Friday, September 28, 2012

தாண்டவம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
தெய்வத் திருமகள் என்ற சுட்ட ஹிட் படம் கொடுத்த இயக்குநர் விஜய்-விக்ரம்-அனுஷ்கா-சந்தானம் கூட்டணியில் வழக்கத்திற்கு மாறான பழி வாங்கும் கதை என்றும், எக்கோ கன்செப்ட்-எக்காத கான்செப்ட் என்றும் பலவாறு விளம்பரப்படுத்தப்பட்டு  இன்று வெளியாகியிருக்கும் படம் தாண்டவம்.
ஒரு ஊர்ல.....................:
கண் பார்வையற்ற, லண்டன் சர்ச்சில் நல்ல பிள்ளையாக பியானோ வாசிக்கும் ஹீரோ, திடீர் திடீர் என சிலரைக் கொல்கிறார். லண்டன் போலீஸில் வேலை செய்யும் நாசர் அதைத் துப்பறிகிறார்.  அந்தக் கொலைகள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது என்பதே கதை.

திரைக்கதை :
லண்டனில் மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன், கண் பார்வையற்ற விக்ரமை சந்திக்கிறார். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத நல்லவரான விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் விக்ரம் அடிக்கடி எங்கோ போய், யாரையாவது கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில் பியானோ வாசிப்பைத் தொடர்கிறார். ஒரு பக்கம் எமியின் காதல், மறுபக்கம் லண்டன் போலீஸின் தேடல் என்று போகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் விக்ரம் ஒரு இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி என்றும், அனுஷ்காவை மணந்த புதுமாப்பிள்ளை என்றும் தெரிகிறது. நாசர், கொலையாளி விக்ரம் தான் என்று கண்டுபிடிப்பதில் முதல்பாதி முடிகிறது.

மெதுவாக நகரும் முதல்பாதிக்கு நேரேதிராக இரண்டாம் பகுதியில் படம் ஃபுல் ஸ்பீடில் பறக்கிறது. இந்திய ராணுவம் தொலைத்த ஒரு விஷயத்தைத் தேடி விக்ரம் லண்டன் வர, அங்கே அவர் வாழ்க்கையே தலைகீழாய் ஆன கதையும், போலீஸீன் பிடியில் சிக்காமலேயே விக்ரம் வில்லன்களை பழி வாங்கும் கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.

கல்யாணம் ஆனபின்னும் முதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பிறகு லவ்வர் ஆகி, அதன்பிறகே மற்றதெல்லாம் எனும் மனைவின் கண்டிசன், எக்கோ கான்செப்ட், சந்தானத்தின் ஒன் லைனர்கள், அழகான லண்டன் மாநகரம், லண்டன் குண்டுவெடிப்பை கதையில் புகுத்திய சாமர்த்தியம் என பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.

விக்ரம் :
பிறவி நடிகனான விக்ரம், இதிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை அசத்துகிறார். உளவுத்துறை அதிகாரிக்கும், கண் பார்வையற்றவருக்கும் பாடி லாங்குவேஜில் அவர் காட்டும் வித்தியாசங்கள் அருமை. உடலை கேரக்டருக்கு ஏற்றபடி அவர் மாற்றி இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முகத்தில் முதுமை தனித்துத் தெரிகிறது. நல்ல நடிகரான விக்ரம் முகத்தைக் கொஞ்சம் கவனிப்பது நல்லது.

ஹீரோயின்ஸ் :
முதல் பாதியில் எமி ஜாக்சன் தான் அதிகக் காட்சிகளில் வருகிறார். ஆங்கிலேயெ முகம் என்பதால், நமக்கு அவர்மேல் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. (உனக்கு ஏன்யா வரணும்ங்கிறீங்களா?..அதுவும் சரிதான்!). ஆனால் எமி நன்றாக நடிக்கவே செய்கிறார். வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் இந்தப் படத்தில் இருந்தாலும், நண்பனின் மனைவியாக வருவதால் குத்துப்பாட்டுக்கும் நோ சான்ஸ்..சோ நோ யூஸ்!
எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார். அறிமுகக் காட்சியிலேயே மழையில் நனைந்த அனுஷ்காவைக் காட்டுபோது தியெட்டரே அதிர்கிறது.சிநேகாவும் வாலண்டரி ரிட்டயர்மெண்ட்டில் போய்விட்ட நிலையில், குடும்பப் பாங்கான கேரக்டருக்கு அனுஷ்காவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?..விக்ரமை போலீஸ் எஸ்.ஐ என்று நினைத்துகொண்டு, அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கும் காமெடி என்றாலும், லாஜிக் மிஸ்ஸிங்.

