்டி வளர்த்தாலும், உங்க தங்கச்சி காதல் திருமணம் தான் செய்வாள்’ என்று ஜோதிடர் சொல்லிவிடுகிறார். இதைத் தடுப்பதற்கான எல்லா வேலைகளிலும் அண்ணன்கள் இறங்கிவிடுகிறார்கள். ஆடியன்ஸான நாமும் ஆர்வமாகிவிடுகிறோம்.

‘இவ்வளவு டெரரான அண்ணன்கள்..அடியாட்கள்..வீட்டுச்சிறை..ஏறக்குறைய சிண்ட்ரெல்லா நிலை. இதை மீறி எந்த ராஜகுமாரன் வந்து ஹீரோயினை காதலித்துக் காப்பாற்றுவான்?’ என்றே நாமும் யோசிக்கிறோம். ஒரு அப்பாவியை ஹீரோவாக களமிறக்குகிறார்கள். இது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘இவன் எப்படி லவ் பண்ணுவான்? இவனை எப்படி அந்த ராஜகுமாரி லவ் பண்ணுவாள்?’ என்ற கேள்விக்கு முதல்பாதி அழகாக, ஸ்டெப் பை ஸ்டெப் ஆக பதில் சொல்கிறது.

’நடக்குமா, நடக்காதா?’ எனும் உத்தியை இடைவேளைவரை வெற்றிகரமாக க் கொண்டுபோய், இடைவேளையில் சம்பவத்தை நட த்திவிடுகிறார்கள். ‘அய்யய்யோ…இது அண்ணன்களுக்குத் தெரிந்தால் கொன்னுடுவாங்களே’ எனும் பதட்டம் தான் இரண்டாம்பாதியை இன்னும் ஆர்வமாகப் பார்க்க வைக்கிறது.
சமீபகாலமாக வரும் படங்கள் எல்லாம் இந்த மண்ணுக்கு மிகவும் அந்நியமானதாக இருக்கின்றன. சமூகவலைத் தளங்களில் பேசப்படும் அளவிற்கு வெளியே பேசப்படுவதில்லை. காரணம், ஆங்கிலப்படங்களில் வருவது போல் செண்டிமெண்ட்டை ஊறுகாயாக தொட்டுக்கொள்வது. இதனால் பி & சி செண்டர் மக்களுக்கு இன்றைய சினிமா அந்நியமான ஒன்றாக ஆகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இன்றளவும் மாபெரும் வெற்றி பெரும் படங்களைப் பார்த்தால் செண்டிமெண்ட்டை டச் பண்ணிய படங்களாகத் தான் இருக்கும். (செண்டிமெண்ட்களிலேயே அலுக்காத பெஸ்ட் செண்டிமெண்ட், காதல் தான்!)
சின்னத்தம்பி எல்லாவகை செண்டிமெண்ட்டையும் ரவுண்டு கட்டி அடித்த படம். அண்ணன் – தங்கை பாசம், அம்மா – மகன் பாசம், காதல், மனைவி – கணவன் பாசம், கிளைமாக்ஸ் விதவை செண்டிமெண்ட் என்று எல்லா முக்கிய கேரக்டர்களுமே செண்டிமெண்ட்டால் பிணைக்கப்பட்டவர்கள். பொய்யான ‘ஹாய்..ஹலோ’ ரிலேசன்ஷிப்பே அங்கே கிடையாது. எல்லோரும் உணர்வுப்பூர்வமான கேரக்டர்கள். ஆகவே தான் நம்பமுடியாத கதை கூட, நம்பி கொண்டாடப்பட்டது.

அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்றும்இவன்தந்தை
என்னோற்றான் கொல்
என்றும் சபையில் தன் உறவு பெரும் மரியாதையைக் கண்டு மற்ற உறவுகள் பெருமைப்படுவதை இலக்கியங்களும் சினிமாவும் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் கணவனை நினைத்து, மனைவி பெருமைப்படுகின்ற, அவையில் முந்தியிருக்க மனைவி எடுக்கும் சிரத்தை பற்றி அதிகம் பேசப்பட்ட தில்லை.
மனைவி வீட்டிலும் மனைவி சொந்தங்களிடமும் கணவன் நல்லபடியாக நடந்து, தான் பெருமைப்படும்படி சபையில் நிற்கின்றானா எனும் பதைபதைப்பு புதிதாக கல்யாணம் ஆன புதிதில் பெண்களுக்கு இருக்கும். சில நேரங்களில் ஸ்பெஷல் டியூசன் எடுக்கப்படுவதும் உண்டு! பெண்களுக்கே உரிய, அந்தரங்கமான மகிழ்ச்சித் தருணங்கள் அவை. ஆனால் பெரும்பாலான பெண்களின் கனவு பொய்த்துப்போவது தான் சாபக்கேடு.

சின்னத்தம்பியின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாக நான் நினைப்பது, ஹீரோயின் தன் புருசனான ஹீரோவை சபையில் முந்தியிருக்க நட த்தும் போராட்டத்த்தில் நம் தாய்க்குலங்கள் தன்னையே கண்டுகொண்டது தான். பரம்பரைப் பணக்காரர்களான, சமூகத்தில் அந்தஸ்து உள்ள அண்ணன்களுக்குச் சமமாக, ஒரு அப்பாவி கணவனை நிறுத்துவதற்கு ஹீரோயின் படும் பாடு தான் இரண்டாம் பாதிக் கதையாக சொல்லப்படுகிறது.

மேலும், கணவனே மனைவிக்கு மாப்பிள்ளை பார்க்கக் கிளம்புவது, தான் பெண் பார்த்த கதையை மனைவியிடமே சொல்வது என்று பி.வாசு செண்டிமெண்ட்டைப் போட்டுத் தாக்கியதில் மொத்த தமிழ்நாடும் ஃப்ளாட் ஆனது.

அப்போது கிளாமர் ஹீரோயின் என்பதே குஷ்புவின் அடையாளமாக இருந்தாலும், இவ்வளவு கனமான கேரக்டரை திறமையாக வெளிக்கொண்டு வந்திருந்தார். அண்ணன்களுடன் பிரபு சம மாக அமர்ந்து சாப்பிடும்போது காட்டும் மகிழ்ச்சி க்ளோசப் ஒரு உதாரணம்.

இளைய திலகம் என்ற பெயருக்கு ஒருவழியாக பிரபு நியாயம் செய்த படம். ராதாரவி, மனோரமா என பெர்ஃபார்மன்ஸில் பின்னியெடுக்கும் நடிகர்களும் சேர, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படமாக ஆனது சின்னத்தம்பி.

இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களும் நல்ல காமெடியும் இருந்தாலே படங்கள் ஹிட் ஆகிவிடும். கூடவே மேலே சொன்ன அம்சங்களும் சேர்ந்துகொள்ள, சின்னத்தம்பி தமிழ் கமர்சியல் சினிமாவில் முக்கிய இடம் பிடித் த து.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.