Wednesday, June 20, 2018

Revisiting….அபூர்வ சகோதரர்கள் (1989)


தமிழ் சினிமாவில் வந்த நல்ல பொழுதுபோக்குப் படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால், இன்றும் முதல் பத்து இடங்களுக்குள் அபூர்வ சகோதரர்கள் இடம்பிடிக்கும். ஒரு வழக்கமான பழி வாங்கும் கதையை எப்படி கொஞ்சமும் அலுக்காமல் சொல்வது என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.

ஏற்கனவே நான் எழுதிய ‘டபுள் ஆக்ட்டிங்கும் டமில் சினிமாவும் (லின்க், முதல் கமெண்ட்டில்) பதிவில் இத்தகைய படங்களின் பலம் என்ன என்று விரிவாகப் பேசியிருக்கிறோம். ஒரு குறைபாடுள்ள ஹீரோ (கோழை/அப்பாவி)-வும் அவனைப் போன்றே தோற்றமுள்ள ஒரு முழுமையான ஹீரோ (வீரன் / புத்திசாலி) - வும் இடம் மாறும்போது ஏற்படும் சிக்கல்கள் தான் இத்தகைய டபுள் ஆக்ட்டிங் கதைகளின் அடிப்படை. 

நிஜ வாழ்க்கையில் சாமானியனாக இருக்கும் ரசிகன், திரையில் தன்னைப் போன்ற ஒருவனின் இடத்தில் ஒரு ஹீரோ வந்தமர்ந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பார்த்து கொண்டாடித் தீர்த்தான். டபுள் ஆக்ட்டிங் இன்னும் முன்னேறி, ட்ரிபிள் ஆக்ட்டிங் ஆனது. பெரும்பாலும் ’அப்பாவுக்கு ஒரு சிக்கல்..அதை பிள்ளைகள் தீர்ப்பது’ தான் ஒன்லைன். சிக்கல் என்பது அபூர்வ சகோதரர்கள் போன்று மர்கயா-வாக க்கூட இருக்கலாம்!

அபூர்வ சகோதரர்கள் படம் அரதப்பழசான பழிவாங்கும் & இரட்டைப் பிள்ளைகள் கதையை புதுமையாகச் சொன்னது. இந்த மாதிரிப் படங்களில் குறைபாடுள்ள ஹீரோ பிரச்சினையில் சிக்கிக்கொள்வான், ‘ஹீரோ’ வந்து காப்பாற்றுவார். இதை கமல் தனது அற்புதமான திரைக்கதையில் தலைகீழாக ஆக்கினார். (பஞ்சு அருணாச்சலம் அவர்களின் கைவண்ணமும் இதில் உண்டு.)

பொதுவான எதிர்பார்ப்பு, அப்பாவைக் கொன்றவர்களை ராஜா கேரக்டர் கொல்லும் என்பதே. ஆனால் இங்கே அப்பு தான் பழிவாங்குவார்.  ராஜா கேரக்டரை அட்டகாசமாக, அப்பு கதையுடன் பொருத்தியிருப்பார்கள். அப்பு கொலை செய்துகொண்டே போக, கொலைப்பழியுடன் ராஜா கேரக்டர் கதறி ஓடிக்கொண்டே இருக்கும். படத்தை கொஞ்சமும் அலுக்காததாக ஆக்கியது என்னவென்றால் இதை நகைச்சுவையாகச் சொன்னது தான். (நீங்க எங்கயோ போய்ட்டீங்க சார் – ஐ மறக்க முடியுமா!)

பழிவாங்குதற்கான காரணமும் புதுமையானதாகவும் செண்டிமெண்ட்டாக நம்மைத் தாக்குவதாகவும் இருந்தது. பொதுவாக, ’சிறுவயதில் அப்பாவைக் கொன்னுட்டாங்க/ஃபேலிமியைபிரிச்சிட்டாங்க அல்லது பாட்டியை 4 பேர் ரேப் பண்ணிட்டாங்க’ என்று தெரிந்ததுமே, ஹீரோ கொதித்து எழுந்து கிளம்பிவிடுவார். ஆனால் இங்கே அப்பு – ரூபினி எபிசோடு வலுவான காரணமாக இருக்கும். 

