Monday, February 7, 2011

ஈழத் தமிழர் பிரச்சினையும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)

சென்ற மாதம் எங்கள் தாத்தா ஒருவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். நல்லபடியாக அடக்கம் முடிந்தபின் விஷேசம் எப்போது வைப்பது என்று உட்கார்ந்து பேசினோம். ‘விஷேசம்என்றால் தெரியும்தானே?
பொதுவாக 15 நாட்களுக்குப் பின் விஷேசம் வைக்கப்படும். அன்று மாமன்மார் சொம்பு/தண்ணி எடுத்தோர்க்கு புது டிரெஸ் கொடுத்து ‘துக்கத்தைத்தீர்ப்பார்கள். அது முடியும்வரை வேறு நல்ல காரியங்களில் கலந்துகொள்ள முடியாது. அந்த 15 நாட்களும் இரவில் பெண்கள் மாரடித்து அழுவார்கள். குடும்ப உறுப்பினர் மரணமடையும்போது, அந்த அதிர்ச்சியிலிருந்தும் துக்கத்திலிருந்தும் வெளிவர 15 நாட்கள் தொடர்ந்து அழுவது மனோதத்துவ ரீதியாக உதவும்.

குடும்பத்தில் பெரியவரான சித்தப்பாவிடம் கேட்கப்பட்டது: “என்னப்பா, அய்யாவுக்கு விஷேசம் 15ம் நாள் வச்சுக்கலாம்ல

அதை அவர் (நாங்களும்!) கடுமையாக மறுத்தார். “எல்லாரும் வேலை வெட்டிக்குப் போகவேண்டாமா? யாரு இப்போல்லாம் 15 நாள் அழுவுறது? பசங்க ஆபீசுக்கு அடிக்கடி லீவு போட முடியுமா? எத்தனைதடவை அங்கிட்டும் இங்கிட்டும் அலைவாங்க?அவர் கேட்பது அனைவருக்கும் நியாயமாகவே பட்டது. ஐந்தாம் நாள் காலையே வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சொந்த அப்பாவே இறந்தாலும், 5 நாட்களுக்கு மேல் அழ எங்களுக்கு நேரமோ மனமோ இல்லை என்பதே உண்மை. இது தான் நாங்கள். ஈனத் தமிழர்கள் என்று சிலரால் அன்போடு அழைக்கப்படும் தமிழகத் தமிழர்கள்!

பல நூறு வருடங்களாக சமூகரீதியில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் அடிமைகளாக, கூலிகளாக உழன்ற தமிழகத் தமிழர்கள், தங்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தைக் காணும் நேரம் இது.

எனக்கு முந்தைய தலைமுறை வரை, நாங்கள் வாழ்வில் மொத்தமாக பார்த்த பெரும் தொகை இருபது ஆயிரம் ரூபாய் கூட இருக்காது. வறுமையுடன் தலைமுறை தலைமுறையாகப் போரிட்டுள்ளோம். எனது தலைமுறையில் தான் ஜெயித்திருக்கிறோம். என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான மனிதர்களை  நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மொத்த சமுதாயமும் பணத்தின் பின் வெறித்தனமாக ஓடும் நேரமிது. அதற்கான எல்லா நியாயங்களும் கடந்து காலங்களில் கிடந்த பட்டினியில் இருக்கின்றன.

கடுமையான இன அழிப்பு இலங்கையில் நடந்துகொண்டிருக்கும்போதே கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் திரும்ப மத்தியில் வருவதால் உள்ள அபாயம் எனக்குப் புரிந்தது. என் உறவினர்களிட்த்தில் ஈழப்பிரச்சினை பற்றிப் பேசியபோது, நான் எதிர்பார்த்த எதிர்வினை ஏதும் கிடைக்கவில்லை. சிலர் ‘அப்படியெல்லாம் நடக்கா?என்றார்கள். தெரிந்தவர்களும்“பாவம்ப்பா அவங்கஎன்ற உச்சுக் கொட்டலோடு அடுத்த வேலை பார்க்க நகர்ந்தார்கள்.
பெண்கள் டிவியில் இனப் படுகொலைச் செய்திகளைப் பார்த்திருந்தார்கள். “பார்க்கவே கஷ்டமா இருக்கும்பா..சேனல் மாத்திடுவோம்என்றார்கள். நம்ம கிட்ட ரிமோட் இருக்கு, மாத்திக்கலாம். அவங்க என்ன செய்வாங்கஎன்று கேட்டபோது பதில் இல்லை. சீரியலின் ஜிகினா துக்கத்திற்கு வருத்தப்பட்ட அளவிற்குக்கூட ஈழத்திற்காக அவர்கள் வருந்தவில்லை.

எங்கள் கிராமத்தில் ஈழத்திற்காக வருத்தப்பட்டவர்கள் மதிமுகவில் இருந்த 10 பேர் மட்டுமே!

நான் தனியாகப் பலரையும் சந்தித்துஇந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்குப் போட வேண்டாம்எனக் கேட்டுக்கொண்டேன். முடிவில் மேலும் ஒரு 12 பேர் நான் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்தார்கள். நான் சொன்னதை ஒத்துக் கொண்டார்கள்.

