Monday, September 12, 2016

ரோடு மூவீஸ்: பையாவும் 10 எண்றதுக்குள்ளயும்

திரைக்கதை சூத்திரங்கள் தொடரில் ‘ரோடு மூவீஸ்’ ஜெனர் பற்றி எழுதவில்லையே என்று சென்னை சந்திப்பில் ஒரு நண்பர் கேட்டார். இரண்டு காரணங்களால் தான் அதைத் தவிர்த்தேன்.

1. ரோடு மூவீஸ் என்பது தனி ஜெனர் அல்ல..அது ஒருவகை கதைக்களம். ஒரு காதல் கதை அல்லது த்ரில்லர் ஜெனர் போன்ற ஏதோவொரு ஜெனர், ஒரு பயணத்தில் நடப்பதாக வரும்போது ரோடு மூவி ஆகிறது.

2. ரோடு மூவி என்பது நம் மக்களுக்கு சரிப்பட்டு வருமா எனும் சந்தேகம் எனக்கு உண்டு.


பயணம் என்பது தமிழர் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமான விஷயமே இல்லை. டூர் என்றால் புளியோதரை கட்டிக்கொண்டு திருச்செந்தூருக்கோ அல்லது திருப்பதிக்கோ போவது தான் நம் வழக்கம். அதிலும் பஸ்ஸில் ஏறிய உடனே தூங்கிவிட்டு, கோவில் வந்ததும் இறங்கி ‘யப்பா..நல்ல தூக்கம்’ என்று பெருமைப்படும் அதிசயப்பிறவிகள் நாம். ‘டெஸ்டினேசன் தான் நம் ஆட்களுக்கு முக்கியம்; பயணம் அல்ல..எனவே ஒரு பயணத்தில் என்ன நடக்கிறது எனும் கதையில் நம் ஆட்கள் ஈஸியாக இன்வால்வ் ஆவதில்லை’ என்று இயக்குநர் கேபிள் சங்கர் 10 எண்றதுக்குள்ள பற்றிப் பேசும்போது சொன்னார். நிஜம்!

தமிழ் சினிமாவில் ரிஸ்க்கான சப்-ஜெனர், ரோடு மூவி என்று சொல்லலாம். அன்பே சிவம், நந்தலாலா, 10 எண்றதுக்குள்ள என்று கமர்சியலாக தோல்வியடைந்த ரோடு மூவிக்களே அதிகம். லிங்குசாமி ஒருவர் தான் ‘பையா’ மூலம் ரோடு மூவியை சக்ஸஸ் பண்ணிக்காட்டியவர். (மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி என்று ஒரு காமெடிப்படம் முன்பு ஜெயித்ததுண்டு). எனவே பையாவையும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தையும் கொஞ்சம் ஸ்டடி செய்தேன்.

Road Movies :

முதலில் ரோடு மூவி என்றால் என்ன என்று பார்ப்போம்.

படத்தின் முக்கிய கேரக்டர், ஏதோவொரு குறிக்கோளுடன் ஒரு பயணம் மேற்கொள்கிறது. அந்த பயணத்தில் அந்த கேரக்டர் சந்திக்கும் விஷயங்களையும், அந்த பயணத்தின் சுவாரஸ்யமான முடிவையும் சொல்வது தான் ரோடு மூவி.

ஆக்ட்-1 : ஒரு நார்மல் லைஃபில் இருக்கும் கேரக்டர்(ஹீரோ), ஒரு பயணத்தில் இறங்க வேண்டிய தேவை வருகிறது. அந்த ஹீரோவுக்கு ஒரு முன்கதை இருக்கும். அது ஆக்ட்-1ல் அல்லது ஆக்ட்-2ன் முடிவில் சொல்லப்படும்.

ஆக்ட்-2 : பயணம்..அதில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்.

ஆக்ட்-3: எதை எதிர்பார்த்து அந்த பயணம் நடந்ததோ, அதற்கு நேரெதிரான ஒன்று அங்கே காத்திருக்கும். அதை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பது கிளைமாக்ஸ்.


