Sunday, September 7, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-24)


24. துப்பாக்கி கையில் எடுத்து…

தொடரின் முதல் பாகத்தின் முடிவில் இருக்கிறோம். திரைக்கதை எழுதுவது என்பதில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று அடிப்படையைத் தீர்மானித்தல், இரன்டாவது தொழில்நுட்ப எழுத்து. தீம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, கேரக்டர்களை எப்படி, ஏன் வடிவமைக்க வேன்டும் என்று தொடர்ந்து, லாஜிக்-க்ளிஷே போன்ற விஷயங்களைப் பற்றி அறிவது வரை உள்ளது அடிப்படை எழுத்து.

இவற்றைப் பற்றிய தெளிவு இல்லாமல் நேரடியாக திரைக்கதை எழுத உட்கார்வது அபத்தம் என்று இப்பொழுது உங்களுக்கே புரிந்திருக்கும். இரண்டாம் பாகத்தில் ஆக்ட்-1, ஆக்ட்-2, கீ இன்சிடென்ட், ஆல் இஸ் லாஸ்ட் போன்ற திரைக்கதை வடிவம் சம்பந்தப்பட்ட டெக்னிகல் விஷயங்களைப் பார்ப்போம். பயப்பட வேண்டாம். நான் ஒரு தரை டிக்கெட் ஆசாமி என்பதால், எதையும் தரை டிக்கெட் ரேஞ்சுக்கு எளிமையாக்கி விடுவது வழக்கம். எனவே உங்களுக்குப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது.

இதுவரை பார்த்த அடிப்படை விஷயங்கள் இல்லாமல் ஒரு திரைக்கதை எழுதக்கூடாது. அவற்றில் சில விஷயங்களை உங்களால் கடைப்பிடிக்க முடியாமல் போகலாம். அந்தச் சூழலில் அதற்கு வலுவான காரணம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். தொடரில் இதுவரை இதுவரை பார்த்த அடிப்படை விஷயங்கள், வெவ்வேறு திரைப்படங்களில் எப்படிப் பயன்பட்டன என்று பார்த்தோம். இந்தப் பதிவில், ஒரு வெற்றிப்படத்தை எடுத்துக்கொண்டு அலசுவோம்.  அந்த சூப்பர் ஹிட் படம், துப்பாக்கி.


தீம் : 

துப்பாக்கி படத்தின் அடிப்படை தீம்,தேசபக்தி. இது தான் கதைக்கரு என்று முடிவெடுத்தபின், தேசபக்தியைச் சிதைக்கும் எந்த விஷயமும் படத்தில் வந்துவிடக்கூடாது என்று பார்த்தோம். 'ஹீரோ ஒரு ராணுவ வீரன். இதற்கு முன்னால் இந்திய அமைதிப்படையில் வேலை பார்த்தவன்' என்று சொல்லியிருந்தால், என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். 

'வேற்றுமையில் ஒற்றுமை ' என்பது தான் இந்தியாவின் பலமும் பலவீனமும். எனவே எப்போதும் ஒரு பிரிவினைவாதக்குரல் அபஸ்வரத்தில் ஒலித்துக்கொன்டே இருக்கும். அதையெல்லாம், அவர்களின் நியாயங்களுடன் இந்த கதைக்குள் கொண்டு வந்தால், தீம் அடிவாங்கி விடும். நீங்கள் ஒரு புரட்சியாலர் என்றால், இத்தகைய கருவினை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் இயல்புக்கு ஏற்றதையே தேர்ந்தெடுங்கள்; ஏ.ஆர்.முருகதாஸ் செய்தது போல!

ஒன் லைன்:

விடுமுறையில் ஊருக்கு வரும் ஒரு ராணுவ வீரன், ஒரு தீவிரவாதக் கூட்டத் தலைவனின் சதித்திட்டத்தை முறியடித்து, அந்த கூட்டத்தையே ஒழித்துக்கட்டுகிறான்.

முதலில் நாம் கவனிக்க வேன்டிய விஷயம், இது ஒன்றும் புதிய ஒலைன் அல்ல. இதே போன்று எத்தனையோ படங்கள் தமிழில் வந்துவிட்டன. ஆனாலும் அதையே முருகதாஸ் மீன்டும் எடுத்துக்கொள்கிறார். காரணம், திரைக்கதை  புதியதாக அமைக்க முடியும் என்ற நம்பிக்கை தான்.

