ஜெனர் – அறிவியல் புனைவுகள் (Science
Fiction)
அறிவியல்
தொழில்நுட்பத்தின் காரணமாக, ஒரு கேரக்டர் அல்லது சமூகத்தின் மீது ஏற்படும்
மாற்றத்தைப் பற்றியும், அந்த மாற்றம் தன் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தும்
பாதிப்புகளைப் பற்றியும் பேசுபவையே சைன்ஸ் ஃபிக்சன் எனப்படும் அறிவியல் புனைவுகள்
ஆகும்.
ஃபேண்டஸி
போன்றே சைன்ஸ் ஃபிக்சன் படங்களும் தமிழில் வெகுஅரிதாகவே வந்திருக்கின்றன. அறிவியல்
ஆராய்ச்சிகள் பற்றிய செய்திகளை ஏ செண்டர் ஆடியன்ஸே கண்டுகொள்ளாத சமூகம்
நம்முடையது. எனவே அறிவியல் புனைவுகள் கொஞ்சம் அந்நியத்தன்மையை நமக்கு கொடுக்கவே
செய்கின்றன. சமீபகாலத்தில் கமர்சியலாகவும் அறிவியல் புனைவுகள் வெற்றியடைய ஆரம்பித்துள்ளது
வரவேற்கத்தக்க விஷயம்.
அறிவியல்
புனைவுகள் படங்களைப் பற்றிப் பேசும்போது, நாம் பெருமைப்படகூடிய சில விஷயங்கள்
இருக்கின்றன. இந்தியாவின் முதல் சைன்ஸ் ஃபிக்சன் படம், தமிழில் தான்
எடுக்கப்பட்டது. காடு(1952) எனும் அந்தத் திரைப்படம், மாடர்ன் ஃபிக்சர்ஸுடன் இணைந்து
வில்லியம் பெர்க் எனும் ஹாலிவுட் இயக்குநர் தயாரித்து இயக்கிய படம். தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில், ஜி.ராமநாதனின் இசையில் உருவானது காடு. நம்பியார் அதில்
நடித்திருந்தார்.
அடுத்து,
இந்தியாவின் முதல் வேற்றுகிரகவாசி (Alien) படம், கலையரசி(1963). எம்.ஜி.ஆர்,
பானுமதி, நம்பியார் நடிப்பில் வெளியானது கலையரசி.
1967ஆம்
ஆண்டு, பெருமைக்குரிய வங்காள இயக்குநர் சத்யஜித் ரே ‘Alien’ எனும் படத்தினை இயக்க
ஆரம்பித்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் கைவிடப்பட்டது. 1982ல் ஹாலிவுட்
இயக்குநர் ஸ்பீல் பெர்க் E.T. எனும் ஆங்கிலப்படத்தினை வெளியிட்டபோது, தனது திரைக்கதையை
காப்பி அடித்து, E.T. எடுக்கப்பட்டதாக சத்யஜித் ரே நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
ஏனென்றால் Alien படம், ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான கொலம்பியா பிக்சர்ஸால்
தயாரிக்கப்பட்டது. அங்கேயிருந்தே தன் திரைக்கதை, ஸ்பீல் பெர்க் கையில்
கிடைத்திருக்க வேண்டும் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது.
ஆனாலும்
நமது இணையப் போராளிகளின் கொள்கையான ‘வெள்ளையா இருக்கிறவன் காப்பி அடிக்க மாட்டான்’
என்பதன்படி, சதயஜித் ரேயின் குற்றச்சாட்டு நிரூபிக்க முடியாமல்,
நிராகரிக்கப்பட்டது.
இந்தியாவின்
முதல் சைன்ஸ் ஃபிக்சன் மற்றும் ஏலியன் கதைகள் தமிழில் தான் உருவாக்கப்பட்டன
என்றாலும், இதுவரை 13 அறிவியல் புனைவுப் படங்களே வந்திருக்கின்றன. காரணம், அதன்
அந்நியத்தன்மை கொடுத்த தோல்வி தான்.
அந்தப்
படங்களைப் பற்றியும் அறிவியல் புனைவுகளின் வகைகளையும் இப்போது பார்ப்போம்.
ராட்சச
(Monster) கதைகள்:
திகில்
படங்கள் பார்க்கும்போதே இதையும் சற்றுப் பார்த்தோம். திகில் படங்களில் பேய்
என்றால், சைன்ஸ் ஃபிக்சன் படங்களில் ராட்சச இயல்புள்ள வில்லன்கள்.
சமூகத்திற்கு
இந்த வில்லனால் கெடுதல் நேரும்போது, ஹீரோ வந்து காப்பாற்றும் ஆக்சன் கதைகள் இவை.
எனவே இவை ஹாரர் ஜெனரில் சேராமல், சைன்ஸ் ஃபிக்சன் - ஆக்சன் ஜெனரில் தான் வரும்.
காடு(1952)
படத்தில் வரும் காட்டில் மிருகங்கள் விநோதமாக செயல்படுகின்றன, சத்தங்களை
எழுப்புகின்றன. அது அருகே இருக்கும் கிராமத்து மனிதர்களுக்கு பயத்தை
உண்டாக்குகிறது. காட்டில் என்ன தான் பிரச்சினை என்று கண்டுபிடிக்க, மூன்று
டூரிஸ்ட்கள் (ஹாலிவுட் நடிகர்கள்) முயற்சிக்கிறார்கள். முடிவில், பனியுகத்தில்
வாழ்ந்த ராட்சச யானைகள் (Wooly Mammoths) அந்தக் காட்டிற்குள் ஊடுருவியிருப்பதைக்
கண்டுபிடிக்கிறார்கள்.
படம்
முழுக்க பில்டப் ஏற்றிவிட்டு, கிளைமாக்ஸில் நம்மூர் யானைக்கு கொஞ்சம் மேக்கப்
போட்டு இது தான் மம்மூத் என்று ஏமாற்றினார்கள். படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்
பற்றி, விவரம் இல்லை!
1963ல்
அடுத்து மான்ஸ்டர் மூவியாக கலையரசி வந்தது. இதில் மான்ஸ்டர், வேற்றுகிரகவாசி. அந்த
வேடத்தில் வந்தது நம்பியார். படத்தின் கதையில் ஒரு சுவாரஸ்யம் உண்டு.
வேற்றுகிரகத்தில்
எல்லாமே சிறப்பாக இருக்கின்றன. ஆனால் கலைகளில் மட்டும் மக்கள் தேர்ச்சிபெறவில்லை.
எனவே பூமியில் இருந்து கலைகளில் சிறந்த நாயகியை (பானுமதி)க் கடத்திச் செல்ல,
ஏலியன் நம்பியார் வருகிறார். அந்த ஏலியனுடன் போரிட்டு ஹீரோ எம்.ஜி.ஆர்
காப்பாற்றுகிறார்.
இந்தக்
கதையைப் படித்ததும் உங்களுக்கு செல்வராகவனின் இரண்டாம் உலகம் ஞாபகம் வந்தால்,
அடியேன் பொறுப்பல்ல. தொடர்ந்து செல்வாவின் டவுசரை அவிழ்ப்பதில் எனக்கும்
சந்தோசமில்லை. ஏனென்றால், எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவர் அவர்.
கலையரசி
படமும் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. விஷுவலாக மிரட்டாதது ஒரு காரணம். இன்னொரு
காரணம், இந்தக் கதை நமது பழைய ராஜா ராணி கதையின் சாயலில் இருந்தது தான். ஒரு
நாட்டு இளவரசியை அண்டைநாட்டு மன்னன் கடத்த முனைவதும், அதை ஹீரோ (பெரும்பாலும்
தளபதி) போரிட்டுத் தடுப்பதும் பல கதைகளில் வந்த விஷயம் தான். ஏலியனின்
அந்நியத்தன்மையும் இதில் சேர, படம் சோபிக்கவில்லை.
இந்த சைன்ஸ்
ஃபிக்சன் சமாச்சாரம் எல்லாம் நமக்கு ஒத்துவராது எனும் தெளிவு பிறந்ததால், அதன்பின் யாரும் அத்தகைய
கதைகளில் இறங்கத்துணியவில்லை. அதன்பிறகு 26 வருடங்களுப்பிறகு வந்தது, நாளைய மனிதன்
(1989). தமிழில் முதன்முறையாக சூப்பர் ஹிட் ஆன, சைன்ஸ் ஃபிக்சன் மூவி.