குறைகள் இருந்தாலும், 10 எண்றதுக்குள்ள படத்தை நான் ரசித்தே பார்த்தேன். திரைக்கதை அமைப்பை மட்டும் பார்த்தால், கனகச்சிதமாக அது இருக்கும்; கொஞ்சம் நீளமென்றாலும். ஆங்கிலப்படமான ட்ரான்ஸ்போர்டரின் தழுவல் என்பதால், அந்த ஃபார்மேட்டை அப்படியே பயன்படுத்தியிருப்பார்கள். ஆக்ட்-1ல் வேகமாக ஆரம்பித்து, ரோடு மூவியின் முக்கிய பகுதியான ஆக்ட்-2ல் தூங்கி வழிந்து, ட்விஸ்ட் கொடுக்கும் ஆக்ட்-3ல் மறுபடியும் படம் வேகம் எடுத்திருக்கும். அது மோசமாகத் தோற்க வேண்டிய படம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நம் மக்கள் கதறியபடி தான் வெளியே வந்தார்கள்.

ஆனால் பையா எனும் ரோடு மூவியை இதே மக்கள் தான் வெற்றி பெற வைத்தார்கள். எனவே எங்கே தவறு நிகழ்ந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆக்ட்-1 :

விர்ரென்று சீறிப்பாயும் ரேஸ் கார் போன்று தான் 10 எண்றதுக்குள்ள படத்தின் ஃபர்ஸ் ஆக்ட் இருக்கும். பையாவை விட, இதில் சுவாரஸ்யமும் வேகமும் அதிகம். பையாவில் ஹீரோ, ஹீரோயினைப் பார்க்கிறான். உடனே காதலில் விழுகிறான். வேலைவெட்டி இல்லாத இளைஞன் தான் ஹீரோ. ஆயிரத்திச் சொச்சம் தமிழ் சினிமாக்களில் வந்த விஷயம் இது. எனவே பெரிய சுவாரஸ்யம் எல்லாம் இதில் இல்லை. ஆனால் இது தான் லிங்குசாமி செய்த புத்திசாலித்தனமான வேலை.

ஹீரோவுக்கு ஒரு முன்கதை இருக்கிறது. படத்தை அங்கே ஆரம்பித்திருக்கலாம். அந்த மும்பை போர்சனை முதலிலேயே காட்டியிருந்தால், ஆக்ட்-2ல் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருப்பார்கள். 10 எண்றதுக்குள்ள படத்தில் அது தான் நடந்தது. வேகமாக ஆரம்பித்த படம், அரைமணிநேரத்தில் தூங்கி வழிந்தது. லிங்குசாமி மிகவும் ஸ்லோவாக, டெம்ப்ளேட் சீன்களுடன் ஆரம்பித்து, பிறகு பிக்கப் செய்தார்.

ஹீரோ விக்ரம் ஒரு சூப்பர் மேன், அதிரடி ஆக்சன் ஹீரோ என்று முதலிலேயே காட்டியபின் ‘ஹீரோயினை அவர் எப்படி காப்பாற்றுவார்?’எனும் பதைபதைப்பே நமக்கு எழாமல் போய்விட்டது. ஆனால் பையாவில் ஹீரோ ஒரு ரொமாண்டிக் மேன், அவன் சண்டை போடுவதற்கான அறிகுறி ஏதும் இல்லை. ரன் படத்தில் வந்த மாதவன் கேரக்டர் போல், காதலைத் தவிர ஏதுமறியாத குழந்தை போன்று கார்த்தி கேரக்டர் பையாவில் வருகிறது. இண்டர்வெல் ப்ளாக்கில் தான் ஹீரோ ஒரு அதிரடி ஆக்சன் ஆள் என்பதே ஹீரோயினுக்கும் நமக்கும் தெரிகிறது. ஒரு பயணத்தின் மத்தியில் இது நடக்கிறது. எங்கே கதை தொய்வடையுமோ, அந்த இடத்தில் ரணகளமான சண்டைக்காட்சியுடன் இதை லிங்குசாமி சொல்கிறார்.

