Monday, April 28, 2014

Psycho (1960) - விமர்சனம்

த்ரில்லர் பட மன்னன் ஹிட்ச்காக்கின் படங்களிலேயே பெஸ்ட் என்று உலகம் முழுக்க கொண்டாடப்படும் படம், சைக்கோ. குறைந்த பட்ஜெட்டில் ப்ளாக் & ஒயிட் படமாக வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்று த்ரில்லர் படங்களின் மகுடமாக அமைந்தது இந்தப் படம். படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியிருந்தாலும், இந்தப் படத்தின்மீது பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன; இன்னும் செய்யப்படுகின்றன. அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில் என்று பார்ப்போம், வாருங்கள்.
படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம். மேரியும் சாமும் ஏழைக் காதலர்கள். இருவரும் இணைய மேலும் பணம் தேவைப்படுகிறது. மேரியின் பாஸ், 40,000 டாலர்களை மேரியிடம் கொடுத்து பேங்கில் டெபாசிட் பண்ணச் சொல்ல, அதை டெபாசிட் செய்யாமல், சாம் இருக்கும் ஊரை நோக்கி பணத்துடன் ஓடுகிறாள் மேரி. வழியில் ஒரு மோட்டலில் அவள் தங்க நேரிடுகிறது. அங்கே அவள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். யார் அந்த கொலையைச் செய்தது, ஏன் அந்தக் கொலை நடந்தது, கொலையாளி கைது செய்யப்பட்டாரா என்பதுவே கதை.

ஹாலிவுட் சினிமாக்களில் வந்ததிலேயே த்ரில்லான சீன் என போற்றப்படுவது, இந்தப் படத்தில் வந்த ஷவர் சீன் தான். 45 செகண்டுகளில் கொலை நடப்பதைக் காட்டும் இந்த சீன், ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது, 70 கேமிரா செட்டப்புகளுடன்! இன்றளவும் இந்த சீன் உண்டாக்கிய தாக்கத்தை வேறெந்த சீனும் உண்டாக்கவில்லை. அந்த சீன் கீழே தரப்படுகிறது. நம்மூர் போன்று போர்வையை கழுத்துவரை கட்டிக்கொண்டு குளிக்கும்(!) நல்ல பழக்கம் அங்கே கிடையாது என்பதால், 18+ ஜாக்கிரதை!
  

இந்த சீனை மட்டும் பார்ப்பவர்களுக்கு ‘அப்படி ஒன்னும் பயங்கரமா இல்லியே?’ என்று தோன்றலாம், அது நியாயம் தான். ஏன் இந்த சீன் பயங்கரமானதாகப் போற்றப்படுகிறது என்பதற்கான விடை, படத்தின் திரைக்கதையில் இருக்கிறது. அது என்ன என்று நமக்குப் புரியவேண்டும் என்றால், நாம் எப்படி ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்று தெரிந்து கொள்வோம். இதில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? இருக்கிறது. 

பொதுவாக ஒரு படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் படத்தின் மெயின் கேரக்டரை ஃபாலோ செய்ய ஆரம்பிக்கிறோம். படங்களின் கதை அமைப்பு பொதுவாக, ஒரு ஹீரோ/ஹீரோயின் - அவருக்கு ஒரு பிரச்சினை-அதில் இருந்து வெளிவருதல் என்ற மூன்று விஷயங்களிலேயே இயங்கும். மெயின் கேரக்டருக்கு ஒரு பிரச்சினை என்றால் நாமும் கவலையடைகிறோம், அந்த கேரக்டர் ஜெயித்தால் நாம் சந்தோசம் அடைகிறோம். சுருக்கமாகச் சொல்வதென்றால், கேரக்டர் ஐடெண்டிஃபிகேசன்! அந்த கேரக்டருடன் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, மெய்மறந்து போகிறோம். 

