Sunday, February 7, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 70

70. வரி..வட்டி..கிஸ்தி!

 "மௌனப் படக் காலங்களில் சினிமா என்பது விஷுவல்களால் கதை சொல்வதகாக, தூய்மையான சினிமாவாக இருந்தது. பேசும் படம் கன்டுபிடிக்கப்பட்டதை, சினிமாவின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேன்டும். அதுவரை விஷுவல் மீடியமாக இருந்த சினிமா, அதன்பின் 'வசனம் பேசும் நடிகர்களை, அதாவது நாடகத்தை பதிவு செய்யும் மீடியமாக மாறிவிட்டது. ஒளிப்பதிவு, நடிப்பு, கலை,இசை மற்றும் இயக்கம் மூலம் மக்களுக்கு கதை சொல்வதே உண்மையான, தூய்மையான சினிமா. " - அல்ஃப்ரெட் ஹிட்ச்காக்.


வசனம் எழுத ஆரம்பிக்கும் முன்பு, ஹிட்ச்காக் சொன்னதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம். வசனம் எழுதுவதற்கான அடிப்படையே, சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது தான்.

ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களே சினிமாவாக ஆக்கப்பட்டன. முழுக்க பாடல்களால் நிரம்பியது ஆரம்ப கால தமிழ் சினிமா. பெரும்பாலும், மக்கள் ஏற்கனவே அறிந்த நாடகங்கள் மற்றும் கதைகளே திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சமூகக் கதைகள் வர ஆரம்பித்ததும், பாடல்களின் இடத்தை நீண்ட, செந்தமிழ் வசனங்கள் எடுத்துக்கொண்டன. கேமிராவில் பதிவு செய்யப்பட்ட நாடகங்களாக அவை ஆகின.

இவற்றைப் பற்றி முன்பே பார்த்திருக்கிறோம். அந்த சமயத்தில் அந்த நாள் போன்ற படங்கள் பாடல்களும் இல்லாமல், நீண்ட அடுக்குமொழி வசனங்களும் இல்லாமல் நியூ நுஆர் த்ரில்லராக வந்தது. ஏறக்குறைய இன்றைய படங்களின் தரத்தில் வந்த படம், அந்த நாள்.  விளைவு, படம் பெரும் தோல்வி அடைந்தது.

நீண்ட வசனங்கள் பேசிய படங்களையும், நடிகர்களையும் இன்றைக்கு கிண்டல் செய்கிறோம். ஆனால் இன்றைய தரத்தில் அன்றே படங்கள் கொடுத்தவர்களுக்கு நம் மக்கள் கொடுத்த பரிசு, நஷ்டம் தான். அறிந்ததில் இருந்து அறியாததற்கு எனும் கான்செப்ட் பற்றிப் பார்த்திருக்கிறோம். மொத்தத்தில், ஆடியன்ஸின் தரமும் வணிக சினிமாவில் முக்கியப் பங்களிப்பாக இருக்கிறது.

எனவே ஹாலிவுட் திரைக்கதை மேதைகளும் ஹிட்ச்காக்கும் சொல்லிவிட்டார்கள் என்று 'இஸ்க்..புஸ்க்' வசனங்களை வைத்தீர்கள் என்றால், விலையில்லா ஆபத்தை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் சொல்வதன் பொருள் என்ன, அவர்கள் சொன்னதை எப்படி எடுத்துக்கொள்வது என்று பார்ப்போம்.


ஒருவர் தனியே தன் வீட்டிற்கு வருகிறார். வீடு பூட்டப்பட்டிருக்கிறது.

"அட, வீடு பூட்டிக்கிக்குதே..எங்கே போய்ட்டா?" என்கிறார்.

"மணி என்ன?" என்றபடியே வாட்ச்சைப் பார்க்கிறார்.

'பத்து மணியா? அப்போ ரேசன் கடைக்குத்தான் போயிருப்பா" என்கிறார்.

ரேசன் கடை நோக்கிப் போகிறார்.

