Sunday, May 14, 2017

பிரம்ம ராட்சஷர் - சிறுகதை

வன் கட்டிலின் அருகே வெறித்த பார்வையுடன் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. தூங்கிக்கொண்டிருந்தாலும் தன்னால் உணர முடிகிறதே என்று இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆச்சரியப்பட்டார். ஆச்சரியம் பயமாய் மாறி, கையில் ஆயுதம் ஏதும் வைத்திருக்கிறானா என்று பார்க்க முயற்சித்தார். இல்லையென்று கண்ணைத் திறக்காமலேயே முடிவுக்கு வந்தார். நாம் தான் கண்ணையே திறக்கவில்லையே, பின்னே எப்படி என்று குழப்பமாகவும் இருந்தது. தான் இப்போது தூங்குகிறோமா, விழித்திருக்கிறோமா என்று தூங்கிக்கொண்டே யோசித்தார். தூக்கம் தான் என்று புத்தி சொன்னது.

அடுப்புக்குழல் ஊதுவது போன்ற சீரான, மெல்லிய குறட்டை ஒலி லட்சுமியிடமிருந்து வருவது தெரிந்தது. லட்சுமி! அவன் அவளையுமா பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். வேர்த்திருந்தது. அவன் அங்கே இல்லை. லட்சுமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவன் இங்கே தான் இருக்கிறான் என்று உள்ளுணர்வு சொன்னது. பயப்படுகிறாயா என்று மனம் கேலி செய்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கி, கீழ் தளத்தையும் ரோட்டையும் பார்த்தார். அங்கே அவன் நின்றிருந்தான்.


சங்கரன் ஓடிச்சென்று மொபைலை எடுத்தார். செக்யூரிட்டிக்கு கால் செய்தார். கீழே ரிங் போகும் சத்தம் கேட்டது.  கையில் மொபைலுடன் கீழே ஓடினார். அங்கே அவன் இல்லை. செக்யூரிட்டி தூங்கிய சுவடுகளை மறைத்தவராக ‘என்ன சார்?’ என்றார். காலியான தெருவைப் பார்த்த சங்கரன் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி திரும்பினார்.


யார் அவன்? என்ன தான் அவனுக்கு வேண்டும்? ஏறக்குறைய ஒரு மாதமாக இதே டார்ச்சர் தான். எங்கு சென்றாலும் பின் தொடர்கிறான். ஸ்டேசனுக்கு வெளியே நிற்கிறான். தியேட்டருக்குப் போனால் அங்கேயும் வருகிறான். பத்தடி தொலைவில், எப்போதும் பதுங்கத் தயாராகவிருக்கும் வேட்டை நாய் போல! இதுவரை வெளியில் சொல்லவில்லை. வெளியே சொல்ல கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது. என்னவென்று சொல்வது? சங்கரன் தலையை உலுப்பிக்கொண்டார்.

ஆஜானுபாகுவான, ஸ்டேசனையே நடுங்க வைக்கும் இன்ஸ்பெக்டர், தன் பின்னால் தொடர்ந்து வரும் ஒருவனை பிடிக்க முடியாமல் பயந்துபோய் கம்ப்ளைண்ட் கொடுத்தார் என்றால் உள்ளுக்குள் சிரிக்க மாட்டார்களா? ஸ்டேசனிலேயே தான் இல்லாத நேரம் கேலிப்பேச்சு ஓடும். ஆனால் இப்போது வேறு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. கெத்து குறையாமல் சொல்வது எப்படி என்ற யோசனையுடன் சங்கரன் படுக்கையில் சாய்ந்தார்.


ஸ்டேசனில் நுழையும்போதே ஏட்டு ஓடிவந்தார்.

“சார், இன்னைக்கு கோர்ட்டுக்குப் போகணும். வித்யா ஆசிட் கேஸ். டைம் ஆகிடுச்சு சார்?”

அவன் கொடுத்த தொல்லையில் இந்த முக்கியமான விஷயத்தை மறந்தது உறைத்தது. ஸ்டேசனுக்குள் போகாமல் ஏட்டுடன் ஜீப்பை நோக்கி நடந்தார்.

“நம்ம சைடு ஸ்ட்ராங்காத் தானே இருக்கு?”
“ஆமா சார். நக்கீரன், ஜூ.வி.ன்னு எல்லாத்திலயும் ஆர்டிக்கிள் வந்திருக்கு சார்.”