சைக்கோ படமும் மேரியை மையப்படுத்தியே ஆரம்பிக்கிறது. முதல் காட்சியிலேயே பணம் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது, அதனாலேயே திருமணமும் தள்ளிப்போகிறது என்பது நமக்குப் புரிகிறது.அடுத்து ஒரு பெரும்பணக்காரன் அலட்சியமாகக் கொடுக்கும் பிஸினஸ் பணம், மேரி கைக்கு வரவும் அதை எடுத்துக்கொண்டு மேரி ஓட ஆரம்பிக்கிறாள்.
பொருளாதாரத் தேவை என்பதும் இருப்பவனிடம் பிடுங்கும் ராபின்ஹூட் தியரியும் வேலை செய்ய, நாம் மேரியுடன் ஐக்கியமாகிறோம். வழியில் ஒரு போலீஸ்காரன் அவள்மேல் சந்தேகம் கொண்டு ஃபாலோ பண்ண, நாமும் பதறுகிறோம். அடுத்து ஒரு கார் விற்பனை செய்யும் நிலையத்தில் தன் காரை விற்றுவிட்டு புதிய கார் வாங்கும்போது, பிடிபட்டுவிடக்கூடாதே என்று நாமும் நெர்வஸ் ஆகிறோம். மிகவும் நுணுக்கமான டீடெய்லான காட்சியமைப்பால், நாமும் அங்கே இருப்பது போன்ற ஒரு ஃபீலிங்கை ஹிட்ச்காக் கொண்டுவருகிறார்.

இப்போது நாம் வேறு மேரி வேறு அல்ல எனும் அளவிற்கு நாம் கதையுடன் ஒன்றிப்போகும்போது, அந்த மோட்டலில் அவள் தங்க நேரிடுகிறது. அந்த லாட்ஜ் ஓனருடன் பேசும்போது, தான் செய்வது தவறு என்று உணர்கிறாள். அடுத்து திரும்பச் சென்று பணத்தைக் கொடுத்துவிடுவது என்றும் நினைக்கிறாள். அப்போது தான் அந்தக் கொலை நடக்கிறது. நாம் அதிர்ச்சியாகிறோம். ஏன்?

ஏனென்றால் மெயின் கேரக்டர் கொல்லப்படும் என்று நாம் எதிர்பார்ப்பதே இல்லை. மெயின் கேரக்டர் எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டு இறுதியில் ஜெயிக்கிறது(டிராஜடி என்றால் தோற்கிறது) என்று பார்த்தே பழக்கப்பட்டது நம் மனம். திட்டமிட்டு நம்மை மெயின் கேரக்டருடன் அடையாளப்படுத்தவைத்து, அந்த மோட்டலுக்குள் கூட்டிச்சென்று திடீரென கொல்லும்போது அதிர்ச்சியாகிறோம். அங்கே கொல்லப்படுவது மேரி மட்டும் அல்ல, நம் கனவு, நம் நம்பிக்கை, நம் இன்னொரு பிம்பம்.

திரைக்கதையில் இது மிகவும் ரிஸ்க்கான வேலை. மெயின் கேரக்டரை பாதியிலேயே காலி செய்தால், மனதளவில் பார்வையாளர்களும் வெக்ஸ் ஆகி கதையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் ஹிட்ச்காக் அதைத் திட்டமிட்டே செய்தார்.அந்த சீன் முடிந்தவுடன் நம் மனநிலையைக் கவனியுங்கள். யாரோ நம்மைக் கைபிடித்து அழைத்து வந்து, அந்த மர்மம் நிறைந்த மோட்டலில் விட்டுவிட்டது போன்ற ஒரு ஃபீலிங் வரும். தனியே...அந்த லாட்ஜ் ஓனருடன். அவனோ நிதானமாக மேரியின் ரத்தத்தை துடைத்துக்கொண்டு இருக்கிறான். ஓ மை காட்.........அது தான் ஹிட்ச்காக் எதிர்பார்த்தது. அவர் பேட்டியில் சொன்னார், “இந்தப் படத்தின் நடிகர்களை மட்டும் நான் டைரக்ட் செய்யவில்லை, படம் பார்ப்போரையும் சேர்த்தே டைரக்ட் செய்திருக்கிறேன்” என்று!  
ஏன் அந்தக் கொலை நடந்தது என்பதற்கு கிளைமாக்ஸில் சொல்லும் காரணமும் விளக்கமும் இன்னொரு அதிர்ச்சியான விஷயம். அந்த மேட்டர் கையில் இருந்ததாலேயே, தைரியமாக மெயின் கேரக்டரைக் கொன்றார் என்றும் சொல்லலாம். இந்தப் படத்தில் ஹிட்ச்காக் முயற்சித்த இன்னொரு விஷயம், Peeping Tom கான்செப்ட். அது வேறொன்றும் இல்லை, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் ஆவல் தான். 