ரெஜிஸ்ட்ரார் ஆபீஸில் ஏமாறுவதில் ஆரம்பித்து, அம்மாவால் அவமானப்படுத்தப்பட்டு, உன்னை நினைச்சேன் என்று பாடிக் கலங்கி, தூக்கில் தொங்குவது வரை வரும் எபிசோடு கதையில் முக்கிய மய்யம்! கமலஹாசன் ஏன் சிறந்த நடிகர் என்பதற்கு இந்த எபிசோடை மட்டும் காட்டினால் போதும். உன்னை நினைச்சேன் பாடலில் முகத்தில் முகமூடி போட்டு அழும்போது, உள்ளே எப்படி அழுவார் என்பதை நம் கற்பனைக்கே விட்டிருப்பார்கள். (சிவாஜியின் ஜிஞ்ஜினுக்கா சின்னக்கிளி பாடல் இன்ஸ்பிரேசனாக இருந்திருக்கலாம்.) திடீரென ஆசை காட்டப்படுதல், அதைக் கொண்டாடுதல், தான் ஏமாந்துவிட்டதை நினைத்துக் கலங்குதல், கூடவே அம்மாவின் வார்த்தைகள் என்று எமோசனின் உச்சத்திற்கு நம்மையும் அழைத்துச் சென்றிருப்பார்கள்.

கொலை செய்யும் முறைகளையும் புதுமையாகப் படைத்திருப்பார்கள். கோலி குண்டு, புலி, சர்க்கஸ் துப்பாக்கி என்று விளையாடியிருப்பார்கள். 

அநேகமாக அப்பு கேரக்டரை முடிவு செய்துவிட்டு, அதில் இருந்து தான் பின்னோக்கிப் போய் கதை பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருவன் குள்ளன்..அதனால் அவமானம்..குள்ளமானதற்கு காரணமான வில்லன்கள்..அவர்களை குள்ளனே பழி வாங்குவது என்று அதை செமயாக டெவலப் செய்திருக்கிறார்கள்.

படம் வெளியானபோது, அப்பு கேரக்டர் பற்றியே எங்கும் பேசப்பட்டது. அப்பு கேரக்டர் ரகசியம் பலவருடங்களாக கட்டிக்காக்கப்பட்டது. பட வெற்றிவிழாவில் அப்பு கெட்டப்பில் வந்து, கலைஞர் கையால் கமல் விருது வாங்கினார்.  சிவாஜியே செய்யாத கேரக்டரைச் செய்துவிட்டார் என்று கமல் கொண்டாடப்பட்டார்.

சர்க்கஸ், யானை, புலி, சிங்கம், அப்பு என்று குழந்தைகளை கவர்வதற்கான ஐட்டங்கள் பட த்தில் இருந்த தால், குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் படை எடுத்தார்கள். உலக சினிமாக் கிறுக்கு கமலுக்கு முற்றாத காலம் அது. எனவே கமர்சியல் நாயகனாகவும் அவர் ஜொலித்துக்கொண்டிருந்தார். இந்தப் படம் குழந்தைகளையும் கமல் பக்கம் கொண்டுவந்தது. (இதைப் பார்த்து எங்க தலைவரும் ராஜா சின்ன ரோஜா நடித்தது தனிக்கதை!)

கௌதமி – கமலில் காதல் போர்சனும் செம ரகளையாக இருக்கும். கிரேஸி மோகனின் வார்த்தை விளையாட்டு வசனங்கள் இதில் அருமையாக ஒர்க் – அவுட் ஆகியிருக்கும். ’இவர் கூடப் படிச்சவர்..அப்போ நீ குறையப் படிச்சியா?...நான் எப்படி நீட்ட்டா வர்றது?’ என்று கிடைத்த கேப்பில் எல்லாம் புகுந்து விளையாடிருப்பார்கள்.

