Monday, June 25, 2012

தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?


சமீபகாலமாக பொருளாதாரக் காரணங்களாலும், தாம்பத்தியப் பிரச்சினையினாலும் விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக ஒரு செய்தித் தொகுப்பை பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பியதைப் பார்த்தேன். ஏதாவது உருப்படியாக தகவல்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. கருத்துச் சொன்ன சமூக ஆர்வலர்களும் மொன்னையாகப் பேசினார்களேயொழிய, பிரச்சினையின் மையத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும் ஈகோ என்ற ஒற்றை வார்த்தையுடன் அதைக் கடந்து சென்றார். இந்தியாவில் 15-25% திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகச் சொல்லப்பட்டது. சமீபகாலமாக அதிகரிக்கும் விவாகரத்திற்குக் காரணங்கள் என்ன?

வரதட்சணைக் கொடுமை என்பது தொடர்ந்து ஒரு முக்கியக் காரணியாக இருந்து வருகிறது, பல நேரங்களில் தவறாக குற்றம் சாட்டப்பட்டாலும்!(பார்க்க: பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...). அதையடுத்து வேறு என்ன பிரச்சினை என்றால், கணவன் மனைவிக்கு இடையே வரும் ஈகோ பிரச்சினை. அதை அலசுவதற்கு என் தம்பி ஒருவரின் வாழ்க்கையையே எடுத்துக்கொள்வோம்.

தம்பி நல்ல பையன். ஐ.டி.துறையில் நல்ல வேலை. பேங்க் அக்கவுண்ட் நிறைய சம்பளம்.பிரச்சினை இல்லாத குடும்பம் என்பதால் பெண் கொடுக்க பலரும் போட்டி போட்டனர். தம்பியும் ஏறக்குறைய இதே பண்புகளைக் கொண்ட பெண்ணாகத் தேர்வு செய்தார். தம்பியின் குணநலன்கள் எனக்குத் தெரியும் என்பதால், அப்போதே எனக்கு டவுட்டாகிக் கேட்டேன் ‘தம்பி,இது உனக்குச் சரிப்பட்டு வருமா?’என்று. அதற்குத் தம்பியும் நீண்ட விளக்கம் கொடுத்தார். “அண்ணே, இந்தக் காலத்துல ஒரு ஆள் வேலை செஞ்சு குடும்பத்தை ஓட்ட முடியாது. நான் ஃபிஃப்ட்டி தவுசண்ட் வாங்குறேன். அந்தப் பொண்ணு இப்பவே தேர்ட்டி தவுசண்ட் வாங்குது. இந்தியாலயே எயிட்டித் தவுசண்ட்ஸ்..இதை விட வேற என்ன வேணும்?” என்றார். இதைவிடவும் வேறு சில விஷயங்கள் வேண்டுமே என்று தோன்றினாலும், தம்பியின் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை. தம்பியும் நான் சொன்னால் கேட்கக்கூடியவரும் இல்லை.

அதன்பின் திருமணமாகி, இரண்டாண்டுகள் கழித்து இப்போது விவாகரத்தும் ஆகிவிட்டது. சென்ற இந்தியப் பயணத்தில் தம்பியைப் பார்த்தபோது ‘என்னா பொம்பளைண்ணே அது...என்னை பாத்திரம் கழுவச் சொல்றா..வீட்டுவேலை செய்யிங்கிறா..லீவுநாள்னா பத்துமணி வரைக்கும் தூங்குறா..வீட்டுல விளக்குப் பொருத்தறதே கிடையாது. எப்பவும் செல்ஃபோனை நோண்டிக்கிட்டு....எங்க ஊருக்கு வர்றதேயில்லை..அய்யய்யோ..ஒரு ஸ்டேஜுக்கு மேல சமாளிக்க முடியலை..’ என்று ஒரே புலம்பல். 