சந்தானம் :
டாக்ஸி டிரைவரான சந்தானம், விக்ரம் கொலை செய்யப்போகும்போதெல்லாம் சரியாக வந்து மாட்டிக்கொள்வது நல்ல காமெடி. தெய்வத் திருமகளை அடுத்து இணையும் கூட்டணி என்பதால், சந்தானத்திடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வரும் காட்சிகளே குறைவு தான் என்பதால், அவர் என்ன செய்வார்? ஆனாலும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸராக அடித்துத் தள்ளுகிறார். நாசரிடம் எகத்தாளமாகப் பேசுவதும் ரவுசு.

நாசர் / ஜெகபதிபாபு:
முகமூடியில் நரேன் - ஜீவாவை விரட்டிய நாசர், இதில் விக்ரமை விரட்டுகிறார். ஆனாலும் ஈழத்தமிழராக வருவதால், இரு கேரக்டர்களும் ஒன்றாகத் தெரியவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு மகள் இல்லை என்பதும் ஒரு ஆறுதல். விக்ரமின் உயிருக்குயிரான நண்பனாக ஜெகபதிபாபு வருகிறார். நல்ல நடிப்பு.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இடைவேளை வரை மெதுவாகச் செல்லும் திரைக்கதை

- கஜினியில் மெமரி லாஸ், இங்கே பார்வை லாஸ்!..ஹீரோயினும் லாஸ் என சில ஒற்றுமைகள்

-  பாடல்கள்..ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றிவிட்டார்

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நல்ல கதையுடன், குடும்பத்துடம் பார்க்கக்கூடிய படமாக எடுத்தது

- விக்ரமின் கவனமான நடிப்பு

- ஹி..ஹி..அனுஷ்கா, அப்புறம்  சந்தானம்

- நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு

- கண் தெரியாவிட்டாலும், நம்பகமான சண்டைக்காட்சிகள்

அப்புறம்....:

- எக்கோ கான்செப்ட் போன்ற பல புதிய விஷயங்கள் இருந்தாலும், படக்குழு எல்லா டிவி பேட்டிகளில் அதையே திரும்பத் திரும்பச் சொல்லி பழைய விஷயமாக்கியது. இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.

பார்க்கலாமா? :

-  கண்டிப்பாக பார்க்கலாம்.
- (இது எந்தெந்த படத்துல இருந்தெல்லாம் சுட்டுறுப்பாங்கன்னு ஆராய்ச்சி செய்யாம, படம் பார்க்கிற சராசரி ரசிகனா நீங்க இருந்தா..ரசிக்கலாம்!)
மேலும் வாசிக்க... "தாண்டவம் - திரை விமர்சனம்"

Monday, September 24, 2012

பள்ளிக்கூடம் போகலாமா?


ம்மூர்ல வீட்டை விட்டு வெளில இறங்குனாலே ப்ளே ஸ்கூல் தான்..தெரு தான் ப்ளே ஸ்கூல். தெருவுல போற வர்ற பெரியப்பன் - சித்தப்பன்கள் தான் வாத்தியார்கள். எது என்ன கலரு, எந்தக் கலர் எப்படின்னு விலாவரியா சொல்லிக்கொடுத்திருவாங்க..இங்க யாருக்கு டைம் இருக்கு? அதனால ஏறக்குறைய நம்மூரு மதிப்புக்கு மாசம் 5000 ரூபாய் கொடுத்து, ஒரு வீட்டுக்கு விளையாட அனுப்புறோம்..

 ஸ்கூலுக்கு போ-ன்னு நாங்க அவன்கிட்ட சொல்லும்முன்னாடியே, அவன் ‘நான் ஸ்கூலுக்குப் போகணும்’னு அடப்பிடிச்சு ஒரே அழுகை. ஏன்னா, எங்க பில்டிங்ல அவன் தான் சின்னப்பையன்.அவனோட தோஸ்த்துங்க எல்லாரும் ஸ்கூலுக்குப் போறதைப் பார்த்து, அவருக்கும் ஆசை வந்திடுச்சு.

ஸ்கூலுக்குப் போவணும்னு அவன் அழுதப்போ, எனக்கு பழைய நினைப்பெல்லாம் பீறிக்கிட்டு வந்திடுச்சு. நான் முதமுதலா ஸ்கூலுக்குப் போனதை நினைச்சுப் பார்த்தேன். வீட்டுல இருந்து ஸ்கூல் வரைக்கும் அம்மா ஒரு குச்சியால அடிச்சுக்கிட்டே கொண்டு போய் விட்டாங்க. நானும் எவ்வளவோ போராடிப்பார்த்தேன். ம்ஹூம்..ஒரு பிரயோஜனமும் இல்லை..தரதரன்னு இழுத்துட்டுப் போய், வாத்தியார் முன்னாடி நிப்பாட்டிட்டாங்க. அந்த ஆளைப் பார்த்ததும், நான் ஆஃப் ஆகிட்டேன்.


