Monday, July 6, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 47



ஜெனர் – Film Noir & Neo-Noir



இது தமிழ் சினிமாவிற்கு இன்னும் புதியதாகவே இருக்கும் ஒரு ஜெனர். ஆக்சன் படம் என்றால் என்னவென்று விளக்கத்தேவையில்லை. ஏனென்றால் எத்தனையோ ஆக்சன் படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஃபிலிம் நுஆர் என்பது இன்னும் தமிழில் பரவலாக அறியப்படாத ஜெனராகவே இருக்கிறது. ஒரு ஜெனருக்கு திரைக்கதை எழுதுகிறோம் என்றால், அதனைப் பற்றிய முழுமையான புரிதல் அவசியம். எனவே இதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.



German Expressionism என்பது தான் இவ்வகை ஜெனருக்கு தாய் என்று சொல்லலாம். அதில் இருந்தே ஃபிலிம் நுவார் உண்டானது. ஃபிலிம் நுஆரில் இருந்து நியோ-நுஆர் உருவானது.



ழைய படங்களைப் பார்க்கும்போதெல்லாம் பேசியே கொல்றாங்களே என்று நமக்குத் தோன்றும். அப்போது நடந்துவந்த நாடகங்களை அப்படியே கேமிராவில் பதிவு செய்து, சினிமா என்று ஏமாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்று கோபமும் சிலருக்கு வருவதைக் காண்கிறோம். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே நடந்துவந்த விஷயம் தான். 



பேசும்படம் வந்தவுடன், நாடக சினிமாக்களே அதிகம் உருவாக்கப்பட்டன. வசனங்கள் மூலம் கதை சொல்வதே, அப்போதைய படைப்பாளிகளுக்குத் தெரிந்த எளிய வழி. இதைத் தான் ஹிட்ச்காக் ‘மௌனப்படக் காலத்தில் காட்சிகளின் வழியே கதை சொல்லும் கட்டாயம் இருந்தது. பேசும் சினிமா வந்து, சினிமாவைக் கெடுத்துவிட்டது.’ என்று சொன்னார்.


அந்த நாள் படத்தில் சிவாஜி


மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்வதில்லை. சினிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, மாறிக்கொண்டே இருக்கிறது. ஹிட்ச்காக் போன்ற ‘உண்மையான’ படைப்பாளிகள் (Auteur) , சினிமாக் கலையை வளர்த்தெடுத்தார்கள். அவ்வப்போது தோன்றிய கலை இயக்கங்கள், அவர்களுக்கு உதவின. அவற்றில் ஒன்று, German Expressionism. 



1905ஆம் ஆண்டு, ஓவியங்களில் பெரும் மாற்றத்தை நிழத்தியது German Expressionism. ’இருப்பதை அப்படியே வரைய வேண்டிய அவசியம் இல்லை. ஓவியம் சொல்ல விரும்பும் விஷயங்களை கலர் மூலமும் வித்தியாசமான வரையும் முறை மூலமும் (மாடர்ன் ஆர்ட் போன்று) சொல்ல வேண்டும்’ எனும் கருத்து ஜெர்மனியில் அப்போது உருவானது. பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன், கலர், லைட்டிங், செட்டிங்/சூழ்நிலை மூலம் உரையாடுவதே இதன் அடிப்படை நோக்கம்.



முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின்னர், மக்கள் வாழ்க்கையின் மீதே நம்பிக்கை இழந்திருந்தார்கள். பெரும் மனக்கொந்தளிப்பான சூழ்நிலையே நிலவியது. அப்போது தான் ’கேரக்டர்களின் எண்ண ஓட்டத்தை வசனங்களின் மூலம் அல்லாமல் German Expressionism மூலம் சொல்லும் உத்தியை படைப்பாளிகள் கையில் எடுத்தார்கள்.