சங்கரன் பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டார். வழக்கமான ஆசிட் வீச்சு தான். காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு என்று ஒருநாள் செய்தியுடன் முடிந்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் சங்கரன் விடவில்லை. அந்த பெண்ணிடம் மரண வாக்குமூலம் வாங்கினார். ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்தார். 
முதலில் ஒருவன் மட்டும் அவளை பின் தொடர்ந்திருக்கிறான். பிறகு நண்பர்களை கூட்டிவந்து ‘இவள் தான் என் ஆளு’ என்று காடியிருக்கிறான். பலமுறை பின் தொடராதே என்று வித்யா சொல்லியும் கேட்கவில்லை. திடீரென ‘ஒருநாள் தான் டைம்..நாளைக்கு உன் முடிவைச் சொல்லு’ என்று மிரட்டியிருக்கிறான். மறுநாளும் அவள் மறுக்க, ஆசிட்டை எடுத்து முகத்தில் வீசிவிட்டான். கொடூரம்.

வாக்குமூலம் வாங்கி, இரண்டு நாள் சங்கரனால் சாப்பிடவே முடியவில்லை. அங்கே முகமே இல்லை. இப்போது நினைத்தாலும் சங்கரனுக்கு கையெல்லாம் நடுக்கம் எடுத்தது. கோபத்துடன் ஏட்டிடம் சொன்னார், “கோர்ட் மட்டும் அவனுகளை விட்டுச்சு..ஏதாவது ஒரு கேஸ்ல பிடிச்சு, நானே என்கவுண்டர்ல போடுவேன்யா”

ஏட்டு அதை ஆமோதிப்பவராக தலையாட்டினார்.

கோர்ட் வழக்கம்போல் வாய்தா கொடுத்தது. ஆதாரங்களும் சாட்சிகளும் இருப்பதால், கேஸை இழுக்க முடியுமே ஒழிய தப்பிக்க முடியாது என்று பப்ளிக் பிராசிக்யூட்டர் ஆறுதல் சொன்னார். அப்போது தான் சங்கரன் அவனை அங்கே பார்த்தார். அதே வெறித்த பார்வையுடன் கோர்ட் வளாகத்துக்குள் நின்றிருந்தான். 

சங்கரன் ஏட்டை லேசாக இடித்து, “அங்கே நிற்கிறவனைப் பாரும்” என்றார்.
ஏட்டு நிமிர்ந்து பார்த்துவிட்டு “அங்கே யாருமே இல்லையே சார்” என்றார்.
”என்ன அவசரம்? ஒருமணி நேரம் கழிச்சு பார்க்க வேண்டியது தானே?” என்று பல்லைக் கடித்தார் சங்கரன்.

இருவரும் வெளியே வந்து ஜீப்பில் அமர்ந்ததும், அவனைப் பற்றி எல்லாவற்றையும் சொன்னார்.

“நிம்மதியா தூங்க முடியலை. ஸ்டேசன் வேலைகள்ல கவனம் போக மாட்டேங்குது. இன்னைக்குப் பாரும், கோர்ட்டுல் எவ்வளவு முக்கியமான கேஸு. அதை விட்டுட்டு, அவனையே நினைச்சுக்கிட்டு வர்றேன். நாம ஓரளவுக்காவது நியாயமத்தானே நடந்துக்கறோம். பெரிய யோக்கியன் லிஸ்ட்லயும் நம்மை வைக்க முடியாது, அயோக்கியன் லிஸ்ட்லயும் வைக்க முடியாது. என்மேல யாருக்குய்யா கோபம்?”

இன்ஸ்பெக்டர் தன்னிடம் ஆலோசனை கேட்பதே ஏட்டுக்குப் பெருமையாக இருந்தது. நன்றாக பயந்து போயிருக்கிறார் என்பதைப் பார்க்க வேடிக்கையாகவும் இருந்தது. வீட்டுக்குப் போனதும் சம்சாரத்திடம் சொல்ல வேண்டும். சிரிப்பாள்.

“என்னய்யா சிரிக்கிறீரு?” என்ற சங்கரன் குரலில் பீதியடைந்தவராக “இல்லை சார்...யோக்கியன் - அயோக்கியன்னு பேசுனீங்களா..அதான். சார், ஒருவேளை இப்படி இருக்குமோ? “ என்று சீரியஸ் மோடுக்கு வந்தார். ‘எப்படி’ என்று இன்ஸ்பெக்டர் கேட்பதற்குள் ஏதாவது பாயிண்ட் பிடித்து தப்பித்துவிடவேண்டும் என்று மைக்ரோசெகண்டில் சிந்தனை ஓடியது.

சங்கரன் நல்லவர். நிதானமாகவே “எப்படி இருக்குமோ?” என்று கேட்டார்.