நாகேஷ் இதில் வில்லன் என்பது இன்னொரு புதுமை. ‘சார், ஃபோன் வந்திருக்கு’ என்று சொன்னால் பதிலுக்கு ‘யார் வந்தால் என்ன, இருந்து நல்லா சாப்பிட்டு போகச் சொல்லு’ என்று லந்து கொடுப்பது, ‘என்னடா பாதி ஆளைக் கொண்டு வந்திருக்கிறே?’ என்று கேட்பது என வில்லத்தனத்துக்குள்ளும் தனது ட்ரேட் மார்க் நகைச்சுவையைப் புகுத்தியிருப்பார்.

அடுத்து இசைஞானியின் பாடல்களும் பிண்ணனி இசையும். ஒவ்வொரு பாட்டையும் லட்டு மாதிரி போட்டுக்கொடுத்திருந்தார். ஒன்றுகூட சோடை போகாதவை. சிறு வயதில் ’பப்பப்பா பப்பரே’ பாடலும் டீன் ஏஜில் ’வாழ வைக்கும் காதலுக்கு ஜே..ம்க்கும்..க்கும்க்கும்’ பாடலும் இப்போதெல்லாம் ’உன்னை நினைச்சேன்’ பாடலும் என் ஃபேவரிட் என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

கொலை செய்யும் குறைபாடுள்ள ஹீரோ, அதற்கான காரணம், கொலை செய்யும் முறை, கொலைப்பழி இன்னொரு ஹீரோ மேல் விழுவது, ஒட்டுமொத்தப் படமுமே ஜாலி மூடிலேயே நகர்வது போன்றவற்றால் ஒரு க்ளிஷே கதையை சுவாரஸ்யமாக்கி, பார்க்கவே அப்போது (இப்போதும்) ஃப்ரெஷாக, தமிழில் இப்படி ஒரு கமர்சியல் படமா என்று வியக்கும்படி கலக்கிய படம், அபூர்வ சகோதரர்கள்.

மேலும் வாசிக்க... "Revisiting….அபூர்வ சகோதரர்கள் (1989)"