தற்கால இளைஞர்களிடம் உள்ள சிக்கலே இது தான். என்ன தான் படித்து, நல்ல வேளையில் இருந்தாலும் பல ஆண்கள் மனதளவில் சென்ற தலைமுறைச் சிந்தனையிலேயே தேங்கிவிட்டவர்கள். மிகப் பெரும்பாலான ஆண்கள், தன் அம்மா போன்றே குணநலன்கள் உள்ள பெண்ணைத் தேடுபவர்கள் தான். ‘தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பின் தூங்கி முன் எழ வேண்டும். சமையல் வேலை, வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்ள வேண்டும்’ எனும் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் காட்டுவது அவர்களது ‘சென்ற தலைமுறை அம்மா’ போன்ற பெண்ணையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆழ்மன ஆசையைவே!

ஆனால் நம் அம்மாக்களுக்கு ‘புராஜக்ட் டென்சன்’ கிடையாது. காலையில் எழுந்ததும் போக்குவரத்து நெரிசலில் பஸ்/ஸ்கூட்டி பயணம் செய்யும் அவஸ்தை கிடையாது. கொஞ்சம் சிரித்துப் பேசினாலே எழும் ‘புரபோசல்கள்’ கிடையாது. பல்வேறு கலாச்சாரங்கள் ஒரே இடத்தில் குவிவதால் அடையும் மன மாறுதல்களும் கிடையாது. அவர்களது வாழ்க்கை முறை எளிமையானது. 

முந்தைய தலைமுறை வரை சம்பாதிப்பது புருஷ லட்சணமாக மட்டுமே பார்க்கப்பட்டது. அது கணவர்களின் கடமையாகவே இருந்தது. தற்போது கணவனின் கடமையை சரிபாதியாக மனைவிக்குப் பிரித்துக் கொடுக்கும் தற்கால தம்பிகள், மனைவியின் கடமையையும் சரிபாதியாக பிரிக்க வேண்டும் என்ற வாதத்தை முழுமனதாக ஏற்பதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் அதுவே பிரச்சினைக்கு மூல காரணமாக ஆகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் மெயில் குரூப்பில் நண்பர் ஒருவர் ‘நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்கப்பா’ என்று மெயில் போட்டார். மற்றொரு நண்பர் ‘*** கம்பெனியில் ஒரு பெண் இருக்கு’ என்று பதில் போட்டார். அதற்கு நம்மாளு போட்ட பதில்: ‘அய்யய்யோ..அந்தத் துறையா? ஆளை விடுங்கடா சாமீ!”. அப்படிப் பதில் போட்ட நண்பரின் சொம்பு எங்களால் நெளிக்கப்பட்டது, எப்படி சிலரின் தவறை பொதுமைப்படுத்தலாம் என்று! அப்போது நடந்த விவாதங்களின் முடிவில் அந்த ஆணாதிக்கவாதி(!) ‘சரிப்பா..அந்தப் பெண்களை கட்டிக்கும் தகுதி எனக்குக் கிடையாது..என்னை விட்டுடுங்க’ என்று சரணடைந்தார்.

பெரும்பாலான ஆண்கள் என்ன தான் பெரிய படிப்பு, எம்.என்.சி.கம்பெனியில் வேலை என்று பெற்றிருந்தாலும், உண்மையில் உள்ளுக்குள் 30 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறார்கள் என்பதே உண்மை.

 ஜாதிகளின் அவசியம் இனிமேல் உண்டா என்ற சிந்தனை, டாக்டர்-இஞ்சினியர் என நவீன ஜாதிகள் உருவாகியிருப்பதை உணர்வதில் தான் முடியும். ஒவ்வொரு துறையுமே தனக்கென்று தனிப்பட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கின்றன. இன்னும் நுணுக்கமாக ஆராயுமிடத்தில், ஒவ்வொரு பதவியுமே (ஜூனியர் இஞ்சினியர்-இஞ்சினியர்-புராஜக்ட் லீடு-மேனேஜர்) தனிப்பட்ட குணநலன்களைக் கொண்டிருக்கின்றன. சில கலாச்சாரங்கள்/குணநலன்கள் எவ்வித கவனிப்பையும் ஏற்படுத்தாதவை.சில தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. ’தாய்மை என்பது பெண்களை அடிமையாக வைத்திருக்க ஆண்களால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பண்பு’ என்பது போன்ற நவீன கருத்துக்கள் ஒரு சாராரால் முன்வைக்கப்படும் நிலையில், ஆண்கள் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