 நானாவது பரவாயில்லை..அழுதாலும் ஸ்கூலுக்குப் போயிட்டேன். என் அப்பா விஷயம் அதை விடவும் மோசம்..நல்லபிள்ளையா வீட்ல இருந்து கிளம்புவாராம். ஆனால் ஸ்கூலுகுப் போகாம, கண்மாய்-காடுன்னு சுத்திட்டு சாயந்திரமா வீட்டுக்கு வந்திடறது..அப்பப்போ பிடிபடறதும், ரெண்டு நாள் ஸ்கூலுக்கு சும்மா போயிட்டு, திரும்ப கட் அடிக்கிறதும் அவரோட வாடிக்கை ஆயிடுச்சாம். எங்க ஸ்கூல்ல அஞ்சாப்பு வரைக்கும் பரிட்சை கிடையாது. அதனால மூணாப்பு வரைக்கும் பாஸ் ஆகி(!) வந்துட்டாரு.

ஆனால் மூணாவது படிக்கும்போது, கட் அடிச்சுட்டு நொங்கு திங்கப்போன மனுசனை ஸ்கூல் போலீஸ் (இது என்னன்னு பின்னால சொல்றேன்..) விரட்டியிருக்கு. மனுசனை திங்கக்கூட விட மாட்டேங்கிறாங்களேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, ஸ்கூல் போலீஸ் மண்டையை சிலேட்டாலயே அடிச்சு உடைச்சுட்டாரு. அப்புறம், யாருமே அவரை ஸ்கூலுக்கு கூப்பிடலை.. அப்பேப்பட்ட வம்சத்துல வந்த பயபுள்ளை, ஸ்கூலுக்குப் போவணும்னு அழுதுட்டாம்யா..அதை நினைக்கும்போது, ரொம்பப் பெருமையா இருக்கு!!

 

ஸ்கூல் போலீஸ்:

எங்க கிராமத்திலேயே நான் படிச்ச ஸ்கூல் இருந்துச்சு. எங்க வாத்தியார்க எல்லாம் மக்களோட மக்களா சகஜமா பழகுவாங்க. ஒரு பையன் ஸ்கூல்ல ஜாயின் பண்றான்னா, அவன் ஃபேமிலி நிலைமைல இருந்து எல்லா விவரமும் வாத்திகளுக்கு அத்துப்படியா இருக்கும். பசங்க ஸ்கூலுக்கு வர்றது பெற்றோர் பொறுப்பு மட்டுமில்லை, ஆசிரியர்களுக்கும் அதுல பங்கு இருக்குன்னு நினைக்கிற நல்ல மனுசங்க அவங்க.

காலையில ஸ்கூல் ஆரம்பிச்சு அரை மணி நேரம் கழிச்சு நல்லாப் படிக்கிற/திட காத்திரமான பசங்களை ஊருக்குள்ள அனுப்புவாங்க. அவங்க வேலை, அன்னிக்கு லீவு போட்ட பசங்களை தேடிப் பிடிச்சு, ஸ்கூலுக்குக் கொண்டு வர்றது தான்..அந்த பசங்களுக்குத் தான் ஸ்கூல் போலீஸ்னு பட்டப்பேரு..(பன்னி பிடிக்கிற கூட்டம்னும் ஊர்ல சிலபேர் சொல்வாங்க!)

நான் நல்லாப் படிக்கிற பையன்கிறதாலயும், பார்க்கிறதுக்கு மாநிற ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ மாதிரி இருப்பேன்ங்கிறதாலயும் என்னையும் ஸ்கூல் போலீஸ் ஆக்கிட்டாங்க. (அதுல நைனாக்கு தனிப்பெருமை.) அன்னிக்கு யார் யார் லீவுங்கிற லிஸ்ட்டோட ஊருக்குள்ள போவோம். பெரும்பாலும் லீவு போட்டவங்க வயித்துவலின்னு தான் சொல்வாங்க. ஏன்னா காய்ச்சல்னு சொன்னா, தொட்டு கண்டுபிடிச்சிடுவோம்ல. வயித்துவலின்னாலும் டாக்டர் மாதிரி வயத்தை அமுக்கிப் பார்த்துட்டு ‘ஆமால்ல..கல்லு மாதிரில்ல இருக்கு..என்னத்தை முழுங்குனலே?’ என்று மிரட்டலாகக் கேட்டு விட்டு வருவோம்.
 ஸ்கூல் போலீஸாய் இருப்பதில் சிக்கல் என்னவென்றால், எப்போதும் கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்கும் எப்போதாவது ஆபத்து வருவதுண்டு. எங்கள் சத்துணவு டீச்சர்க்கு பாடம் எடுக்கிற டீச்சராக ஆக வேண்டும் என்று ஆசை. அது முடியாமல் போனதால் அப்பப்போ நாலாங்கிளாஸ் பசங்களை உட்கார வைத்து ‘திருக்குறள்’ வகுப்பு எடுப்பார். அப்படி ஒருநாள் ‘ஒழுக்கம் விழுப்பன் தரலான்......”குறளை அவர் சொல்லிமுடிக்கவும், நான் கெக்கேபிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தேன். ஸ்கூல் போலீஸே கட்டுப்பாடு இழந்து சிரிக்கும்போது, மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? எல்லாப் பசங்களும் சிரிக்க, எனக்கு பட்டக்ஸ் பழுத்துவிட்டது. அதன்பின் டீச்சர் அந்தக் குறளை யாருக்குமே நடத்தியதில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் சொல்லிக்கொள்கிறேன்.