- இதில் உள்ள ஒரு வசனம் கூடத் தேவையில்லை. வீடு பூட்டப்பட்டிருப்பதையும், அவர் ஆச்சரியம் அடைவதையும், வாட்ச்சைப் பார்ப்பதையும், அவராக ஒரு முடிவுக்கு வந்தவராக எங்கோ கிளம்பிப்போவதையும் காட்சியாகவே காட்டிவிட முடியும். அதை ஆடியன்ஸ் புரிந்துகொள்வார்களா என்பதை மட்டுமே நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே ஆடியன்ஸ் பார்த்து புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை  வசனத்தில் சொல்ல வேண்டியது இல்லை.வசனம் அதிகம் ஆகும்போது நாடகத்தன்மை கூடிக்கொண்டே போகிறது.


 வசனம் எப்படி அமைய வேண்டும் என்பதை இரண்டு அடிப்படை விஷயங்கள் தான் முடிவு செய்கின்றன.
 1. ஜெனர்: காமெடி, குடும்ப செண்டிமெண்ட் போன்ற கதைகளுக்கு சுருக்கமான ஒரு வார்த்தை வசனங்கள் பொருந்தாது. அதே நேரத்தில் த்ரில்லர், ஆக்சன் போன்ற ஜெனர்களில் வசனத்தை முடிந்தவரை குறைக்கலாம். இதனால் தான் ஜெனர் பற்றிய தெளிவு முதலிலேயே நமக்கு தேவைப்படுகிறது.

2. மக்களின் எதிர்பார்ப்பு: ஒவ்வொரு ஜெனரில் வரும் கதாபாத்திரங்கள் இப்படித்தான் பேசும் எனும் யதார்த்த எதிர்பார்ப்பு ஆடியன்ஸிடம் இருக்கும். ஒரு ரொமாண்டிக் காமெடியில் கேஷுவலாக கேரக்டர்கள் பேசுவதையே எதிர்பார்ப்பார்கள். வசனத்தில் புரட்சி என்று இறங்கும் முன்பு, எந்த அளவுக்கு மக்களின் ரசனையை வளைக்கலாம் என்பதை முன் ஜாக்கிரதை உணர்வுடன் முடிவு செய்வது அவசியம்.


தனியாக வசனகர்த்தா எனும் ஆசாமி திரைக்கதைக்குத் தேவையில்லை. திரைக்கதையில் வசனமும் ஒரு அங்கம். இருந்தாலும், இந்திய சினிமாக்களில் வசனகர்த்தா எனும் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அத்தனை இயல்புகளையும் அறிந்தவரே பொருத்தமான வசனகர்த்தாவாக இருக்க முடியும். பொதுவாக, திரைக்கதை உருவாக்கத்திலும் பணியாற்றியவரையே வசனகர்த்தாவாக க்ரெடிட் கொடுக்கிறார்கள். திரைக்கதையில் தன் பெயரை மட்டும் போட்டுக்கொள்ளும் ஆசை தான் இதற்குக் காரணம் என்பதை நாம் விளக்கவேண்டியதில்லை. ஆனால் ஹாலிவுட்டில் மூன்று அல்லது நான்கு பேருக்குக்கூட திரைக்கதையாசிரியர் எனும் க்ரெடிட் கொடுக்கிறார்கள். இங்கும் அது சீக்கிரம் வரும் என்று நம்புவோம்.

திரைக்கதை என்பது இறுதிவரை மாறிக்கொண்டே இருக்கும் விஷயம். மூன்று டிராஃப்ட் எழுதியபின், புதிதாக ஒரு ஐடியா தோன்றலாம். அது கதையைவே மாற்றலாம். திடீரென சிக்கும் ஒரு வசனம், ஒரு கேரக்டரின் இயல்பையே மாற்றிவிடலாம். (இது நடக்கும்போதெல்லாம் சீன் போர்டையும் பீட் ஷீட்டையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.). திரைக்கதையின் அழகும் ஆபத்தும், இந்த நிலையற்ற தன்மை தான். எனவே தான் வசனகர்த்தா என்பவர், திரைக்கதையில் பணியாற்றாத ஒருவராக இருப்பது சிரமத்தையே உண்டாக்கும். தமிழ் சினிமாவின் கெட்ட பழக்கத்தை மறந்துவிட்டு, நல்ல வசனத்தைக் கொடுப்பது திரைக்கதையாசிரியரான உங்களின் பொறுப்பு என்று செயலில் இறங்குங்கள். (உத்தம வில்லன் தான் வசனகர்த்தாவை தனியாகக் குறிப்பிடாத முதல் தமிழ்படம் என்று நினைக்கிறேன்.)