Sunday, June 17, 2018

காலா : ஒரு வித்தியாசமான டான்


பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க.
போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்?
ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க.
எப்டி..எப்டி?
வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான்.
இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு பிரிக்கணும்..அதானே?
இல்லை பாஸ்..நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடுறீங்க.
ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.
அப்புறம்?
வில்லன் உங்க அப்பாவை கொன்னுடறான்
ஹா..இப்போ நான் பொங்கி எழுந்து சும்மா..
பாஸ்...பாஸ்..அதெல்லாம் இல்லை. நீங்க உங்க ஏரியா பொடிசுகளோட கிரிக்கெட் விளையாடி க்ளீன் போல்டு ஆகிறீங்க.
ஏன்பா அப்படி?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான் பாஸ்.
இப்பவே கிர்ருங்குதே தம்பி..
இதுக்கே அசந்துட்டா எப்படி சார்..இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் வச்சிருக்கேன். வில்லன் இப்போ உங்க ஏரியா நிலத்தையெல்லாம் அபகரிக்க வர்றான்.
நான் ஒரு வீச்சரிவாளோட போய் அவனை..
நோ..நோ..வில்லனை நீங்க இப்போ ஒன்னும் செய்யக்கூடாது பாஸ்.
ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான்.
ஹய்யோ..சரி சொல்லு.
அப்புறம், வில்லன் உங்க மூத்த மகனைக் கொன்னுடறான்.
இது சூப்பர் தம்பி...என் பிள்ளை மேலயா கைவச்சேன்னு துப்பாக்கியோட போய்...
பாஸ்...அதெல்லாம் இல்லை பாஸ்.
அதுவும் இல்லையா? ஏன்ன்ன்?
ஏன்னா நீங்க ஒரு......நீங்க ஒரு வித்தியாசமான டான். மறந்துட்டீங்களா பாஸ்?
ஏம்பா, வித்தியாசம் தான் இருக்கு. டானைக் காணோம்?
பொறுங்க பாஸ்..வில்லன் உங்க பொண்டாட்டியைவும் கொன்னுடறான்.
அவளையுமா? இப்பவும் நான் சும்மா இருக்கணும்...அதானே?
இல்லை பாஸ்...ஸ்லோமோசன்ல வில்லன் வீட்டுக்குப் போறீங்க.
ஹாஹா...தியேட்டர்ல சும்மா விசில் பறக்குது..
ஆமாம் பாஸ்...போய் வில்லனைப் பிடிச்சு ‘கறுப்பு உழைக்கும் வர்க்கத்தின் கலர்’ன்னு சொல்லிட்டு வந்துடறீங்க.
ஏன்..ஏன்...ஏன்?
ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். அப்புறம், வில்லன் அடியாட்களை அனுப்பி, உங்க வீட்டைக் கொளுத்தி, ஏரியாவைக் கொளுத்தி உங்க உயிர் நண்பனையும், இளைய மகனையும் மண்டையைப் பொளந்துடறான்.
இப்போ என்ன, நான் உண்ணாவிரதம் இருக்கணுமா?
இல்லை பாஸ்...அந்த சிரமம்கூட உங்களுக்கு வேண்டாம்னு, வில்லன் ஆளுங்க உங்களையும் கொன்னுடறாங்க.
என்னையுமா?
ஆமா பாஸ்.
தம்பி, என்னையுமா தம்பி?
ஆமா பாஸ்
நாந்தான் ஒன்னுமே செய்யலையேப்பா?
ஆமா பாஸ்...ஆனாலும் நீங்க ஒரு வித்தியாசமான டான் இல்லையா? அதனால கொன்னுடறாங்க.
ஆஹாங்...அப்புறம்?
வில்லன் மறுபடியும் நிலத்தை அபகரிக்க வர்றான்..மக்கள் பொங்கி எழுந்து, வில்லன் மூஞ்சில கோலமாவைப் பூசி, அவனைக் கொன்னுடறாங்க பாஸ்.
மக்கள் என்ன தம்பி செய்யறாங்க?
வில்லனைக் கொன்னுடறாங்க சார்.
டேய்...இதைத் தானடா நான் முதல்லயே செய்யறேன்னு சொன்னேன். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இதே மக்களே முதல் சீன்லயே இதை செஞ்சிருப்பாங்களேடா...அப்படிப் பண்ணியிருந்தால், என் பொண்டாட்டி, பிள்ளைகள், ஆடியன்ஸ்ன்னு எல்லாருமே தப்பிச்சிருக்கலாமே? ஏண்டா இப்படிப் பண்ணே?
அதான் சொன்னேனே பாஸ்...நீங்க ஒரு வித்தியாசமான டான்னு..அதனால தான்!!
மேலும் வாசிக்க... "காலா : ஒரு வித்தியாசமான டான்"

Sunday, June 10, 2018

காளி : இயக்குநர் vs விமர்சகர்கள்


காளி படம் மோசம் என்று விமர்சகர்கள் சொல்ல, இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொதித்து எழுந்துவிட்டார். ’எப்படி என் படத்தை நல்லா இல்லைன்னு சொல்லலாம்? நீங்க இப்படிச் சொன்னதால்தான் படம் ஊத்தி மூடிக்கிச்சு’என்று சண்டைக்குப் போய்விட்டார். அவர் தரப்புக் கருத்தாக, காளி ஏன் நல்ல படம் என்று அவர் முன்வைத்த பாயிண்ட்ஸ் இவை தான் :


1. ஹீரோ நான்கு கெட்டப்பில்...

2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள்...

3. மூன்று கதைகளுக்கும் இடையே தொடர்பு
4. அவசரமாக ரிவ்யூ செய்வதால், உங்களால் வித்தியாசமான படங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு இயக்குநர் ஒரு படத்தை எடுக்க நினைக்கத் தூண்டுதலாக, தன் படத்தின் பலமாக சில விஷயங்களை மனதில் வைத்திருப்பார். கிருத்திகாவைப் பொறுத்தவரை முதல் மூன்று பாயிண்ட்ஸ் தான் அவை. ஐடியாவாகப் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைப்படம் என்பது ஐடியாவிற்காக ஜெயிப்பதில்லை; அந்த ஐடியா எப்படி எக்ஸிக்யூட் பண்ணப்படுகிறது (திரைக்கதையாக) என்பது தான் சூட்சுமம்.

