Sunday, March 3, 2013

மதவெறியும், குரு-மலையாளத்திரைப்படமும்_1

டிஸ்கி: 1997ல் வெளியாகி ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான குரு பற்றிய விரிவான திரை விமர்சனமே இந்தப் பதிவுகள்.

தமிழக தென்மாவட்டங்கள் 1990களில் ஜாதிக்கலவரத்திற்குப் பெயர் பெற்றிருந்தன. திடீரென ஏதாவது ஒரு ஜாதித்தலைவரின் சிலை உடைக்கப்படுவதும், உடனே வதந்திகள் மூலம் பலமாவட்டங்களுக்கும் கலவரம் பரவுவதும் வாடிக்கையான நிழக்வாகவே இருந்தது.
சாமானிய மக்கள் கலவரத்தில் இறங்க, எப்போதுமே கீழ்க்கண்ட காரணங்கள் தான் சொல்லப்படும் :
-எதிர் குரூப் ஒன்னுகூடிட்டாங்க, நாம கூடலேன்னா ஆபத்து தான்.
- நமது ஜாதிப் பெண் பிள்ளைகளிடம் தகராறு செய்திருக்கிறார்கள்.
- அந்த ஜாதிக்காரர்கள் நம் ஜாதிக்காரன் வீட்டுக்குப்போய் பெண் கேட்டு தகராறு செய்திருக்கிறார்கள்.

-நமது ஜாதித்தலைவரின் சிலைகள் உடைக்கப்படுகின்றன.

-அவர்கள் மெஜாரிட்டியாக வாழும் ஊர்களில் இருந்த நம் மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டன.

இந்த வதந்திகளுக்கெல்லாம் ஒரே நோக்கம், பாதுப்பற்ற மனநிலைக்கு மக்களைக் கொண்டு செல்வதும், அங்கிருந்து வெறுப்பு-வன்மத்துக்குள் அவர்களை தள்ளுவதும் தான். அதன்பின் கலவரத்தில் தானாகவே அந்த எளிய மக்கள் இறங்கிவிடுவார்கள்.

பரமக்குடி கலவரத்தில்...

பலவருட அவதானிப்பில் நான் கண்டுகொண்ட விஷயம், நம் மக்கள் நல்ல காரியத்திற்கு ஒன்றுகூடுவதில்லை. பாதுகாப்பற்ற மனநிலைக்கு தைரியம் தேடியும், அடுத்தவனைக் கெடுக்கவுமே ஒன்றுகூடுவார்கள்.

இன்னும் சொல்வதென்றால், அன்பு நம் மக்களை இணைப்பதில்லை. வெறுப்பே நம் மக்களை இணைக்கிறது. அன்பின்வழியே மக்களை இணைப்பது எப்படி என்று தெரிந்த தலைவர்களும் இங்கில்லை. 'நமக்குள் ஒற்றுமை வந்துவிட்டது' என்று யாராவது பெருமைப்படும் இடத்தில், அதற்கான காரணமாக இருப்பது வெறுப்பே! வெறுப்பின் மூலமாக மக்களைத் திரட்டுவது எளிது என்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். இது ஹிட்லர் காலம் முதல் வெற்றிகரமாகச் செயல்படும் உத்தி!

ஒற்றுமை என்பது பாசிடிவ்வான விஷயம். அங்கே வெறுப்பிற்கு இடமிருக்காது. வெறுப்பின் காரணமாக, வெறுப்பைக் கக்குவதற்காக கூடுவதற்குப் பெயர் ஒற்றுமை அல்ல, அது வெறும் கும்பல் கூடுகையே.

சாதாரணமாக அன்பு நிறைந்த மனிதன்கூட, வெறுப்புப் பிரச்சாரத்தில் பலியாகி ஜாதிக்கலவரத்தில் முனைப்புடன் பங்கேற்பதைப் பார்த்திருக்கிறேன்.

பள்ளிக்காலங்களில் ஜாதிவெறியைக் கவனித்து வந்ததால், பின்னர் மதவெறியைப் புரிந்துகொள்வது எளிதாக இருந்தது. நான் டெல்லியில் பணிபுரிந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஈடுபாடுள்ள நண்பர்கள் இருந்தார்கள். அவர்களும் சாமானியர்கள் தான். நேரடியாக ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்ல.