“சமீபத்துல நீங்க உருப்படியா...அதாவது தீவிரமா வேலை பார்த்தது இந்த வித்யா கேஸ்ல தானே சார். பேப்பர் வரைக்கும் பேர் வந்து நல்ல பப்ளிசிட்டி. அதனால இந்த அக்யூஸ்ட்டுக்கு வேண்டப்பட்டவங்க யாராவது இருக்குமோ?” என்று கேட்டுவிட்டு, ஏட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“ஆமாய்யா...இருக்கும். அப்படி மட்டும் இருந்துச்சு..இவனுகளை பெர்மனெண்ட்டா உள்ளே வச்சிடலாம்”

ஏட்டு இந்த விஷயத்தில் கான்ஸ்டபிள் யாரையும் உள்ளே விடாமல், தானே முடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார். மூத்தவன் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறான். சின்னவன் தறுதலை. எப்படியும் அவனுக்கும் காக்கியை மாட்டிவிட வேண்டும். சங்கரன் முசுடு என்றாலும், பிடித்துப்போனால் நன்றாகச் செய்வார்.

“இரண்டு கான்ஸ்டபிளை மஃப்டில என்னை ஃபாலோ பண்ணச் சொல்லும்” என்றார் சங்கரன்.

அவசரமாக மறுத்தார் ஏட்டு.

“சார். சிரிப்பாங்க சார். உங்களுக்கு ஒரு டெரர் இமேஜ் இருக்கு. நீங்க தான் ஸ்டேசனுக்கே காவல்தெய்வம் மாதிரி. நீங்க போய் அவங்க பாதுகாப்பை கேட்கலாமா? மஃப்டின்னாலும் போலீஸ்ன்னு கண்டுபிடிச்சிருக்கிறது ஈஸி சார். என் பசங்க ரெண்டுபேரும் கெட்டிக்காரங்க சார். ராத்திரி பகல் பார்க்காமல் உங்களை ஃபாலோ பண்ணி, அவனை இன்னும் ரெண்டே நாளில் தூக்குறோம் சார்”

சொன்னபடியே ஏட்டுவின் பிள்ளைகள் செய்தார்கள். இன்ஸ்பெக்டரை பின் தொடர்ந்தவனை உடனே பிடிக்காமல், அவன் தங்கியிருக்கும் லாட்ஜ்வரை கண்டுபிடித்துவிட்டு, மடக்கிப் பிடித்தார்கள். தூக்கிக்கொண்டு வந்து ஸ்டேசனில் போட்டார்கள். சங்கரன் ஆவேசம் கொண்டவராக, அவன் மேல் பாய்ந்தார். என்னவென்றே தெரியாமல், கான்ஸ்டபிள்களும் அடித்தார்கள். முன்பல் ஒன்று உடைந்து வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. அதைப் பார்த்தபிறகே சங்கரன் திருப்தியாகி, நிதானத்துக்கு வந்தார்.

அவனைத் தூக்கி உட்கார வைத்தார்கள். ஏட்டுவின் இளைய மகன் ஓடிப்போய் தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான். அவன், தண்ணீரும் ரத்தமுமாய் சட்டை நனையக் குடித்தான்.

ஏட்டு அவனை நெருங்கி “யாருடா நீ?” என்றார்.

“வித்யா லவ்வர்” என்றான் அவன்.

ஸ்டேசனே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. ஏட்டு உறுதிப்படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டார் “ஆசிட் கேஸ்..வித்யா லவ்வரா நீ?”

அவன் ஆமென்று தலையாட்டினான்.

இன்ஸ்பெக்டர் அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்தார்.

“அந்த கேஸ்ல அக்யூஸ்ட்களை ஒரேநாள்ல பிடிச்சவண்டா நான். என்னை ஏண்டா ?”

அவன் நிதானமாக “என்னை ஏன் சார் பிடிச்சு, அடிக்கிறீங்க?” என்றான்.

சங்கரனுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. ஏட்டு உள்ளே வந்து “உன்னை வேற என்னப்பா செய்யணும்?” என்றார்.

அவன் மீண்டும் “என்னை ஏன் அடிக்கிறீங்க? ரீசன் சொல்லுங்க” என்றான்.

ஏட்டு “நீ சாரை டெய்லி ஃபாலோ பண்ணியிருக்கிறே..நைட்டுகூட அவர் வீட்டுப்பக்கம் போய் நின்னிருக்கிறே. ரைட்டா?”

“ஆமாம்..ஃபாலோ பண்றது தப்புன்னு சட்டம் சொல்லுதா?” என்றான்.

அவன் கேள்வியில் கேலி ஏதும் இல்லை. மிக சீரியஸாகத் தான் பேசுவதாக ஏட்டுக்கு தெரிந்தது.

“இப்போ நான் ஃபாலோ பண்ணதால என்ன ஆச்சு?”

சங்கரன் கடுப்பாகி “என்ன ஆச்சா? டேய்...”என்று ஆரம்பித்தவர் கையைப் பிடித்து ஏட்டு நிறுத்தினார். சங்கரன் கௌரவத்திற்கு பங்கம் வராதவகையில் “ஒரு அரசாங்க அதிகாரியை பின் தொடர்ந்து, கடும் மன உளைச்சலை கொடுத்திருக்கிறே நீ.” என்றார்.

