Thursday, June 14, 2012

குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

பொதுவாகவே நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் மத்திய அரசு, அடிப்படை மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பாடாத, ஷேர் மார்க்கெட் இண்டெக்ஸ் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம் என்று செயல்படும் அரசு. ஆனால் பல மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நூறு நாட்கள்-ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற நல்ல திட்டத்தை அதிசயமாக அறிமுகப்படுத்தியது மன்மோகன் அரசு.

விவசாயக் கூலிகளுக்கு வருடத்தில் எல்லா நாட்களுமே வேலை இருப்பதில்லை. இடையில் வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு மத்திய அரசே வேலை கொடுக்கும் திட்டம் இது. கிராமப்புற நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை மேம்படுத்தல் போன்ற பணிகளை பொதுவாக தனியாருக்கு காண்ட்ராக் விடுவது வழக்கம். அவர்கள் லஞ்சம்/ஊழல் போக, மீதிப் பணத்தில் ஏதோ கொஞ்சம் வேலையை முடிப்பார்கள். எனவே அதற்குப் பதிலாக அந்தப் பகுதி மக்களிடமே அந்த வேலையைக் கொடுத்துவிட்டால், தன் சொந்த ஊரின் நலனுக்காக அக்கறையுடன் வேலை செய்வர். ’வேலையற்ற விவசாயிகளுக்கு வேலை கொடுத்த மாதிரியும் ஆச்சு, காண்ட்ராக்ட்டில் நடக்கும் தில்லுமுல்லுகளை ஒழித்த மாதிரியும் ஆச்சு’ என்ற நல்ல சிந்தனையுடன் கொண்டுவரப்பட்டது இந்தத் திட்டம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?


ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், 100 ரூபாய் கூலி தர வேண்டும். நேர்மையின் சிகரமான நம் அதிகாரிகளும் பஞ்சாயத்து தலைவர்/உறுப்பினர்களும், மக்களுக்கு அருமையான ஆஃபர் வழங்கினார்கள். ‘நீங்கள் வேலையே செய்ய வேண்டாம். 70 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.மீதியை நாங்கள் பங்கிட்டுக்கொள்கிறோம்’ என்பதே அந்த ஆஃபர். அதைக்கேட்டு நம் மக்கள் கொதித்தெழுந்தார்கள். ‘வேலையே செய்ய வேண்டாம் என்பது சரி.ஆனால் 30ரூபாயை எடுத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?’ என்று கேட்டு எங்கள் பகுதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் அதிகாரிகள் இறங்கி வந்தார்கள். 80 ரூபாயில் பேரம் படிந்தது.

இப்போது தினமும் காலையில் 150க்கும் மேற்பட்ட மக்கள் சரியான நேரத்தில் ஆஜராகிறார்கள். அவர்கள் வேலை செய்ய வேண்டிய பகுதி நிலத்தில் கோடு போட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது.  அதை கொஞ்ச நேரம் சும்மா கொத்த வேண்டும்..இரண்டு சட்டி மண்ணை அள்ளி பக்கத்தில் எங்கேயோ போட வேண்டும். (அதை ரோடு ஓரம் போட்டு, மழை நேரத்தில் மினி பஸ் சேற்றில் சிக்கிய கூத்தும் நடந்தது). அவ்வளவு தான் வேலை. பிறகு அருகில் இருக்கும் மரத்தடியில் உட்கார்ந்து கொள்ளலாம். வீட்டிற்கும் போய்க்கொள்ளலாம். இன்ஸ்பெக்சனுக்கு மேல்அதிகாரிகள் வரும்போது மட்டும் அனைவரும் சின்சியராக நடிக்க வேண்டும். இதுவே திட்டம் செயல்படுத்தப்படும் முறை.

