Saturday, August 18, 2012

முருக வேட்டை_23

அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலெனெ வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாவென் றோதுவோர் முன்!


ஆனாலும் கவிதாவைக் கவலை சூழ்ந்தது.

அடுத்த இரண்டு நாட்களும் மும்பாசா ஏரியாவைச் சுற்றிப் பார்ப்பதிலேயே கழிந்தது. மூன்றாவது நாள் காலையில் சாவோ எனும் தேசியப் பூங்காவிற்குக் கிளம்பினார்கள். சிவநேசன் வரவில்லை. கூகி மட்டுமே உடன் வந்தார்.

ஏறக்குறைய இரண்டரை மணி நேரப்பயணத்திற்குப் பின் கிழக்கு சாவோ பூங்காவினை அடைந்தார்கள். பூங்கா என்பது பரந்து விரிந்த காடு தான். எனவே ஜீப்பை உள்ளே அனுமதித்தார்கள்.  

உள்ளே கொஞ்ச தூரம் சென்றதும் ஒட்டகச்சிவிங்கிகளைப் பார்க்க முடிந்தது. ஃபோட்டோக்களில் மட்டுமே பார்த்த ஒட்டகச்சிவிங்கிகளை நேரில் பார்ப்பது சந்தோசமான அனுபவமாக இருந்தது. 

தொடர்ந்து உள்ளே சென்றபோது, சிறிய குளத்தினைக் கண்டார்கள். கூகு “இது யானைகள் வரும் நேரம்..காத்திருப்போம்” என்றார்.கால்மணி நேரம் சென்றும் ஒன்றும் வரவில்லை.

”ஒன்னும் வரலியே?” என்றான் சரவணன்.

“வரும்..நாங்க பலமுறை காத்திருந்து பார்த்திருக்கிறோம். பொறுங்கள்”என்றார்.

”உங்க பேர் ஏதோ ஒரு எழுத்தாளர் பேருன்னு சொன்னீங்களே, அவர் கென்யால எங்க இருக்காரு? நாம அவரைப் பார்க்க முடியுமா?” என்று கேட்டாள் கவிதா.

”அவர் கென்யால இல்லை..அவரை நாடு கடத்திட்டாங்க. இப்போ அவரு யு.எஸ்.ல இருக்கிறார்” என்றார் கூகு.

“நாடு கடத்திட்டாங்களா? ஏன்?”

“உண்மையை எழுதுனாரு. சுதந்திரத்துக்கு அப்புறம் எங்க நாடு சுய அடையாளத்தோடு எழுந்து நிக்கும்னு நம்புனோம். ஆனால் நாங்க நினைச்சது நடக்கலை. எங்க அரசியல்வாதிங்க அந்நியரைவிடவும் மோசமா, அவங்களோட கைப்பாவையா வந்திட்டாங்க.  அதைக் கண்டிச்சு எழுதினாரு..சும்மா விடுவாங்களா? அரெஸ்ட் பண்ணி, நாடு கடத்திட்டாங்க”

“எல்லா ஊருலயும் இந்த அரசியல்வாதிங்க இப்படித்தான் இருக்கிறாங்க போல..”என்றான் சரவணன்.

“அடையாளத்தை இழந்துட்டோம்னு எதைச் சொல்றீங்க?” என்று கேட்டாள் கவிதா.

“காலனீய ஆதிக்கத்துல எங்க நாடு இருந்தப்பவே, எங்க மொழியை அழிக்கிறதுக்கான எல்லா வேலைகளையும் ஆங்கிலேயர் செஞ்சுட்டாங்க. ஒரு இனத்தை அழிக்கணும்னா, முதல்ல அவங்களை அவங்க சுய மரியாதையற்ற, தன் இனத்தின் மேல் மதிப்பற்ற கூட்டமா ஆக்கணும். அதுக்கு அவங்களோட மொழியை அழிக்கணும். ஒரு மொழிங்கறது எழுத்துக்கள் இல்லை, அது தான் இனத்தின் வரலாறு. ஒரு மொழியின் ஒவ்வொரு வார்த்தையும் தனக்குள்ள ஒரு கதையைக் கொண்டிருக்கும். அந்த வார்த்தைகள் உருவான கதை. அந்தக் கதை சொல்லும் நம் வரலாற்றை, நம் பண்பாடைச் சொல்லும். அதை அழிச்சாப் போதும், இன அழிப்புக்கான பாதி வேலை முடிஞ்ச மாதிரி”

“உங்க மொழியை அழிச்சாங்களா?”