பாலியல் வறட்சி நிரம்பிய நம் நாட்டில், திருமணம் என்பது அடிப்படையில் ஒரு இளைஞனுக்கு கிளுகிளுப்பான சமாச்சாரமாக மட்டுமே இருப்பது நம் துரதிர்ஷ்டம் தான். அதற்கு அடுத்தபடியாக திருமணம் என்பது வாழ்க்கையை வளப்படுத்த வரும் வாய்ப்பாக (வரதட்சணை, பெண்ணின் சம்பளம்..) பார்க்கப் படுகிறது. இதற்கும் அப்பால் ’தன் தேவை என்ன? வாழ்க்கைத் துணையிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன? அதற்காக நாம் இழக்கப்போவது எதை? நமக்கு எது முக்கியம்?’ என ஒரு ஆணும், ஆணைப் பெற்றோரும் சிந்திக்க வேண்டியது அவசியம். உங்களுக்குத் தேவை இன்னொரு தாய் தான் என்றால், அதற்கேற்றாற் போன்று பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் செல்வது நல்லது.

’கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசை’ என்பது நடைமுறையில் ஒத்துவராத ஒரு விஷயம். எனவே பொண்ணு பார்க்கக் கிளம்பும் தம்பிமார்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து ‘என்னவெல்லாம் வாங்கலாம்?’ என்று மட்டுமே யோசிக்காமல், ’ அதற்கு பிரதிபலனாக என்னவெல்லாம் கொடுக்க வேண்டி வரும்?’ என்றும் யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் உங்கள் வாழ்க்கையை மட்டுமல்லாது மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்த பாவத்திற்கே நீங்கள் ஆளாக நேரிடும்.

எனவே பரந்த மனதுடன் வாழ்க்கையை அணுகுங்கள். All the best!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

 1. இரவு வணக்கம்,செங்கோவி!அருமையான பகிர்வு.அந்தக் காலத்து ஆண் மகனாகிய நானே,பகிர்ந்து வாழ்வதே வாழ்க்கை எனப் புரிந்து வாழ்கையில்(சுய தம்பட்டம்?),இந்தக் காலத்தில்.......................ஹூம்!!!!

  ReplyDelete
 2. இரவு வணக்கம்,செங்கோவி!அருமையான பகிர்வு.அந்தக் காலத்து ஆண் மகனாகிய நானே,பகிர்ந்து வாழ்வதே வாழ்க்கை எனப் புரிந்து வாழ்கையில்(சுய தம்பட்டம்?),இந்தக் காலத்தில்.......................ஹூம்!!!!

  ReplyDelete
 3. வினாடிகளில் வாழ்கையை தொலைத்துவிட்டு நாட்களில் தேடினால் என்ன மிஞ்சும் என்பதுபோல் தன் துணையை தேர்வு செய்வதற்கு முன்பு பொன்னிலும் பொருளிலும் ஏனைய பிறவற்றிலும் கவனத்தை சிதறவிட்டுவிட்டு பின்பு நிம்மதியை தேடினால் எங்கே கிட்டும்.!

  திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணின் தேவை நிம்மதியான வாழ்க்கை தான் என்றால் அதற்க்காக சில விசயங்களை இழந்துதான் ஆகவேண்டும் நல்ல இடுகை.!

  ReplyDelete
 4. சூப்பர்ண்ணே, இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சி எனக்கு 25 வயசாகுரப்போ இதுபோல ஒரு பதிவு போடுங்கண்ணே, பிரயோசனப்படும்.