உலகம் முழுக்க உள்ள சினிமா மேதைகள் எல்லாம் சினிமா என்பது அடையாளப்படுத்தல் என்பதை மட்டுமே மையமாக வைத்து இயங்குவது என்று நம்பி வந்தபோது, அப்படி இல்லை.அடையாளப்படுத்திக்கொள்ள முடியாத கேரக்டர்களையும் மக்கள் ரசிப்பார்கள், அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் மனநிலையிலேயே படத்தையும் பார்ப்பார்கள் எனும் புதிய தியரியைக் கண்டுபிடித்து, நிரூபித்தும் காட்டினார் ஹிட்ச்காக். முதலில் Dial M for Marder-ல் இதை முயற்சித்து வெற்றி பெற்றார். அதில் வரும் எந்தவொரு கேரக்டருடனும் நம்மால் அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. அதே தியரியைத்தான் சைக்கோவின் இரண்டாம்பாதியிலும் அப்ளை செய்ததாக பின்னர் கொடுத்த பேட்டியில் சொன்னார் ஹிட்ச்காக்.

இரண்டாம்பாதி முழுக்க அந்த லாட்ஜ் ஓனரும் அந்த மதர் கேரக்டரும் நடந்துகொள்ளும்விதம், அங்கே நடக்கும் சர்ப்ரைஸான சம்பவங்கள் என நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸை நோக்கி இந்தப் படம் நகர்கிறது.  லாட்ஜ் ஓனராக வந்த அந்தோணி பெர்க்கின்ஸின் அலட்டல் இல்லாத நடிப்பு, வில்லத்தனத்தில் புதுவிதம். அதே போன்றே முதல்பாதியில் வந்த நடிகை Janet Leigh-ன் நடிப்பும் அந்த பதட்டத்தை நமக்குள் கடத்துவதாக இருக்கும்.

இந்தப் படத்தின் பாதிப்பிலும் இதற்கு மரியாதை செய்யும்விதமாகவும் பல படங்கள் உலகம் முழுக்க பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன. தமிழிலும் கௌதம் மேனன் நடுநிசி நாய்கள் என்று ஒரு படத்தை எடுத்தார். கேவலமாக வந்தது. அதைவிட மூடுபனி/சிகப்பு ரோஜாக்கள் படத்தை இந்தப் படத்திற்கு சமர்ப்பிக்கலாம்!

 இதுவரை நான்கு முறைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், புதுப்புது விஷயங்கள், டெக்னிக்குகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் பல திரைப்படக்கல்லூரிகளில் ஒரு பாடமாக இடம்பெற்றிருக்கிறது, இந்த த்ரில்லர் காவியம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

  1. நீங்க மட்டும் படம் பார்த்தா போதுமா ? நாங்க பார்க்க வேண்டாமா ?
    லிங்க் கொடுங்க .
    நெட்ல கமலா காமேஷ் குளியல், நித்யானந்தா, தேவநாதன் படங்கள் எல்லாம் ஈஸியா கிடைக்குது , ஹிட்ச்காக் படம் கிடைக்க மாட்டது.

    ReplyDelete
  2. @வானரம் .

    http://streamingaddict.com/instant/play.php?movie=0054215

    Torrent:

    http://kickass.to/usearch/Psycho%201960/

    ReplyDelete
  3. அருமையா சொல்லியிருக்கீங்க.. சூப்பர் பாஸ்!

    ReplyDelete
  4. ஷவர் சீனுக்காகவாவது பாக்கணும். லின்க் கொடுத்திட்டீங்க.. பாத்திருவோம்...

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்.ஒவ்வொரு காட்சிகளையும்&அமைப்பையும் நுண்ணிய பார்வையில் தேடித்,தேடி அலசி தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்,நன்று!

    ReplyDelete
  6. மறுமொழிப் பெட்டி(?!)மீண்டும்,மக்கர் செய்கிறது,கவனிக்க!

    ReplyDelete
  7. சிகப்பு ரோஜாக்களை விட மூடுபனி தான் சரியான சமர்ப்பணமாக இருக்கும்.....

    ReplyDelete
  8. ஹிட்ச்காக்கின் இறந்தநாளைக்கு(ஏப்ரல் 29) அவரைபத்தி நல்ல எழுதி இருகிறிங்க

    ReplyDelete
  9. //joseph raymond said... [Reply]
    சிகப்பு ரோஜாக்களை விட மூடுபனி தான் சரியான சமர்ப்பணமாக இருக்கும்.....//

    உண்மை தான் நண்பரே..எனக்கு ஞாபகம் வரவில்லை..திருத்திவிடுகிறேன்..நன்றி.

    ReplyDelete
  10. //பிரேம்ஜி said...
    ஹிட்ச்காக்கின் இறந்தநாளைக்கு(ஏப்ரல் 29) அவரைபத்தி நல்ல எழுதி இருகிறிங்க//

    அப்படியா? எனக்கே தெரியாது பாஸ்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.