இந்த ஒன்லைன், இது ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஹீரோ-குறிக்கோள்-வில்லன் மூன்றையும் தெளிவாகச் சொல்கிறது. அருமையான ஒன்லைன், இல்லையா?

ஹீரோ:

கதையின் நாயகன், அந்த ராணுவ வீரன் தான்.

விடுமுறையில் இருக்கும் ராணுவவீரன்' என்பதில் வலுவான முரண்பாடு உள்ளது. ஒரு ராணுவத்தினால், தேசத்திற்குள் முறையான அனுமதி இன்றி செயல்பட முடியாது. தேசத்தின் உள்பாதுகாப்பு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே ஹீரோ எப்படி தேசத்தைக் காப்பாற்றுவான்? இது 'போலீஸா-ராணுவமா? மத்திய அரசா - மாநில அரசா? மாநில சுயாட்சி உரிமை' போன்ற பலசிக்கலான  விவாதத்தைக் கிளப்ப வாய்ப்புள்ள முரண்பாடு.

தேசத்தைக் காப்பாற்றும் ராணுவ வீரன் -  ஜாலியான ஆசாமி - விஜய்க்கு இருக்கும் இமேஜ் மூன்றும் சேர்ந்து, கேட்-ஐ சேவ் செய்கின்றன.

கதாநாயகன் படம் முழுக்க ஆக்டிவ்வாகவே இருக்கிறார். சமீபத்தில் இவ்வளவு  ஆக்டிவ்வான ஹீரோ, எந்தப் படத்திலும் வந்ததில்லை.

குறிக்கோள்: 

தீவிரவாதக் கூட்டத்தை ஒழிப்பது.

இது, ஒரு எளிய சாமானியனும் புரிந்துகொள்ளக்கூடிய குறிக்கோள்.

நாட்டைக் காப்பாற்றுதல் எனும் அடிபடைத் தேவை, இந்தக் குறிக்கோளில் இருக்கிறது.

வில்லன்:

ஹீரோ அளவிற்கு பவர்ஃபுல்லான ஆள். அவனுக்கென்று ஒரு தெளிவான குறிக்கோள் இருக்கிறது. அது மிகச்சரியாக, ஹீரோவின் இயல்புடன் முரண்படுகிறது.

ஹீரோ அளவிற்கு வில்லனும் புத்திசாலி. பெட்டர் த வில்லன்..பெட்டர் த மூவி.

கதை சொல்லும் முறை:

கதை லீனியர் முறையில், நேராகவே சொல்லப்படுகிறது.பெரும்பாலும் ஹீரோவுக்குத் தெரியாத விஷயங்கள், ஆடியன்ஸுக்குத் தெரிவதில்லை. எப்போது ஹீரோ ஒரு விஷ்யாத்தைத் தெரிந்துகொள்கிறாரோ, அப்போது தான் ஆடியன்ஸும் தெரிந்துகொள்கிறார்கள்.  ஹீரோவுடன் ஐக்கியம் ஆக இது உதவுகிறது. இது சர்ப்ரைஸ் உத்தியில் எழுதப்பட்ட கதை.

சுவாரஸ்யத்திற்காக சீன்களில் ஃப்ளாஷ்பேக் வருகிறது. கதையை ஓவர் டோஸ் ஆக்கும் விஷயங்கள் கிடையாது. ஒரு அமைச்சர்கூட கதைக்குள் வருவதில்லை. அரசியல்வாதிகளின் தேசத்துரோகம், உடன் இருப்போரின் துரோகம் என்றெல்லாம் கதையை இழுக்க வாய்ப்பு இருந்தும், அது செய்யப்படவில்லை.

க்ளிஷே:

கதையில் ஹீரோயினுக்கு பெரிய இடம் இல்லை. ஆனாலும் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் மோதல்; பின்பு காதல் எனும் வழக்கமான விஷயத்தைகூட, காட்சிகளால் புதியதாக ஆக்கியிருந்தார்கள்.

அமைதியான அடக்கமான பெண் வேண்டும் என்று ஹீரோ கேட்டிருந்தால், அது க்ளிஷே ஆகியிருக்கும். ஆனால் ஹீரோ தைரியமான பெண் வேண்டும் என்று கேட்கிறார். ஹீரோயின் அடக்கமான பெண்ணாக அறிமுகம் ஆகிறார், ஆனால் அவர் ஒரு ஜான்ஸி ராணி. இவையெல்லாம் ஆடியன்ஸூக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

வில்லன் ரெரர் முகத்துடனும் தெலுங்குப்பட பிண்ணனி இசையுடனும் அறிமுகம் ஆவதில்லை.

