”கான்ஸ்டிபேசன்..சொல்லு”
"கான்ஸ்டிஃபேசன்"
"அப்படி இல்லைப்பா.கொஞ்சம் ஸ்ட்ரெஸ் பண்ணு"
"கான்ஸ்டிஃபே..சார், வரமடேங்குது சார்.."
"கான்ஸ்டிபேசன்னாலே அப்படித்தான்..வராது..நல்லா ஸ்ட்ரெஸ் பண்ணாத் தான் வரும்..நல்லா..ம்..இப்போ சொல்லு"
"கான்ஸ்டிபேசன்"
”வெரி குட்!”
இன்று ஆஃபீஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் ஃபேன் என்று சொல்ல வந்தவர் ஸ்பேன் என்று சொல்லிவிட்டார். ஏதோ மிகக் கேவலமான ஒரு செயலைச் செய்துவிட்டது போல் அவர் கிண்டல் செய்யப்பட்டார். அவரைப் பார்க்கவே பரிதாபமாக ஆகிவிட்டது.
எனக்கு அது கடும் கோபத்தைக் கிளப்பியது. அவர்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள். “உங்களில் யாருக்கு ல,ழ,ள சரியாக உச்சரிக்கத் தெரியும்?”என்று கேட்டேன்.
எல்லோரும் அமைதியாக இருந்தனர். “அப்போ தாய்மொழியை சரியாக உச்சரிக்க யாருக்கும் தெரியவில்லை இல்லையா? அது பற்றிய வருத்தமோ அவமானமோ நமகு இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் ஒரு எழுத்தைத் தவறாகப் பேசிவிட்டலும் முட்டாள் ரேஞ்சிற்கு அவரை ட்ரீட் பண்றோம். ஏன் இப்படி? ஸ்ஃபேன் சொல்லும்போது வர்ற இளக்காரம் வாலைப்பலம்னு சொல்லும்போது ஏன் வரலை? தமிழைச் சரியாப்பேசுன்னு சொல்றதும் பேசுறதும் இண்டீஸண்ட்..இங்க்லீஸ் கரெக்டாப் பேசுடான்னு சொன்னா பெருமை, இல்லையா?’ன்னு கேட்டேன்.
ஒரே ஒரு நண்பர் மட்டும் ‘நீங்க சொல்றது சரிதான்..ஆனால் எல்லாருமே அப்படித் தானே?” என்றார்.
உண்மையில் அங்கு இருந்த யாருக்குமே நான் உட்பட, ழகர உச்சரிப்பு சரியாக வராது.பேசும் வேகத்தில் நாம் கவனிப்பதும் இல்லை.
”உண்மைதான், இங்கு தமிழைச் சரியாக உச்சரித்தல் பிரச்சினை அல்ல. அதைச் செய்யும்போது வராத அவமானம் அன்னிய மொழியைப் பேசும்போது வருவது ஏன்?” என்றேன்.
ஆங்கிலத்தை நாம் பேணிப் பாதுகாக்கும் அளவிற்கு ஆங்கிலேயர்களே செய்வதில்லை. அமெரிக்கர்களின் ஆங்கிலேயம் ஏறக்குறைய சென்னைத் தமிழுக்கு ஈடானது தான். ’எஃப் பாம்’ போடாமல் பேசவே மாட்டர்கள். வார்த்தையைக் கொத்துவதிலும் வல்லவர்கள். நான் அவர்களுடன் பேசும்போதெல்லாம் ஒரு அசமஞ்சம் ரேஞ்சுக்கு நம் ஆங்கிலம் தோன்றும். அந்த உரையாடல் இந்த மாதிரி இருக்கும்:
”ஐயா, தாங்கள் கொடுத்த வரைபடத்தை முடித்துவிட்டேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?”
”ஆத்தா..அந்தாண்ட குவாலிட்டி டிபார்ட்மெண்ட்க்காரன் குந்திக்கினு இருப்பான்..அவங்கைல சொல்லு..”
சிங்கப்பூர்க்காரர்கள் தனியாக ஒரு ஆங்கிலத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். நான் பார்க்கவில்லை என்பதை ‘ஐ நோ சீ” என்பார்கள். அங்கு இருக்கும் நம் ஆட்கள் அவர்களைத் திருத்த முற்படுவது இல்லை. ஆனால் ஒரு எழுத்தை சக தமிழன் சரியாக உச்சரிக்காவிட்டால், கேலி..கிண்டல்.
நாம் இன்னும் ஆங்கிலேய அடிமை மனப்பான்மையில் இருந்து வெளிவரவில்லையோ என்று தான் தோன்றுகிறது.
மும்பைக்கு ரிக்ஷா ஓட்டிப் பிழைக்கச் செல்லும் ஒருவர் ஒரே மாதத்தில் ஹிந்தி பேசுகிறார். அதைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் இந்தி இறக்குமதி நடிகைகள், பெரும்பாலும் பேசுவது ஆங்கிலம்..அல்லது டமிங்லீஸ். படிக்காத பாமரன் பொழைப்புக்காக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, இவர்களுக்கு மட்டும் ஏன் தமிழ் வர மறுக்கிறது.
ஒரு மொழியை அறிந்து நடித்தால் இன்னும் நன்றாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாமே..இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் இயக்குநர்கள் தமிழில் பேசினால் தான் வாய்ப்பு என்று சொல்லலாமே? சீமானைத் தவிர வேறு யாரும் அதைச் செய்வதாகத் தெரியவில்லை.
நமக்குத் தெரிந்து குஷ்பூ போன்ற சிலர் மட்டுமே மார்க்கெட் இருக்கும்போதே தமிழ் பேசியது.(கோபமா இருக்கேன் மக்கா..படம் நாளைக்குப் போடுறேன்!) மற்றவர்கள் நாக்கில் அந்த சரஸ்வதிதேவியின் சூலாயுதத்தால் சூடு போட்டுத் தான் தமிழை வரவைக்கவேண்டும் போலும்.
தாய்மொழியிலும் அதற்கு ஆதரவாகவும் பொதுவில் (குறிப்பாக அலுவலம், வங்கிகளில்) பேசவே தயங்க வெண்டிய நிலை தான் உள்ளது. அப்படிப் பேசுபவர்கள் பழம்பஞ்சாங்கம் ரேஞ்சுக்கு பார்க்கப்படுகிறார்கள். ’தாய்மொழியை எப்படி வேண்டுமானாலும் ரேப் பண்ணு, ஆங்கிலத்தை மட்டும் பொத்திப் பேணு’ என்ற மனநிலைக்கு நம் தாழ்வு மனப்பான்மை தான் காரணமோ?
‘தமிழ் சோறு போடுமா? அப்புறம் ஏன் அதைப் இடித்துத் தொங்க வேண்டும்? தூக்கி எறி’என்பது இன்னும் சிலரின் மனப்பான்மை. ‘எது எல்லாம் பணம் கொடுக்குமோ அதை மட்டுமே பேண வேண்டும். வரவு இல்லையென்றால் அதைக் குப்பையில் போடு’ என்பது ஆரோக்கியமான சிந்தனை தானா?
இவர்கள் தன் பெற்றோர் சம்பாதிப்பதை நிறுத்திய பின் என்ன செய்வார்கள்? இனி வரவு இல்லையென்று வெளியில் விரட்டி விடுவார்களா? கவனிக்காது சோற்றுக்கு வழியின்றி அலைய விட்டு விடுவார்களா? தாய்மொழியாகவே இருந்தாலும் லாபம் இருந்தால்தான் கற்றுக்கொள்வோம் என்பவர்கள், அடுத்து எந்தமாதிரித் தலைமுறையை உண்டாக்குவார்கள் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.
தாய்ப்பாசம் போன்ற பணத்தால் எடை போட முடியாத, எடை போடக்கூடாத விஷயங்கள் இன்னும் இந்த உலகில் இருக்கவே செய்கின்றன.தாய்மொழியும் அவற்றில் ஒன்று. எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் அதைப் பேணுங்கள்.
அதில் தான் மறைந்துள்ளது நம் வரலாறும் அடையாளமும்!
46 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.