பையன் முதல்நாள் போனதுக்கே இவ்ளோ ஃபீலிங்ஸ் வருதே..அப்போ இன்னும் நாளாக நாளாக என்னெல்லாம் வரப்போகுதோன்னு எனக்கே பயமா இருக்கு!!!
மேலும் வாசிக்க... "பள்ளிக்கூடம் போகலாமா?"

Sunday, September 23, 2012

முருக வேட்டை_37


கிலா ஆர்வத்துடன் “யார் அது..இப்போ எங்கே இருப்பான்னு தெரியுமா?” என்றாள்.

“அது நம்ம கடவுள் முருகன் தான் மேம்.”

ரங்கராஜன் அந்த ஃபைல்களுக்குள் தேடி, சித்தர் மலை கேஸ் பற்றிய விவரங்களை எடுத்து கவிதாவிடம் நீட்டினார்.

அதை வாங்கியபடியே “என்ன கேஸ் இது?” என்று கேட்டாள் அகிலா.

“தேவையில்லாம பெருசான விஷயம் மேம் இது..மேற்குத்தொடர்ச்சி மலையில சித்தர்மலைன்னு ஒரு பகுதி. அந்த மலை அடிவாரத்துல சில பழங்குடி மக்கள் வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்காங்க..அப்போ 30 வருசம் முன்ன..நம்ம உலகத்துக்கும் அவங்களுக்கும் இடையில தொடர்பே இல்லை. காட்டுக்குள்ளேயே வேட்டையாடி சாப்பிட்டிக்கிட்டு இருந்திருக்காங்க..அந்த காட்டுக்குள்ளேயே ஒரு சாமி சிலையும் வச்சு கும்பிட்டுக்கிட்டு வந்திருக்காங்க. அந்த நேரம், நம்ம அறநிலையத்துறை எந்தெந்தக் கோவில்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம்னு தீவிரமா ஆய்வு செஞ்சுக்கிட்டிருந்த நேரம். அப்போ இந்தக் கோவில் பத்திக் கேள்விப்பட்டு, காட்டுக்குள்ளே போயிருக்காங்க. அங்கே போனா, கோவணாண்டியா முருகர் நிற்கிற பழங்கால கல்சிலை ஒன்னு இருந்திருக்கு.”

“சரி..நம்ம சட்டப்படி அதையெல்லாம் அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்க முடியாதே?”

“ஆமாம் மேம்..அங்கயும் ஒன்னுமேயில்லை. அந்த ஜனங்களுக்கு இவங்க வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு ஒரே அடிதடி ஆகிருச்சு. ஜனங்களோட பயம், இனிமே இங்கே சாமி கும்பிட விடமாட்டோங்களோன்னு..இதெல்லாம் காட்டுக்குள்ள நடந்ததால யாருக்கும் முதல்ல ஒன்னும் தெரியலை. திடீர்னு ஒருநாள் அந்த ஜனங்கள்லாம் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து அந்த அதிகாரிங்க மேல ஒரு புகார் சொன்னாங்க. அதுதான் பெரிய பிரச்சினையைக் கிளப்பிடுச்சு”

“ஏன்..என்ன புகார்?”

“அது ஒரு காமெடி மேம்..அவங்ககிட்ட தங்கம், வைரமா நகைங்க கொட்டிக்கிடந்ததாம்..தங்கத்தாலேயே ஒரு வேல் செஞ்சு வச்சிருந்தாங்களாம்..அது எல்லாத்தையும் இந்த அதிகாரிங்க திருடிட்டாங்கன்னு புகார்”

“பத்நாபபுரம் கோவில்ல கிடைச்ச மாதிரியா?”

“ஆமா..பத்நாபபுரம் மன்னர்கள் கட்டுப்பாட்டுல இருந்த பகுதி..அதனால அவங்க படையெடுத்து சேர்த்து வச்சிருக்காங்க..ஆனால் இந்த பஞ்சப்பராரிகள்கிட்ட ஏது மேம் அவ்வளவு தங்கம்?”