காங்கிரஸ் கூட்டணிக்குத் தொடர்ந்து நாம் வாக்களித்தால், அவர்கள் செய்த மாபெரும் அநியாயத்தை நாம் அங்கீகரித்ததாகவே ஆகும். மத்தியில் காங்கிரஸ் மீண்டும் வந்துவிட்டால், ஈழத்தில் நிலைமை மேலும் மோசமடையும். ஈழத்தில் தமிழர்கள் சம உரிமையுடன் நடத்தப்படுவதற்கும், போரினால் சொந்த இடத்திலிருந்து குடிபெயர்ந்துள்ளோர் மீண்டும் தன் சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழவும் நாம் நம்மால் முடிந்த சிறு உதவியாக நம் சகோதரர்களுக்காக காங்கிரஸைத் தோற்கடிப்போம்என்பதே என் வேண்டுகோளாக இருந்த்து.

பதிவுலகம் அப்போது பற்றி எரிந்துகொண்டிருந்த்து. நிஜவுலகம் அதற்கு நேரெதிராக இருந்தது. ஈழப் பிரச்சினை ஒரு முக்கியப் பிரச்சினையாக அப்போதே பார்க்கப் படவில்லை.

தேர்தல் முடிவு வந்தபோது, மிகுந்த மனச்சோர்வை அடைந்தேன். ஏன் நமக்கு மனிதம் மரத்துப் போய்விட்டது என்று யோசித்தேன். பிறகு தான் புரிந்தது ஈழச் சகோதரர்களுக்காக மட்டுமல்ல, சொந்தச் சகோதரனுக்காக அழுவதற்குக் கூட இங்கு யாரும் தயாரில்லை. (சந்தேகமிருந்தால், தற்போதைய மீனவப் பிரச்சினை பற்றி உங்கள்/பக்கத்து வீட்டில் பேசிப்பாருங்கள்!)
அப்படியென்றால் ஈழப்பிரச்சினை எந்த பாதிப்பையும் கடந்த தேர்தலில் ஏற்படுத்தவில்லையா?

பாதித்தது. சீமான், வைகோ போன்றவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பகுதிகளில் அதன் பாதிப்பு இருந்தது. காங்கிரஸைத் தோற்கடிப்பதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. எனவே மக்களிடம் திரும்பத் திரும்ப உணர்ச்சிகரமாக ஈழ விஷயத்தைக் கொண்டு சென்றால் மட்டுமே ‘ஏதோ கொஞ்சம்பாதிப்பு இந்த சட்டமன்றத் தேர்தலில் தெரியும். அதிமுக கூட்டணிக்கு ‘அதுவும்ஒரு ஆயுதம். அவ்வளவு தான்.

தமிழக மக்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள ‘விலைவாசி, ஜாதி, கட்சி விசுவாசம், ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணம்போன்றவையே இந்தத் தேர்தலில் கவனத்தில் கொள்ளப் படும்.

மற்றபடி ஈழப் பிரச்சினை பெரிதாக எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே இங்குள்ள யதார்த்தம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

 1. ஈழம் பற்றிய தமிழக யதார்த்தம் தேர்தல் காலத்தில் கூட மாறாது என்பது வலியும், கசப்பும் கலந்த உண்மை.

  ReplyDelete
 2. பெண்கள் டிவியில் இனப் படுகொலைச் செய்திகளைப் பார்த்திருந்தார்கள். “பார்க்கவே கஷ்டமா இருக்கும்பா..சேனல் மாத்திடுவோம்” என்றார்கள். ”நம்ம கிட்ட ரிமோட் இருக்கு, மாத்திக்கலாம். அவங்க என்ன செய்வாங்க” என்று கேட்டபோது பதில் இல்லை. சீரியலின் ஜிகினா துக்கத்திற்கு வருத்தப்பட்ட அளவிற்குக்கூட ஈழத்திற்காக அவர்கள் வருந்தவில்லை.


  ......உண்மையில் மக்களின் apathy நிலைமை தான் காரணம்... :-(

  ReplyDelete
 3. @Rathiவருத்தத்திற்குரிய உண்மை..கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி.

  ReplyDelete
 4. @Chitra: சரியாச் சொன்னீங்கக்கா..யாருக்காகவும் நின்று வருத்தப்பட இங்கு யாரும் தயாரில்லை..

  ReplyDelete
 5. //ஈனத் தமிழர்கள் என்று சிலரால் அன்போடு அழைக்கப்படும் தமிழகத் தமிழர்கள்!//

  எனக்குத் தெரிந்து இதில் ஈழம் , தமிழகம் என்ற பாகுபாடு இல்லை.
  கொழும்பில் எத்தனை தமிழர்கள் வன்னித் தமிழர்களுக்காக உண்மையாகவே கவலைப் பட்டிருப்பார்கள்? (அங்கே உறவினர்கள் உள்ளவர்களைத் தவிர!) இங்குள்ள சூழ்நிலையில் உணர்வு இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது!