அடுத்து, பையாவில் ஹீரோயினுடனேயே இருக்க என்ன வழியென்று ஹீரோ யோசிக்க, ‘என்னை மும்பையில் விட முடியுமா/’என்று ஹீரோயின் கேட்கும் ப்ளாட் பாயிண்டுடன் ஃபர்ஸ்ட் ஆக்ட் முடிகிறது. இங்கே ஹீரோயினை ஒரு கும்பல் விரட்டுகிறது. (ஹீரோ காப்பாற்ற வேண்டும்) மும்பைக்குப் போனால் தப்பிக்கலாம் என்று ஹீரோயின் நினைக்கிறார். ரோடு மூவி ஸ்ட்ரக்சர்படி, அங்கேயும் ஒரு ட்விஸ்ட் வரப்போகிறது. (அங்கேயும் ஹீரோ காப்பாற்ற வேண்டும்). இடையில் ஹீரோயின் மனதில் ஹீரோ இடம்பிடிக்க வேண்டும். இப்படி ஒன்றல்ல, மூன்று குறிக்கோளுடன் கார்த்தியின் பயணம் தொடங்குகிறது. ஹீரோ கேரக்டருடன் நாம் ஒன்றிப்போக இதுவொரு முக்கிய காரணம்.

10 எண்றதுக்குள்ள படத்தில், பயண ஆரம்பத்தில் இப்படி எந்தவொரு பெர்சனல் குறிக்கோளும் ஹீரோவுக்கு கிடையாது. பயணத்தின் முடிவில் தான் பையா ஹீரோவின் நிலைக்கு விக்ரம் வருகிறார். இரண்டு பயணத்துக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடு இது.


ஆக்ட்-2:

இரண்டு படத்திலுமே, காதல் எனும் பி-ஸ்டோரி ஆரம்பம் ஆகிறது. 10 எண்றதுக்குள்ள படத்தில் ஹீரோ & ஹீரோயின் இருவருக்குமே மற்றவர்மேல் காதல் ஏதுமில்லை. ஆனால் பையாவில் ஹீரோ முதல் சீனில் இருந்தே துடித்துக்கொண்டு இருக்கிறார். ‘படித்த, நுனிநாக்கு இங்கிலீஷுடன் கைநிறைய சம்பாதிக்கும் ஆள் தான் வேண்டும்’ என்று ஹீரோயின் தமன்னா சொல்கிறார். ஏறக்குறைய அதே போன்ற ஒரு ஆள், காரில் லிஃப்ட் கேட்டு ஏறுகிறார். படத்தின் சுவாரஸ்யமும் ஏறுகிறது. ஆனால் 10 எண்றதுக்குள்ள படத்தில் காதல் போர்சன், வெகு சுமார்.

10 எண்றதுக்குள்ள படத்தில் நடந்த இன்னொரு பெரிய தவறு, ரியலிஸ்டிக்காக எடுக்கிறேன் என்று நேடிவிட்டியை மிஸ் செய்தது. சென்னையைத் தாண்டி ஆந்திராவில் நுழைந்ததும், சார்மியின் ஆட்டமும், ஒரு தெலுங்கு வில்லன் கோஷ்டியின் சண்டையுமாக படம் தெலுங்குப்படமாகவே மாறிப்போகிறது. அடுத்து வடக்கு நோக்கி நகர நகர, படம் தமிழ்ப்படத்தின் அத்தனை சாயலையும் விட்டுவிட்டு ஹிந்திப்படமாக ஆகிறது. (பாலிவுட்காரங்க கோச்சுக்கக்கூடாது)

பையா படம் ஆரம்பிப்பதே கர்நாடகாவில் தான். பயணமும் அங்கிருந்து மும்பை நோக்கி. ஆனால் தமிழ்ப்பட சாயலிலேயே கதை நகர்கிறது. அந்தந்த மண்ணின் கல்ச்சரைக் காட்டுகிறேன் என்றெல்லாம் லிங்குசாமி இறங்கவே இல்லை. காதலைத் தவிர வேறு எதுவும் இண்டர்வெல்வரை இல்லை. அடுத்து, மும்பை ஃப்ளாஷ்பேக்கிலும் நம்மை அந்நியப்படுத்தும் அளவிற்கு ஹிந்தி சாயல் இல்லை.


10 எண்றதுக்குள்ள இண்டர்வெல் ப்ளாக்கில் ஒரு வில்லன் அல்ல, இரண்டு வில்லன்கள் சமந்தாவிற்காக காத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் ஹீரோ எதுவும் தெரியாமல் தேமேவென்று போகிறார்.