இறந்தவர்களை
உயிர்ப்பிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கிறார் ஒரு டாக்டர். அதை ஒரு பிணத்திற்குச்
செலுத்தி டெஸ்ட் பண்ணும்போது, சாகாவரம் பெற்ற மான்ஸ்டராக அந்தப் பிணம்
உருவெடுக்கிறது. அஜய் ரத்தினம் நாளைய மனிதனாக நடித்துக் கலக்கியிருந்தார். ஹிரோவாக
பிரபு.
அந்தப்
படம் தந்த வெற்றியில், அதன் இரண்டாம்பாகமான அதிசய மனிதன் 1990 வெளியானது.
அதில்
இருந்து 20 வருடங்கள் கழித்து உருவான மான்ஸ்டர் மூவி, ஷங்கரின் இயக்கத்தில்
ரஜினிகாந்த் நடித்த எந்திரன்(2010).
ஒரு
விஞ்சானி தான் கண்டுபிடித்த ரோபோவிற்கு உணர்வூட்டும்போது, அது மான்ஸ்டர் ஆகி,
அவரது காதலியைவே லபக்குகிறது எனும் சுவாரஸ்யமான கதையுடன் வெளியானது எந்திரன். தமிழில்
அதிக பொருட்செலவில் உருவாகி, பெரும்வெற்றி பெற்றது.
அடுத்து
2012ல் அம்புலி வந்தது. 150 வருடங்களுக்கு மேல் மனிதர்களை வாழவைக்கும் மருந்தைக்
கண்டுபிடித்த ஒரு விஞ்சானி, அதை ஒரு பெண்ணின் கருவிற்குச் செலுத்துகிறார். அந்தக்
குழந்தை ஒரு மான்ஸ்டராகப் பிறக்கிறது. இதில் அம்புலி எனப்படும் மான்ஸ்டரால்
ஏற்படும் அழிவுகளைவிட, அம்புலி யார் எனும் துப்பறிதலே திரைக்கதையில் முக்கியப்
பங்கு வகித்தது. அந்தவகையில் இப்படம், சைன்ஸ் பிக்சன் – மிஸ்ட்ரி ஜெனரில் சேரும்.
இந்தவகையில்
கடைசியாக வந்த படம், அப்புச்சி கிராமம். விண்கல் ஒன்று தான் இங்கே மான்ஸ்டர்.
ஆனாலும் விண்கல் கிராமத்தைத் தாக்க வருவதால் அல்லது தாக்குவதால் ஏற்படும்
விளைவுகளைப் பற்றிப் பேசாமல், இரு காதல் ஜோடிகளின் கதையில் அதிக கவனம்
செலுத்தியதால் படம் படுதோல்வி அடைந்தது.
இந்த
வகையில் வில்லன் என்பது வேற்றுகிரகத்தில் இருந்து வருவதாகவோ அல்லது ஒரு
விஞ்சானியின் டெக்னிகல் மிஸ்டேக்(!!) ஆகவோ தான் இருக்கும்.
நல்ல ‘ராட்சச’
கதைகள்:
இவ்வகைப்
படங்களில் ஹீரோவுக்கு, அறிவியல் ஆராய்ச்சியின் பலனாக ஒரு புதிய சக்தி கிடைக்கும்.
அதை வைத்துக்கொண்டு ஹீரோ என்ன செய்கிறான் என்பதே கதை.
இதை வைத்து
அட்வென்ச்சர் கதை சொல்லலாம் என்றாலும், இதுவரை தமிழில் காமெடிக் கதைகள் மட்டுமே
சொல்லப்பட்டுள்ளன. அதுவும் இரண்டே படங்கள்!
இவ்வகையில்
வந்த முதல் படம், எஸ்.ஜே. சூர்யா கொடுத்த நியூ(2004). தமிழில் முதலில் வந்த, முழுமையான
செக்ஸுவல் காமெடி மூவி என்றும் சொல்லலாம்.
சிறுவனை
இளைஞன் ஆக்கும் மருந்தைக் கண்டுபிடித்த ஒரு விஞ்சானி, அதை ஹீரோவிடம் செலுத்தி
சோதித்துப் பார்க்கிறார். அதனால் உடலளவில்
இளைஞனாகவும், மனதளவில் குழந்தையாகவும் ஹீரோ படும் அவஸ்தைகளே கதை. விஞ்சானியின்
‘டெக்னிகல் மிஸ்டேக்’ கேட்டகிரி கதை தான்.