வழக்கமான தேசபக்தி ஆக்சன் படமாக ஆகியிருக்க வேன்டிய க்ளிஷே கதை தான் இது. அதைப் புதியதாக ஆக்கியது, ஸ்லீப்பர் செல் எனும் கான்செப்ட். பல வருடங்களாகவே இந்திய தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் இந்த விஷயத்தைப் பற்றி, யாரும் பேசியதில்லை. அதை உடைத்துப் பேசியது தான், க்ளிஷே இல்லாமல் ஆக்கியது.

 இந்த இடத்தில் படத்தின் மிகப்பெரிய குறையையும் பார்த்துவிடுவோம்.

இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இருப்பது உண்மை. அதற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் துணை போவதும் நிஜம். அதை ஒரு படைப்பாளி மக்கள் முன் படைப்பாக வைக்கும்போது, கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் "சிலர்" மட்டுமே பாகிஸ்தானின் சதிக்கு ஆளாகிறார்கள். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள், உழைத்துப் பிழைக்கும் சாமானியர்கள்.

ஸ்லீப்பர் செல் என்பது சாமானியர்களிடையே பரவியிருக்கும் வைரஸ். அதைக் காட்சிப்படுத்தும்போது, சாமானியர்களின் நிலைப்பாட்டையும் காட்சிப்படுத்தியிருக்க வேன்டும். ஹீரோவையோ அல்லது ஹீரோவின் நண்பனையோ இஸ்லாமியராகக் காட்டி, அந்த சாமானியர்களின் பிரதிநிதியாக ஆக்கியிருக்க வேன்டும். ஒரு படைப்பாளிக்கு அந்த சமூகப்பொறுப்பு உண்டு.

இந்தப் படம், அந்தவிதத்தில் பெரும் தவறிழைத்துவிட்டது. இந்த தொடரின் ஆரம்பத்தில், அதனால் தான் சமூக விஷயங்களைப் பற்றி போதிய விழிப்புணர்வும் அறிவும் இல்லாமல் திரைக்கதை எழுதாதீர்கள் என்று சொன்னோம். அந்த விதத்தில் விஸ்வரூபம் படத்தில் கமலஹாசன் மிகச்சரியாக இதை பேலன்ஸ் செய்திருப்பார்.

'இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்' என்று காட்சிகளை அமைத்திருப்பார். அது சில அடிப்படைவாத அமைப்புகளுக்குப் பிடிக்காமல் போனதில், நமக்கு ஆச்சரியம் இல்லை தான். ஆனாலும் ஒரு படைப்பில் இருக்க வேன்டிய நேர்மை, அந்தப் படத்தில் இருந்தது. துப்பாக்கியில் அது மிஸ்ஸிங்.

Exposition:

ஹீரோ ஒரு ராணுவ வீரன் என்பது அறிமுகக் காட்சியிலேயே நமக்கு உணர்த்தப்படுகிறது. அடுத்து இரு முக்கியமான தகவல்கள் உறுத்தாமல் சொல்லப்படுகின்றன.

ஹீரோ ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும்போதும், காவல்துறை செய்ய வேண்டிய வேலையை தானே வலியச் செய்கிறான். இதை சத்யன் சொல்லும் ஒரு வசனத்தில் நகைச்சுவையாகச் சொல்லியிருப்பார்கள். 'வருசா வருசம் வந்து, என் புரமோசனுக்கு ஆப்பு வைச்சுட்டுப் போயிடு' என்று சத்யன் சொல்வார்.

அடுத்து, ஹீரோ ஒரு ராணுவ வீரன் மட்டுமல்ல. ராணுவ உளவுப் பிரிவில் வேலைசெய்பவன். இதை மறைமுகமாகச் சொல்லாமல் நேரடியான ஒரு மிரட்டலாக, ஹீரோவே சொல்வது போல் அமைத்திருப்பார்கள்.

குணச்சித்திர வளைவு

நாம் ஏற்கனவே பார்த்தபடி, இந்தப் படத்தின் ஹீரோவிற்கு குறிப்பிடத்தக்க குணச்சித்திர வளைவு கிடையாது. ஏற்கனவே முதிர்ச்சியடைந்துவிட்ட சூப்பர் ஹீரோ எனும் இமேஜை இதன் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். வேகமான திரைக்கதையும் புதிய காட்சிகளும் இணைந்து, குணச்சித்திர வளைவு இல்லாத குறையைப் போக்கியிருக்கின்றன.