அவன் ரத்த வாயுடன் சிரித்தான். “மன உளைச்சல்..இதைத் தானே சார் நாங்களும் சொன்னோம்” என்றான்.

சங்கரன் புரியாமல் “என்ன?” என்றார்.

அவன் கண்கள் கலங்கி, கண்ணீர் வடிந்தது.

“வந்தோமே சார்...நானும் வித்யாவும் ரெண்டு மாசம் முன்னே வந்தோமே சார். ‘என்னை ஒருத்தன் டெய்லி ஃபாலோ பண்றான். கம்ப்ளைண்ட் கொடுக்கணும்’னு அவ உங்ககிட்டே வாசல்ல வச்சு சொன்னா. நீங்க நின்னுகூட என்னன்னு கேட்கலியே சார். ‘இதெல்லாம் ஒரு கேஸாம்மா..இனிமே வராதடான்னு சொல்லு..போ’ன்னுட்டு ஜீப்ல ஏறிப் போய்ட்டீங்க. “

சங்கரனுக்கு லேசாகத் தான் அது நினைவில் இருந்தது. அவன் தொடர்ந்து பேசினான்.

“நீங்க போலீஸ். கவர்மெண்ட்டே உங்களுக்குப் பின்னால இருக்கு. உங்க மேல் கைவைச்சா, மொத்த போலீஸும் வேட்டையாடும். அவ்வளவு பாதுகாப்பு உங்களுக்கு இருக்கு. ஆனாலும் சும்மா உங்க பின்னால வந்த என்னைப் பார்த்து எப்படிப் பயந்தீங்க? நிம்மதியா தூங்குனீங்களா? வேலைல கான்செண்ட்ரேட் பண்ண முடிஞ்சதா? இவ்வளவு அதிகாரம் இருக்கிற உங்களுக்கே இதை தாங்க முடியலியே...பாவம் சார், அவ. ஒரு ஃபேன்ஸி ஸ்டோர்ல வேலை செய்ற கூலிக்காரப் பொண்ணு. அவ எப்படி சார் தாங்குவா?”

குற்றவுணர்ச்சியில் கனத்த மௌனத்துடன் ஸ்டேசன் நின்றது. அவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினான்.

“இங்க ஒரு இன்ஸ்பெக்டரை ஃபாலோ பண்ண முடியாது..ஒரு கான்ஸ்டபிளை ஃபாலோ பண்ண முடியாது. ஆனால் வேலைக்குப் போற பொண்ணுங்களை ஃபாலோ பண்ணலாம். படிக்கப்போற பொண்ணுங்களை ஃபாலோ பண்ணலாம். அவங்க எப்படி சார் நிம்மதியா படிப்பாங்க? வேலை பார்ப்பாங்க? ஒருநாள் நீங்க வந்து அந்தப் பையனை சத்தம் போட்டிருந்தாலே போதுமே...ஒருத்தன் டெய்லி ஃபாலோ பண்றான். இவ தான் என் லவ்வர்னு ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்து காட்டறான். எல்லார்கிட்டயும் அப்படியே சொல்றான். கடைசியில் அவ ஒத்துக்கலேன்னதும், ஈகோ பிரச்சினையா எடுத்துக்கறான். ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி அவமானமாப் போய்டுது. கடைசியில் ஆசிட் அடிக்கிறான். வீட்டை விட்டு வெளில வந்ததைத் தவிர, என் வித்யா பண்ண தப்பு என்ன சார்? அவ வீட்ல இருக்க முடியாது சார். அவ வேலை பார்த்தாத்தான் சாப்பாடே..கொன்னுட்டீங்க சார்..எல்லாருமாச் சேர்ந்து என் வித்யாவைக் கொன்னுட்டீங்க சார். ஒரு நிமிசன் நின்னு கேட்டிருந்தீங்கன்னா, இது நடந்திருக்காதே சார்”

அழுதபடியே எழுந்தான். சங்கரனும் ஏட்டும் எழுந்தார்கள்.

“நீங்க பெரிய ஆபீசரா இருக்கலாம் சார். பெரிய கேஸைத் தான் டீல் பண்ணுவேன்னு இருக்கலாம். ஆனாலும் இன்னொரு வித்யா இங்கே வந்தான்னா, கொஞ்சம் நின்னு என்னனு கேளுங்க சார். உங்களுக்கு புண்ணியமாப் போகும்”

கையெடுத்து கும்பிட்டுவிட்டு, விந்தியபடியே அவன் ஸ்டேசனை விட்டு வெளியேறினான்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. அருமை...........அப்படியே ராஜேஷ்குமார் சாயல்..........

    ReplyDelete
  2. so sad....சத்ய சோதனை

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.