“கரெக்ட் தான்..அப்புறம் என்ன ஆச்சு?”

“விஷயம் எதிர்க்கட்சிகள் காதுக்குப் போய் அறநிலையத்துறை அமைச்சரையும் இதுல இழுத்துவிட்டுட்டாங்க.அவர் பதவியே பறிபோற நிலை. இல்லாத தங்க வேலை திருப்பிக்கொடு-ன்னா வர் என்ன செய்வாரு பாவம்? அதனால அப்போதைய சி.எம்.கேஸை சிபிசிஐடிக்கு மாத்தி விசாரிக்கச் சொன்னாரு”

“அதைத் தான் சார் விசாரிச்சாரா?”

“ஆமாம் மேம்..ஜனங்க சொன்னதுக்கு எந்த ஆதாரமும் இல்லை..வேற யாரும் அந்த காட்டுக்குள்ள போனதேயில்லைங்கிறதால வேற சாட்சியும் அவங்களுக்கு இல்லை..சோ, அவங்க சும்மா பொய் சொல்றாங்கன்னு முடிவு பண்றதைத் தவிர வேற வழியில்லை”

”அதனால கேஸை பாதில நிறுத்த முடியாதே?”

“அப்போ இன்னொரு பூதம் கிளம்புச்சு மேம்..அந்தக் காடும் மலையும் வனத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரவேண்டியது. எப்படி அங்கே மக்களும், கோவிலும் இருக்கலாம்?-னு வனத்துறை களத்துல இறங்கிடுச்சு. பாவம் அந்த ஜனங்க..ஏதோ ஒரு சிலையை வச்சாவது கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க..எதிர்க்கட்சிக்காரங்களோட சேர்ந்து ஆடுனதுல, இருக்கிற இடமும், கோவிலும் போச்சு. அந்த ஜனங்களும் வெவ்வேறா இடத்துக்கு வாழப்போயிட்டாங்க. அந்தக் கூட்டத்துக்கு தலைவரா இருந்த ஆளும் கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டாரு. அதோட அந்தக் கேஸும் முடிஞ்சு போச்சு மேம்”

“அப்போ அந்தக் கூட்டத்துல இருந்து யாராவது வந்து, இந்தக் கொலையைப் பண்ணியிருக்கலாமோ?”

“என்ன மேம்..அந்த அமைச்சர்களையெல்லாம் விட்டுட்டு, நம்ம சாரை ஏன் கொல்லணும்?”

அகிலாவிற்கும் அந்தக் கேள்வி நியாயமானதாகத் தெரிந்தது. சிறுது நேர யோசனைக்குப் பின் “அந்த புகார் கொடுத்தது-வாபஸ் வாங்குனது யாரு? அவர் பேரென்ன?” என்று கேட்டாள்.

ரங்கராஜன் ஃபைலில் தேடிப்பார்த்துவிட்டு, “முத்துச்சாமிங்கிறவரும், செங்கோடன்னு ஒருத்தரும் சேர்ந்து தான் புகார் கொடுத்திருக்காங்க. செங்கோடன் தான் அந்தக் கோவில் பூசாரி..முத்துச்சாமி அந்த கூட்டத்துக்கு தலைவரு..”

“சரி..சரவணன் ஏன் செந்தில் பாண்டியன்மேல சந்தேகப்பட்டாரு? அதுக்குக் காரணம் வெறும் முன்பகை தானா?..ம்.....இந்த கேஸுக்கும் பாண்டியனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?” என்று கேட்டாள் அகிலா.

“மேம்..பாண்டியன் ST..”

“அப்படியா?” என்று கேட்ட அகிலா, சடாரென எழுந்தாள்.

“வாங்க..போய் பாண்டியனோட பெர்சனல் ஃபைலை நாமளும் பார்க்கலாம்” என்றாள்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_37"

Saturday, September 22, 2012

முருக வேட்டை_36



விதாவும் சரவணனும் பாண்டியனின் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

“என்னங்க இது..அப்போ இது தான் மார்ஸா?”என்றாள்.

“இருக்கலாம்..இந்தத் தெரு தானே சொன்னார்?”

“ஆமா..”என்று கவிதா சொல்லும்போதே, இருவரும் அந்த புதிய அப்பார்ட்மெண்ட்டைப் பார்த்தார்கள். அப்பார்ட்மெண்ட்டை நெருங்கியதும் ‘MARS CONSTRUCTIONS' கண்ணில் தெரிந்தது. பில்டிங் நம்பரைப் பார்த்ததும் சரவணன் முகத்தில் புன்னகை வந்தது.