இரண்டு ஹீரோக்கள்.அதில் ஒருவன் விக்ரமாதித்யன், இன்னொருவன் வேதாளம் என்பது ஐடியா. .போலீஸ் vs தாதா - என்று கேரக்டர் பிடித்து, திரைக்கதையையும் ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்?’ என்று ஃப்ளாஷ்பேக் உத்திகளாகப் பிரித்து, ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கையும் முக்கியமான கேள்வியில் நிறுத்தி விக்ரமாதித்யனை சுற்றலில் விட்டது தான் பெர்ஃபெக்ட் எக்ஸிக்யூசன். ஒவ்வொரு சீனையும் எப்படி புதிதாகச் சொல்லலாம் என்று மண்டையைப் பிய்த்துக்கொள்வது தான் திரைக்கதை எழுதுதல். ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டில் வரும் மொக்கை சீன்களை எடுத்துக்கொண்டு விஜய் ஆண்டனியையும் விக்ரம் பிரபுவையும் விக்ரம்-வேதாவாக புக் செய்வது அல்ல, ஃபிலிம் மேக்கிங்!

1. நான்கு கெட்டப் ஹீரோ என்பது தான் கதையின் பாசிடிவ்களில் ஒன்று எனும்போது, விஜய் ஆண்டனியிடம் போனது தவறு. மற்ற ஹீரோக்களிடம் போயிருந்தாலும் எஸ்கேப் ஆகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம். எனக்கு நடிக்கத் தெரியாது என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹமாம் பார்ட்டியிடம் போய் இந்தக் கதையைக் கொடுத்ததுமே, முதல் பாயிண்ட் அவுட். விமர்சனத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பை எல்லோரும் சுட்டிக்காட்டுவதன் காரணம், படத்தின் பாசிடிவ்வை அவர் நெகடிவ்வாக மாற்றியது தான்.

அடுத்து திரைக்கதைரீதியாக இந்தப் பாயிண்ட்டை அணுகினால், நான்கு கெட்டப்பில் ஹீரோவே வருவதற்கான காரணம் போதுமானதாக இல்லை. முதல் ஃப்ளாஷ்பேக்கை யோகிபாபு நினைத்துப் பார்க்கிறார், ஓகே. ஆனால் மூன்றாவது ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ டைரியில் தானே படிக்கிறார். அங்கே ஜெயப்பிரகாஷ் தானே வர வேண்டும்? என்ன இழவு லாஜிக் இது?

2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள் :
ஹீரோ அப்பாவைத் தேடுவது ஒரு ப்லாட். அதில் மூன்று வெவ்வேறு கதைகளை கோர்த்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? என்பது அடுத்த பாயிண்ட். ஆமாம், அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் ஏன் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை? காரணம், மூன்று கதைகளுமே அரதப்பழசான மொக்கைக் கதைகள் என்பதால் தான். மெயின்கதையில் சட்டென்று ஒரு சுவாரஸ்யமான கதையை ஓப்பன் செய்து, மீண்டும் மெயின் கதைக்கு வந்து, மறுபடியும் இன்னொரு சுவாரஸ்யமான கதையைச் சொல்லியிருந்தால், படம் ஹிட் ஆகியிருக்கும்.

ரோமியோ-ஜூலியட்டாக நடித்து காதலில் விழும் காதலர்களின் முடிவும் ரோமியோ-ஜூலியட் முடிவு போலவே அமைந்துவிடுகிறது..த்சொ..த்ச்சொ..அடடே, ஆச்சரியக்குறி! இந்த மாதிரி நெஞ்சை நக்கும் கதை எல்லாம் இந்தக் காலத்தில் சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். இதே தான் மற்ற இரண்டு கதைகளிலும். ஒரு நல்ல ஐடியாவை மொக்கை சீன்களால் நிரப்பிவிட்டு, குய்யோ முறையோ என்று கத்தி ஆகப்போவதென்ன?

3. ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகள்:

‘மூணு கதைகளுக்கு இடையில் லின்க் இருக்கு..அதையாவது பார்த்தீங்களா?’ என்று அடம்பிடித்து அழுகிறார் இயக்குநர். முதல் கதை இல்லையென்றால் இரண்டாம்/ மூன்றாம் கதை புரியாது என்று சொல்லும் அளவிற்கு திரைக்கதை பின்னப்பட்டிருந்தால் தான் இதை ஒரு வலுவான பாயிண்ட்டாகச் சொல்ல முடியும். மூன்று கதைகளையும் விருமாண்டி போல் ஒன்றையொன்று நிரப்பும் ஃப்ளாஷ்பேக்-களாக ஆக்கியிருக்க முடியும். அதற்கு கொஞ்சம் வேலை செய்யணும். முதல் இரண்டு கதைகளை கட் செய்துவிட்டு, ஸ்ட்ரெய்ட்டாக மூன்றாவது கதைக்குப் போனாலும், அது புரிகிறது. அப்புறம் எதற்கு வேஸ்ட்டா மூணு கதை என்று தான் ஆடியன்ஸே நினைப்பார்கள். அது தான் நடந்தது.

4. அவசரத்தில் விமர்சனம்:

’என்னுடைய திரைக்கதை சித்துவேலைகள் எல்லாம் புரியற அளவுக்கு உங்களுக்கு கெப்பாக்குட்டி இல்லை’ என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இயக்குநர். முகமும் மனதும் குழந்தையாகவே அமைவது வரம். இருக்கட்டும்...ஆரண்ய காண்டம், உறியடி, அருவி என்று வித்தியாசமான படங்களை இணைய விமர்சகர்கள் கொண்டாடவே செய்திருக்கிறார்கள். யாரும் அவசரத்தில் படம் புரியாமல் சொதப்பியதில்லை. எனவே வித்தியாசமான படங்களை வரவிடாமல் விமர்சனங்கள் தடுப்பதாகச் சொல்வதில் நியாயமில்லை.

நான் பல நுண்ணிய வேலைப்பாடுகள் செய்தும் நீங்கள் குறிப்பிடவில்லை, கண்டுகொள்ளவில்லை என்பது தான் இயக்குநரின் ஆகப்பெரிய மனக்குறை. அதற்குப் பதில் சிம்பிள்: படம் கொஞ்சமாவது நன்றாக இருந்தால் தான், அதைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்த்து, அடடே..இது நல்லா இருந்ததே...அது நல்லா இருந்ததே’ என்று யோசிப்பார்கள். அதிகம் அது பற்றிப் பேசாமல், துயரங்களை மனம் மறக்கவே விரும்பும்!


 போனஸ் : ’எங்க வீட்ல வேலை செய்றவங்களைக் கேட்டேன். அவங்களுக்கு படம் புரிஞ்சிருக்கு, பிடிச்சிருக்கு’ என்று கிருத்திகா சொன்னதைக் கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஏன் தாயீ, பிடிக்கலைன்னு சொன்னால் அடுத்த நிமிசமே வேலையை விட்டுத் தூக்கிற மாட்டீங்களா? எனக்கு உங்க கம்பெனியில் வேலை கொடுத்தால், நானே மேலே எழுதிய எல்லாவற்றையும் அழித்துவிட்டு சூப்பர்னு தான் சொல்வேன். நமக்கு சோறு தான் முக்கியம்!

படத்தில் எனக்குப் பிடித்தது அரும்பே பாடல் & அஞ்சலி ..அவ்ளோ அழகு!
மேலும் வாசிக்க... "காளி : இயக்குநர் vs விமர்சகர்கள்"

Saturday, April 28, 2018

HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி




நல்ல படங்களுக்கும் மோசமான படங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், படம் பார்த்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நம்மை தொந்திரவு செய்துகொண்டே இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஹீட்டை பார்த்தேன். மூன்று நாட்கள் கடந்தும் இன்னும் சூடு குறையவில்லை.