  ReplyDelete
 5. ஜாதிகளின் அவசியம் இனிமேல் உண்டா என்ற சிந்தனை, டாக்டர்-இஞ்சினியர் என நவீன ஜாதிகள் உருவாகியிருப்பதை உணர்வதில் தான் முடியும்

  சரியா சொன்னீங்க, இதுதான் நவீன உலகின் உயர்சாதி!

  ReplyDelete
 6. நான் எழுத நினத்தவைகளை அப்படியே நீங்க எழுதிவிட்டீர்கள் ... எனக்கு ஒரு பதிவுப் போச்சு !!! தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை ... !!! ஆண்கள் இன்னும் ஒரு 30 ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கின்றார்கள் ... பெண்கள் 30 ஆண்டுகள் முன்னோக்கிய படி போகின்றார்கள். அத்தோடு கொஞ்சம் சிரிச்சு பேசினால் வரும் பிரபோசல்கள் .. இதனாலேயே பாதி உறவுகள் முறிகின்றன. பிரபோசல் வந்தவுடன் பெண் நோ சொல்லிவிட்டாலும், நட்பை தொடர்கிறாள் .. ஆனால் இது கணவனுக்கு தெரிய வரும் போது பெரும் உறுத்தலாகி விடுகின்றன. இது பெரிய வாய்த் தகராறு ஆகிவிடுவதும் உண்டு !!!

  ReplyDelete
 7. :-(

  அண்ணே, அறிவுரைக்கு நன்னி!!!

  #இதுக்குத்தேன்யா, நான் இந்தப் பக்கமே வாரதில்லை. வர வர இந்தக் கிழங்க தொல்லை தாங்க முடியல!

  :)

  ReplyDelete
 8. நீங்க சொல்றது முழுக்க முழுக்க சரி.. பசங்க அந்தப் பொண்ணுகூட நம்மால வாழ முடியுமான்னு யோசிச்சு பார்க்காம, தோற்றம், படிப்பு, வேலை, சம்பளத்த மட்டுமே பார்த்து முடிவு பண்றாங்க. பெரும்பாலானா பசங்க நகரங்கள்ல வசிச்சாலும் வீட்ல, உள்ளுக்குள்ள கிராம மனநிலை, சூழல்லதான் இருக்காங்க...!

  ReplyDelete
 9. மிக முக்கியமாக... பெரும்பாலான பெண்கள் சிறிய விஷயத்திற்கு கூட விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை இழந்து வருகிறார்கள் என்பதும் அதிகரித்து வரும் விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம்.... !

  ReplyDelete
 10. நீங்க சொல்றது உண்மைதான்.. குறிப்பாக அந்த (****) துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு உள்ள பிராட் மைன்ட் நம்ம முப்பது வருட பிளாஸ் பேக் வாழ்க்கைக்கு ஒத்து வராது. எனக்கு கூட முதலில் பார்த்த பெண் மேற்படி துறையை சேர்ந்தவர்.. நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறும் நேரத்தில்.. நம் ரெண்டுபேருக்கும் சம்பளம் ஒண்ணுதான் எனக்கு அடுத்த வருஷம் இங்க்ரிமெண்ட் போடுவாங்க உனக்கு? பலகாரனங்களை கூறி உண்மையை கடைசியில் சொல்லிவிட்டாள் - அதே துறையில் உள்ள வேறொருவனை காதலிப்பதாக - நானும் முடிந்தவரை (என்னை என்னவோ ரேப் செய்த மாதிரி கூனிக்குறுகி செய்யாத தப்புக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு) எல்லா செலவும் செய்த பிறகு போய் தொலை சனியனே என்று நோந்துகொண்டேன். இப்போது நீங்க சொன்ன அதே முப்பது வருட பிளாஷ்பேக் வாழ்க்கை வாழத்தேரிந்த பெண்ணுடன் திருமணம் முடிந்து நிம்மதியாக இருக்கிறேன். இந்த கால இளம் பெண்களுக்கு கையில் நாலு காசு கிடைத்தவுடன் வரும் மிதப்பு இருக்கிறதே (வேணாம் சொன்னா ஆணாதிக்கம் அப்படின்னு சொல்லுவாங்க) அந்த மாதிரி பிராட் மைன்ட் உள்ள பெண்களை பிரண்டாகவோ அல்ல மனைவியாகவோ கொண்டவரை தனிமையில் விசாரித்தால் இந்த ஆண்டு முழுக்க பதிவு போட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

  ReplyDelete
 11. தல மைன்ட்ல ஏத்திக்கிட்டேன்!

