கனாக் கண்டேன், அயன் என வித்தியாசமான கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும் கே.வி.ஆனந்த், இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்து இருப்பது பத்திரிக்கைத் துறையை. ஆனந்த்-சுபாவின் சொந்தப் பத்திரிக்கை அனுபவங்களை வைத்தே, இந்தக் கதையை உருவாக்கி உள்ளார்கள். நான் பத்திரிக்கைத் துறையுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் இந்தப் படத்தினை ரொம்பவே எதிர்பார்த்திருந்தேன். (என்ன தொடர்பா?..சின்ன வயசுல இருந்தே குமுதம், விகடன் படிக்கிறேங்க..அது போதாதா?) கதை என்னன்னா.......
மலைமுழுங்கி மகாதேவனாக ஒரு முதல்வர்(பிரகாஷ் ராஜ்), மலையோடு அந்த மலைமுழுங்கியையும் விழுங்கக் காத்திருக்கும் ஒரு எதிர்க்க்கட்சித் தலைவர்(கோட்டா சீனிவாச ராவ்), மாற்று சக்தியாக படித்த இளைஞர்களின் சிறகுகள் அமைப்பு(அஜ்மல்) என மும்முனைப் போட்டியுடன் தேர்தல் வருகிறது. நம்மைப் போன்றே இருதரப்பின் மீதும் அதிருப்தியில் இருக்கும் தின அஞ்சல் நிருபர்களான கார்த்திகா-பியாவும், ஃபோட்டோகிராஃபரான ஜீவாவும் சிறகுகள் அமைப்பின் சேவையால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பற்றிய செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் சிறகுகள் அமைப்புக்கு ஆதரவு பெருகிறது.
அஜ்மலில் வளர்ச்சி ஆளும் & எதிர்க்கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது. அடுத்து நடக்கும் அஜ்மலின் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது. பியாவும், சிறகுகள் அமைப்பின் சில உறுப்பினர்களும் அந்த வெடிவிபத்தில் உயிர் இழக்கின்றனர். ஜீவாவும் அஜ்மலும் கல்லூரி நண்பர்கள் என்பதும் திட்டமிட்டே இந்த இயக்கத்தைக் கட்டமைத்ததும் தெரிய வருகிறது. வெடிவிபத்திற்குப் பின் ஜீவாவும், அஜ்மலும் என்ன செய்தனர், வெடிவிபத்திற்குக் காரணம் யார், எதனால் அது நிகழ்ந்தது என்பதை பரபரவென ஸ்பீடான திரைக்கதையுடன் சொல்லி இருக்கின்றனர்.
ஜீவாவுக்கு இந்தப் படம் கமர்சியலாக முக்கியமான படம் தான். விளையாட்டுத் தனமான இளைஞனாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார். முதல் காட்சியிலேயே பைக்கில் காட்டும் சாகசம் கலக்கல். டைரக்டர்’ஸ் ஆக்டராக ஜீவா தன்னை நிரூபிக்கிறார். காதல், ஜாலி, ஆக்சன் என எல்லாவித நடிப்பையும் அனாயசமாக வெளிப்படுத்துகிறார். கே.வி.ஆனந்த் ஜீவாவை அழகாகக் காட்டி இருக்கிறார். கார்த்திகா சின்சியர் சிகாமணியாக வருகிறார். வில் போன்ற புருவமும், காந்தக் கண்களும் மட்டுமே தேறுகிறது. நடிப்பும் வருகிறது.மற்றபடி, பொண்ணு சுமார் தான். என்ன இருந்தாலும் அவங்கம்மா மாதிரி வருமா...
படத்தில் கலக்கியிருப்பது பியா தான். செம ஜாலியான கேரக்டரைசேசன், நம்ம நானா யோசிச்சேன் பகுதி மாதிரி! கேஷூவலாக ‘நான் அயிட்டம் ஆனா, எனக்கு என்ன ரேட்?’ என்பதும், ஜீவாவுடன் காட்டும் அன்னியோன்யமும், சேலை கட்டிவிட்டு நடந்து வரும் ஸ்டைலும் அட..அட.! ஒரு ஃப்ரெண்ட்லி நேச்சர் கேரக்டர் என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.எல்லாப் படத்திலும்/ஸ்டில்லிலும் பியாவுக்கு ஒரு டைட் டவுசரையே மாட்டி விடுவார்கள். நல்லவேளையாக இதில் வேறு நல்ல காஸ்ட்யூம்களைத் தந்திருக்கிறார்கள். ஜீவா கார்த்திகாவைக் காதலிப்பதை அறியும் ஹோட்டல் சீனில் கலக்கி விடுகிறார். படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது பியா தான். செம ஜாலிப் பட்டாசு!
அஜ்மலும் கனமான பாத்திரத்தை ஏற்று, செவ்வனே செய்திருக்கிறார்.கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் என சரியான பாத்திரத் தேர்வுகள்.
படத்திற்குப் பிளஸ் பாயிண்ட் திரைக்கதையும், ஒளிப்பதிவும் தான். சுபாவும் .ரிச்சர்ட்.எம்.நாதனும் படத்தைத் தூண்போல் தாங்கி உள்ளனர். பீட்ட ஹெயின் கிளைமாக்ஸ் ஃபைட் சீன் தூள்!
ஹாரிஸ் ஜெயராஜ் இசை பற்றி என்ன சொல்ல..வரவர மாமியார் கழுதைபோல ஆனாளாம்ங்கிற மாதிரி, இந்தாளு இப்படி ஆகிட்டாரே. ’என்னமோ ஏதோ’ மட்டுமே தேறுகிறது. மற்றபடி, எல்லாப் பாட்டுமே எங்கேயோ கேட்ட ஃபீலிங் தான். ஒரு இடத்தில் பிண்ணனி இசையில் டைட்டானிக் ஃபேமஸ் க்ளிப்பையே ஸ்லோவா இழுத்துப் போட்டிருக்கார். அவ்வளவு தானா..சரக்கு காலியான்னு தெரியலை!
முதல் பாதியில் ஜாலியாகச் செல்லும் படம், இரண்டாம் பாதியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. எடுத்துக்கொண்டிருக்கும் கதைக்களனும், இடங்களும் தமிழ்சினிமாவில் இவ்வளவு இயல்பாகக் காட்டியதே இல்லை. ஒரே ஒரு பாடல் தேவையில்லாத, பொருந்தாத இடத்தில் ’பணத்துக்காக எதுவும் செய்வாங்களா?’ என அரசியல்வாதிகளைப் பற்றி கார்த்திகா பேசும்போது வருகிறது. அதை நீக்கிவிட்டாலும் நல்லதே!
டைட்டில் சீன், வெடிகுண்டு வெடிக்கும் சீன், கிளைமாக்ஸ் ஃபைட் சீன் போன்றவற்றில் கே.வி.ஆனந்தின் டச் தெரிகிறது. சிறுசிறு குறைகள் இருப்பினும், தரமான ஜாலியான, அதே நேரத்தில் விறுவிறுப்பான கமர்சியல் படம் கொடுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். மொத்த டீமிற்கும் பாராட்டுகள்.
கோ - விறுவிறுப்பான சுபா நாவல்!




























56 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.