அல் பசினோ, ராபர்ட் டி நீரோ எனும் இரண்டு சிங்கங்கள் இணைந்து மிரட்டிய படம். இயக்குநர் மைக்கேல் மேன்னின் பெஸ்ட் மூவியாக இன்றும் முதலிடத்தில் இருக்கும் படம்.
இயக்குநர் மைக்கேல் மேனின் நண்பர், முன்னாள் போலீஸ்கார், இயக்குநரின் கதை ஆலோசகர் ஆடம்சன். அவர் சந்தித்த நீல் எனும் ஒரு தொடர் கொள்ளையனைப் பற்றியும், நீலின் பெர்ஃபெக்சனிசம் பற்றியும் மைக்கேல் மேன் அறிந்தபோது, தொடங்கியது இந்த கிளாசிக்கல் மூவிக்கான விதை. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்ட திரைக்கதை. இடையில் l.a. takedown (1989) எனும் டிவி பைலட் மூவியாகவும் இந்தக் கதையை மைக்கேல் மேன் எடுத்தார். (ஆரம்பத்தில் இதை டிவி சீரீஸாக செய்வதாக ஐடியா).

கதையின் கிளைமாக்ஸ் சிக்கியபின், இதை அல் பசினோவும் ராபர்ட் டி நீரோவும் இணைந்து நடித்தால், மறக்க முடியாத சினிமாவாக வரும் என்பதை இயக்குநர் உணர்ந்தார். ஹீட் ஆரம்பம் ஆனது.

தனக்கென்று பெர்ஃபெக்ட்டான சிறு குழுவை வைத்துக்கொண்டு, பெரிய அளவிலான கொள்ளைகளை நட த்தி வருபவன் நீல் மெக்காலே (ராபர்ட் டி நீரோ). இதைத் தவிர வாழ்க்கையில் அவனுக்கு வேறு எதுவும் முக்கியம் கிடையாது. தொழில் பக்தாஸ்!

தனது குழுவுடன் நகரின் நடக்கும் குற்றங்களை தடுக்கும், குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் போலீஸ் அதிகாரி வின்சன்ட் ஹன்னா (அல் பசினோ). இரண்டு டைவர்ஸ்களைக் கடந்து, மூன்றாவது டைவர்ஸை நோக்கி போய்க்கொண்டிருக்கும் சின்சியர் ஆபீசர். வேலையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் கிடையாது.

ஏறக்குறைய சம திறமையுள்ள, தொழில்பக்தி மிக்க ஆனால் எதிரெதிர் துருவங்கள். பட த்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொள்ளை நடுரோட்டில் நடக்கிறது. டி நீரோவின் குழுவில் புதிதாகச் சேர்ந்த வேய்ங்க்ரோவின் அதிகப்பிரசிங்கித்தனத்தால், முதல் கொள்ளை மூன்று கொலைகளுடன் முடிகிறது. அதை விசாரிக்க அல் பசினோ வந்து சேர்கிறார்.

வேய்ங்ரோவை டி நீரோ கொல்ல முயல, அவன் தப்பிச்செல்கிறான். அந்த ஆபத்து டி நீரோவை நோக்கி எப்போதும் திரும்பி வரும் சூழ்நிலை. இன்னொரு பக்கம், அல் பசினோ விரிக்கும் வலை.
‘ஆபத்து உன்னை நெருங்கும்போது, 30 செகண்டிற்குள் விட்டு விலக முடியாத எதனுடனும் உன்னை பிணைத்துக்கொள்ளாதே’ என்பது டி நீரோவின் தொழில் தர்மம். மனைவி மேல் அட்டாச்மெண்டாக இருக்கும் தம்பிக்கே, டி நீரோ கொடுக்கும் அட்வைஸ் அது தான்.

அல் பசினோ ஸ்கெட்ச் போட்டு, டி நீரோவை நெருங்கும்வேளையில், டி நீரோவுக்கும் ஒரு காதல் வருகிறது.

அல் பசினோ இந்த கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்தாரா?

டி நீரோ தன் தொழிலை அல் பசினோவை மீறி செய்ய முடிந்ததா?