அப்போது அவர்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் கீழ்க்கண்டவறு இருக்கும்:
- இந்த நாடு மதச்சார்பின்மை பேசியே நாசமாகப் போய்விட்டது.

-மதச்சார்பின்மையின் பெயரால் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியருக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது.

-பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் இப்படி வாழ முடிகிறதா?

- முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டே, இந்துப்பெண்களை காதலித்து மணமுடித்து முஸ்லிமாக மாற்றுகிறார்கள். லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்த மோசடி நடக்கிறது.
- இந்த அரசு ஓட்டுக்காக, முஸ்லிம்களிடம் அடிபணிந்துவிட்டது.
-எங்கு குண்டு வெடித்தாலும், அதற்குக் காரணம் இஸ்லாமியர்களே.
- அவர்களின் மக்கள்தொகை பெருகிக்கொண்டே போகும் ரகசியம் தெரியுமா? நாம் சிறுபான்மை ஆகிவிடுவோம்.

- மொத்தத்தில் இந்துக்களுக்கும், இந்துப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.

- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நம்மால் வியாபாரம் செய்ய முடிவதில்லை. அவ்வளவு ஏன், அங்கே நம்மால் வசிக்கக்கூட அவர்கள் விடுவதில்லை.

- மொத்தத்தில் இந்த நாடு வாழத்தகுதியற்ற நாடாகிவிட்டது. இதை இந்துத்வ நாடாக ஆக்குவதே இதற்கான தீர்வு.


குஜராத் கலவரத்தில்...

சுற்றிவளைத்துச் சொன்னாலும், அவற்றின் நோக்கம் சாமானிய மனிதர்களை பாதுகாப்பற்ற மனநிலைக்குக் கொண்டு செல்வதும், அதிலிருந்து வெறுப்பை நோக்கி அவர்களை நகர்த்துவதுமே.

தமிழகச் சூழலில் துக்ளக், தினமலர் போன்ற இதழ்கள் மென்மையாக இந்த வேலையைச் செய்துவருகின்றன என்பதையும் நான் உணர்ந்துகொண்டுள்ளேன்.

அதற்கு எதிர்ப்பார்ட்டியாக உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல்முறைகளும் இதே வழியிலேயே இருக்கின்றன. பாரதீய ஜனதா இந்தியாவிற்குச் செய்த மிகப்பெரிய கெடுதல், பாபர் மசூதியை இடித்தது. வெறுப்பைத் திரட்டியே அதைச் செய்தார்கள். அதுவே இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வேகமாகப் பரவ வழிவகுத்தது.

இணைய இஸ்லாமிஸ்ட்களும்,  இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தம் மக்களைத் திரட்ட கீழ்க்கண்ட பரப்புரைகளைச் செய்கிறார்கள்.

- இந்த நாடு இந்து மதச்சார்புடனே இயங்குகிறது. இந்துத்வா குரூப், எல்லா அதிகார மட்டத்திலும் இருந்துகொண்டு நம்மை அழிப்பதையே முழு வேலையாகச் செய்கிறார்கள்.

-மதத்தின் பெயரால் இந்துக்களுக்கு அதிக சலுகை வழங்கப்படுகிறது.

-நமது வழிபாட்டு முறைகளும், பர்தா போன்ற வாழ்க்கை முறைகளையும் அழிக்க இந்த இந்துத்வ அதிகார வர்க்கம் முனைகிறது.

- இந்து இளைஞர்கள் திட்டமிட்டே, இஸ்லாமியப்பெண்களை காதலித்து மணமுடித்து இந்துவாக மாற்றுகிறார்கள்.

- இந்த அரசு ஓட்டுக்காக, இந்துச் சார்புடன் நடக்கிறது.

-எங்கு குண்டு வெடித்தாலும், அதற்குக் காரணம் இந்துத்வா சதி வேலையே!
- நாம் சிறுபான்மையாய் இருப்பதாலேயே இந்த அவல நிலை.
- -இஸ்லாமியர் என்பதாலெயே வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை.