வசனம் எழுதுவதை தனியாக ஒரு டிராஃப்ட் எழுதுவது போல் வைத்துக்கொள்ளுங்கள். முதல் சில டிராஃப்ட்களில் அப்போதைக்குத் தோன்றுவதை எழுதிக்கொள்ளுங்கள். பெரும்பாலும் அது சரியாகவே இருக்கும். சொல்ல வரும் விஷயம் என்னவென்பதை அது சரியாக சுட்டிக்காட்டும். அதை வேறு வார்த்தைகளில், சுவையாகவும் அந்த கேரக்டரின் இயல்புக்கேற்பவும் மாற்றுவதே ’வசனம் எழுதுவது’.


வசனம் எழுதும்போது நினைவில் வைக்க வேண்டிய சில விஷயங்கள்:

1. எல்லா அல்லது பெரும்பாலான கேரக்டர்களும் உங்களை மாதிரியே பேசுவது தான் நீங்கள் சந்திக்கும் முதல் பிரச்சினை. ஒவ்வொரு கேரக்டருக்கும் முடிந்தவரை தனி ஸ்டைலைக் கொடுங்கள். உங்கள் கற்பனைக் கதாபாத்திரத்திற்கு அதைச் செய்ய முடியவில்லையென்றால், நீங்களாகவே நடிகர்களை கற்பனை செய்யுங்கள். தனுஷும், லட்சுமி மேனமும் ,ஊர்வசியும், மனோபாலாவும் நடிப்பதாகக்கூட கற்பனை செய்துகொள்ளுங்கள். அதன்மூலம், வெவ்வேறு ஸ்டைல் எளிதாகக் கிடைக்கும்.

2. வசனங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் தான். ஆனால் வாழ்க்கையில் நாம் பேசும் பேச்சு, பெரும்பாலும் போரடிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஆனால் சில நொடிகள் யோசித்தபின் பதில் சொல்லும் வாய்ப்புக்கிடைத்தால், இன்னும் கொஞ்சம் தெளிவாக நாம் பேசுவோம். (உதாரணம், இண்டர்வியூ!). வசனம் எழுதும்போது, ஒவ்வொரு கேரக்டருக்கும் சில நொடி அவகாசம் கொடுங்கள். வளவளவென்று சொன்ன விஷயத்தை, அதே கேரக்டர் சரியாகப் பேசும்!

3. ஒரு கேரக்டர் பேசும்போது, இன்னொரு கேரக்டர் நின்று அதைக் கவனித்துப் பதில் சொல்வதாக வைப்பது ரொம்ப போரடிக்கும் விஷயம். அந்த இன்னொரு கேரக்டருக்கு வேறு ஏதாவது வேலை கொடுங்கள். அவசரமாக பஸ்ஸைப் பிடிக்க வேண்டியிருக்கலாம் அல்லது போலீஸ் அவரை நெருங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது அந்த ரூமில் கட்டிலுக்குக்கீழே அவரின் காதலி ஒளிந்திருக்கலாம். வெறுமனே ஒருவர் பேச இன்னொருவர் கவனிக்கிறார் என்று இல்லாமல், அதை எப்படி சுவாரசியமாக்கலாம் என்று பாருங்கள்.

4. உங்கள் வாழ்க்கையில் பார்த்த கேரக்டர்கள் அல்லது வேறு படைப்புகளில் பார்த்த/படித்த கேரக்டர்களின் பேசும் ஸ்டைலை உபயோகிக்க முடியுமா என்று பாருங்கள்.