இரு ஹீரோக்களாலுமே தன்னையும், தன் கூட்ட த்தையும் மற்ற ஹீரோவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா?

இரண்டு ஹீரோக்களின் பெர்சனல் வாழ்க்கை என்ன ஆகிறது? 

-    என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த க்ளாசிக்கல் மூவி.

ஹீட் -ஐ க்ரைம் மூவி என்று சொல்வதைவிட, எமோசனல் டிராமா என்று சொல்லிவிடலாம். திருடன் – போலீஸ் விளையாட்டு என்பது ப்லாட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கிய கேரக்டரின் பெர்சனல் வாழ்க்கை பற்றியும், ஃபீலிங்ஸ் பற்றியுமே படம் அதிகம் பேசுகிறது.

படத்தை மறக்க முடியாத அனுபவமாக ஆக்குபவை நான்கு சீன்கள் :

1.  1.  அல் பசினோவும் டி நீரோவும் சந்திக்கும் ரெஸ்டாரண்ட் காட்சி. சினிமா வரலாற்றில் மிக முக்கியமான காட்சிகளுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படும் காட்சி அது. இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடம் அது. அதே நேரத்தில் இன்னும் உக்கிரமாக மோதிக்கொள்ளப்போகிறார்கள் என்பதையும் நமக்கு உணர்த்திவிடும் காட்சி. இரண்டு பேரின் உடல்மொழிக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் காட்சி.

2.   2. பேங்க் கொள்ளை. ஒரு அதகள ஆக்சன் பட த்தின் கிளைமாக்ஸ் காட்சி போல், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராமல் நிகழும் காட்சி. இருதரப்புமே தன்னை மறந்து களத்தில் குதிக்கும் அழகை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த சீனைப் பற்றி படிப்பதைவிட, பட த்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

3.  3.  ‘Sun rises with her & sets with her’ என்று சொல்லும் தம்பி வால் கில்மர்க்கும் அவரது சீட்டிங் மனைவிக்கும் இடையிலான கடைசி ஷாட், அந்த கை அசைப்பு.
4.     
4. மைக்கேல் மேன் கேரக்டர்களை வடிவமைத்த விதத்தினால், இரு ஹீரோக்களுமே ஜெயிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். திருடன் என்பதால் டி நீரோ தோற்றுப்போக வாய்ப்பு இருப்பதையும் நாம் உணர்கிறோம். இங்கே எதுவும் நடக்கலாம் என்பதால், ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். இந்த அளவிற்கு டச்சிங்கான கிளைமாக்ஸ் காட்சியை, ஒரு க்ரைம் மூவியில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. டி நீரோவின் காதலி திகைத்து நிற்கும் ஷாட், இறுதில் இரு ஹீரோக்களும் கை பிடித்து நிற்கும் அந்த ஷாட், கூடவே அந்த முடிவு….அசந்து போய் உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு கேரக்டர்களும் எடுக்கும் கடைசி முடிவுகளும், அதன் விளைவுகளும் தான் நம்மை உணர்ச்சிகரமாக ஆக்குகின்றன. திருந்தி வாழும் ஒருவன் மீண்டும் ட்ரைவராக திருடக் கிளம்புவது, அல் பசினோவை எப்போதும் தடுக்கும் அவன் மனைவி கிளைமாக்ஸில் தடுக்காமல் விடுவது, தம்பி மனைவியின் கடைசி முடிவு, டி நீரோ காதலி பற்றி எடுக்கும் கடைசி முடிவு, வேய்ங்ரோ பற்றி எடுக்கும் முடிவு – என்று எல்லாமே, யோசித்துப்பார்த்தால், இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று நம்மை ஃபீலிங்கில் ஆழ்த்துவது தான் இந்த திரைக்கதையின் பெரும் பலம்.

இது பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பதால், முடிந்தவரை ஸ்பாய்லர்களை தவிர்த்து எழுதியிருக்கிறேன். நல்ல சினிமா விரும்பிகள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
மேலும் வாசிக்க... "HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி"