Sunday, February 27, 2011

இந்தியா-இங்கிலாந்து மேட்ச் : விமர்சனம்

டிஸ்கி: எனக்கு கிரிக்கெட்டைப் பத்தி ஒன்னும் தெரியாது. ஏதோ நான் உண்டு, சினிமா விமர்சனம் உண்டு-ன்னு இருந்தேன். இப்போ உலகக்கோப்பை போட்டி நடக்குறதால டப்பா படம்தான் வருது. இப்போ என்னாச்சுன்னா, விமர்சனம் எழுதாம கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு..அதான் துணிஞ்சு இன்று நடந்த மேட்ச்சு-க்கே விமர்சனம் சுடச்சுட இங்கே ..

லண்டனிலிருந்து இந்தியா வந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் விளையாடும் மேட்ச், இந்திய கிரிக்கெட் வீரர்கள் 11 பேர் இணைந்து ஒரே இடத்தில் விளையாடும் மேட்ச் என உலகளாவிய அளவில் படுபயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மேட்ச் இது!
மேட்டர் என்னன்னா, இங்கிலாந்துல இருக்குற 11 பேருக்கு கிரிக்கெட் விளையாடி கப் வாங்கணும்னு ஆசை. அதேபோல இந்தியாவில் டூத் பேஸ்ட், காம்ப்ளான், டாய்லட் க்ளீனர் போன்ற விளம்பரங்களில் நடித்து வாழ்க்கையை ஓட்டும் 11 பேருக்கும் அதே கப்பை வாங்கணும்னு ஆசை. யாரு ஜெயிச்சாங்கிறதை ஏகப்பட்ட விளம்பரங்களோடு சொல்லியிருக்காங்க. 

முதல் சீனிலேயே இரு அணி கேப்டன்களும் அம்பயரிடம் வர அவர் டாஸ் போட்டு இந்தியா டாஸில் ஜெயித்ததாகச் சொல்கிறார்.’மேட்ச்சே அவ்வளவுதானா..இந்தியா ஜெயிச்சிருச்சா..அப்போ மீதி 10+10 பேரு எதுக்கு வந்தாங்க’ன்னு நாம யோசிக்கும்போதே பேட்டிங் பண்ணத்தான் டாஸ் போட்டாங்கன்னு தெரியுது..அப்புறம் என்ன அதகளம் தான்!

முதல் ஜோடியா சேவாக்கும் சச்சினும் இறங்கிறாங்க. அடடா, மறுபடியும் நடுநிசி நாய்களா-ன்னு நீங்க யோசிக்கிறது புரியுது. அவங்க பேட்டிங் பண்ணத்தான் ஜோடியா இறங்குறாங்க. அப்படியெல்லாம் பொது மைதானத்துல பண்ணிட முடியுமா? 

வெள்ளைக்காரத் துரைங்க பந்தை ஒரு மாதிரி சுத்தி போடுதாங்க..நம்மாட்கள் அதை அடிக்கிறாங்க..இப்படியே முதல் பாதி போகுது. இண்டெர்வல் விடும்போது இந்தியா 338 ரன் எடுத்து இருக்கு. அடுத்து இங்கிலாந்துக்காரங்க அதை விட அதிகமா எடுத்தாங்களா..முடிவு என்னாச்சுன்னு முதல் பாதியை விட விறுவிறுப்பாச் சொல்றாங்க.
மேட்ச்சுக்கு இடையே சிறு ஓய்வு எடுக்கின்றனர். அப்போது ஒரு வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்தனர். பொதுவாக அதைத் திறந்தால் மல்லிகா ஷெராவத்தோ ரகசியாவோ தலையில் மட்டும் முக்காடு போட்டபடி எழுந்து, ஒரு குத்தாட்டம் ஆடுவது வழக்கம். இதில் அந்த நல்ல சான்ஸையும் மிஸ் பண்ணிவிட்டார்கள். வெறுமனே வாட்டர் பாட்டிலும் கூல்ட்ரிங்ஸும் உள்ளேயிருந்து வருவதைப் பார்த்தபோது கடுப்பாக இருந்தது.

இந்த மேட்ச்சோட மிகப் பெரிய குறையே ஆம்பிளைங்க மட்டுமே ஆடுறது தான்..பொதுவாவே நமக்கு ஆம்பிளைங்களைப் பிடிக்காது. என்ன ஆளுங்க... மூஞ்சியில முடி முளைச்ச பயலுவ..அதுவும் 22 பேரைத் தொடர்ந்து 7 மணி நேரம் பார்க்குறதுங்கிறது கொடுமை தான். எஸ்.ஏ.சந்திரசேகர் நம்ம டாகுடரையும் யுவராணியையும்(போட்றா படத்தை!) வச்சு கபடி மேட்ச் எடுத்த மாதிரி, இங்கேயும் 11 பொம்பளங்களைக் களமிறக்கி இருந்தா மேட்ச் கமர்சியல் ஹிட் ஆகியிருக்கும்..ஜஸ்ட் மிஸ்!
விரலா..உரலா!
இடையிடையே ஆடியன்ஸா வந்திருக்கிற துணை நடிகைகளைக் காட்டினாலும், நம்ம எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யலை. இடையிடையே வரும் விளம்பர ஃபிகர்களும் மேட்ச்சோட/மனசோட ஒட்டல.

மேட்ச்சுக்கு பிண்ணனி இசையோ, பாடல்களோ கிடையாது. பிண்ணனியில் வர்றது ஒரு ஆளோட (அதுவும் ஆம்பிளை..ச்சே!) கமெண்ட் மட்டும் தான். என்ன இருந்தாலும் நம்ம மந்த்ரா பேடி மாதிரி வருமா..பாத்ரூமுக்கு அவரமாப் போறவனை நிறுத்திக் கேள்வி கேட்டா பேசுவானே, அந்தத் தொனியிலேயே கமெண்டரி சொல்றதால பாதி புரியலை. ஆனாலும் இந்த மேட்ச்சுக்கு கமெண்டரி தேவைப் படலை.
திரும்பத் திரும்ப வர்ற க்ளிஷே காட்சிகள், டெம்ப்ளேட் கமெண்ட்கள் மேட்சோட ஸ்பீடைக் குறைக்குது. கேமிராமேனைப் பாராட்டலாம். ஏகப்பட்ட டாப்லெஸ்..ச்சே..டாப் ஆங்கிள் ஷாட்ஸ், ஒயிடு அங்கிள்(!) ஷாட்ஸ் என கலக்கி இருக்கார். சில கேமிராக் கோணங்கள் நாம ஏற்கனவே நிறைய மேட்சுகள்ல பார்த்ததுதான்னாலும் நல்லாத் தான் இருக்கு.

பந்துல எச்சியைத் துப்புறது, தப்பான இடத்துக்கிட்ட வச்சுத் தேய்க்கிறது போன்ற ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். (உள் டிஸ்கி: அய்யய்யோ..நான் கலாச்சாரக் காவலன் இல்லை..இல்லை..இல்லை!)

இடையில் கொஞ்சநேரம் போரடித்தாலும், கடைசி ஏழு ஓவரில் கலக்கிவிட்டார்கள். கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாத நானே ரசித்துப் பார்த்தேன். டெண்டுல்கர் செஞ்சுரி அடிப்பது என்பது ராஜ்கிரண் கோடு போட்ட அண்டர்வேர் போடுவார்ங்கிற மாதிரி இயல்பான விஷயம். இதிலும் செஞ்சுரி அடிக்கிறார்!

இந்த மேட்ச் பல குறியீடுகளைக் கொண்டிருக்கு. பல வருஷத்துக்கு முன்னே வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப் படுத்துனாங்க. அப்புறம் சில அப்பாவிங்க உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்தாங்க.அந்த கான்செப்ட்டை அடிப்படையா வச்சுத் தான் இந்த மேட்சையே எடுத்திருக்காங்க. மேட்ச்சோட முடிவு மூலமா ‘நாம் இனிமேல் யாருக்கும் அடிமைகள் இல்லை, யாரும் நமக்கு அடிமைகள் இல்லை’-ன்னு சிம்பாலிக்கா காட்டியிருக்காங்க.

இந்தியா-இங்கிலாந்து மேட்ச் - கலக்கல்


மேலும் வாசிக்க... "இந்தியா-இங்கிலாந்து மேட்ச் : விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 26, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_4

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.


இன்னைக்கு டிசைன் (Design) டிபார்ட்ம்ண்ட்ல வேலைக்குச் சேரணும்னா என்னல்லாம் நீங்க படிக்கனும்னு பார்க்கலாம்.

AUTO CAD:
ஒரு மெக்கானிகல் எஞ்ஜினியரா வேலைக்குப் போறவங்களுக்கு, பேண்ட், சட்டையை விடவும் அடிப்படைத் தேவை ஆட்டோ கேட் பற்றிய அறிவு தான். இப்போல்லாம் காலேஜ்லயே ஆட்டோகேட் சொல்லித்தர்றாங்க.அப்படி இல்லைன்னா, நீங்க வெளில ஏதாவ்து கம்ப்யூட்டர் செண்டர்ல போய்க் கத்துக்கோங்க. 
முன்னாடில்லாம், பெரிய A1 சைஸ் சீட்ல, மினி ட்ராஃப்டெர் போன்ற கருவிகளின் உதவியோடதான் கம்பெனிகள்ல டிராயிங் வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.ஒரு டிராயிங் போட எப்படியும் ஒரு வாரம் ஆயிடும். இப்பவும் அந்த நிலைமை இருந்திருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்தான். ஆனால், நல்லவேளையா இந்த சாஃப்ட்வேர் வந்தது. ஒரு கோடு (Line) பொடணும்லா ல்-ன்னு தட்டுனாப் போதும். எவ்வளவு ஈஸி பாருங்க..உண்மையில் இப்போ டிசைன்ல இருக்குற சில பேர்கிட்ட ஒரு லைனை கையால நேராப் போடச்சொன்னா,அவங்க அந்தக் கோடை, காஷ்மீர்ல ஆரம்பிச்சு காசி போய் ராமேஸ்வரம் தாண்டி, கன்னியாகுமரில முடிப்பாங்க.

ஆட்டோகேட் பெரும்பாலும் 2D டிராயிங் வரையத்தான் யூஸ் பண்றாங்க. இதில் 3D வரையறதும் ரொம்பக் கஷ்டம்.


கம்பெனிகள்ல ஒரு பேப்பர்ல கையால ரஃபா வரிஞ்ச டிராயிங்கயோ, PDF ஃபார்மேட்ல இருக்கிற டிராயிங்கையோ உங்ககிட்ட எஞ்சினியர் கொடுப்பார். நீங்க அதை அப்படியே சரியான டைமன்சனோட ஆட்டோகேட்ல வரையணும். இது தான் உங்க வேலை. அதை க்ளையண்டுக்கு அனுப்புவாங்க. அவங்க ஏதாவது கரெக்சன் சொன்னா, அதையும் செய்யணும்.

இதுல சக்ஸஸ் ஆதத் தேவை நல்ல ஆட்டோகேட் நாலேட்ஜும், நல்ல ஸ்பீடா வரையற திறமையும் தான்்


PRO-E/SOLID WORKS/CATIA/IDEA/UNI GRAPHICS/Auto Desk:
ஆட்டோகேட் 2D ல சக்ஸஸ் ஆன அளவுக்கு 3 Dல ஆகலை. 2D ல உள்ள பிரச்சினை, நாம தான் அது 3 ல எப்படி இருக்கும்னு ஃப்ரண்ட், டாப், சைடு வியூவை வச்சு முடிவு செய்யணும். அதனால 3Dக்காகவே ஸ்பெஷலாத் தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர்கள் தான் மேலே சொன்னவை. இதுல உள்ள டூல்ஸை யூஸ் பண்ணி,நாம நேர்ல பார்க்குற மாதிரியே மாடலை உருவாக்கலாம். அதிலிருந்து 2D டிராயிங்-ம் எடுத்துக்க முடியும்.

CNC Machining பத்தி படிச்சிருப்பீங்க. அதுக்கு இந்த 3D மாடல் ரொம்ப உதவியா இருக்கும்.இதிலிருந்தே நேரா சிஎன்சி கோடை உருவாக்கி மெசினிங் பண்ண முடியும். அதனால நிறைய நேரமும் செலவும் மிச்சமாகும்.

ஒரு 2D டிராயிங் கொடுத்தா, அதை ஸ்டடி பண்ணி, 3D-ல வரையணும் நீங்க..என்ன தான் 3டி-ல போட்டாலும், மெசின் ஷாப்/புரடக்சன் சாப்-க்கு 2டி-ல தான் டிராயிங் கொடுக்க வேண்டியிருக்கும். 2டி-ல தான் டைமென்சன் டீடெய்ல் நல்லாக் கொடுக்க முடியும். எப்படியானாலும், ஆட்டோகேட் கத்துக்காம 3டி சாஃப்ட்வேர் படிக்கிறது நல்லதில்லை. ஆட்டோகேட் தான் எல்லாத்துக்குமே அடிப்படை.

மேலே சொன்ன சாஃப்ட்வேர் தவிர வேறு சிலவும் உண்டு. இது தான் அதிகமா யூஸ் பண்றாங்க. குறிப்பா SolidWroks & Pro-E தான் டாப்ல இருக்கு.

ANSYS:

இது ஸ்ட்ரெஸ் அனலிஸ் பண்ண உதவுற சாஃப்ட்வேர். நீங்க படிச்ச Strength of Materials, Finite Element Method போன்ற பாடங்கள் இங்க யூஸ் ஆகும். ஒரு புராடக்ட் எவ்வளாவு ஸ்ட்ரெஸ் தாங்கும், எவ்வளவு Elongate ஆகும் போன்ற விஷயங்களை, அதைத் தயாரிக்கறதுக்கு முன்னாலேயே, செக் பண்ணிக்க இது உதவுது. இதனால கம்பெனிகளுக்கு நிறைய புரடக்சன் செலவும் நேரமும் மிச்சமாகும். இது ஒரு ப்யூர் டெக்னிகல் ஒர்க்கா இருக்கும்.

PDS/PDMS/CADWorx:
மேலே உள்ள படத்தைப் பாருங்க. இது ஒரு Piping System-ன் 3டி படம். இதை SolidWorks மாதிரி சாஃப்ட்வேர்ல பண்ணா, தாவு தீர்ந்திடும். அதனால தான் PDS, PDMS, CADWorx போன்ற சாஃப்ட்வேர்ஸ் இதுக்குன்னே ஸ்பெஷலாக் கண்டுபிடிச்சிருக்காங்க. இதை சில குறிப்பிட்ட கம்ப்யூட்டர் செண்டர்ல தான் சொல்லித் தருவாங்க. இதைப் பத்தி நிறையப் பேருக்குத் தெரியறதில்லை. ஆட்டோகேட் மட்டும் தெரிஞ்சவங்க, டைரக்டா இதைக் கத்துக்கலாம். சென்னைல MechciCADD, SivaPDS center, CADDCenter ஆகிய இடங்களில் சொல்லித் தர்றாங்க. இதைப் படிச்சா, ஆயில் ரிஃபைனரி ப்ளாண்ட் டிசைன், கப்பல்/ரிக் பைப்பிங் டிசைன், பில்டிங் பைப்பிங் டிசைன் போன்றவற்றைப் பண்ணலாம். 

மெக்கானிகல்-ல டிசைன் -ல நல்ல துறை. டிசைன் -ல பைப்பிங் டிசைன் நல்ல துறை..நல்ல காசு!

CAESAR:
இதுவும் பைப்பிங்-ல யூஸ் ஆகுற சாஃப்ட்வேர் தான். ANSYS மாதிரி, Stress Analys பண்ண, இது யூஸ் ஆகுது. பைப்பிங் பத்தி, கொஞ்சம் பேசிக் தெரிஞ்சப்புறம் இது படிக்கலாம்.

மேலே சொன்ன எதைப் படிச்சுட்டு, இண்டெர்வியூ போனாலும், ஏதோ ஒரு டிராயிங்-கைக் கொடுத்து அரை மணி நேரத்திலேயோ, ஒரு மணி நேரத்திலேயோ முடிக்கச் சொல்வாங்க. அதைக் கரெக்டாப் பண்ணீட்டீங்கன்னா, வேலை உறுதி. அதனால, ஸ்பீடா வரைய கத்துக்கிட்டாப் போதும். வேலை கிடைச்சப்புறம் அதே டிராயிங்கை ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து போடுவோம்..அதனால இண்டெர்வியூவைப் பார்த்து பயந்துடாதீங்க. ஆல் தி பெஸ்ட்.

அடுத்த வாரம்...உற்பத்தி, அசெம்ப்ளி, எரக்சன் ( Production ,Assembly & Erection)


மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_4"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, February 23, 2011

ரஜினிகாந்தும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)

நான் டவுசர் போட்ட காலத்தில் அடிக்கடி பத்திரிக்கைகளில் வரும் பரபரப்புச் செய்தி ரஜினி அரசியலுக்கு வரபோகிறார், கிளம்பிட்டார், இதோ முக்குத் திரும்பிட்டார்என்பது தான். இப்போது என் பையனே டவுசர் போட ஆரம்பிச்சுட்டான். இப்பவும் மீடியாவுக்குப் போரடிச்சா வாராரு, வாராருஎன அதே செய்தியைப் போட்டுடறாங்க.இப்போ உங்களுக்கும் போரடிச்சா, தொடர்ந்து படிங்க..
மன்னன் படத்து சூட்டிங் சமயத்தில் ரஜினிக்கு உண்டாக்கப்பட்ட சம்பளப் பிரச்சினையில் இருந்துதான், மீடியாக்கள் ரஜினி அரசியலுக்கு வருவார் என முழு வீச்சில் சொல்ல ஆரம்பித்தன. அண்ணாமலை முடிந்து பாட்ஷா வந்தபோது, அது உச்சத்தில் நின்றது. 

அப்போதுதான் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசாக முதல் ஆட்சியை நட்த்திக் கொண்டிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் ஜெ.வுக்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை உணர்ந்துகொண்ட தமிழர்கள், எம்.ஜி.ஆரின் இடம் நிரப்ப வேறொரு நபரைத் தேடவேண்டிய சூழ்நிலை!

சினிமாவில் எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடித்த ரஜினியே அனைவரின் கண்ணுக்குத் தெரிந்த்து அச்சரியமில்லை. மீடியாவின் ஹைக்கும் சேர்ந்துகொள்ள, இயல்பாகவே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சூழ்நிலை 1996ல் அமைந்தது.அப்போது ரஜினி வந்திருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கவும் முடியும். ஆனால் அவர் வரவில்லை. ஏனென்றால் சினிமாவில் மட்டுமே எம்.ஜி.ஆராகவும் நிஜவாழ்வில் சிவாஜி கணேசனாகவும் ரஜினி இருந்ததுதான்.

எம்.ஜி.ஆருக்கென அரசியல் சார்ந்த கொள்கையும் திட்டமும் ஆரம்ப காலத்திலேயே இருந்தது. அது அவரது இளமைப் பருவத்திலேயே தானாக உருவாகி வந்தது. பிறகு சினிமா மூலம் சேர்ந்த ரசிகர் கூட்ட்த்தை தன் அரசியல் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். 
ஆனால் சிவாஜிக்கும், சிவாஜி ராவுக்கும் (என்னே ஒற்றுமை!) அம்மாதிரித் திட்டங்கள் ஏதும் இல்லை. ரசிகர் கூட்டம் சேர்ந்துவிட்டது. எல்லாரும் சொல்றாங்க, எனவே ஏதாவது செய்வோம்என முடிவு செய்து பிறகு கொள்கை, திட்டங்களைத் தேடத் துவங்கினர். துட்டு விஷயத்தில் இருவரும் கெட்டி என்பதும் மற்றொரு ஒற்றுமை!

கண்டக்டர் வேலையை விட்டு சென்னை ஃப்ளாட்ஃபார்முக்கு வர ரஜினி யோசிக்கவில்லை. யோசிக்காமல் வந்து ஜெயித்தார். ஆனால் அரசியலுக்கு வர யோசிக்கிறார், யோசிக்கிறார், இன்னும் யோசிக்கிறார். அரசியல் போன்ற தீவிர விஷயங்களில் ஈடுபட, சினிமா மீது இருந்த அதே வெறி தேவை. அப்படி எதுவும் அவரிடம் இல்லை என்பதே உண்மை.

ரஜினி போன்ற ஆன்மீக நாட்டம் கொண்டோரிடம் இருப்பதை ஏற்றுக்கொண்டுதனக்குள் மூழ்கும் தீவிரம் தான் இருக்குமேயொழிய, அரசியலுக்குத் தேவையான எதையும் மாற்றும் /எதிர்க்கும் தீவிரம் இருப்பதில்லை. அவ்வாறு இருப்பது சிவாஜி ராவ் என்ற தனிமனிதருக்கு நன்மையே. அதில் தவறேதும் இல்லை. ஆனால் தொடர்ந்து சில மீடியாக்களாலும் அறிவுஜீவிகளாலும் ரஜினி முன்னிறுத்தப் படுவதால் நாம் அவரது அரசியல் தலைமைப் பண்புபற்றி மதிப்பீடு செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

அரசியலில் நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வெண்டும். வல்லவனாக இருக்க கொஞ்சம் சூது வாது தெரியவேண்டும். அது இவருக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.வாக்குவன்மையும் செயல்திறனும் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் விஷயங்கள்.

ஜக்குபாய் படத்தை திருட்டுத் தனமாய் இணையத்தில் வெளியிட்டவர்களைக் கண்டிக்க நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்தப் படமே ஒரு ஃப்ரெஞ் பட்த்திலிருந்து சுட்ட்துதான்’  என உண்மையைப் போட்டுடைத்தார் ரஜினி.

அழகிரி மகன் திருமண விழாவில் எனக்கு அழகிரியைத் தெரியாது, ஸ்டாலினைத் தான் ரொம்ப நாளாப் பழக்கம்என்று பேசி, அழகிரி பொதுவாழ்வுக்கு நேற்று வந்தவர் என எடுத்துக்காட்டி, திமுகவின் தலையாய பிரச்சினைக்கே தீர்ப்பு சொல்லிவிட்டு வந்தார்.

வெளியில் கொட்டும் மழையால் சென்னை மிதக்க, மாண்புமிகு முதல் அமைச்சர் இளஞன் பாடல் வெளியீட்டு விழா அரங்கில் ரஜினியுடன் அமர்ந்திருந்தார். அங்கு பேசிய ரஜினி மக்கள்லாம் கடும் மழையால கஷ்டப்படுறாங்க.அதனால ரொம்ப நேரம் பேசி முதல்வரின் நேரத்தை வீணாக்கவில்லைஎன அக்கறையோடு பேசினார். 

நிறைய நேரங்களில் இவர் தெரிந்துதான் குத்துகிறாரா இல்லை சும்மா பேசுகிறாரா என்பதே யாருக்கும் புரிவதில்லை. அப்போது இவரையும் இழுத்துக்கட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கேன்னு கலைஞரே நொந்து போயிருப்பார்.

இப்படித் தொடர்ந்து அப்பாவித் தனமாகப் பேசுபவர் அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும்?

ஜெ.மாதிரி விஜயகாந்த்துடன் கூட்டணிப் பேசுவார்த்தை நட்த்தினால் ஓப்பனாக மீடியாவிடம், ‘என்னங்க இது, 50 தொகுதி கேட்காரு. அதுகூடப் பரவாயில்ல, செலவுக்கு 100 கோடி கேட்காரு. திஸ் இஸ் டூ மச்னு சொல்லியிருப்பாரு. ஜெ. மாதிரி பல்லைக் கடிச்சுக்கிட்டு இருடி, உன்னை பின்னாடி கவனிச்சுக்கிறேன்என நினைக்கத் தெரியாது.

ரஜினியின் ஜாதகத்தில் 2ல் சனி..அதாவது நாக்கில் சனிஎனப் படித்திருக்கிறேன். அது உண்மைதானோன்னு நினைக்கும்படியாத்தான் நிறைய நேரங்களில் அவரது பேச்சு அமைந்துவிடுகிறது. சரி, அதை விட்டு விட்டுவோம். அரசியல் செயல் திறமை?

  பாபா படப் பிரச்சினையின்போது பாமகவினர் ரஜினி ரசிகர்களை ஓடஓட விரட்டி உருட்டுக்கட்டையால் அடித்தனர். தனக்காக அடிவாங்கிய அவர்களுக்கு ஆதரவாக என்ன செய்தார் ரஜினி? அறிக்கை அரசியல் நடத்தினார், கலைஞர் மன்மோகனுக்கு கடிதம் அனுப்புவதுபோல. 

வெறும் காகிதப் புலியாக மட்டுமே மிஞ்சினார் ரஜினி.

அந்தச் சம்பவத்தில் இருந்துதான் நாம் ரஜினியின் அரசியல் தகுதியை எடைபோட வேண்டும்..

ஜனநாயகத்தில் தனக்காகவும் தன்னைச் சார்ந்தோர்க்காகவும் தெருவில் இறங்கிப் போராடத் துணியாதவர் யாராக இருந்தாலும், அரசியலில் நுழைவதற்கான அடிப்படைத் தகுதியை இழந்தவர் ஆகிறார்.

1996-துக்ளக் சோ - ஜெ-தற்போதைய ரஜினியின் போக்கு-பற்றி...நாளை!
மேலும் வாசிக்க... "ரஜினிகாந்தும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, February 20, 2011

பார்வதி அம்மாள் மரணமும் மலேசியா வாசுதேவனின் மரணமும்

இன்று வேறொரு பதிவு போடலாம் என்றுதான் வந்தேன். இணையத்தைப் பார்த்தால், இரு துக்கச் செய்திகள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த பத்து வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அய்யாவின் மறைவைத் தொடர்ந்து இப்போது தாயாரும் மறைந்து விட்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது மறைவால் வாடும் தமிழ்ச் சொந்தங்களுடன் என் துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே கருதுவதால். உணர்வுகளை மேலும் விவரிக்க இயலவில்லை..

மற்றொரு இழப்பு மலேசியா வாசுதேவன்...

 அவர் பாடிய பாடலான ‘ஒரு கூட்டுக்கிளியாக’ நான் அடிக்கடி கேட்கும் பாடல்..’வேர்வை மழை சிந்தாமல் வெள்ளிப்பணமா’ எனும்போது ஏதோ செய்யும். உடலால் மறைந்தாலும் பாடல்களில் உயிர்வாழ்வார். 

அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்கலுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
மேலும் வாசிக்க... "பார்வதி அம்மாள் மரணமும் மலேசியா வாசுதேவனின் மரணமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 19, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_3

டிஸ்கி-1: இன்னைக்குமா-ன்னு கேட்கக்கூடாது. சனி, ஞாயிறு கூட்டம் குறைவா இருக்கும்போதே இதைப் போட்டுட்டா, மற்ற ரெகுலர் கஷ்டமர்களுக்கு இடைஞ்சல் இருக்காதேன்னு தான்..வழக்கமான பதிவு நாளை...
டிஸ்கி-2: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

இன்று நாம் பார்க்கப் போவது வரைகலை(DESIGN) டிபார்ட்மெண்ட் பற்றி...

பொதுவா மெக்கானிகல் எஞ்ஜினியரிங் படிக்கிற மாணவர்களுக்கு ஒரு மனக்குறை உண்டு. 

என்னன்னாஐ.டி./கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும், மெக்கானிகல்/சிவில்னா சம்பளம் கம்மின்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. அது உண்மைதான், ஆனாலும் அது உண்மை இல்லை. எப்படீன்னா, வெறும்(!) மெக்கானிகல் எஞ்சினியரிங் படிச்சுட்டு, ஐ.டி.பசங்களுக்கு இணையா சம்பளம் வாங்கணும்னா, நீங்க டிசைன் என்ஜினியரா ஆனாப் போதும். அதைப் பற்றி இப்போ பார்ப்போம்.

எதுக்கு இது?
ஒரு பொருளைத் தயாரிக்க அடிப்படைத் தேவை ரா மெட்டீரியலும் ட்ராயிங்கும் தான். உதாரணமா ஒரு பம்ப் அசெம்பிள் பண்ணனும்னா உதிரிப் பாகங்களை மட்டும் கொடுத்தால் போதுமா? அதற்கான ட்ராயிங்கையும் சேர்த்துக் கொடுக்கணும். (உதிரிப் பாகங்கள் தயாரிக்கவும் டிராயிங் வேணும்) ஒரு பம்போட டிராயிங் இந்த மாதிரி இருக்கும்:

அந்த வரைபடத்தை தயாரிக்கிற டிபார்ட்மெண்ட்தான் டிசைன் டிபார்ட்மெண்ட்.

என்ன செய்வாங்க?
R&D இல்லாத கம்பெனிகள்ல டிசைன்ல இருக்குற எஞ்சினியர் குழுவே வரைபடத்துக்கான சைஸை, சில ஸ்டேண்டர்ட்(Standards) புத்தகத்தை  ரெஃபர் பண்ணி முடிவு செய்வாரு. அவருக்குக் கீழே வேலை செய்ற ஜூனியர் எஞ்சினியர்கள் அல்லது ட்ராஃப்ட்ஸ்மேன் இந்தப் படத்தை வரைவார்.

அந்த வேலைக்குத் தான் உங்களை மாதிரி ஃப்ரெஷ் எஞ்சினியர்ஸை எடுப்பாங்க. வரையணும்னா காலேஜ்ல மெசின் ட்ராயிங் கையால வரைஞ்ச மாதிரின்னு நினைச்சுக்காதீங்க. அதுக்கு ஆட்டோகேட்(AUTO CAD) போன்ற சாஃப்ட்வேர்கள் பயன்படும்.

உங்க வேலை, தினமும் உங்க பாஸ் கொடுக்கிற டிராயிங்கை அவங்க சொல்ற நேரத்துக்குள்ள முடிச்சுத் தர்றதுதான்.

இங்கே சேரணும்னா..
AUTO CAD, PRO-E, Solidworks போன்ற சாஃப்ட்வேர்களைப் படிச்சவங்கதான் இங்கே சேர முடியும். இவற்றைப் பற்றி இங்க எழுதுனா பதிவு பெருசாப் போயிடும். இதைப் பற்றி விரிவா அடுத்த பதிவில் சொல்றேன்.

டப்பு தேறுமா?
மெக்கானிகல் என்ஜினியரிங்கில் அதிக சம்பளம் கொடுக்கும் துறை இது மட்டுமே! அதான் மேலே முதல் பத்தியிலேயே சொல்லிட்டனே, இன்னும் என்ன சந்தேகம்!

எங்கெல்லாம் இருக்கும்?
இந்த டிபார்ட்மெண்ட் ஏதோவொரு கம்பெனியில் ஒரு பகுதியா மட்டும் இருக்கிறதில்லை. இதுக்குன்னே தனிக் கம்பெனிகளே இருக்கு. டிசிஎஸ், விப்ரோ போன்ற சாஃப்ட்வேர் கம்பெனிகள்கூட மெக்கானிகல் டிசைனுக்காக தனி டிவிசனே வச்சிருக்காங்க. பெரும்பாலும் இந்த மாதிரிக் கம்பெனிகளோட க்ளையண்ட்ஸ் வெளிநாட்டுக் கம்பெனிகளா இருக்கும். அதாவது நீங்க போடற டிராயிங்கை வெளிநாட்டுல இருக்குற யாரோ ஒருத்தர் யூஸ் பண்ணி உற்பத்தியோ அசெம்ப்ளியோ பண்ணுவார்.

ரொம்ப நல்ல விஷயம் என்னன்னா, இது ஒரு ப்யூர் ஒயிட் காலர் ஜாப்! ஒரு மெக்கானிகல் என்ஜினியருக்கு இப்படி அமைவது ஆச்சரியம்தான் இல்லையா!

அடுத்த வாரம் நீங்க படிக்க வேண்டிய சாஃப்ட்வேர்ஸ் பத்தி பார்ப்போம்!

மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_3"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, February 18, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_2


டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

RESEARCH & DEVELOPMENT (ஆராய்ச்சி & மேம்பாடு):
நமது என்ன வேலையில் சேரலாம் தொடரில் இன்று நாம் பார்க்கப் போவது R&D டிபார்ட்மெண்ட் பற்றி..


எதுக்கு இது?
ஆராய்ச்சினதும் பயந்துடாதீங்க. உற்பத்தி செய்யப்படுற பொருளின் எண்ணிக்கையைக் கூட்டவோ அல்லது அந்தப் பொருளைத் தயாரிக்க ஆகும் செலவைக் குறைக்கவோ இந்த டிபார்ட்மெண்ட் வேலை செய்யும்..
பொதுவா ஆராய்ச்சி செய்வதே, உற்பத்தி முறையை அல்லது பொருளை டெவலப் பண்றதுக்காகத் தான் இருக்கும்.
என்ன செய்வாங்க?
சரி, அப்படி என்ன ஆராய்ச்சி பண்றாங்க..ஒரு கம்பெனி ஒரு நாளைக்கு 2000 நட்டு தயாரிக்குன்னு வச்சுக்கோங்க. இவங்க அதைக் கூட்டமுடியுமா, என்ன செய்தால் கூட்டலாம், மெசினோட கெப்பாசிட்டியைக் கூட்டுனா வேலைக்காகுமா, இல்லே, வேற மெட்டீரியல் யூஸ் பண்ணலாமா, அதனால  வேற ஏதாவது பாதிப்பு வருமான்னு பல வகையில மண்டையை உடைச்சுக்கிறதுக்குப் பேருதான் ஆராய்ச்சி. சில நேரங்கள்ல பொருளோட தரத்தைக் கூட்ட ஆராய்வதும் உண்டு.

ஒரு சில கம்பெனியிலதான் உண்மையான ஆராய்ச்சி நடக்குது. மத்த கம்பெனில நடக்கிறதெல்லாம் சுடுற' வேலை தான்.
உதாரணமா ஒரு பம்ப் தயாரிக்கிற கம்பெனியை எடுத்துக்குவோம். ஏதாவது வெளிநாட்டுக் கம்பெனி, புது டெக்னிக்ல ஒரு பம்ப் தயாரிச்சு சக்ஸ்ஸ் பன்ணிட்டாங்கன்னா, அந்த பம்ப்பை வாங்கி பிரிச்சு ஆராய்ந்து, அதே மாதிரி இன்னொன்னு செய்றது. மாட்டிக்கிடாம இருக்க சைஸ், மெட்டீரியல்போன்ற சில விஷயங்களை மாத்திடுவாங்க.

இங்கே சேரணும்னா..

பொதுவா இந்த டிபார்ட்மெண்ட்ல நல்லா எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆளைத் தான் எடுப்பாங்க. சில கம்பெனிகள் ட்ரெய்னியா ஃப்ரெஷ் என்ஜினியர்களை எடுக்கறதும் உண்டு. இண்டர்வியூக்கு கூப்பிட்டா, அவங்க என்ன பொருளைத் தயாரிக்கிறாங்களோ, அதைப் பற்றி நல்லாப் படிச்சிட்டுப் போங்க.
டப்பு தேறுமா?
இதுல வேலை செய்றவங்களுக்கு பொதுவா நல்ல சம்பளம் இருக்கும். அதனால யாராவது ஏமாந்து போய் உங்களுக்கு R&D-ல வேலை கொடுத்தா, பயந்து போய் வேணாம்னு சொல்லிடாதீங்க
எங்கெல்லாம் இருக்கும்?
பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை (நட்டு, பம்ப், பஸ்!) உற்பத்தி செய்ற கம்பெனிகளில் இந்த டிபார்ட்மெண்ட் இருக்கும். உற்பத்தி சாராத கம்பெனிகள்ல பெரும்பாலும் R&D டிபார்ட்மெண்ட் இருக்கறதில்லை. டிசைன்(Design) டிபார்ட்மெண்ட்டே அந்த வேலையைப் பார்த்துக்கும்.

அதைப் பற்றி தொடரின் அடுத்த பதிவில் பார்ப்போம்.

டிஸ்கி: ரெசியூம்(Resume) எப்படித் தயாரிப்பது, இண்டர்வியூவில் எப்படிப் பேசுவது(புளுகுவது) என்பது பற்றி பின்னால் சொல்கிறேன்!
மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_2"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, February 17, 2011

புருஷத் தியாகியும் கள்ளக்காதலனும் (கள்ளக்காதலர் தின ஸ்பெஷல்)

நன்றி: இந்தியா படு ஸ்பீடாக வல்லரசு ஆகிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தச் செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கு!

புண்ணிய பூமியான திருவண்ணாமலைக்குப் பக்கத்தில்தான் எப்படியோ அந்த அவதாரம் நிகழ்ந்தது. அவர் பெயர் கஸ்தூரி. அந்த தூரிக்கும்(பெண்ணின் நலன் கருதி பெயர் சுருக்கப்படுகிறது!!)அதே ஊரில் அவதரித்த லோகனாதனுக்கும் பத்திக்கிச்சு.அந்தக் கதை ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே, தூரிக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. தூரி தான் நல்ல பொண்ணாச்சே..அதனால வீட்ல பார்த்த மாப்பிள்ளையையே கட்டிக்கிச்சு. அந்த பெரிய மனசுக்காரர் பேரு ஆறுமுகம். (என்னடா இது, முருகருக்கு வந்த சோதனை!)
Profile ஃபோட்டோல இருக்குற புள்ள பாக்குதுய்யா!
தூரியும் ஆறுமுகம்கூட நல்லாக் குடும்பம் நடத்தி ஒரு பிள்ளையும் பெத்துக்கிச்சு. அதுக்குப் போட்டியா,நம்ம லோகும் வேற ஒரு பொண்ணைக் கட்டி 2 பிள்ளை பெத்துக்கிட்டாரு. இதுவரைக்கும் நல்லாத் தான் போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு ரெண்டு பேருக்கும் பழைய லவ்வு பீறிக்கிட்டு வந்திடுச்சு. அவ்வளவு தான், லோகு உடனே கிளம்பி தூரி வாழ்ந்த சென்னைக்கே வந்துட்டார். டென்சன ஆன ஆறுமுகம், கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போயிட்டாரு.(பழனிக்கான்னு யாராவது கேட்டீங்கன்னா...அழுதுடுவேன்)

அப்புறம் என்ன, மாதர்குல மாணிக்கமான தூரியும் லோகும் ஒரு வருசம் ஜாலியா குடும்பம் நடத்துனாங்க. ஆனா வெளில நம்ம தியாகச் செம்மல் ஆறுமுகத்துக்குத் தான் ஒரு ஆண்டி கூட செட் ஆகலை. வெறுத்துப் போன தியாகி, திரும்ப வீட்டுக்கே வந்துட்டாரு.(முருகா..நீ ஏன் நல்லவங்களையே சோதிக்கிற..)

இப்போ பெரிய மனுசங்களை வச்சு பஞ்சாயத்தைக் கூட்டுனாரு ஆறுமுகம்.பெருசுகளும் அந்த காதல் பறவைகளுக்கு எடுத்துச் சொன்னாங்க. தூரியும் லோகும் ஒரு வழியா பிரியறதுக்கு ஒத்துக்கிட்டாங்க.

அப்போதான் லோகு ஒரு வேண்டுகோளை வச்சாரு. ‘கடைசியா, ஒரு வாரம் தூரி கூட வாழ்ந்துட்டுப் போறேன். ஆறுமுகமும் இருக்கட்டும், எல்லாரும் ஒன்னா ஒரே வீட்ல இருப்போம்’ன்னாரு (செத்தப் பொறுங்கோ..நேக்குத் தலையெல்லாம் சுத்திண்டு வர்றது.கொஞ்சம் ஜலம் குடிச்சுண்டு வந்திடறேன்!)

பத்தரை மாத்துப் பத்தினியான தூரி, ’என் புருஷன் ஆறுமுகத்துக்கு ஓ.கேன்னா, எனக்கும் ஓ.கேன்னு சொல்லிடுச்சு.’வாழ்கையிலே எவ்வளவோ தியாகம் பண்ணியாச்சு, ஒருவாரம் தானே’ன்னு ஆறுமுகமும் ஒத்துக்கிட்டாரு. ரெண்டு மூணு நாள் நல்லாத் தான் போச்சு. அம்மணி ரெண்டு பேருக்கும் சோறு வடிச்சுக் கொட்டி, தடபுடல் விருந்தோட குடும்பம் நடத்துச்சு(குடும்பமாடா அது..).
சண்டாளா..என் படத்தை ஏன்யா போட்டே?

ஒரு நாள் நைட் நம்ம(!) தூரியும் லோகும் (தனியா) போய் படுத்துட்டாங்க. நம்ம தியாகி டிவி பார்த்துக்கிட்டு இருந்தாரு. தூரிக்கு டிவி சத்தம் தொந்தரவா இருந்தது. ’நாம யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாம வாழ்ந்துகிட்டிருக்கோம், இந்த மனுசன் இப்படி டிவியைப் போட்டு நம்மளைத் தொந்தரவு பண்றானே’ன்னு, எந்திரிச்சுப் போய் ஆறுமுகத்துகிட்ட டிவியை ஆஃப் பண்ணச் சொல்லுச்சு.

என்ன அதிசயம்..ஆறுமுகம் கடுப்பாகி கத்தியால குத்த வந்துட்டாரு.  இந்த அநியாயத்தை ’அதையும் தாண்டிப் புனிதமான காதலர்’ லோகு வேடிக்கை பார்க்க முடியுமா..அவர் வந்து தடுத்தாரு. அவ்வளவுதாங்க, ஆறுமுகம் அந்தக் கத்தியாலயே சதக், சதக்னு லோகை குத்தீட்டாரு.அங்கயே லோகு அவுட்டு! இப்போ ஆறுமுகம் ஜெயில்ல!  

அட நன்னாரிப் பயலே, இப்போகூட ‘ஏன் டிவி பார்க்கவிடலை’ன்னு தான் குத்துனயா நீயி....விளங்கிரும்டே..விளங்கிரும்.

உலகம் இந்த ரேஞ்ச்ல போறது தெரியாம இன்னும் ‘ஆத்தாவும் தாத்தாவும்’னு சின்னப்புள்ளத் தனமா காதலர் தின ஸ்பெஷல் போடறமேன்னு நினைச்சு, சுவத்துலயே நங்கு நங்குன்னு முட்டிக்கிட்டேன்.அதுக்குப் பின்னூட்டமும் ஓட்டும் போட்ட அப்பாவிப் புள்ளைகல்லாம் இந்தப் பதிவைப் படிச்சிட்டு என்ன செய்யப் போகுதுகளோ தெரியல.

என்ன கொடுமை சரவணா இது!

மேலும் வாசிக்க... "புருஷத் தியாகியும் கள்ளக்காதலனும் (கள்ளக்காதலர் தின ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

38 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, February 12, 2011

ஆத்தாவும் தாத்தாவும் (காதலர் தின ஸ்பெஷல்)

நீ வெற்றுக் காலுடன்
நடந்து போகையில் - என்
நெஞ்சில் தைக்கிறது
நெருஞ்சி முள்.

ஒவ்வொரு காதலர் தினம் வரும்போதும் எனக்கு அவர்களின் நினைவு வரும். இந்த வருடம் அந்த நினைவுகள் உங்களுக்காக இங்கே....

எங்கள் ஊரில் ‘ஆத்தா’ வசித்து வந்தார். வயது எப்படியும் 60ஐ தாண்டி இருக்கும். அவர் பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை. எல்லோருக்கும் ஆத்தா தான் அவர்.  அவருக்குத் துணையாக இருந்தது அவரின் கணவரான தாத்தா மட்டுமே. அவர்களது பிள்ளைகள் திருமணமாகி வேறு வீட்டில் வசித்து வந்தனர்.

சிறுவர்களான எங்களின் கவனத்தை ஆத்தா கவர்ந்ததுக்குக் காரணம் அவரது ஞாபக மறதி. எந்தவொரு விசயத்தையும் கொஞ்ச நேரத்தில் மறந்து போய்விடுவார். ’கஜினி’க்கு எல்லாமே மறக்கும். ஆனால் இவருக்கு அப்படி அல்ல.

’கடைக்குப் போவோம் எனக் கிளம்பினால் பாதி வழியிலேயே மறந்துவிடுவார். எதிரில் வரும் யாராவது ‘என்னாத்தா இங்க நிக்க?” என்றால் ‘நான் எங்கே போறதுக்கு கிளம்பினேன்னு மறந்துட்டேன்யா’ என்பார். பெரும்பாலும் அவருக்குப் பின்னாலே தாத்தா வந்து கொண்டிருப்பார். ‘கடைக்குப் போறதுக்கு வந்தே, தாயி’ என்று சொல்லி அழைத்துச் செல்வார். அவர் மறக்கவேண்டும் என்பதற்காகவே பேச்சுக் கொடுக்கும் சிறுவர்களும் உண்டு. 

தாத்தா வேலைக்குப் போய்விட்டார் என்றால் கஷ்டம்தான். ஆத்தா திரும்பி வீட்டிற்குப் போய், ஞாபகம் வரவும் மீண்டும் கடைக்குப் போகும். தாத்தா வீட்டில் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆத்தா கண்மாய்க்குப் போனால்கூட நிழல் போல் பின்னாலேயே வருவார்.

அப்படி ஒரு நாள் கண்மாய்க்குப் போன ஆத்தா, தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இடுப்பில் சரியான அடி. தாத்தா தான் தூக்கிக்கொண்டு ஓடினார். என்ன வைத்தியம் பார்த்தும் இனிமேல் நடக்க முடியாது என்று கை விரித்து விட்டார்கள். படுத்த படுக்கை தான்.

ஆறு மாதத்திற்கு மேல் தாத்தா தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். எல்லாம் என்றால் காலைக் கடனிலிருந்து, குளிப்பாட்டி புடவை கட்டுவது வரை. ஊரே உச் கொட்டியது. கடவுளும் ஒருநாள் அந்தக் கஷ்டத்திற்கு முடிவு கட்டினார்.

அன்று அதிகாலையிலேயே ஆத்தாவுக்கு இழுக்க ஆரம்பித்தது. ஊர் சனம் வீட்டின் முன் கூடத் தொடங்கியது. தாத்தா, ஆத்தாவின் கையைப் பிடித்தபடியே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்தபடியே ஆத்தாவின் உயிர் பிரிந்தது. பெண்கள் ஆத்தாவைக் குளிப்பாட்ட தயாரானார்கள். ’எய்யா, கொஞ்ச நேரம் வெளில இரும். குளிப்பாட்டி சாத்தி வச்சுட்டுக் கூப்பிடறோம்’ என்று சொல்லி தாத்தாவை வெளியே அனுப்பினர். ஆத்தாவை தயார் செய்து நாற்காலியில் வடக்குப் பார்த்து சாத்தி வைத்தார்கள்.

ஆத்தாவின் நெற்றியில் பொட்டும் காசும் வைக்க தாத்தாவைத் தேடினார்கள். அவர் வீட்டின் பின்புறம் போனதாக அங்கிருந்த ஒருவர் சொல்ல, பின்னால் போய்ப் பார்த்தார்கள்.

அங்கே தாத்தா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்!



வருங்கால / நிகழ்கால வாழ்க்கைத் துணையை நேசிப்போருக்கு காதலர் தின நல்வாழ்த்துகள்.


மேலும் வாசிக்க... "ஆத்தாவும் தாத்தாவும் (காதலர் தின ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, February 10, 2011

PAYCHECK - விமர்சனம்

தற்செயலா ஒரு நாள் டிவில இந்தப் படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன். ஏதோ வித்தியாசமாத் தெரிஞ்சது. அப்புறம் டவுன்லோட் பன்ணிப் பார்த்தா, புத்திசாலித்தனமான ஆக்சன் பிலிம்! இங்கிலிபீஸ் படமாப் பார்த்துட்டு பீட்டர் விடற சில லோக்கல் நண்பர்கள்கிட்ட இந்தப் படத்தைப் பத்தி கேட்டப்போ, யாருக்கும் இப்படி ஒரு படம் வந்ததே தெரியலை..’அட அப்ரெண்டிஸ்களா, இன்னும் நீங்க ஜுராஸிக் பார்க்கத் தாண்டி வரலையா’ன்னு நினைச்சுக்கிட்டேன்..அதனால இங்க இப்போ Paycheck.
பென் அஃப்லெக் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினீயர். சாஃப்ட்வேர்னா நம்மூர்ல காப்பி-பேஸ்ட் பண்ணியே காலத்தை ஓட்டுவாங்களே, அவங்களை மாதிரி நினைச்சுடாதீங்க. இவர் பெரிய மண்டைக்காரர். பெரிய கம்பெனிகளுக்கு சில சீக்ரெட் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்துட்டு பல்க்கா ஒரு பே செக் வாங்குறவரு. ப்ராஜெக்ட் முடியவும் அவரோட மெமரியை அழிச்சுடுவாங்க. வேற யாருக்கும் அந்த ஐடியாவை அவர் வித்துடக்கூடாது இல்லையா..

பொதுவா 2/3 மாசம் ஒரு ப்ராஜெக்ட் பண்ணீட்டு 'மறந்துடறது' அவர் வழக்கம். ஒரு புதிய பெரிய ப்ராஜெக்ட்டுக்கு அவரைக் கூப்பிடுறாங்க. 2/3 அருசம் ஆகும்னு சொல்றாங்க. ஆனால் 90 மில்லியன் சம்பளம் தர்றோம்கிறாங்க. இவ்வளவு கிடைக்குன்னா அப்பன் ஆத்தாவைக் கூட மறக்கலாமே..அதனால தல அதுக்கு ஒத்துக்கிடுதாரு.

ஃப்ளாஷ்..அவ்வளவுதான். மூணு வருசம் முடிஞ்சது. போயிட்டு வா ராசான்னு சம்பளத்தை அவர் அக்கவுண்ட்ல போட்டு அனுப்பி வைக்கிறாங்க.

மறுநாள் பேங்குக்குப் போய் கொஞ்சம் கைச்செலவுக்கு பணம் எடுப்போம்னு பார்த்தால், அய்ய்ய்யோ..அங்க ஒன்னுமே இல்லை. என்னடான்னு கேட்டா நீங்க தான் சார் ‘பாபா’ மாதிரி கிடைச்சதெல்லாம் தானமா வாரிக்கொடுத்துட்டீங்க.ஆட்டோ ட்ரன்ஸ்ஃபெர்ல ஆப்பு இறங்கிடுச்சுன்னு சொல்றாங்க.   நீங்க அனுப்புன பார்சல்தான் இருக்குன்னு சோப்பு சீப்பு கண்ணாடி ரேஞ்சுக்கு 20 அயிட்டத்தை (அது இல்லீங்க) கொடுக்கிறாங்க.

ஆ.ராசா கூட தானம் குடுக்கலையே, நான் ஏன்யா கொடுக்கணும்னு தல, தலையைப் பிச்சுக்கிட்டு வெளில வந்தா..ஒரு பக்கம் எஃப்.பி.ஐ துரத்துது.  இன்னொரு பக்கம் யாருக்கு வேலை செஞ்சாரோ அவங்க துரத்துறாங்க.  ஏன் துரத்துறங்க, பணம் என்னாச்சு, அப்படி என்னதான் புராஜெக்ட் பண்ணாருன்னு அதிரடி ஆக்சனோட சொல்லியிருக்காங்க.

இந்தப் படத்தோட டைரக்டர் ஜான் வூ ஹாலிவுட்ல ஃபேமஸான ஆக்சன் பட டைரக்டர். அவரை நம்பிப் போனா, (உண்மையான) அதிரடி ஆக்சன் கண்டிப்பா இருக்கும். ஷகிலா மாதிரி ஏமாத்தற வேலைல்லாம் அவர்கிட்ட கிடையாது. (ஸ்டில் எங்கப்பா..)

ஹீரோயினா ’கில் பில்’ உமா துர்மன் நடிச்சிருக்காங்க. இதிலயும் கொஞ்சம் ஆக்சன் சீன்ஸ் அவருக்கு உண்டு. ஃப்ரெண்டா வர்ற பால் கியாமட்டி (?) கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

ஜான் பாவெல் ம்யூசிக்கும், ஜெஃப்ரி கிம்பால் ஒளிப்பதிவும் படத்தோட ஆக்சன் எஃபக்டைக் கூட்டுது. அதுவும் அந்த சேஸிங் காட்சியில் கலக்கியிருப்பாங்க. 

ஒரு நல்ல விறுவிறுப்பான ஆக்சன் மூவி பார்க்க ஆசைப்படறவங்க தாராளமா இதைப் பார்க்கலாம்.
மேலும் வாசிக்க... "PAYCHECK - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, February 9, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_பகுதி 1

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

 படிச்சு முடிச்சு என்னவா ஆகப் போறே?”
“ எஞ்சினியர் ஆகப்போறேன்.
ஆகி என்ன செய்வே?”
“ எஞ்சினியர் வேலை பார்ப்பேன்.
அதைத்தான் கேட்கேன். என்ன வேலை செய்வே?”
“ ம்ம்..எனக்கு கீழே ஒர்க்கர்ஸைக் கொடுத்திடுவாங்க.அவங்க வேலை செய்வாங்க..நான் சூப்பர்வைஸ் பண்ணனும் அவ்வளவு தான்.” 

இது நான் ஆறாவது படிக்கும்போதுஎனக்கும் என் வாத்திக்கும் நடந்த உரையாடல் அல்ல… நான் காலேஜில் 3ம் வருடம் படிக்கும்போதுஎனக்கும் என் காலேஜ் சீனியருக்கும் இடையில் நடந்த உரையாடல் அது.

உண்மையைச் சொல்வதென்றால்ஒரு எஞ்சினியரின் வேலை என்னஒரு கம்பெனியில் என்னென்ன டிபார்ட்மெண்ட் எல்லாம் உள்ளன என்பது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. காலேஜில் விழுந்து விழுந்து படிப்பதும்மார்க் வாங்குவதுமே எனக்குத் தெரிந்தது.

சமீபத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு (ஐ.டி.) படிக்கும் என் உறவுக்காரப் பையனிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகளைக் கேட்டேன். அவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை. எஞ்சினியரா வேலை பார்ப்பேன் என்பதைத் தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை.

பொதுவாக முதல் தலைமுறைப் பட்ட்தாரிகளுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் அதைத் தாண்டி எதுவும் தெரிவதில்லை. கல்லூரிகளிலும் ஒரு கம்பெனியில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றி எதுவும் சொல்லித்தருவதும் இல்லை. பெரும்பாலான கல்லூரி ஆசிரியர்களுக்கு கம்பெனிகளில் வேலை பார்த்த அனுபவம் இல்லாததும் ஒரு முக்கியக் காரணம்.

எனவே Corporate Environment பற்றியும், ஒரு என்ஜினியரின் தினசரி அலுவல்களைப் பற்றியும்  சில அடிப்படைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவே  இந்தப் பதிவுத் தொடர்.
சிறிய  நட்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஆனாலும் சரிபெரிய கப்பலையே கட்டும் கம்பெனி ஆனாலும் சரிஅடிப்படையில் பொதுவாக கீழே உள்ள துறைகளே (டிபார்ட்மெண்ட்களே) இருக்கும். நீங்கள் எந்தவொரு கம்பெனியில் சேர்ந்தாலும் சரிகீழே கொடுக்கப்படிருக்கும் ஏதேனும் ஒரு டிபார்ட்மெண்டில் தான் உங்களைப் போடுவார்கள்:
1.       R&D
2.       DESIGN
3.       DEVELOPMENT
4.       PRODUCTION
5.       ASSEMBLY / ERECTION
.         QUALITY CONTROL
7.       MAINTANENCE
8.       OTHERS (PAINTING..)

நட்டு, பம்பு போன்ற சிறிய பொருள்களைத் தயாரிக்கும் கம்பெனியென்றால், மேலே சொன்ன டிபார்ட்மெண்ட்கள் ஒரே இடத்தில் இருக்கும். கப்பல், தொழிற்சாலை போன்றவைகளைக் கட்டும் கம்பெனியென்றால் ஒவ்வொன்றும் ஒரே ஊரிலோ, பல ஊர்களிலோ அல்லது பல நாடுகளிலோ இருக்கலாம்.

உதாரணமாக, ஒரு கப்பலின் டிசைன் அமெரிக்காவில் செய்யப்படலாம். கப்பல் கட்டத் தேவையான மெட்டீரியல் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படலாம். கப்பலுக்குத் தேவையான பம்பு போன்ற உபகரணங்கள் கோயம்பத்தூரில் செய்யப்படலாம். எல்லாமும் சேர்ந்து, குஜராத்தில் கட்டப்பட்டு, சிங்கப்பூரில் அந்தக் கப்பல் ஓடலாம்.

நீங்கள் இருக்கும் துறையைப் பொறுத்து, உங்கள் வசிப்பிடம், வேலை, சம்பளம் எல்லாம் மாறும். சம்பளமா..விளக்கமாச் சொல்லுங்க-ன்னு கேட்குறீங்களா?..சொல்றேன். ஒவ்வொரு துறையாக விளக்கிச் சொல்றேன்.  

தொடர்ந்து வாருங்கள். தொடரின் அடுத்த பகுதியில் சந்திப்போம்.

டிஸ்கி: ஆளே இல்லாத கடையில சின்ஸியரா டீ ஆத்துற அண்ணன் செங்கோவிக்கு ஒரு டீ சொல்லுங்கப்பா!
மேலும் வாசிக்க... "என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_பகுதி 1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

23 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, February 7, 2011

ஈழத் தமிழர் பிரச்சினையும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)

சென்ற மாதம் எங்கள் தாத்தா ஒருவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். நல்லபடியாக அடக்கம் முடிந்தபின் விஷேசம் எப்போது வைப்பது என்று உட்கார்ந்து பேசினோம். ‘விஷேசம்என்றால் தெரியும்தானே?
பொதுவாக 15 நாட்களுக்குப் பின் விஷேசம் வைக்கப்படும். அன்று மாமன்மார் சொம்பு/தண்ணி எடுத்தோர்க்கு புது டிரெஸ் கொடுத்து ‘துக்கத்தைத்தீர்ப்பார்கள். அது முடியும்வரை வேறு நல்ல காரியங்களில் கலந்துகொள்ள முடியாது. அந்த 15 நாட்களும் இரவில் பெண்கள் மாரடித்து அழுவார்கள். குடும்ப உறுப்பினர் மரணமடையும்போது, அந்த அதிர்ச்சியிலிருந்தும் துக்கத்திலிருந்தும் வெளிவர 15 நாட்கள் தொடர்ந்து அழுவது மனோதத்துவ ரீதியாக உதவும்.

குடும்பத்தில் பெரியவரான சித்தப்பாவிடம் கேட்கப்பட்டது: “என்னப்பா, அய்யாவுக்கு விஷேசம் 15ம் நாள் வச்சுக்கலாம்ல

அதை அவர் (நாங்களும்!) கடுமையாக மறுத்தார். “எல்லாரும் வேலை வெட்டிக்குப் போகவேண்டாமா? யாரு இப்போல்லாம் 15 நாள் அழுவுறது? பசங்க ஆபீசுக்கு அடிக்கடி லீவு போட முடியுமா? எத்தனைதடவை அங்கிட்டும் இங்கிட்டும் அலைவாங்க?அவர் கேட்பது அனைவருக்கும் நியாயமாகவே பட்டது. ஐந்தாம் நாள் காலையே வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சொந்த அப்பாவே இறந்தாலும், 5 நாட்களுக்கு மேல் அழ எங்களுக்கு நேரமோ மனமோ இல்லை என்பதே உண்மை. இது தான் நாங்கள். ஈனத் தமிழர்கள் என்று சிலரால் அன்போடு அழைக்கப்படும் தமிழகத் தமிழர்கள்!

பல நூறு வருடங்களாக சமூகரீதியில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் அடிமைகளாக, கூலிகளாக உழன்ற தமிழகத் தமிழர்கள், தங்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தைக் காணும் நேரம் இது.

எனக்கு முந்தைய தலைமுறை வரை, நாங்கள் வாழ்வில் மொத்தமாக பார்த்த பெரும் தொகை இருபது ஆயிரம் ரூபாய் கூட இருக்காது. வறுமையுடன் தலைமுறை தலைமுறையாகப் போரிட்டுள்ளோம். எனது தலைமுறையில் தான் ஜெயித்திருக்கிறோம். என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான மனிதர்களை  நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மொத்த சமுதாயமும் பணத்தின் பின் வெறித்தனமாக ஓடும் நேரமிது. அதற்கான எல்லா நியாயங்களும் கடந்து காலங்களில் கிடந்த பட்டினியில் இருக்கின்றன.

கடுமையான இன அழிப்பு இலங்கையில் நடந்துகொண்டிருக்கும்போதே கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் திரும்ப மத்தியில் வருவதால் உள்ள அபாயம் எனக்குப் புரிந்தது. என் உறவினர்களிட்த்தில் ஈழப்பிரச்சினை பற்றிப் பேசியபோது, நான் எதிர்பார்த்த எதிர்வினை ஏதும் கிடைக்கவில்லை. சிலர் ‘அப்படியெல்லாம் நடக்கா?என்றார்கள். தெரிந்தவர்களும்“பாவம்ப்பா அவங்கஎன்ற உச்சுக் கொட்டலோடு அடுத்த வேலை பார்க்க நகர்ந்தார்கள்.
பெண்கள் டிவியில் இனப் படுகொலைச் செய்திகளைப் பார்த்திருந்தார்கள். “பார்க்கவே கஷ்டமா இருக்கும்பா..சேனல் மாத்திடுவோம்என்றார்கள். நம்ம கிட்ட ரிமோட் இருக்கு, மாத்திக்கலாம். அவங்க என்ன செய்வாங்கஎன்று கேட்டபோது பதில் இல்லை. சீரியலின் ஜிகினா துக்கத்திற்கு வருத்தப்பட்ட அளவிற்குக்கூட ஈழத்திற்காக அவர்கள் வருந்தவில்லை.

எங்கள் கிராமத்தில் ஈழத்திற்காக வருத்தப்பட்டவர்கள் மதிமுகவில் இருந்த 10 பேர் மட்டுமே!

நான் தனியாகப் பலரையும் சந்தித்துஇந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்குப் போட வேண்டாம்எனக் கேட்டுக்கொண்டேன். முடிவில் மேலும் ஒரு 12 பேர் நான் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்தார்கள். நான் சொன்னதை ஒத்துக் கொண்டார்கள்.

காங்கிரஸ் கூட்டணிக்குத் தொடர்ந்து நாம் வாக்களித்தால், அவர்கள் செய்த மாபெரும் அநியாயத்தை நாம் அங்கீகரித்ததாகவே ஆகும். மத்தியில் காங்கிரஸ் மீண்டும் வந்துவிட்டால், ஈழத்தில் நிலைமை மேலும் மோசமடையும். ஈழத்தில் தமிழர்கள் சம உரிமையுடன் நடத்தப்படுவதற்கும், போரினால் சொந்த இடத்திலிருந்து குடிபெயர்ந்துள்ளோர் மீண்டும் தன் சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழவும் நாம் நம்மால் முடிந்த சிறு உதவியாக நம் சகோதரர்களுக்காக காங்கிரஸைத் தோற்கடிப்போம்என்பதே என் வேண்டுகோளாக இருந்த்து.

பதிவுலகம் அப்போது பற்றி எரிந்துகொண்டிருந்த்து. நிஜவுலகம் அதற்கு நேரெதிராக இருந்தது. ஈழப் பிரச்சினை ஒரு முக்கியப் பிரச்சினையாக அப்போதே பார்க்கப் படவில்லை.

தேர்தல் முடிவு வந்தபோது, மிகுந்த மனச்சோர்வை அடைந்தேன். ஏன் நமக்கு மனிதம் மரத்துப் போய்விட்டது என்று யோசித்தேன். பிறகு தான் புரிந்தது ஈழச் சகோதரர்களுக்காக மட்டுமல்ல, சொந்தச் சகோதரனுக்காக அழுவதற்குக் கூட இங்கு யாரும் தயாரில்லை. (சந்தேகமிருந்தால், தற்போதைய மீனவப் பிரச்சினை பற்றி உங்கள்/பக்கத்து வீட்டில் பேசிப்பாருங்கள்!)
அப்படியென்றால் ஈழப்பிரச்சினை எந்த பாதிப்பையும் கடந்த தேர்தலில் ஏற்படுத்தவில்லையா?

பாதித்தது. சீமான், வைகோ போன்றவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பகுதிகளில் அதன் பாதிப்பு இருந்தது. காங்கிரஸைத் தோற்கடிப்பதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. எனவே மக்களிடம் திரும்பத் திரும்ப உணர்ச்சிகரமாக ஈழ விஷயத்தைக் கொண்டு சென்றால் மட்டுமே ‘ஏதோ கொஞ்சம்பாதிப்பு இந்த சட்டமன்றத் தேர்தலில் தெரியும். அதிமுக கூட்டணிக்கு ‘அதுவும்ஒரு ஆயுதம். அவ்வளவு தான்.

தமிழக மக்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள ‘விலைவாசி, ஜாதி, கட்சி விசுவாசம், ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணம்போன்றவையே இந்தத் தேர்தலில் கவனத்தில் கொள்ளப் படும்.

மற்றபடி ஈழப் பிரச்சினை பெரிதாக எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே இங்குள்ள யதார்த்தம்.
மேலும் வாசிக்க... "ஈழத் தமிழர் பிரச்சினையும் தமிழகமும் (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.