5. சில நேரங்களில் நீண்ட வசனங்கள் அல்லது வாக்குவாதங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். தேவர் மகனில் சிவாஜி-கமல் பேசிக்கொள்ளும் சீன் ஒரு உதாரணம். படத்தின் கருவே அந்த காட்சி தான். எனவே அதை உணர்வுப்பூர்வமாக எழுத வேண்டும். பேசுவது படிக்காத கிராமத்துப் பெரியவர். எனவே மணிரத்னம் ஸ்டைலில் பேசக்கூடாது. முழுக்க எழுதியபின்னும் மூன்று பக்கத்திற்கு வசனம் மட்டுமே இருக்கலாம். அதைப் பார்த்தததும் நமக்கே பீதியாகும். அதை இன்னும் டிராமடிக்காக, பார்ப்பதற்கு போரடிக்காத விஷயமாக எப்படி ஆக்கலாம்? ஒரு கிராமத்து வீட்டில் அப்பாவும் மகனும் சண்டை போட்டால், மொத்தக் குடும்பமும் வந்து சமாதானம் செய்யும் அல்லது வேடிக்கையாவது பார்க்கும். தேவர் மகன் சீனில் அவர்கள் ஏன் இல்லை என்று யோசியுங்கள். மழை எப்படி அந்த சீனை இன்னும் டிராமடிக்காக ஆக்கியிருக்கிறது என்று பாருங்கள். (மழை, இயக்குநரின் ஐடியாவாகவும் இருக்கலாம்.) இந்த மாதிரி நீண்ட வசன காட்சிகளை எடுத்துப்பாருங்கள். என்ன செய்திருக்கிறார்கள் என்று ஸ்டடி செய்யுங்கள்.

6. ஒரு கேரக்டர் ரகசியமாக சில செயல்களைச் செய்வதாக இருக்கலாம். அந்த மாதிரி கேரக்டர்கள் (நல்ல) டபுள்மீனிங்கில், தன் ரகசியச் செயல்களுக்கும் பொருந்துவதாகப் பேசுவது போல் வசனங்களை அமைப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

7. எக்ஸ்போசிசன் எனப்படும் முன்கதையைச் சொல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இதைப்பற்றி விரிவாக ‘Exposition எனும் நவீன வெளிப்பாடு’ (http://sengovi.blogspot.com/2014/08/20.html) பகுதியில் பார்த்திருக்கிறோம்.

8. வசனங்கள் சரியான லயத்தில் அமைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்கான எளிய வழி, அவற்றை வாய்விட்டு சொல்லிப்பார்ப்பது தான். எழுதி முடித்தபின், அந்த் கேரக்டர்கள் போன்றே வசனங்களை (தனியாக!) பேசிப்பாருங்கள்.

9. ஜெனர் எப்படி இருந்தாலும், சில கதாபாத்திரங்களை நாம் வளவளவென்று பேசும் பாத்திரங்களாக படைக்கலாம், சிலரை அதிகம் பேசாத டெரர் ஆட்களாகவும் படைக்கலாம். எனவே வசனம் எழுதும் முன்பு, கதாபாத்திரத்தின்  இயல்பு என்னவென்று பார்ப்பது அவசியம்.

10. நீங்கள் என்ன தான் வசனம் என்று எழுதினாலும், அதை இறுதிசெய்யப்போவது நடிகரும் இயக்குநரும் தான். ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான பேசும் ஸ்டைல் இருக்கும். அவர்களின் போக்கிலேயே விடும்போது, நடிப்பு இன்னும் இயல்பானதாக ஆகும். எனவே வசனத்தை முழுக்க மாற்றாமல், ஃப்ளோவிற்கான மாற்றங்களை இயக்குநரும் நடிகரும் செய்ய வேண்டிவரும். அது இயக்குநரின் தலைவலி என்றாலும், நீங்களும் இணைந்து மாற்ற வேண்டி வரலாம்.

ங்க எழி முடிப்பன்மூலம், ஏறக்குறைய ிரைக்கை எழும் பெரும்பியை நிறைவு செய்கிறீர்கள்...ாழ்த்ுகள்!

ிரைக்கையை வெற்றிகாக எழி முடித்ுவிட்டீர்கள்.  அடத்ு என்னெய்வு என்று அடத்ியில் ார்த்ுவிட்டு, இந்த ொடை முடிப்போம்.

(நாளை....தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.