Sunday, April 5, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 40

சினிமாவில் இரண்டுவகையான கதை சொல்லல்கள் இருக்கின்றன. ஒன்று ஹாலிவுட் பாணியான 'ஆக்சனைச் சார்ந்து' கதை சொல்வது, இரண்டாவது ஐரோப்பிய-ஆசிய பாணியான 'கேரக்டரைச் சார்ந்து' கதை சொல்வது. உதாரணமாக, டேக்கன் படத்தையும் மகாநதி படத்தையும் எடுத்துக்கொள்வோம்.
இரண்டுமே மகளைத் தேடும் தந்தையின் பயணத்தை விவரிப்பவை தான். டேக்கன் படத்தைப் பொறுத்தவரை கேரக்டர்களின் உளவியல்-கதாபாத்திர வளைவு போன்றவை இரண்டாம்பட்சம் தான். ஹீரோ தன் அதிரடி ஆக்சனால் எப்படி மகளை மீட்கிறான் என்பதே அங்கே முக்கியம். அது தான் டேக்கனின் ஏ ஸ்டோரி. மனைவியை டைவர்ஸ் செய்தபின், அந்த உறவில் உள்ள சிக்கல்கள் டேக்கனின் பி ஸ்டோரி. இங்கே ஆக்சனும் த்ரில்லும் தான் பிரதானம். உணர்ச்சிகரமாகக் கதை சொல்வது என்பது இரண்டாம்பட்சம் தான்.

ஹாலிவுட்டின் சூப்பர்ஹிட் படங்களான Brune Identity, Die Hard போன்ற பல படங்களில் இருப்பது இந்தவகை கதை சொல்லல் தான். ப்ளேக் ஸ்னிடர் சொல்வதும், இந்தவகை கதை சொல்லல் தான். ஹாலிவுட்டில் இது தான் வெற்றிச்சூத்திரம். , ஹாலிவுட் படங்கள் உலகளாவிய வியாபாரத்தைக் கொண்டவை. ஒரே படம் அமெரிக்கனையும், சைனீஸையும்  இந்தியனையும் திருப்திப்படுத்த வேண்டும். இவர்களுக்கிடையே உணர்ச்சிகள் வேறுபடும். யாராவது இறந்தால் நாம் குலுங்கிக் குலுங்கி அழுவோம், அமெரிக்கன் தோளைக் குலுக்கிவிட்டுப் போய்விடுவான்.

ஒரு பெண் காதலிக்கவில்லையே என ஒருவன் நாக்கை வெட்டிக்கொண்டான் என்று கதை சொன்னால், ஹாலிவுட்டில் காரித்துப்புவார்காள். நாம் அதைக் கொண்டாடுவோம். இதனால் உணர் வுப்பூர்வமாகக் கதை சொல்வதைவிட, ஆக்சந்த்ரில்லர்களைக் கொடுப்பது எல்லோரையும் சென்றடையும். எனவே ஹாலிவுட் அந்தப் பாணியை கெட்டியகாப் பிடித்துக்கொண்டது. ஏ ஸ்டோரியை த்ரில்லராகவும், பி ஸ்டோரியை 'மெல்லிய' சென்டிமெட்டாகவும் அமைப்பது ஹாலிவுட் பாணி.

மகாநதியில் ஹீரோ கேரக்டரின் உணர்வுகள் தான் பிரதானம். ஹீரோ ஆக்சன் செய்வது இரண்டாம்பட்சம் தான். ஒரு அமைதியான மனிதனின் வாழ்க்கை எப்படி சிதறுகிறது, அப்போது அந்த கேரக்டர்களின் உணர்வுகள் என்ன என்று சொல்வது தான் இங்கே ஏ ஸ்டோரி. பாலியல் தொழிலில் பெண்குழந்தைகள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுவது, இங்கே இரண்டாம்பட்சம். ஹீரோ அதைத் தகர்த்து எறிவதோ, வில்லன்களை ஒழிப்பதோ மகாநதியில் முக்கியமே இல்லை.
Eyes Wide shut, Seven Samurai, தேவர் மகன் என ஐரோப்பிய-ஆசியப் படங்களில் ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்வதும், குணச்சித்திர வளைவும் முக்கியமான அம்சங்கள். சென்ற கட்டுரையில் பார்த்த The Call மற்றும் அரிமாநம்பி உதாரணங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். The Call வெற்றியடைந்த அதே நேரத்தில், அரிமா நம்பி ஏன் தோல்வியடைந்தது என்று இப்போது புரிகிறதல்லவா?

ஆங்கிலப்படங்களை அப்படியே விஷுவலாக மொழிபெயர்ப்பவர்கள் (காப்பி என்று சொன்னால் கோபித்துக்கொள்வார்கள்!) தவற விடுவது இந்த முக்கியமான விஷயத்தைத் தான். ஹாலிவுட் படங்களுடன் ஆங்கில திரைக்கதை புத்தகங்களையும் படித்துவிட்டு திரைக்கதையை கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கு ஆப்பு நிச்சயம். ( காப்பி அடித்து வெற்றியடைந்த படங்களைப் பார்த்தால், உணர்வுப் பூர்வமாகக் கதை சொல்லல் மேலோங்கி இருப்பதைப் பார்க்கமுடியும்.)