  ReplyDelete
 12. அதான் என் இரண்டு பசங்களையும் பாத்திரம் தேய்க்கவும் கத்துக்கோங்கடா என்றால் சீரியஸ் தெரியாமல் போம்மா அதெல்லாம் எதுக்குன்னு நான் சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்குதுங்க...யார் கையில சிக்கி கஷ்டப்பட போறாங்களோ???

  ReplyDelete
 13. அற்புதமான ஆணித்தரமான வாதங்களுடன் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. அருமையான பகிர்வு நண்பரே...
  எல்லாரும் படிக்க வேண்டிய ஒன்று.

  ReplyDelete
 15. சிக்கலான விஷயம் ஒன்றிற்கு சுலபமா தீர்வு சொல்லிருக்கீங்க. நன்று.

  ReplyDelete
 16. மிகவும் தேவையான சமுகப்பதிவு இது உண்மையில் ஆண்கள் பலர் முந்திய தலைமுறையில் தாண் சிந்திக்கின்றோம்!விட்டுக்கொடுப்பு இல்லை என்றால் விவாக ரத்து நிச்சயம்!

  ReplyDelete
 17. நீண்டகாலத்தின் பின் இக்பால் செல்வன் வருகை தங்கள் தளம் மூலம் வாழ்த்துக்கள் செங்கோவியாரே!

  ReplyDelete
 18. அருமையான பதிவு நண்பரே. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. Very nice ,and very well written,i am your great fan.......

  (PS:i dont have tamil font writing ,so i am writing in English,bear with me)

  ReplyDelete
 21. அண்ணன் பீதியக் கெளப்புறீங்க..சும்மாவே பொண்ணுங்கன்னா அவுறதில்ல...அவ்வ்வ்வ்! மைண்ட்ல வச்சுக்கிறேன்! :-)

  ReplyDelete
 22. //தற்கால இளைஞர்களிடம் உள்ள சிக்கலே இது தான். என்ன தான் படித்து, நல்ல வேளையில் இருந்தாலும் பல ஆண்கள் மனதளவில் சென்ற தலைமுறைச் சிந்தனையிலேயே தேங்கிவிட்டவர்கள்//
  உண்மை! உண்மை!
  அதுபோல பசங்களால் எந்தச் சூழலுக்கும் ஏற்றபடி ஈசியா மாற முடிவதில்லை. அவர்கள் வளர்ந்த சூழல்தான் எப்போதும் மனதளவில் ஆதிக்கம் செலுத்தும்!ஆனா பொண்ணுங்க எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்பாய்ங்க! உடனடியாக் தங்களை மாற்றிக் கொள்வாங்க!

  ReplyDelete
 23. வேலைக்கு போகும் பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டு இன்று நாங்கள் படும் அவதி!!!விதி!!!

  ReplyDelete
 24. வேலைக்கு போகும் பெண் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டு இன்று நாங்கள் படும் அவதி!!!விதி!!!

  ReplyDelete
 25. பதிவு ஒன்-சைடட் ஆக உள்ளது.. பழமைவாதிகளாக உள்ள ஆண்கள் சரி, மற்ற காரணிகளையும் கொஞ்சம் அலசியிருக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. யோவ், மூணு வருசம் முன்னாடி எழுதினதுக்கு இப்போக் கேள்வியா? அலசவில்லை, துவைக்கவில்லைன்னு..போறீரா, ராஜூ பாய்கிட்ட பிடிச்சுக்கொடுக்கவா?

   Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.