  காலங் கடந்து விழித்துக் கொள்வதே தமிழனுக்கு வாடிக்கையாகிவிட்டது!

  ஆரம்பத்திலேயே இதையெல்லாம் செய்திருக்கணும்!எந்தப்பிரச்சினையையும் ஆரம்பத்திலேயே சரிபண்ண வேணும் ஆறப்போட்டு.. இப்போதாவது விழித்தோம்!

  அவுஸ்திரேலியாவில் ஓரிரு மாணவர்கள் தாக்கப்பட்டபோது ஹிந்தி வாலாக்கள் எப்படிப் பொங்கினார்கள் என்று பார்த்தோமே?

  //சந்தேகமிருந்தால், தற்போதைய மீனவப் பிரச்சினை பற்றி உங்கள்/பக்கத்து வீட்டில் பேசிப்பாருங்கள்!//

  இதை அதிர்ச்சியாக ஒரு மீனவனைக் கொன்று விட்டார்கள்' என்று சொன்னாலே ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்! ஏனெனில் அது வழமையானது, பழகிப்போய்விட்டது! (காலங்காலமா நடக்கிறதுதானே!)

  'அய்யய்யோ எங்க ஊருக்கு ஆளுக்கு 2000 தந்துட்டு பக்கத்து ஊருக்கு 10000 கொடுத்திருக்காங்க'ன்னு சொல்லிப்பாருங்க. தமிழன் அப்பிடிப் பொங்குறான், வருத்தப்படுறான்னு பார்க்கலாம்!

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. இன்னொருவன் சுயநலத்திற்காக நம்மை அடிக்கும் போது பக்கத்திலிருப்பவன் அதை வேடிக்கை பார்ப்பான்.அப்போது நமக்கு தெரியும் நாம் சுயநலமாய் இருந்ததன் பாதிப்பு.

  ReplyDelete
 8. ///"சொந்த அப்பாவே இறந்தாலும், 5 நாட்களுக்கு மேல் அழ எங்களுக்கு நேரமோ மனமோ இல்லை என்பதே உண்மை. இது தான் நாங்கள். ஈனத் தமிழர்கள் என்று சிலரால் அன்போடு அழைக்கப்படும் தமிழகத் தமிழர்கள்!"///

  எவ்வளவு நிதர்சனம் செங்கோவி!மனதில் ஆழமாக வாங்கிக் கொண்டதாலேயே
  அழுத்தமாகச் சொல்லியுள்ளீர்கள்!

  ReplyDelete
 9. “பார்க்கவே கஷ்டமா இருக்கும்பா..சேனல் மாத்திடுவோம்” என்றார்கள். ”நம்ம கிட்ட ரிமோட் இருக்கு, மாத்திக்கலாம். அவங்க என்ன செய்வாங்க” என்று கேட்டபோது பதில் இல்லை./////////////////

  நிஜம்

  ReplyDelete
 10. @ஜீ...;//அய்யய்யோ எங்க ஊருக்கு ஆளுக்கு 2000 தந்துட்டு பக்கத்து ஊருக்கு 10000 கொடுத்திருக்காங்க'ன்னு சொல்லிப்பாருங்க. தமிழன் அப்பிடிப் பொங்குறான்// கரெக்டாச் சொன்னீங்க ஜீ..இன்னும் இலவச டிவி தரலேன்னா, என்னா கோபம் வருது...

  ReplyDelete
 11. @சேக்காளி: உண்மைதான் சேக்காளி..இப்பவே அதானே நடக்குது..

  ReplyDelete
 12. @kmr.krishnan://மனதில் ஆழமாக வாங்கிக் கொண்டதாலேயே அழுத்தமாகச் சொல்லியுள்ளீர்கள்// உண்மை தான் அய்யா..சொந்த அனுபவத்தைத் தான் எல்லாப் பதிவிலும் முன்வைக்கிறேன்..தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 13. // (சந்தேகமிருந்தால், தற்போதைய மீனவப் பிரச்சினை பற்றி உங்கள்/பக்கத்து வீட்டில் பேசிப்பாருங்கள்!)//


  >>> "கொஞ்சம் வெயிட் பாண்ணுங்க, மெகா சீரியல் பாக்கணும்னு" சொல்றாங்க.. பக்கத்துக்கு வீட்ல. என்னத்த சொல்ல. நான் பார்த்த கடைசி மெகா சீரியல் மக்கள் டி.வி.யில் ஒளிபரப்பான "ஈழம் நேற்றும் இன்றும்".

  ReplyDelete
 14. @! சிவகுமார் !:வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா.

  ReplyDelete
 15. சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் 100% உண்மை! 2009 மே மாதம் MP தேர்தலுக்கு நான் இந்தியா வந்த போது இதைதான் உணர்ந்தேன். வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியிலும் இந்த நிலைமைதான் இருந்தது.
  செங்கோவி, உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பி இருக்கிறேன். படிக்கவும்.
  அன்புடன்,
  KPR

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.