Saturday, April 28, 2012

முருக வேட்டை_3 (அதிரடித் தொடர்)


இன்ஸ்பெக்டரும் சரவணனும் மாடிப்படிகளில் வேகமாக ஏறினார்கள். 

‘குளிக்காம, பல்லுகூட விளக்காம பூஜை ரூமுக்குள்ள வர்றீங்களே..கொஞ்சமாவது இது இருக்கா?’ என்று கவிதா திட்டுவது ஞாபகம் வந்தது. ‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்று நினைத்துக்கொண்டான். மேலே ஸ்ரீனிவாசனும் பூஜை ரூம் வாசலில் அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தார்.

சரவணன் அவரை விலக்கிக்கொண்டு பூஜை ரூமுக்குள் பார்த்தான். முதலில் பூஜை ரூமின் அளவு தான் அவனை ஆச்சரியப்படுத்தியது. அவன் வீட்டு ஹால் அளவிற்குப் பெரியதாக இருந்தது. எப்படியும் 20 பேர் நின்றுகொண்டு சாமி கும்பிட முடியும். தெருமுனைப் பிள்ளையார் கோவில்கூட இந்தளவுக்கு இருக்காதே என்று தோன்றியது. 

பூஜை ரூமில் வாசலுக்கு நேரே, ஒரு ஆள் ஏறிப் படுக்கும் அளவுக்கு கிடைமட்டமாக நீண்ட மூன்று செல்ஃப்கள் இருந்தன. 

முதல் அடுக்கில் ஏதும் இல்லை. இரண்டாவதில் வரிசையாக சாமி படங்கள் வைக்கப்பட்டிருந்தன. கீழேயுள்ள செல்ஃபில் பூஜை சாமான்கள் இருந்தன. எல்லாவற்றுக்கும் கீழே குத்துவிளக்கு ஒன்று அணைந்துபோய் நின்றுகொண்டிருந்தது.

மூன்று செல்ஃப்ஃபுகளுக்கும் மேலே ரத்தத்தால் சிவப்பு நிறத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ரத்தம் வழிந்திருந்ததால் கவனித்துப் படிக்க வேண்டியிருந்தது.

MARS - 1024

சரவணன் குழம்பினான். மார்ஸ்-1024ஆ?..என்ன இது? பூஜை அறையைச் சுற்றிலும் வேறு ஏதாவது எழுதியுள்ளதா என்று பார்த்தான். ஒன்றுமில்லை. ஆனால் பூஜை ரூமின் மூலையில் ஒரு லாக்கர் பெட்டி இருந்தது.

“என்ன அது?” என்று சரவணன் ஸ்ரீனிவாசனிடம் கேட்டான்..

“அது..அது வந்து..ஒன்னுமில்லை..சும்மா பூஜை சாமான்களும் கொஞ்சம் பூர்வீக நகைகளும் வைக்கறதுக்கு...”

”அதோட கீ இருக்கா?”

கான்ஸ்டபிள் “கீழ் செல்ஃப்ல இருக்கு சார் “என்றார்.

இன்ஸ்பெக்டர் “அதைத் திறங்க பார்ப்போம்” என்று அவசரமாக, கொஞ்சம் கடுப்புடன் சொன்னார். சரவணனிடம் இன்னும் கேஸ் கொடுக்கப்பாத நிலையில் அவன் என்கொயரி செய்வது எரிச்சலைக் கிளப்பியது.

கான்ஸ்டபிள் சாவிகொத்துடன் லாக்கரை நெருங்கினார். சரவணன் ஸ்ரீனிவாசனையே பார்த்தபடி இருந்தான். ‘சம்திங் ராங் நித் ஹிம்’ என்று தோன்றியது. ஸ்ரீனிவாசன் படபடப்புடன் நிற்பது போல் இருந்தது.

வீட்டில் எல்லோரும் டூர் போயிருந்த நிலையில் இவர் மட்டும் சீக்கிரம் திரும்பி வந்ததேன்? இப்போதைய படபடப்பு அப்பா இறந்ததாலா அல்லது வேறு எதையாவது மறைப்பதாலா? 

க்ளிக் என்று லாக்கர் திறந்த ஓசை சிந்தனையைக் கலைத்தது. கான்ஸ்டபிள் அனைவரும் பார்க்கும்படி நன்றாகத் திறந்துவிட்டு, ஒதுங்கி நின்றார். லாக்கருக்குள் இரண்டு செல்ஃப்கள் இருந்தன. மேல் செல்ஃபில் கற்பூரம், பத்திகள் இருந்தன. கீழே இருந்த செல்ஃபில் ஏதும் இல்லை. 

இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசனிடம் ” அதுல ஏதாவது இருந்ததா?” என்றார்.

“ஆமா சார்..அதுல தான் சார் எங்க பூர்வீக நகைகள் இருந்துச்சு...அதையும் வச்சு சாமி கும்பிடுவோம்”

“ஓ..அப்போ நகைக்காகத் தான் யாரோ இதைச் செய்திருப்பாங்களோ?’என்றார் இன்ஸ்பெக்டர்.

“இருக்கலாம் சார்” என்று சொல்லும்போதே ஸ்ரீனிவாசனுக்கு வேர்த்துக் கொட்டியது.

சரவணன் பேசக்கூடாது என்று இருந்தாலும், அடக்க முடியாமல் கேட்டான்”சார், கொலையாளியும் வாசல் வழியாத்தான் வந்திருக்கிறான். பூர்வீக நகை பத்துன விஷயங்கள் உங்க குடும்பத்தார்க்கு மட்டும் தானே தெரிஞ்சிருக்கும்?”

“ஆ..ஆமா சார்”

‘ஏன் இவர் இப்படி திக்கித் திணறுகிறார்..சமிதிங் ராங்’ என்று சரவணன் நினைத்தான். பழகியவராயிரற்றே.. என்று சரவணன் முகத் தாட்சண்யத்திற்காக தயங்கிக்கொண்டிருந்தபோது, இன்ஸ்பெக்டர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“ஸ்ரீனிவாசன், அப்போ நீங்களோ உங்க குடும்பத்தில் ஒருத்தரோ கூட பூர்வீக நகைக்காக அப்பாவைக் கொன்னிருக்கலாம், இல்லியா?”

“என்ன சார் இப்படிக் கேட்கிறீங்க?”

“இப்படிக் கேட்கக்கூடாது தான். வேற யாரும்னா ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் முட்டிக்குமுட்டி தட்டிக் கேட்போம். நீங்க பெரிய இடத்துப்பிள்ளை..அப்படிச் செய்யமுடியுமா? செஞ்சா யாராவது பெரிய்ய கைகிட்டப் போவீங்க..என்னை ட்ரான்ஸ்ஃபர்னு தூக்கி அடிப்பீங்க..எனக்கு அது தேவையா? ஆனா ஒன்னு, போலீஸ்காரனை கேணப்பயன்னு நினைக்காதீங்க..நாங்க குற்றவாளியை விடுவோம். ஆனால் கண்டுபிடிச்சுட்டுத் தான் விடுவோம்”

சரவணன் தான் இடையில் புகுவது நல்லது என்று நினைத்தான்.

“ஸ்ரீனிவாசன், மார்ஸ்-1024 அப்படீன்னா என்னன்னு உங்களுக்கு ஏதாவது புரியுதா?”

“இல்லை சார்”

இன்ஸ்பெக்டர் கோபத்துடன் முணுமுணுத்தார் “புரியாது..புரியாது..ஸ்டேசனுக்குக் கொண்டுபோகாதவரைக்கும் இந்தாளுக்கு ஒன்னும் புரியாது”

"என்ன சார் இப்படி ஈவிரக்கமில்லாமப் பேசுறீங்க..நானே என் அப்பாவை இப்படி கொடூரமா கொன்னுட்டாங்களேன்னு வருத்ததுல இருக்கேன்..நீங்க இப்படி அநியாயமா என்மேலயே பழி போடுறீங்களே?”

“வருத்தமா? நான் வரும்போது நல்லாத்தானேய்யா இருந்தீங்க? இப்போ பூஜை ரூமுக்கு வந்தப்புறம்தானே உங்க மூஞ்சி பேயறைஞ்ச மாதிரி ஆச்சு?”

ஸ்ரீனிவாசன் பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

 1. இரவு வணக்கம்,செங்கோவி!!!நல்லாயிருக்கு!அந்த சி.பி.சி.ஐ.டி போஸ்ட்டில ஒங்களப் பாக்கிறேன்!

  ReplyDelete
 2. Good going. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி!

  ReplyDelete
 3. நலம்தானே செங்கோவி ஐயா.
  தொடரின் விசாரனையில் படபடப்பு அதிகமாக இருக்கு நகைக்காக இப்ப கொலைகள் மலிந்த தேசம் ஆகிவிட்டது நம் ஈழ நாடும்.

  ReplyDelete
 4. முட்டிக்கு முட்டி தட்டப் போவது யாரை காத்திருக்கின்றேன் அடுத்த அங்கத்திற்கு.

  ReplyDelete
 5. அருமையா வேகமெடுக்குது... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.