என்ன தான் டெக்னிகலாக ப்ளாட் பாயிண்ட்-1, ஆல் இஸ் லாஸ்ட் எல்லாம் சரியாக வைத்தாலும் உணர்வுப்பூர்வமாக ஆடியன்ஸை பிணைத்து வைப்பது முக்கியம். இல்லையென்றால் Structure மட்டுமே மிஞ்சும், அது படத்தை ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்து விடும். சரி, அதை எப்படிச் செய்வது?

இந்தத் தொடரில் ஏற்கனவே சொன்னபடி மகாபாரதத்தில் ஆரம்பித்து ராஜேஸ்குமார்வரை நல்ல வாசிப்பனுவம் வேண்டும். கூடவே வாழ்க்கையில் நிறைய அடி வாங்கியிருந்தால் மிகவும் சிறப்பு! இதையடுத்துச் செய்ய வேண்டிய விஷயம், நம் தமிழ் சினிமா ஜாம்பவான்களின் படங்களைப் பார்த்து கற்றுக்கொள்வது.


'பாரதிராஜா என்றால் அன்னக்கொடி டைரக்டர்..கமல் என்றால் காப்பி அடிப்பவர்' எனும் ஞானம் சினிமா விமர்சகர்களுக்கு வேண்டுமானால் உதவலாம். நம்மைப் போன்று கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் இதை விடுத்து, ஒரு மாணவனாக இவர்களை அணுக வேண்டியது அவசியம். என்னவகையான கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்கள், அதை எத்தகைய சூழ்நிலையில் பொருத்தியிருக்கிறார்கள், அது வெறும் டெக்னிகல் ஸ்ற்றக்சராக இல்லாமல் உணர்வுப்பூர்வமான சினிமாவாக ஆகியிருப்பது எப்படி என்று நாம் கற்றுத் தேறவேண்டும்.

இதற்கு தமிழ் சினிமவின் தலைசிறந்த படங்கள் என்று நாம் நம்பும் படங்களை ஒவ்வொன்றாக ஆராய்வது அவசியம். இந்த மண்ணுடன் உறவாடும் கேரக்டர்களை எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்று தெளிவதே நம் நோக்கம். அது ஒரு தனிப் புத்தகத்திற்கான டாபிக் என்பதால், அது தனித் தொடராக வெளிவரும். 'போச்சுடா..இவன் இந்தத் தொடரையே வாராவாரம் எழுதறதில்லெயே' எனும் உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. 

கவலை வேண்டாம், அபயம் தந்தோம். தமிழில் வந்த (என் பார்வையில்) உலக சினிமாக்களைப் பற்றிய இந்தத் தொடரை ஏற்கனவே www.tamilss.com-ல் எழுதிவிட்டேன். அந்தக் கட்டுரைகள் வாரம் ஒன்றாக இங்கே மீள்பதிவிடப்படும். இதற்கு அனுமதி அளித்த www.tamilss.com நிறுவனத்தார்க்கு நன்றிகள் பல. அந்த ‘தமிழில் ஒரு உலக சினிமா’ தொடரைப் படிப்பதோடு நில்லாமல், அந்தப் படங்களைப் படிக்கும்போதே பார்ப்பது உங்கள் கடமை. 
 ஆங்கிலத்தில் பல திரைக்கதை குருநாதர்கள் இருந்தாலும், ப்ளேக் ஸ்னிடரை மட்டுமே நான் கொண்டாடுகிறேன். காரணம், அவர் தான் ஏ ஸ்டோரி-பி ஸ்டோரி என இரு தெளிவான பிரிவுகளை பீட் ஷீட்டில் சொல்கிறார். தமிழுக்குப் படம் பண்ணும்போது, ஏ-ஐ பி- ஆக மாற்றுவதோ அல்லது ஏ-க்குச் சமமாக பி ஸ்டோரியையும் சொல்வதும் எளிது. அதற்கு அவரின் பீட்ஷீட் உதவும்.

திரைக்கதையின் அடிப்படை நோக்கம், ஆடியன்ஸை படத்துடன் பிணைத்து வைத்திருப்பது. அதனால்தான் 'உங்கள் ஆடியன்ஸ் யார்' என்று உணர்ந்துகொள்ளுங்கள் என்று சென்ற கட்டுரையில் சொன்னேன். அமெரிக்கனைப் பிணைக்கும் கயிறால், தமிழனைப் பிணைக்க முடியாது. தமிழனைப் பற்றிய, தமிழனின் ரசனையைப் பற்றிய புரிதல் இருந்தால்தான், வணிகரீதியில் வெற்றிகரமான கதையை உங்களால் உருவாக்கமுடியும். 

அதற்கு ’ராசா தியரி’ பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது என்னவென்று அடுத்த வாரம்...

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. பகுதி - 39 எங்கே சார்..? கானோமே..?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.