Tuesday, December 30, 2014

ஹிட்ச்காக் : Foreign Correspondent (1940) - ஒரு பார்வை

ஹாலிவுட் தயாரிப்பாளர் Walter Wanger-க்கு ஒரு ஆசை. ஒரு பத்திரிக்கையாளர்(Vincent Sheean) எழுதி, பெரும் வரவேற்பைப் பெற்ற Personal History எனும் சுயசரிதை நூலை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்று. அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விஷேசம் என்றால், அந்த பத்திரிக்கையாளர் உலகப்போருக்குச் சற்று முன்னால், வேறொரு நாட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது நடந்த சம்பவங்களை விவரித்தது அந்த நூல்.

ஆனால் அதை திரைக்கதையாக்க பலரும் முயற்சித்து, சரி வராமல் கிடப்பில் போடப்பட்டது. அதில் தயாரிப்பாளர் வால்டர் வெக்ஸ் ஆகிக் கிடந்தபோது தான், ரிபெக்கா மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனார் நம் ஹிட்ச்காக். ஏற்கனவே 39 ஸ்டெப்ஸ் போன்ற சாகசக்கதையை இயக்கியவர் என்பதால், ஹிட்ச்காக்கை வாடகைக்கு எடுத்தார் வால்டர்! (ஆம், எப்படியும் ஹிட்ச்காக் பெரிய ஆளாக வருவார் என்று ரிபெக்கா தயாரிப்பாளர் Selznick நம்பியதால், ஹிட்ச்காக்கை ஒரு கான்ட்ராக்ட் போட்டு லாக் செய்திருந்தார்.!)

 ஹிட்ச்காக்கைப் பற்றி இயக்குநர் Sidney Lumet ஒருமுறை கிண்டலாக 'அந்தாளு ஒரே கதையைத் தான்யா மாற்றி மாற்றி படமா எடுக்கிறார்' என்று சொன்னார். ஹிட்ச்காக் படங்கள் ஒரே ஸ்டைஇல் இருப்பதைப் பற்றிய நக்கல் அது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. Personal History புக்கைப் படித்ததும், ஹிட்ச்காக் அதில் இருந்து ஒன்லைனை மட்டும் தான் எடுத்தார் : ஒரு ரிப்போர்ட்டர் - ஒரு கொலை - தப்பி ஓடுதல்/நிரூபித்தல்.

அவரது ஃபேவரிட் ஒன்லைன். 'மாப்பிள்ளை அவர் தான்..ஆனால் சட்டை என்னுது' என்பது மாதிரி கதை யாருடையதாக இருந்தாலும், படம் முடிவில் ஹிட்ச்காக்குடையதாகவே வெளிவரும். இங்கேயும் அதே கதை தான். ஏற்கனவே இந்தக்கதையை வாங்கி நொந்துபோயிருந்த வால்டரும் ஹிட்ச்காக்குடன் மல்லுக்கட்ட தெம்பின்றி, வாயை மூடிக்கொண்டார்.

 உலகப்போர் உலகத்தை நெருங்கிக்கொண்டிருந்த நேரம். பத்திரிக்கைகள் செய்தியை முந்தித்தருவதில் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. அப்போது ஒரு பத்திரிக்கை சார்பில் Foreign Correspondent-ஆக ஒரு நிருபர்(ஹீரோ) அனுப்பி வைக்கப்படுகிரார். அங்கே ஒரு பெரும்தலையை பேட்டி காண முற்படும்போது, அந்தப் பெரும்தலை கொல்லப்படுகிறார். ஹீரோ கொலைகாரனை விரட்டிச் செல்ல, அது ஒரு நீண்ட மற்றும் சாகசம் நிறைந்த பயணமாக ஆகிறது. முடிவில் சுபமே! (பயணத்தில் ஹீரோயினும் இணைந்தார் என்று சொல்லவும் வேண்டுமா?).

கேரக்டர்கள் மற்றும் இடம் தான் மாறியதேயொழிய, 39 ஸ்டெப்ஸ் மற்றும் young & Innocent ஸ்டைலில் உருவானது Foreign Correspondent. ஹாலிவுட்டில் அது முதல்முறை என்பதால், ஹிட்ச்காக் துணிந்து திரைக்கதையை அதே பாணியில் அமைத்தார். இன்றளவும் ஹாலிவுட்டில் வெற்றிகரமான திரைக்கதை டெம்ப்ளேட் அது. உதாரணம், Fugitive.