’தன் சொந்த மண்ணாயிற்றே..அதனை மேம்படுத்துவது நம் பணியாயிற்றே’ என்ற அக்கறையோ புரிதலோ இந்த மக்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. மக்களே ஊழல்வாதிகள் ஆகிப்போன கொடுமை தான் தாங்க முடியாததாக உள்ளது. ‘கவர்மெண்ட் காசு தானே..காவ்ர்மெண்ட் வேலை தானே’ என்ற அலட்சிய மனோபாவம் அடித்தட்டு மக்கள் வரை பரவியுள்ளது. இவர்களைப் பார்க்கும் இவர்களது குழந்தைகளின் மனதிலும் ‘நாளைக்கு படித்துவிட்டு, அரசு வேலைகளுக்குப் போனாலோ, படிக்காமல் அரசியல்வாதியாகப் போனாலோ இப்படித் தான் நடந்து கொள்ளவேண்டும்’ என்றல்லவா பதிந்து விடும்? ‘அன்னிக்கு திடீர்னு செக் பண்ண ஆபீசருங்க வந்துட்டாங்க மாமா..அம்மா வீட்டுல இருந்து திடுதிடுன்னு ஓடுனா..ஹா..ஹா’ என்று ஒரு பிள்ளை சொல்வதைக் கேட்டபோது கஷ்டமாக இருந்தது. லட்சக்கணக்கான கோடிகளில் நடக்கும் ஊழல்களைவிட, இந்த 30 ரூபாய் ஊழல் விளைவிக்கும் சமூகக்கேடு அதிகம்.

சொந்த மக்களின் முன், சொந்தக் குழந்தைகளின் முன் திருடர்களாக வாழ்வதும், அதைப் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் நம் மக்களுக்கு இல்லாமல் போனதும் தான் கொடுமை. சமூகரீதில் இத்தகைய பாதிப்பு என்றால், தொழில்ரீதியில் இந்தத் திட்டம் கொடுக்கும் பாதிப்பு மிகமிக அதிகம். வருடத்திற்கு 100 நாள் மட்டுமே என்று இருந்த இந்தத் திட்டம், திடீரென வருடம் முழுமைக்கும் விரிவுபடுத்தப் பட்டது. 


என் மாமா ஒருவர் விவசாயி. நெல் பயிரிட்டு விட்டார். நெல் விளைந்ததும் அறுக்க வேண்டும். வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டால், யாரும் வரத் தயாரில்லை. (விவசாய வேலைகள் இல்லாத நேரம் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது விதி...ஆனால் நம் விதி?) ‘சும்மா உட்கார்றதுக்கே 80 ரூபாய் தர்றாங்க..நாங்க எதுக்கு வேலைக்கு வரணும்?’ என்று மக்களே கேட்டபோது மாமா நொந்து போனார். பிறகு பஞ்சாயத்து தலைவரைப் பார்த்து கெஞ்சி ‘அய்யா..ஏதாவது வேணும்னா வாங்கிக்கோங்க..ரெண்டு நாளைக்கு உங்க திட்டத்தை நிறுத்தி வைங்க’ என்று சொன்னபிறகு, அந்த அருமையான திட்டம் இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது இந்தத் திட்டம். விவசாயிகள் நலனுக்கு என்று கொண்டு வரப்பட்ட திட்டம், விவசாயத்திற்கே ஆபத்தாக ஆனதை என்னவென்பது? எங்கள் பகுதியில் உள்ள தீப்பெட்டி/பட்டாசுத் தொழில்களும் இதனால் நசித்துப்போகும் நிலைமை.


பொதுவாக நாட்டில் நடக்கும் ஊழலை வெளிக்கொண்டுவரும் சில கட்சிகளும் அமைப்புகளும் மீடியாக்களும் இதைப் பற்றிப் பேசுவதேயில்லை. சென்ற மாதம் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ‘தமிழகத்தில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு 2500 கோடி ரூபாய் ஒதுக்கினோம். இந்த ஆண்டு 5000 கோடி ரூபாய் ஒதுக்கவுள்ளோம்’ என்று சொல்லியுள்ளார். ’விவசாயம்னு ஒன்னு இருந்தாத் தானே விவசாயக்கூலிகள் பிரச்சினை வரும்? எப்படியாவது விவசாயத்தை ஒழிச்சிடுவோம்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்களோ என்று தோன்றுகிறது.

பொதுநல அமைப்புகள் யாராவது இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி, விவசாயிகளைக் காப்பது அவசியம். இல்லையென்றால் தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை வருவது நிச்சயம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

  1. வணக்கம் செங்கோவி!அருமையான சாட்டையடிப் பகிர்வு/பதிவு!போற போக்கப் பாத்தா சீனாக்காரன் கிட்ட அரிசியும் வாங்கித் தான் வல்லரசு ஆவாங்களோ,என்னமோ????

    ReplyDelete
  2. ’தன் சொந்த மண்ணாயிற்றே..அதனை மேம்படுத்துவது நம் பணியாயிற்றே’ என்ற அக்கறையோ புரிதலோ இந்த மக்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. ////


    அவர்களுக்கு தங்கள் மண் என்பதை விட அரசு தரும் நூறும் இருநூறும் பெரிய விசயமாக எடுத்துக் கொள்கிறார்கள். என்ன செய்வது இவர்களை?