“நம்பர் 10......ச்சே!” என்றவன், வாட்ச்மேனை நெருங்கி “பாண்டியன் வீட்டிற்குப் போக வேண்டும்” என்றான்.

“நீங்க?”

“நான் அவர்கூட ஒர்க் பண்றேன்”

“ஓ..சாரை பார்க்க வந்தீங்களா?” என்றார்.

சரவணன் அதிர்ச்சியானாலும், கட்டிகொள்ளாமல் “ஆமா..சார் வீட்ல இருக்கிறாங்கள்ல?” என்றான்.

“இருக்காரு..போங்க” என்றார் அவர்.

அவர்கள் நடக்கத் தொடங்கியதும் “செகண்ட் ஃப்ளோர்... “என்று அவர் ஆரம்பிக்கும்போதே, கவிதா “தெரியும்..செகண்ட் ஃப்ளோர்..நாலாம் நம்பர் ஃப்ளாட் தானே?”என்றாள்.

“ஆமாங்க” என்றார் அவர்.

”பாண்டியனோ யாரோ என்கிட்ட ஒருதடவை சொன்னாங்க..சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு சிக்கலானதாத் தான் இருக்கணும்னு அவசியம் இல்லேன்னு..அது கரெக்ட்டாத் தான் இருக்கு” என்றான் சரவணன்.

செகண்ட் ஃப்ளோர் வந்துவிட, நாலாம் நம்பர் ஃப்ளாட்டின் முன் சென்று நின்றார்கள். கவிதா காலிங் பெல்லை அழுத்தினாள். பதில் ஏதும் இல்லை. சரவணன் கதவை மெதுவாகத் தட்டினான். அப்போதும் பதில் இல்லை. எரிச்சலுடன் சரவணன், கதவின் கைப்பிடியைப் பிடித்துத் திருக, கதவு திறந்துகொண்டது.

உள்ளே வெற்று ஹாலைப் பார்த்ததும், சரவணன் உஷாரானான். ஆயுதம் எதுவும் இல்லாமல், கவிதாவுடன் வந்திருக்கிறோமே என்று ஒரு நிமிடம் கவலைப்பட்டான்.

கவிதாவை வெளியே நிற்கும்படி, சைகை காட்டிவிட்டு சரவணன் உள்ளே நுழைந்தான். ஹாலைக் கடந்து, அடுத்து திறந்திருந்த கிச்சனை எட்டிப் பார்த்தான். அங்கு யாரும் இல்லை.

“பாண்டியன் “என்று கத்தினான். பதில் இல்லை.

மெதுவாக அருகேயிருந்த அறையினை நெருங்கித் திறந்தான். திறந்தவன் அதிர்ச்சியாகி அப்படியே நின்றான்.

எல்லாவற்றையும் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கவிதா, சரவணன் நிற்பதைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தாள். சரவணன் அவள்  வருவதைப் பார்த்தாலும், ஒன்றும் சொல்லாமல் நின்றான். எனவே கவிதா தைரியமாக அவனை நெருங்கி, அந்த அறையினை எட்டிப் பார்த்தாள்.

அது ஒரு பெட்ரூம். அங்கே இருந்த கட்டில் மெத்தையின் மேல் ரத்தக்கறை படிந்த கத்தி, கயிறு மற்றும் ஒரு துப்பாக்கி சிதறிக் கிடந்தன. சரவணன் உள்ளே போய், அவற்றைப் பார்த்தான். முத்துராமனைக் கட்டப் பயன்படுத்திய அதே கயிறு. கத்தியும் அவரைக் கொல்லப் பயன்படுத்தியதாய் இருக்கலாம் என்று தோன்றியது. கட்டிலுக்குக் கீழே ஒரு பெட்டி திறந்து கிடந்தது. அதில் சில நகைகள் கிடந்தன. காணாமல் போன பூர்வீக நகைகள்!

கவிதாவும் உள்ளே வந்து பார்த்தாள். சரவணன் வெளியேறி, வீடு முழுக்கச் சுற்றிப்பார்த்தான். அங்கே யாரும் இல்லை.

”அச்சு, வெளில வா..வீடும் திறந்துகிடக்கு. ஆளையும் காணோம்...வெளில போய்ப் பார்ப்போம்”

கவிதா சரவணனுடன் வெளியேறினாள்.

“பாண்டியன் அப்பார்ட்மெண்ட்டுக்கு உள்ள தான் இருக்கணும்.” என்றான் சரவணன்.

“ஆமாங்க..மேல, மொட்டை மாடில பார்க்கலாமா?” என்று கேட்டாள் கவிதா.

சரவணனுக்கும் அது சரியென்று தோன்றியதால் லிஃப்ட்டில் ஏறி, மேலே வந்தார்கள்.