நண்பன் எனும் மனசாட்சியும் கேரக்டர்களும்

சத்யன் செய்திருக்கும் நண்பன் கேரக்டர்ஹீரோ எப்படிப்பட்டவர் என்பதை விளக்கப் பயன்பட்டிருப்பதோடுநகைச்சுவைக்கும் கை கொடுத்துள்ளது.

ஹீரோயின் கேரக்டர் வழக்கமான அடக்க ஒடுக்கமான பெண்ணோலூசுப் பெண்ணோ கிடையாது. முழுக்க மாடர்னானதைரியமான பெண். இந்த வித்தியாசமான கேரக்டர்படத்தை சுவாரஸ்யப்படுத்தியது.

வில்லனும் வழக்கமான மசாலா வில்லன் இல்லை. ஹீரோவுக்கு இணையான சக்தி படைத்த வில்லன்.

ஜெயராம் கேரக்டர் பெண் பார்க்க வரும் வயது முதிர்ந்த கன்னன்(!) என்பதாக அமைந்திருந்தது. ராணுவ உயரதிகாரியும் அவருக்குக் கீழே பணிபுரியும் ஹீரோவும் ஒரே பெண்ணை 'பெண் பார்க்க'வருவதாக கதையை அமைத்திருந்ததுவித்தியாசமான நகைச்சுவை தான். ஜெயராம் கேரக்டர் ஒரு லாஜிக் மீறல்களுடன் கூடிய நகைச்சுவைக் கேரக்டர். படத்தின் விமர்சனங்களில் இது பற்றிப் புகார் எழுந்தது.

மொத்தத்தில் வித்தியாசமான சூழலும் புதிய கேரக்டர்களும் சுவாரஸ்யத்தைக் கூட்டின.

Plant & Pay off:

படத்தின் முதல் பகுதியில் ராணுவத்தில் பணிபுரிந்தபோதுஉடல் உழைப்புகளை இழந்த ராணுவ வீரர்கள் பற்றிய காட்சி வரும். அது ராணுவத்தின் தியாகத்தைக் காட்டுவதாக இருந்தது.

அது மட்டுமே நோக்கம் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் கிளைமாக்ஸில் ஹீரோ வில்லனிடன் அடிபணிய நேரும்போதுஹீரோவுக்கு உதவும் ஆட்களாக அந்த ராணுவ வீரர்கள் வருவார்கள். இது ஒரு நட்டு வைக்கப்பட்ட கம்பீர ரோஜா!!
 ----------------------------------------------------------------------------------------------------------------------

திரைக்கதையின் அடிப்படை விஷயங்களைப் பார்க்கும்போதேசில உதாரணங்களையும் பார்த்தோம். ஆனாலும் ஒரே படத்தை உதாரணமாகப் பார்க்கும்போது தான்நாம் இதுவரை சும்மா ஜல்லியடிக்கவில்லை என்று உங்களுக்குப் புரியும். எனவே தான் துப்பாக்கியை அலசினோம்.

விருப்பமிருப்பவர்கள் முந்தானை முடிச்சுதேவர் மகன்பாட்ஷாஜென்டில்மேன் போன்ற படங்களையும் சுறாஅலெக்ஸ் பாண்டியன்அஞ்சான் போன்ற காவியங்களையும் அலசும்படி கேட்டுக்கொள்கிறேன். (இரண்டாவது வகையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்!)

(தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

 1. சூப்பர் செங்கோவி!...மிக மிக எளிதாக, வலிமையான தொழில் நுட்பங்களை சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.

  ReplyDelete
 2. ம்..........மொத்தத்துல,ஃப்யூச்சர் சூப்பர் ஸ்டார்(?!)இவர் தான்னு..........................ஹ!ஹ!!ஹா!!!ஹைய்யோ.......ஹைய்யோ.........!

  ReplyDelete
  Replies
  1. ’செட்டப்’ பஞ்சாயத்து தனி...இது தனி.

   Delete
 3. கலக்குறீங்க...என்னா ஒரு எளிமையான புரியும் எழுத்து முரை தான் ஹைலைட்... நான் பட்ம் அதிகம் பார்க்கும் ரசிகன் தான்.. இருப்பினும், ஒரு எபிசோட் கூட மிஸ் பண்ணாம படிக்க தூண்டும் உங்க எழுத்து

  ReplyDelete
 4. சூப்பரா போய்ட்டிருக்கு தொடர்ந்து நிறைய அலசுங்க ஜீ

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.