ஹிட்ச்காக்கின் இந்த மாதிரியான படங்களுக்கென்றே சில மசாலா ஐட்டங்களையும், ஒரு செய்முறையையும் கைவசம் வைத்திருக்கிறார்.

உற்சாகமான ஹீரோ.

அவனுக்கு உதவ அல்லது உதவுவது போல் நடிக்க, (படம் முழுக்க) கூடவே வரும் ஹீரோயின். (ரசிகன்ஸ் ஹேப்பி)

ஹீரோவின் பயணத்தில் சாகசங்கள், அதுவும் பிரபலமான இடங்களில். (இந்தப் படத்தில் Wind Mill, Tower, Flight)

வில்லன் யார் என்று ஆடியன்ஸுக்கு மட்டும் முதலிலேயே சொல்லிவிடுவது. அது தெரியாமல் ஹீரோ அப்பாவியாக எங்காவது போய் சிக்கிக்கொள்வது(சஸ்பென்ஸ் உத்தி..நோ சர்ப்ரைஸ்)

முடிவில் வில்லனுக்கு சாவு...ஹீரோவுக்கு டாவு.

சுவாரஸ்யமான சீன்களால் இந்த திரைக்கதை டெம்ப்ளேட்டை அலுக்காத ஒன்றாக ஆக்கிவிடுவது ஹிட்ச்காக் வழக்கம். இதிலும் அப்படியே.

படத்தில் குறை என்றால், இதை ஏறக்குறைய டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக எடுத்தது. ரிபெக்காவின் கள்ளக்காதலனாக வந்த George Sanders இதில் இரண்டாவது ஹீரோவாக வந்து துப்பறிகிறார். அவர் வரும் காட்சிகளில் நம் மனம் ஹீரோ-ஹீரோயினைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கேரக்டர் ஒட்டவேயில்லை.
இந்தப் படத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இந்தப் படம் வெளியான நேரத்தில் அமெரிக்க மக்கள் உலகப்போரில் பங்கு கொள்ளும் ஐடியாவே இல்லாமல் இருந்தனர். பிரிட்டனுக்கு ஆதரவாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கும் சூழல் உருவாகிக்கொண்டிருந்தது. அதற்கு மக்களை மறைமுகமாக தயார்படுத்தும்வேலையை இந்தப் படம் செய்தது. ஒரு பிரிட்டிஷ் குடிமகனாக ஹிட்ச்காக், அந்த வேலையைச் செவ்வனே செய்தார். உலகப்போர் சமயம்.பிரிட்டனுக்கு உதவும் அமெரிக்க ஹீரோ எனும் கான்செப்ட்டை அப்போதைய அமெரிக்க அரசே ரசித்தது. படத்தின் வெற்றி, மக்களும் ரசிப்பதைக் காட்டியது.

கிளைமாக்ஸில் வந்த ஃப்ளைட் சீனை எப்படி எடுத்தார் என்று அப்போது அனைவரும் வியந்தார்கள். கடலில் விழும் ஃப்ளைட்டை, ஒரே ஷாட்டில் கட் செய்யாமல் காக்பிட்டில் கேமிரா வைத்து படம் பிடித்த எஃபக்ட்டை உண்டாக்கினார். இன்றளவும் ரசிக்கப்படும் ஷாட் அது.

இந்தப் படம் ஹிட்ச்காக்கின் பெஸ்ட் அல்ல. அதிலும் ரிபெக்காவின் குவாலிட்டியுடன் கம்பேர் பண்ணும்போது, இது ஒரு சாதாரணப்படமே. பின்னாளில் North by Northwest எனும் அட்டகாசமான ஆக்சன் படம் கொடுக்க, ஹிட்ச்காக் எடுத்துக்கொண்ட ட்ரெய்னிங் என்று இந்தப் படத்தை வைத்துக்கொள்ளலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. நன்றாகத் தான்,இவர் பாதித்திருக்கிறார்.'ஹிட்ச்ஹாக்' பற்றிய அலசல் முடிவுறாது போலிருக்கிறதே?

    ReplyDelete
    Replies
    1. 1970-வரை படங்களை இயக்கியிருக்கிறார்..இப்போதைக்கு முடியாது!!

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.