Tuesday, April 28, 2015

ராஜ தந்திரம் - சினிமா அலசல்

'திருடுவது எப்படி?' எனும் கான்செப்ட்டில் சூது கவ்வும் அடைந்த வெற்றி, மேலும் பலரையும் அத்தகைய நெகடிவ் கான்செப்ட்டில் படங்களை எடுக்கத் தூண்டியது. அப்படி வந்த படங்களில் மூடர்கூடம் மட்டுமே கவனிக்கத்தக்க படமாக இருந்தது, சரபம் மோசமான படமாக அமைந்தது. இப்போது, கவனிக்க வைக்கும் 'இரண்டாம் தர'ப் படமாக ராஜ தந்திரம்.

பைக் எபிசோட்:
சூது கவ்வும் போன்றே எதுபற்றியும் கவலைப்படாமல் திருடுவது/ஏமாற்றுவதைப் பிழைப்பாகக் கொண்ட ஹீரோ & குழு. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்க, ஒரு அப்பாவியை ஏமாற்றி பைக் விற்கும் சீன். படத்தின் மிகப்பெரிய, முதல் சறுக்கலே இது தான்.

சூது கவ்வும் மாதிரிப் படம் எடுக்க நினைப்பது தப்பில்லை. ஆனால் அந்தப் படத்தில் ஹீரோ கேரக்டரை எப்படி வடிவமைத்திருந்தார்கள், ஏன் திருடனாக இருந்தும் ஹீரோவை ரசித்தோம் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் இங்கே சொதப்பியிருக்கிறார்கள்.

சூது கவ்வும் செட்டப் பகுதியை யோசித்தால், நம் நினைவுக்கு உடனே வருவது கடத்திய குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து, பத்திரமாக இறக்கிவிடும் சீன் தான். அது ஒரு புத்திசாலித்தனமான 'Save the Cat'. எம்.ஜி.ஆர், ரஜினி என ஹீரோக்கள் வில்லனாக/ஆன்ட்டி ஹீரோவாக நடித்த படங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால், அந்த கேரக்டர்மேல் நமக்கு சிறுதும் வெறுப்பு வந்துவிடக்கூடாது எனும் கவனத்துடன் அவை வடிவமைக்கப்பட்டிருப்பது புரியும். (உ-ம்: குடியிருந்த கோயில், பில்லா, சதுரங்க வேட்டை).

ஏற்கனவே எனக்கு அந்த ஹீரோவைப் பிடிக்கவில்லை...விஜய் சேதுபதியை விட்டுத்தள்ளுங்கள், சதுரங்க வேட்டை நட்டி அளவுக்குக்கூட  ப்ஸ்க்ரீன் பிரசன்ஸ் இல்லை. இப்படி இருக்கும்போது, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்குப் பிடிக்கும் ஒரு சாமானியன் / அப்பாவியை ஏமாற்றுவதுடன் படம் ஆரம்பிக்கிறது. ஒரு பெரிய வெற்றிப்படமாக ஆகியிருக்க வேண்டிய ராஜதந்திரம் சொதப்பியது இங்கே தான். அடுத்து பரபரப்பான கோல்டு பிஸ்கட் சீகுவென்ஸ் வரும்வரை,படத்துடன் ஒன்ற முடியாமல் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறோம்.

கோல்டு சீகுவென்ஸ்:
10 லட்ச ரூபாயைத் திருடும் எபிசோடில் திரைக்கதையாசிரியரின் புத்திசாலித்தனம் தெரிந்தது. பையை மாற்ற முயல, அது சொதப்ப, கூடவே ஹீரோயினும் ஏமாற்றப்பட்ட அப்பாவியும் அங்கே வந்து சேர, வில்லன்கள் ஹீரோவைப் புரட்டி எடுக்க, பையில் இருப்பது 10 லட்சம் அல்ல என்று தெரிய வர..செம சீன்.

இந்த முயற்சி அவர்களைப் பெரிய ஆபத்தில் சிக்க வைக்க, படம் அதன்பின் வேகமெடுத்துவிடுகிறது.