1920ஆம் ஆண்டு Robert Wiene எனும் ஜெர்மானிய இயக்குநரின் இயக்கத்தில் வெளியான The Cabinet of Dr. Caligari எனும் மௌனப்படம், சினிமா கதை சொல்லும் உத்தியை புரட்டிப்போட்டது. செட்டிங், லைட்டிங் மூலம் வித்தியாசமான சூழலையும் நிழல் உருவங்களையும் உருவாக்குவதன் மூலம், ஒரு கேரக்டரின் எண்ண ஓட்டத்தை பார்வையாளனுக்கு புரிய வைக்க முடியும் என்று நிரூபித்தது அந்தப் படம்.



அது கருப்பு வெள்ளைக் காலம் என்பதால், நிழல்களுக்கும் வெளிச்சத்துக்குமான் முரண்பாட்டைப் பயன்படுத்தியே விஷுவலாக கதை சொல்லவேண்டியிருந்தது. Murnau  இயக்கிய Nosferatu (1922 ) படம், அதில் உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து வந்த இரண்டாம் உலகப்போர், இந்த இயக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தாலும், விஷுவலாக கதை சொல்ல விரும்புவோருக்கான இலக்கணமாக German Expressionism நிலைத்தது. 


சினிமா என்பது வாழ்க்கையின் சந்தோஷங்களை மட்டுமே காட்டி, மக்களை குஷிப்படுத்துவது மட்டுமல்ல, இலக்கியம் போல் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் ஆடியன்ஸ் முன் வைக்கும் கடமை சினிமாவுக்கு உண்டு. இரண்டாம் உலகப்போருக்குப் பின் மக்கள் இருந்த குழப்பமான சூழலில், இந்தக்கருத்து வலுப்பெற்றது.


த்ரில்லர் படங்கள் அதிகளவில் வர ஆரம்பித்தன. அவ்வகைகளில் உச்சமாக ஃபிலிம் நுஆர் அமைந்தது. The Maltese Falcon(1941) எனும் படத்தைத் தான் முதல் ஃபிலிம் நுஆர் படமாக குறிப்பிடுகிறார்கள். ஃபிலிம் நுஆர் என்பதை அப்படியே மொழிபெயர்த்தால், கருப்புத் திரைப்படம் அல்லது இரவுத் திரைப்படம் என்று பொருள்படும். வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை கதை பொருளாகப் பேசுவதாலும், அதை இருட்டான காட்சிகள் மூலம் சொல்வதாலும் இந்தப் பெயர் கிடைத்தது.


ஃப்லிம் நுஆர், தன் கதை சொல்லும் முறையை German Expressionism-மிடம் இருந்தே பெற்றுக்கொண்டது. 


‘அன்பு தான் வாழ்வில் உயர்ந்த விஷயம். சகமனிதர்மீதான நம்பிக்கையே வாழ்வின் அடித்தளம். பெற்றோர் தெய்வம். உடன்பிறந்தோர், இறுதிவரை துணை நிற்கும் ரத்த சொந்தங்கள், நட்புக்காக உயிரையும் கொடுப்பான் நண்பன், காதல் புனிதமானது’ என்று வழக்கமான சினிமாக்கள் கதை சொல்கின்றன.


ஆனால் நிஜத்தில் அப்படியே எல்லோருக்கும் நடக்கிறதா என்ன?


பத்து வருடம் அரேபிய பாலைவன வெயிலில் வதங்கியபடி சம்பாதித்து ஊருக்கு அனுப்பி விட்டு, ‘போதும்..நான் ஊருக்கு வந்திடறேன்’ எனும் மகனை ‘இங்கே வந்து என்னப்பா செய்யப்போறே..இன்னும் நாம செட்டில் ஆகவே இல்லையே’ என்று சொல்லும் செலவாளி பெற்றோர்கள்..


கல்யாணம், பிரசவம், பிள்ளைகளுக்கான செலவு என எல்லாவற்றிற்கும் அண்ணனின் சம்பாத்தியத்தையே உறிஞ்சு செட்டில் ஆகிவிட்டு, சீர் செய்தே போண்டியான அண்ணனிடம் ‘நீ என்னத்த கிழிச்சே?’ என்று கேட்கும் பாசக்கார சகோதரிகள்..