மாடி போதுமான வெளிச்சமின்றி இருண்டு கிடந்தது. நிலவொளிக்கு கண் பழக சிறுது நேரம் பிடித்தது. ஓரளவு வெளிச்சம் கிடைத்ததும், வாட்டர் டேங்க் அருகே யாரோ உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

“பாண்டியன்” என்று அழைத்தான் சரவணன்.

“வெல்கம் டூ அவர் சிபிசிஐடி ஆபீசர் !” என்றான் பாண்டியன்.

சரவணனும் கவிதாவும் பாண்டியனை நோக்கி நடந்து, சற்று தூரத்தில் நின்றனர்.

“சரவணன், பரவாயில்லையே..நீ இங்க வர ரொம்ப நாள் ஆகும்னு நினைச்சேன். இவ்ளோ சீக்கிரமா கண்டுபிடிச்சு வருவேன்னு நினைக்கலை”

“கண்டுபிடிக்கறதுக்கு ஒன்னுமே இல்லியே..” என்றான் சரவணன்.

“ஹா..ஹா..அது தானே ரொம்பக் கஷ்டம் சரவணன். சிஸ்டர், வணக்கம்” என்று கவிதாவைப் பார்த்து, கைகுவித்து வணக்கம் சொன்னான் பாண்டியன்.

“என்னண்ணே இது? எதுக்கு இதெல்லாம்? நீங்களா அந்தக் கொலையைப் பண்ணது? என்னால நம்பவே முடியலை” என்று புலம்பிக்கொண்டே போனாள் கவிதா.

“ஆமா..நான் தான் முத்துராமனைக் கொன்னேன்.”

“ஏன்?”

”ஏனா? நான் போலீஸ் வேலையில் சேர்ந்ததே அதுக்குத் தானே?”என்றான் பாண்டியன்.

என்ன?..அதுக்க்காகத் தான் போலீஸ்ல சேர்ந்தியா?..ஏன்?

“ஏன்னு உனக்குப் புரியணும்னா, சித்தர் மலை பத்தி உனக்குத் தெரியணும் என்றான் பாண்டியன்.

(தொடரும்
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_36"

Saturday, September 15, 2012

முருக வேட்டை_35


கிலா ஆபீசில் நுழைந்ததும் செந்தில் பாண்டியன் கேபினுக்கு ஃபோன் செய்தாள். அருகில் இருந்தவர் ஃபோனை எடுத்து “மேம், பாண்டியன் இன்னும் வரலை” என்றார்.

நேற்று கவிதா வந்து MARS என்பதும் 1024 என்பதும் முருகன் தான் என்று உறுதியாகச் சொல்லியது ஞாபகம் வந்தது. விஸ்வநாதன் ‘முத்துராமன் ஒருமுறை தவறு செய்ததாக’ சொல்லியதும் உறுத்தியது. பொதுவாக சிபிசிஐடி வழக்குகள் பாதியில் நிற்பதில்லை. நியாயமாக விசாரணை நடத்தி, கேஸை க்ளோஸ் பண்ணுவது வழக்கம். எனவே பாதியில் க்ளோஸ் செய்யப்பட்ட கேஸ்களை ஆராய்ந்தால், தான் தேடுவது கிடைக்கும் என்று அகிலா நம்பினாள்.

ரங்கராஜன் அகிலாவின் அறைக்கு வந்து “குட் மார்னிங் மேம்” என்றார்.

“மார்னிங் சார்” என்றாள் அகிலா. வயதில் பெரியவர் என்பதாலும், முத்துராமன் காலத்தில் இருந்தே பணியில் இருப்பவர் என்பதாலும் அகிலா அவரை மரியாதையுடன் அழைப்பது வழக்கம்.

“செந்தில் பாண்டியனுக்கு ஃபீவராம்..இன்னும் இரண்டு நாளைக்கு வர முடியாதுன்னு சொன்னார்”

“ஓ..ஓகே, நல்லா ரெஸ்ட் எடுத்திட்டே வரச்சொல்லுங்க. முத்துராமன் சார் கேஸ்ல, முக்கியமான சில விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுவோம்னு நினைச்சேன்...ஓகே, நீங்க ஒன்னு பண்ணுங்க சார்..முத்துராமன் சார் பீரியட்ல ப்ராப்பரா விசாரணை முடிஞ்சு க்ளோஸ் ஆகாத கேஸ்களின் டீடெய்ல் வேணும். அந்த ஃபைல்ஸை கொண்டு வர்றீங்களா?”

“ஓகே.. ஆனால் அதையெல்லாம் ஏற்கனவே பாண்டியன் பார்த்திட்டாரு மேம்” என்றார் ரங்கரான்.