ஹீரோயின் - நரேன் எபிசோட்:

ஹீரோயினுக்கு நரேன் வில்லன்..இப்போது ஹீரோவுக்கும் நரேன் வில்லன் என்றாக, செம ட்விஸ்ட்டாக வில்லாதி வில்லன் 'பட்டியல் சேகர்' அறிமுகம் ஆகிறார். ஒரு நகைக்கடை அண்ணாச்சியைப் பார்த்த எஃபக்ட்டை அனாயசமாக மனிதர் கொண்டுவந்துவிடுகிறார். ஹீரோ-ஹீரோயின் -நரேன் என எல்லோருக்கும் பொது எதிரி அவர் தான் என ஆகும்போது, ஹீரோவே நரேனின் திட்டங்களை வில்லனிடம் உளறி வைத்திருப்பது நல்லவொரு கான்ஃப்ளிக்ட்.

நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் அடித்து நொறுக்கியபடியே, சீன்கள் நகர்கின்றன. 'எங்கிட்டுப் போனாலும் கேட் போட்ட' கதையாகப் படம் நகர்வது தான் சுவாரஸ்யம்.

ஜூவல்லரி எபிசோட்:
நம்ப முடியாத விஷயத்தையும் நம்ப்புற மாதிரிச் சொல்வது தான் ஒரு திரைக்கதையாசிரியனின் திறமை. அதை இங்கே ஏ.ஜி.அமித் அட்டகாசமாகச் செய்திருக்கிறார். கொள்ளையடிக்கப் போவதை முன்கூட்டியே நகைக்கடை அதிபரான வில்லனுக்குச் சொல்லிவிட்டுச் செய்யும் இரண்டாம்பாதி அதகளம். டைமிங்கை மட்டுமே நம்பி போடப்படும் திட்டம்..ஒரு நிமிடம் லேட் ஆனாலும் சொதப்பி விடும் ஆபத்து..இது நமக்குப் புரிந்ததும், சஸ்பென்ஸ் எகிறிவிடுகிறது.

ஒரு கல்...பல மாங்காய்கள்:
ஹீரோ -நரேன் - அய்யர்
கோல்டு பார்ட்டி மணி
பட்டியல் சேகர் - மருமகன்
போலீஸ்

இந்த நான்கு குரூப்பும் செய்யும் செயல்களை ஒரே நேரத்தில் சொல்லியபடி நகர்கிறது படம். பாராட்டப்பட வேண்டிய விஷயம், இவை எங்கேயும் குழப்பாமல் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பது. ஏறக்குறைய எல்லோருமே அறிமுகமற்ற நடிகர்கள் தான். ஆனாலும் நாம் குழம்பாமல் இருக்கிறோம் என்றால், அது திரைக்கதை ஆசிரியரின் திறமை தான்.

திருஷ்டி-2:
படத்தின் ஆரம்ப பைக் எபிசோட் போன்றே சொதப்பலான இன்னொரு விஷயம், கிளைமாக்ஸ். ஹீரோ திடீரெனத் திருந்துவது ஒரு கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை அந்த தங்க பிஸ்கட்களை போலீஸிடம் ஒப்படைப்பது. அவை கவர்ன்மென்ட் சொத்து அல்ல..கடத்தல்காரர்களின் சொத்து. அவற்றை ஹீரோ போன்ற ஒரு கேரக்டர் தானே எடுத்துக்கொள்வது தான் பொருத்தமாக இருந்திருக்கும். பிட்டுப்படங்களில் வருவது போல், கிளைமாக்ஸில் குத்து குப்புசாமி திடீரென கருத்து கந்தசாமி ஆவது சகிக்கவில்லை.

இதையெல்லாம்விடப் பெருங்கொடுமை, ஆம்வே போன்ற எம்.எல்.எம்மை தீர்வாகப் படம் முன்வைப்பது. எல்லா கோல்மால்களையும் மூட்டை கட்டும் ஹீரோ, இந்த சதுரங்க வேட்டையை நல்வழியென சீரியஸாக நம்புவது என்ன லாஜிக் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ஆரம்ப செட்டப் போர்சனையும் கிளைமாக்ஸ் போர்சனையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், பாராட்டப்பட வேண்டிய படம்...ராஜ தந்திரம்.

நன்றி : இந்த படத்தைப் பரிந்துரைத்த நண்பர் வினையூக்கி செல்வாவிற்கு!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.