“ம்..இந்த நாடும் இந்தியா மாதிரியே பல இனங்கள் கூடி வாழும் நாடு. அதனால 60க்கும் மேற்பட்ட மொழிகள் இங்கே பேசப்படுது. அதுல பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. அந்நியர், அவங்களோட மதங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துமுன்ன, நிரூபிக்க விரும்புறது ஒன்னே ஒன்னு தான். ‘நாமெல்லாம் முட்டாள்கள். நம் முன்னோர்கள் காட்டுமிராண்டிகள்.’ அப்படி நிரூபிச்சாத்தான் அதுக்கு அடுத்தபடியா ‘இந்த முட்டாள் காட்டுமிராண்டிகளுக்கு நாகரீகத்தைக் கத்துக்குடுக்க வேண்டியது நம் கடமை.’-ங்கிற கான்செப்ட்டைப் பேச முடியும். உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் அவங்க சொல்றது இது தான். ‘நாங்க வரும்வரை இவங்க முட்டாளா இருந்தாங்க. இவஙக்ளோட பண்பாடு/மதம்/கலாச்சாரம் எல்லாமே காட்டுமிராண்டித்தனம். நாங்க தான் இவங்களுக்கு சிந்திக்கச் சொல்லிக்கொடுத்தோம்’. அதுக்கப்புறம் ஆரம்பிக்கும் அவங்க வேலைகள்”

“வேலைகள்னா?”

“இங்கே அவங்க வந்ததும், எங்களுக்குக் கல்வி சொல்லிக்கொடுக்க முன்வந்தாங்க”

“கல்வி நல்ல விஷயம் தானே?” என்றான் சரவணன்.

“கண்டிப்பா. ஆனால் அதை எங்கள் தாய் மொழியில் சொல்லித்தர அவங்க தயாரா இல்லை. பள்ளிகளில் எங்கள் தாய்மொழியைக் குழந்தைகள் பேசினால்கூட தண்டனை கொடுக்கப்பட்டது. வீட்டிலும், தெருவிலும் பேசப்பட்ட மொழிகளை, பள்ளியில் பேச முடியலை. ஆங்கிலம் பேசுவது மட்டுமே நாகரீகம்னு சொல்லித்தந்தாங்க. பீரங்கியால் ஏற்படும் பாதிப்பை விட, மொழித்திணிப்பால் ஏற்படும் பாதிப்பு அதிகம்-னு கூகா சொல்றார். இப்போதைய படித்த வர்க்கத்திற்கு ஆங்கிலம் தான் தெரியும். எங்கள் தாய்மொழி தெரியாது.”

“ஆங்கிலம் நல்லது தானே?”

‘ஆங்கிலம் நல்லது தான். ஆங்கிலம் மட்டுமே நல்லதா? உங்க மொழியைவே எடுத்துக்குவோம். தமிழ் தெரியாத பிள்ளைங்க திருக்குறளைப் பத்தி என்ன புரிஞ்சுக்கும்? தமிழ் இலக்கியங்களை எப்படி அறியும்? அந்த இலக்கியங்கள் சொல்றது, உங்க வரலாறை, உங்க பண்பாட்டை. இங்கே பலரும் தன்னை காட்டுமிராண்டிகளின் வாரிசுன்னே நம்புறாங்க. இயற்கையோடு, இயற்கையா வாழ்ந்த மக்கள் நாங்க. அதனோட அருமை இந்தத் தலைமுறைக்குப் புரியலை.”


கூகி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, யானைக்கூட்டம் ஒன்று தூரத்தில் வருவது தெரிந்தது. ஒரு பெரிய யானை மூன்று குட்டிகளுடன் வந்து குளத்தில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தது. குட்டிகள் சந்தோசத்தில் சேற்றில் புரண்டு எழுந்தன. தாய் யானை தும்பிக்கையால் நீரை உறிஞ்சி, குட்டிகளுன் மேல் பீச்சி அடித்தது.

மூவரும் தன்னை மறந்து அந்தக் காட்சிகளைப் பார்த்தபடி இருந்தனர். அரைமணி நேரம் நீரில் விளையாடிவிட்டு, யானைகள் வந்தவழியே திரும்பிச் சென்றன.

“ஒண்டர்ஃபுல் “என்றான் சரவணன்.

“ஆமா..இயற்கையோட இயற்கையா எளிமையா இருக்கிறது ஒண்டர்ஃபுல் தான். அப்படித் தான் நாங்க இருந்தோம். ரொம்ப எளிமையான வாழ்க்கைமுறை எங்களுடையது. இயற்கையோட இருந்த தொடர்பை இன்னிக்கு இழந்துட்டு நிக்கிறோம்” என்றார் கூகி வருத்ததுடன்.


அதன்பின் சிறிது நேரம் காட்டில் சுற்றிவிட்டு, மும்பாசா நோக்கிக் கிளம்பினர். மீண்டும் இரண்டரை மணி நேரப்பயணம். கூகி தான் பேசியதைப் பற்றியே யோசித்தபடி வந்தார். கவிதாவும் சரவணனும் களைப்பில் தூங்க ஆரம்பித்தனர். 

கார் மும்பாசாவை நெருங்கியபோது, இருட்ட ஆரம்பித்திருந்தது.

கார் ஊருக்குள் நுழந்தபோது, திடீரென ஒரு வெடிச்சத்தம் கேட்டது. ஜீப்பின் முன்கண்ணாடி அதிர்வில் வெடித்துச் சிதறியது. தூங்கிக்கொண்டிருந்த கவிதாவும் சரவணனும் திடுக்கிட்டு எழுந்தனர்.

கூகி அதிர்ச்சியுடன் ஜீப்பை நிறுத்தினார்.

“என்ன ஆச்சு” என்றாள் கவிதா பீதியுடன்.

“பாம் ப்ளாஸ்ட்..” என்றபடியே சற்று தூரத்தில் தெரிந்த சர்ச்சைக் காட்டினார் கூகி. சர்ச் கட்டிடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. 

“இனி ஊருக்குள் போக முடியாது. கலவரம் ஆரம்பிச்சுடும்” என்றார் கூகி.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

  1. //‘நாங்க வரும்வரை இவங்க முட்டாளா இருந்தாங்க. இவஙக்ளோட பண்பாடு/மதம்/கலாச்சாரம் எல்லாமே காட்டுமிராண்டித்தனம். நாங்க தான் இவங்களுக்கு சிந்திக்கச் சொல்லிக்கொடுத்தோம்’//

    காலங்காலமா இப்பிடித்தான் சொல்லிட்டு வர்றாய்ங்க..அரிஸ்டாட்டில் காலத்திலருந்து..! அத உண்மையாக்கிற மாதிரியே நாங்களும் அவங்களையே பெரிய ஆளுங்களா நினச்சு, அவங்கள மாதிரியே ஆக நினச்சு அபத்தமா எதையாவது பண்ணி....விடுங்கண்ணே! முடியல! :-)

    ReplyDelete
  2. தீப்பிடிச்சிருச்சு தொடர்லயும்...

    ReplyDelete
  3. வணக்கம் செங்கோவி!படிக்கும்போது எங்கள் நிலை மனக் கண்ணில் தோன்றுவது தவிர்க்க முடியாததாகிறது!இப்போ ஊர் சென்று வந்ததால்,நிஜம் தெரிகிறது.அன்று அன்னியர்கள்,இன்று சக மற்றைய பெரும்பான்மை இனத்தவர்!///ஒரு இனத்தை அழிக்கணும்னா, முதல்ல அவங்களை அவங்க சுய மரியாதையற்ற, தன் இனத்தின் மேல் மதிப்பற்ற கூட்டமா ஆக்கணும். அதுக்கு அவங்களோட மொழியை அழிக்கணும். ஒரு மொழிங்கறது எழுத்துக்கள் இல்லை, அது தான் இனத்தின் வரலாறு. ஒரு மொழியின் ஒவ்வொரு வார்த்தையும் தனக்குள்ள ஒரு கதையைக் கொண்டிருக்கும். அந்த வார்த்தைகள் உருவான கதை. அந்தக் கதை சொல்லும் நம் வரலாற்றை, நம் பண்பாடைச் சொல்லும். அதை அழிச்சாப் போதும், இன அழிப்புக்கான பாதி வேலை முடிஞ்ச மாதிரி”

    ReplyDelete
  4. ம்ம் குண்டு வெடித்து விட்டது! தொடரை திகைப்பில் நிறுத்திவிட்டீர்கள்§

    ReplyDelete
  5. கண்டிப்பா. ஆனால் அதை எங்கள் தாய் மொழியில் சொல்லித்தர அவங்க தயாரா இல்லை. பள்ளிகளில் எங்கள் தாய்மொழியைக் குழந்தைகள் பேசினால்கூட தண்டனை கொடுக்கப்பட்டது. வீட்டிலும், தெருவிலும் பேசப்பட்ட மொழிகளை, பள்ளியில் பேச முடியலை. ஆங்கிலம் பேசுவது மட்டுமே நாகரீகம்னு சொல்லித்தந்தாங்க. பீரங்கியால் ஏற்படும் பாதிப்பை விட, மொழித்திணிப்பால் ஏற்படும் பாதிப்பு அதிகம்-னு கூகா சொல்றார். இப்போதைய படித்த வர்க்கத்திற்கு ஆங்கிலம் தான் தெரியும். எங்கள் தாய்மொழி தெரியாது.”
    // இதுதான் தொடர்கதை மொழியில் !ம்ம்

    ReplyDelete
  6. இயற்கையா வாழ்ந்த மக்கள் நாங்க. அதனோட அருமை இந்தத் தலைமுறைக்குப் புரியலை.”//ம்ம் மனசு பாரம் கூடுகிறது!ம்ம்

    ReplyDelete
  7. கதை எங்கெங்கோ பயனிக்குதே! ஆனா நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு .ஏகப்பட்ட விஷயங்கள படிச்சு நல்ல extractah குடுத்திருகீங்க !

    ReplyDelete
  8. சூடு பிடித்து விறுவிறுப்பாக செல்கிறது கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.