”ஓ..சரி பரவாயில்லை..இப்போ சில க்ளூ கிடைச்சிருக்கு..கொண்டு வாங்க பார்ப்போம்”

”ஓகே..மேம்” என்று சொல்லிவிட்டுச் சென்ற ரங்கராஜன், அடுத்த அரை மணிநேரத்தில் மூன்று பெரிய ஃபைல்களுடன் வந்து சேர்ந்தார்.

“நீங்களும் உட்காருங்க சார்..அந்த நேரத்துல நீங்களும்கூட இருந்திருப்பீங்க இல்லியா? சோ, உங்களுக்கு இதுபத்தித் தெரிஞ்சதையும் நீங்க சொன்னா, ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்”

“ஓகே மேம்..அப்போ நான் டாக்குமெண்ட் டிபார்ட்மெண்ட்ல ஜூனியர்..டீடெய்லா எதுவும் எனக்குத் தெரியாது. தெரிஞ்சதைச் சொல்றேன்”  இருவரும் அமர்ந்து ஃபைல்களைப் புரட்டத் தொடங்கினர்.

“அவர் பீரியட்ல மொத்தம் பதிமூணு கேஸ் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கு. அது எல்லாமே இந்த ஃபைல்ஸ்ல இருக்கு மேம்..இது முதல் கேஸ்..ஒரு காலேஜ் பொண்ணு காணாமல் போன கேஸ்..அப்புறம் விசாரணைல டெட்பாடி கிடக்கிற இடத்தையும் கண்டுபிடிச்சாங்க.”

“அப்புறம் ஏன் பாதியில விசாரணை நின்னுடுச்சு?”

“அந்தப் பொண்ணைக் கொலை பண்ணது, அவளை ஒன்சைடா லவ் பண்ண ஒரு ஸ்டூடண்ட் தான்..போலீஸ் நெருங்குறது தெரிஞ்சு சூசைடு பண்ணிக்கிட்டான்..குற்றவாளியே இறந்தப்புறம், விசாரணைக்கு அவசியம் இல்லாமப் போச்சு. சோ, அதனால, கேஸை அதோட முடிச்சுக்கிட்டோம்.”

“அதனாக அந்தப் பொண்ணோட சைடுல யாராவது கோபப்பட்டிருப்பாங்களா? இல்லே, அந்தப் பையன் சைடுல யாராவது கோபப்பட்டு சாரை கொலை பண்ணியிருக்கலாமோ?” என்று கேட்டபடியே யோசித்தாள் கவிதா.

“பொண்ணு சைடு சந்தோசப்படத்தான் செஞ்சாங்க. அரெஸ்ட் பண்ணியிருந்தாக்கூட அவன் தப்பிச்சிருப்பான்..பையன் சைடு பத்தித் தெரியலை மேம்”

”அப்போ பாண்டியன் வரவும் அந்த பையன் சைடை விசாரிக்கச் சொல்வோம்..அந்தப் பையன் பேரு முருகனா?”

“இல்லை மேம்..அவன் பேரு..” ஃபைலைப் புரட்டிவிட்டு “ஜெயக்குமார் மேம்” என்றார் ரங்கராஜன்.

அகிலா ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கியவாறு “சரி..முதல்ல க்ளோஸ் ஆகாத கேஸ்கள்ல முருகன்னு யாராவது பாதிக்கப்பட்டவங்க சைடுலயோ அல்லது குற்றவாளி சைடுலயோ இருக்காங்களான்னு பாருங்களேன்” என்றாள்.

ரங்கராஜன் ஏதோ யோசனையுடன் அகிலாவைப் பார்த்தபடியே ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.

“என்ன சார்”

“மேம்..முருகன்னு ஏன் பர்டிக்குலராத் தேடறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“ஓ..ஷ்யூர்..சார் இறந்தப்போ சுவர்ல MARS-1024ன்னு எழுதியிருந்துச்சு இல்லியா?..அது என்னன்னு ஓரளவு யூகிச்சுட்டோம். ‘முருகன்’ன்னு தான் அது மீன் பண்ணுது”

ரங்கராஜன் முகம் அஷ்டகோணலானது.

“மேம்..அப்போ நீங்க தேடறது அந்த சித்தர் மலை கேஸா இருக்கலாம் மேம்.”

“ஏன்..அதுல முருகன்னு ஒருத்தர் உண்டா?”

“ஆமாம் மேம்”

”பாதிக்கப்பட்டவங்க சைடுலயா? க்ரிமினல் சைடுலயா?”

“பாதிக்கப்பட்டவங்க சைடு தான் மேம்”

அகிலா ஆர்வத்துடன் “யார் அது..இப்போ எங்கே இருப்பான்னு தெரியுமா?” என்றாள்.

“அது நம்ம கடவுள் முருகன் தான் மேம்.”   


(தொடரும்)


மேலும் வாசிக்க... "முருக வேட்டை_35"