கலாச்சாரத்தில்
மேன்மை பெற்ற(!) நம் நாடு, பயந்து போய் கொடுத்த சென்சார் சர்டிஃபிகேட்டைத் திரும்ப
வாங்கிக்கொள்ளும் அளவிற்கு எஸ்.ஜே.சூர்யா இறங்கி அடித்த படம். எப்போதாவது இந்த
நாட்டு மக்களுக்கு அறிவு வளர்ந்துவிட்டதாக அரசு நம்பினால், மீண்டும் படத்திற்கு
சென்சார் சர்டிஃபிகேட் கொடுக்கலாம்.
அடுத்து,
இந்த வகையில் வந்த படம் இன்று நேற்று நாளை (2015). தமிழில் டைம் டிராவலை வைத்து
எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்.
2065ல் ஒரு
விஞ்சானி டைம் டிராவல் மெசினை கண்டுபிடிக்கிறார். அதைச் சோதிக்க 2015க்கு அதை
அனுப்புகிறார். அது ஹீரோ கையில் கிடைக்க, அதை வைத்து ஹீரோ செய்யும் செயல்களே கதை.
இதுவும்
காமெடியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தது.
Fight For
Technology:
விஞ்சானி(கள்),
ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். பெரும்பாலும் நவீன ஆயுதங்கள். அது
வில்லன் கோஷ்டியின் கையில் சிக்கிவிட, ஹீரோ மீட்டெடுக்கும் அட்வென்ச்சர் கதைகள்
இவ்வகையில் வரும்.
இதில்
மான்ஸ்டர் கேரக்டர் கிடையாது. அழிவை உண்டாக்கும் அந்த ஆயுதம் தான் மான்ஸ்டர்.
இந்த
வகையில் வந்த முதல் திரைப்படம், விக்ரம் (1983).
ஏன் இந்தப்
படம் ஓடவில்லை என்று இன்று பலராலும் கேட்கப்படும் படம். ஜேம்ஸ்பாண்ட் டைப்
ஹீரோவாக, கமலஹாசன் நடித்து வெளிவந்த படம்.
ஒரு
ஏவுகணையை வில்லன் கும்பல் கடத்திவிட, அதை ஹீரோ மீட்பதே கதை. அன்றைக்கு இருந்த
சினிமா டெக்னாலஜியை வைத்து, முடிந்தவரை சிறப்பாக படத்தைக் கொடுத்திருந்தார் கமல்.
அதன்பிறகு
2008ல் தசாவதாரம் எனும் அடுத்த சைன்ஸ்ஃபிக்சன் படத்துடன் வந்தார் கமல். சைன்ஸ்
ஃபிக்சனுடன் பட்டர்ஃப்ளை எஃபக்ட், பத்து வேடங்கள் என கலந்துகட்டி அடித்திருந்தார்.
ஒரு அழிவை
உண்டாக்கும் வைரஸ் ஒன்று வில்லன்களிடம் சிக்கிவிடாமல் தடுக்க, ஹீரோ மேற்கொள்ளும்
அட்வென்ச்சரே கதை.
ஒரு அழிவு ஆயுதம் – அதன்மேல் வில்லன்களுக்கு கண்
– ஹீரோவின் சாகசம் என்பதே இவ்வகைப் படங்களின் அடிநாதம்.
இந்த
உலகத்தைக் காப்பது நம் கடமை எனும் மனநோய் வெள்ளைக்காரர்களுக்கு உண்டு. எனவே
ஹாலிவுட்டில் சைன்ஸ் ஃபிக்சன் என்றால், உலகத்திற்கே அழிவு வந்துவிட்டதாகவும் உலகத்தை
அவர்களே காப்பதாகவும் கதை சொல்வது அங்கே வழக்கம்.
பொதுவாக
அறிவியலைவிட மனித நேயமே முக்கியம் என்ற கருத்தை சைன்ஸ் ஃபிக்சன் படங்கள்
முன்வைக்கும்.
ஃபேண்டஸி
போன்றே சைன்ஸ் ஃபிக்சனும் மற்ற ஜெனருடன் இணைந்தே வரும். வில்லன் அல்லது
பிரச்சினைக்கு காரணம், அறிவியலாக இருக்கும். அதன்பின் அது ஆக்சனாகவோ,
அட்வென்ச்சராகவோ, காமெடியாகவோ ஆகலாம்.
(தொடரும்)
அருமை....வாழ்த்துக்கள்.....
ReplyDelete