- மொத்தத்தில் இந்தியா வாழத்தகுதியற்ற நாடாகிவிட்டது. இதற்கான ஒரே தீர்வு இதை இஸ்லாமிய நாடாக ஆக்குவதே!

 
கோவை குண்டுவெடிப்பில்...
இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், இந்த மூன்று(ஜாதிவெறி/இந்துவெறி/முஸ்லிம்வெறி) தரப்பும் சொல்லும் கருத்துக்கள் அனைத்துமே முழுக்க பொய்யல்ல என்பது தான். மிகைப்படுத்தப்பட்ட உண்மையும், பரவலாகக் கலக்கப்பட்ட பொய்யும் சாதாரண மனிதனை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.

உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவதை விட, பாதுகாப்புணர்வே சாமானியர்களுக்கு முக்கியமாகப் போய்விடுகிறது. கலவரச் சூழலில் உள்ள சாமானியர்களிடமும், எப்போதும் மதவெறி தலைக்கேறித் திரியும் அடிப்படைவாதிகளிடமும் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், தங்கள் மனநிலையின் அபத்தத்தை அவர்கள் உணரவே மாட்டார்கள். (தமிழ்ப்பதிவுலகில் இத்தகைய சுவரில் முட்டும் விவாதங்களை நிறையப் பார்க்கலாம்.)

ஒரு அடிப்படைவாதத் தரப்பு உருவாக்கும் வெறுப்பை, எதிர்த்தரப்பு ஊதிப்பெரிதாக்கும். அவர்கள் ஒன்றையொன்று உண்டு வளரும் விஷக்கிருமிகள்.

இந்தியாவைக் காக்கும் நல்ல விஷயம், பெரும்பாலான மக்கள் வாழ விரும்புவர்கள். அடிப்படைவாதத்தில் அழிவதைவிட, இணக்கத்துடன் வாழ்வதே முக்கியம் என்ற நிதர்சனத்தைப் புரிந்தவர்கள். பெரும்பாலான இந்துக்களும், இஸ்லாமியர்களும், பல்வேறு ஜாதி மக்களும் அடிப்படைவாதத்தில் சிக்காதவர்கள் என்பதே இந்தியாவின் வரம்.

ஆனாலும் அத்தகைய சாமானிய மனிதர்களும், அடிப்படைவாத அமைப்புகளின் வெறுப்புவாதத்தில் மயங்கி வாழ்வில் இடறி விழுவதுண்டு. அவ்வாறான ஒரு சாமானியனே ரகுராமன்(மோகன்லால்) எனும் குரு திரைப்பட நாயகன்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:


 1. ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்கிறோம்.,
  கோவைகுண்டுவெடிப்பு,பரமக்குடி கலவரம்,குஜராத் கலவரம் போன்றவை தொடர்பாக மக்கள் செவி வழி அறிந்த பல உண்மைகள் ஊடகங்களில் வெளிவரவில்லை.

  ReplyDelete
 2. ரொம்பச் சரியா யதார்த்ததை சொல்லி இருக்கீங்க செங்கோவி....

  ReplyDelete
 3. மிகச் சரியான கருத்து. இலங்கையிலும் இதே காரணங்களுக்கா சிங்கள-முஸ்லிம் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  ReplyDelete
 4. நாடுகள் கெட்டுக் குட்டிச் சுவராவதற்குக் காரணம் அடிப்படை/அடிப்படையற்ற வாதங்களே!எதைக் கொண்டு வந்தோம்,கொண்டு செல்ல?

  ReplyDelete
 5. அருமையான பதிவு. நன்றி.வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. மதவாததுக்கும் இனவெறிக்கும் எளிதில் உணர்ச்சி வசப்படுதலால் எப்போதும் தீங்கு சமுகத்திற்குத்தான்!

  ReplyDelete
 7. உண்மையை உரக்கச் சொல்லும் அருமையான பதிவு.. அடிப்படைவாதங்களின் வேராய் அமையும் மதம், சாதி போன்றவற்றை அழித்தல் அவசியம் எனப்படுகின்றது.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.