பையாவில்..ஹீரோவுக்கு மும்பையில் ஆபத்து காத்திருப்பது தெரியவருகிறது. திரும்பிப்போனால் ஹீரோயினுக்கும் ஆபத்து, காதலும் இன்னும் கைகூடவில்லை..மும்பையில் ஹீரோயினுக்கும் ஆபத்து காத்திருக்கலாம். இப்படி இத்தனை முடிச்சுக்களுடன் இண்டர்வெல் ப்ளாக் வருகிறது. இண்டர்வெல்லுக்குப் பிறகு கார்த்தியின் ஃப்ளாஷ்பேக்குடன் ஆக்ட்-2 முடிவுக்கு வருகிறது.

ஆக்ட்-3:

பையாவில் அதன்பிறகு ரொம்ப இழுக்காமல், சட்டென்று கதையை முடிக்கிறார்கள். ஆனால் 10 எண்றதுகுள்ள படத்தில், இரண்டாவது சமந்தாவின் கதையே அப்போது தான் ஓப்பன் ஆகிறது. ஏற்கனவே நீண்ட பயணத்தால் களைத்துப்போன நமக்கு, புதிதாக இன்னொரு கதை என்றதும் வீல்!!!

இத்தனைக்கும் அந்த சமந்தா கதை ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் நன்றாகவே இருக்கும். ஆனாலும் அதற்குள் ஆடியன்ஸ் பொறுமையை ஆக்ட்-2ல் சோதித்தாகிவிட்டதே!

எனவே, தமிழில் ரோடு மூவி எழுதுவதில் நமக்கு இரு முக்கியமான சிக்கல்கள் உண்டு :

1. ஆபீஸிற்கு இரண்டு வாரம் லீவ் போட்டுவிட்டு, காரிலேயே பயணம் போகும் அமெரிக்கர்களை நான் பார்த்திருக்கிறேன். இங்கே அப்படி ஒரு காரியத்தை நாம் செய்தால், நம் குடும்பமும் ஆபீஸும் நம்மை எப்படிப் பார்க்கும் என்று சொல்லத் தேவையில்லை! எனவே, ரோடு மூவி என்பது நமக்கு நேடிவிட்டியான சப்ஜெக்ட் அல்ல. ட்ராவெல் எனும் வார்த்தை அமெரிக்கனுக்கு சந்தோசத்தையும் நமக்கு அலுப்பையும் கொடுப்பது. பயணத்தை படம் பார்ப்பவனும் ஃபீல் பண்ண வேண்டும் என்பது ஆங்கில ரோடு மூவிக்களின் அடிநாதம். இங்கே அதைச் செய்தால், ‘என்னய்யா இது..போறாய்ங்க, போறாய்ங்க..போய்க்கிட்டே இருக்காங்க’ என்று படம் பார்ப்பவன் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவான்.

2. ஆங்கில ரோடு மூவிக்களில் ஒரே மொழி, ஒரே கலாச்சார மக்கள் தான் வருவார்கள். எனவே படம் பார்ப்பவர்களுக்கு ஐடெண்டிஃபிகேசன் ஈஸியாக இருக்கும். இங்கே சென்னை டூ மும்பை ட்ராவல் என்றால், சென்னை தாண்டியதுமே படம் தெலுங்குப் படம் ஆகிவிடும். அடுத்து ஹிந்திப்படமோ எனும் டவுட்டும் நமக்கு வந்துவிடும். எனவே படத்தில் ஒன்ற முடியாமல், நம் ஆட்கள் நெளிய ஆரம்பிப்பார்கள். கொஞ்சம் படம் தடுமாறினாலும், தூக்கி எறிந்துவிடுவார்கள்.


இதை மனதில் வைக்காமல் ரோடு மூவி எழுதக்கூடாது. எழுதினால், பத்து எண்ணுவதற்குள் படத்தை பப்படம் ஆக்கிவிடுவார்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

 1. என்ன அண்ணே ரொம்ப நாளா பதிவு எதுவும் போடவில்லை

  ReplyDelete
  Replies
  1. சாரி, ஃபேஸ்புக்கிலேயே பொழுது போய் விடுகிறது.

   Delete
 2. என்ன அண்ணே ரொம்ப நாளா பதிவு எதுவும் போடவில்லை

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.