    ReplyDelete
  3. தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் கிராமத்து பெண்கள், ஒரு மணி நேரம் அனுமதி விடுப்பு வாங்கிக் கொண்டு, இந்த ஊரக திட்டத்தில் கலந்து கொண்டு சும்மா ஒரு மணி நேரம் மண்ணை கொத்தி அன்றைய முழு பணத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  4. //‘கவர்மெண்ட் காசு தானே..காவ்ர்மெண்ட் வேலை தானே’ என்ற அலட்சிய மனோபாவம் அடித்தட்டு மக்கள் வரை பரவியுள்ளது//

    அதிலயும் நியாயம்(?) இருக்கு! யார் யாரோ மொத்தமா கோடி கோடியாக் கொள்ளை அடிக்கற காசுதானே நாம கொஞ்சமா அடிச்சாத்தான் என்ன? அப்பிடி அவங்க கேட்டாலும் சொல்ல பதிலில்லையே!!

    படிக்கவே அதிர்ச்சியா இருக்கு! நேர்ல பார்த்த உங்களுக்கு?

    //லட்சக்கணக்கான கோடிகளில் நடக்கும் ஊழல்களைவிட, இந்த 30 ரூபாய் ஊழல் விளைவிக்கும் சமூகக்கேடு அதிகம்//
    உண்மை!

    ReplyDelete
  5. உண்மையிலையே மொக்கையான திட்டம் இது. வீட்டு வேலைக்கு ஆள் தேடுவது ரொம்ப கஷ்டமாகிவிட்ட்டது இந்த திட்டத்தால்

    ReplyDelete
  6. இதே அனுபவம் அனைவருக்கும் ஏற்படுகிறது. உங்கள் எழுத்து அதனை வெளிக்கொண்டுவந்துள்ளது. நல்லதாய் விடியட்டும்.

    ReplyDelete
  7. அருமையான கட்டுரை.......இது கிராமத்தை மட்டுமல்ல நகர்ப்புறத்தையும் பாதிக்கிறது. கிராமத்திலிருந்து மக்கள் வேலை தேடி வராத காரணத்தினால் நாங்கள் வட இந்தியாவிலிருந்து ஆட்களை வேலைக்கு அழைத்து வரும் நிலைக்கு தள்ள பட்டு இருக்கிறோம்

    ReplyDelete
  8. சுரண்டப்படும் நிலை பற்றிய தீர்க்கமான பதிவு ம்ம் இப்படிப்போனால் வல்லரசு ஆகும் அரசியல் மக்கள் பாடுதான் பாவம்!

    ReplyDelete
  9. விவசாயமே மிகவும் சீரழிகின்ற நிலையில் இனி என்ன செய்யும் கை பார்ப்போம் ??

    ReplyDelete
  10. என்னோட மற்றும் எங்க கிராமத்து விவசாயிங்களோட ஆதங்கத்த அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க. விவசாயம் மூலமா ஒன்னும் உருப்படியான லாபம் இல்லாததால கூலிய ஏத்தி குடுத்து அவங்கள விவசாய வேலைக்கு கூட்டிகிட்டு வர முடியாத நெலம. எல்லா வேலைக்கும் மெஷின் வந்துட்டாலும் அதுக்கு ஆகும் செலவும் ரொம்பவே அதிகம். அப்படியே மெஷின் பயன்படுத்தினாலும் அதுக்கும் எடுக்க புடிக்க வேலைக்கு ஆட்கள் வேணும். ம்ம்ம்ம்.

    எங்க ஊர்ல அவங்கவங்க தோட்டத்துல எல்லா வேலையையும் அந்தந்த விவசாயிங்களே கஷ்டப்பட்டு செஞ்சுகிட்டு இருக்காங்க, வேற வழியே இல்ல. அவங்களுக்கு விவசாயம் தவிர வேற ஒன்னும் தெரியாது, அதனாலதான் எதோ கொஞ்சம் வெளையுது. அடுத்த தலைமுறையில பாருங்க (இன்னும் பத்து வருடம் போகட்டும்), ங்கொக்க மக்க எல்லாரும் சொத்துக்கு சிங்கி அடிக்க வேண்டி வரும், வரணும்... அப்பவும் ஒன்னும் பெருசா நாம திருந்திடப் போறதில்ல...

    எழுபது என்பது ரூபாய்க்கு வேலைக்கு போறாங்கன்னு பொதுவா நாம அவங்கள திட்ட முடியாது. இந்த வெயில்ல ஒரு நாள் முழுக்க ஒடம்ப வளைச்சு கஷ்டப்பட்டு வேலை செஞ்சுட்டு 100, 120 ன்னு கூலி வாங்கிட்டு அவங்க எத்தன நாளைக்கு வாழ்க்கைய ஓட்டுவாங்க? என்னத்தையோ காலேஜ்ல போயி படிச்சு கிளிச்சிட்டோம்னு சொல்லி, நோகாம ACல உக்காந்துகிட்டு ஒரு நாளைக்கு 1000ல இருந்து 5000 ரூபா வரைக்கும் நாம வாங்கிட்டு அவங்கள குறை சொல்ல கூடாது. நம்மள்ல எத்தன பேரு விவசாயியோட பிள்ளைங்க, இப்போ இந்த IT வேலை வேண்டாம்னுட்டு எத்தன பேரு விவசாயம் பண்ண ரெடியா இருப்போம்?

    விவசாயத்த லாபகரமான ஒரு தொழிலா மாத்துறது மட்டுமில்லாம, கடினமான வேலைகளுக்கு மெஷின் பயன்படுத்த பழகினாத்தான், விவசாயம் இந்தியாவுல தாக்கு பிடிக்கும், இல்லன்னா மூணு வேலைக்கும் மூணு மாத்திரை சாப்பிட்டு உயிர் வாழ மருத்துவத்துறைய நாட வேண்டியதுதான். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்ல, நம்ம வாழ்க்கை முடியறதுக்கு முன்னாடியே அது நடக்கும்.

    ReplyDelete
  11. It is a neat article that states the real problem, don't know whether this will lead to good change in future... at least hope this reach to some people out there.keep continuing this work...cheers!

    ReplyDelete
  12. அனைவரும் ஊழலுக்கு துணை போவது இதன் கசப்பான மறுபக்கம். உண்மை என்னவெனில் இந்த வேலைகளெல்லாம் எனக்கு தெரிந்து எல்லாப் பக்கமும் இயந்திரங்களாலேயே நடப்பவை, எனவே மனித உழைப்பால் இவை நடக்க வேண்டுமென்பதே தேவையில்லாத எதிர்ப்பார்ப்பு.
    கண்டிப்பாக வேலைக்கு வரும் பலரால் உடலுழைப்பு முடியாத காரியம்.

    ஒன்னுமே முடியாத தாத்தா பாட்டிகளை பைக்கில் போய் இடத்துல டிராப் பண்ணிட்டு பிக்-அப் பண்ணினால் போதும், சம்பளம் அக்கவுண்டுக்கு வந்துடும்.

    ஆனாலும் அனைவருக்கும் வங்கிக்கணக்கு, தினக்கூலிக்கு அதிக வருமானம் கிடைப்பது / தரவேண்டிய நிலை வந்திருப்பது இந்த முறையினால் கிடைத்த நன்மைகள். விவசாயக் கூலிக்கு ஆள் கிடைக்காதிருப்பது ஒன்றும் புதிதல்ல, பல வருடங்களுக்கு முன்பே, நீ என் வயலில் வேலை பாரு, நான் உன் வயலில் வேலை பார்ப்பேன் என பல குறு விவசாயிகள்/நில உரிமையாளர்கள் வேலையில் இறங்கிவிட்டார்கள். இது பொருளாதார தத்துவ அடிப்படையில் செயல்படாவிட்டாலும், ஒரளவிற்கு சாத்தியமாகிறது.

    ReplyDelete
  13. அரசுகள் எதுவும் பண்ணாம சும்மா இருந்தாவே போதும்னு சொல்ற அளவுக்கு வந்துடுச்சு........

    ReplyDelete
  14. திரு செங்கோவியின் அருமையான பதிவு. படித்துப் பாருங்கள். மிக்க நன்றி.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  15. ஒரு திட்டத்தை முறையாக செயல் படுத்த யாரும் தயாரில்லை என்பது வெட்க்ககேடு! முறையாக செயல்படுத்திய இடங்களில் நல்ல பலனை தந்துள்ளது ,ஒதாரணம் மதுரை வடிவேல்கரை , உசிலை அல்லிகுண்டம் இப்படியாக பல ஔதநந்கல் உள்ளன நண்பரே !maduraisuki"

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.