காதலிப்பதாகச் சொல்லிவிட்டு, அதைவிட வசதியான இடம் அமைந்ததும் கழறிவிடும் காதலன்/காதலிகள்..


கூட இருந்தே குழிபறிக்கும் நண்பர்கள்..


என நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கும் கதைகளில் வரும் கற்பனை வாழ்க்கைக்கும் இடைவெளிகள் ஏராளம்.


இதையும் பதிவு செய்ய வேண்டியது, ஒரு படைப்பாளியாக சினிமாத்துறையினரின் கடமை என்பதே ஃபிலிம் நுஆருக்கு அடிப்படை.

(ஆரண்ய காண்டம் தவிர்த்து) தமிழில் இவ்வகை ஜெனர் இன்னும் மழலைப்பருவத்திலேயே இருந்தாலும், ஃபிலிம் நுஆர் கூறுகளுடன் வந்த படங்கள் சில உண்டு. முக்கியமாக, அந்த நாள், புதியபறவை, சுப்ரமணியபுரம்.

(சுப்பிரமணியபுரம் படத்தை சென்ற பகுதியில் கேங்ஸ்டர் படம் என்று சொன்னாயே என்று சண்டைக்கு வராதீர்கள். சுப்பிரமணியபுரம், காதல் படமாக ஆரம்பித்து, கேங்ஸ்டர் படமாக வளர்ந்து, ஃபிலிம் நுஆராக முடிந்த படம். காமெடி & காதல் ஜெனர் தவிர்த்து, தமிழில் சுத்தபத்தமான ஜெனர் படங்கள் கிடைப்பது அரிது. உலக அளவிலும் த்ரில்லர் படங்கள், ஃபிலிம் நுஆர் கூறுகளுடன் தான் வெளிவருகின்றன.)



எனவே Film Noir என்பதை, ‘வாழ்க்கையின் அவலப்பக்கத்தை, ஜெர்மன் எக்ஸ்பிரசிசத்தின் விஷுவல்தன்மையுடன் காட்சிப்படுத்தும் படங்களே ஃபிலிம் நுஆர்’ என்று வரையறுக்கலாம்.


சரி, அதென்ன ‘Neo-Noir’?

Film Noir என்பது கறுப்பு-வெள்ளைப்பட காலகட்டத்தில் உருவாகி, வளர்ந்த விஷயம். இருட்டு, நிழல்கள், High Contrast, Long shots போன்ற விஷுவல் உத்திகளுடன் உருவாக்கப்படவை. கலர், சினிமாஸ்கோப் போன்றவை வந்தபிறகு, புதிய ஒளிப்பதிவு டெக்னிக்கள், புதுமையான காட்சிப்படுத்தும் விதம், புதிய டெக்னாலஜியை வைத்து சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்றவை பிரபலம் ஆகின.


விஷுவலாக கதை சொல்வதையே முக்கியமாகக் கொண்ட ஃபிலிம் நுஆர், இந்த டெக்னாலஜி வளர்ச்சியை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளானதில் ஆச்சரியமில்லை. கூடவே, செக்ஸ் மற்றும் வன்முறைக்காட்சிகள் மீதான கட்டுப்பாடு உலக அளவில் குறைய ஆரம்பித்தன. இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு ஃபிலிம் நுஆர், நியோ-நுஆர் என்று உருமாற்றம் பெற்றது. நியோ-நுஆர் என்றால் புதிய கறுப்புத் திரைப்படம் என்று அர்த்தம்!



ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கு பொதுவான அறிவுரை ‘பேச்சைக் குறை..காட்சிப்படுத்து’ என்பது தான். நியோ-நுஆர் போன்ற விஷுவலுக்கு முக்கியம் கொடுக்கும் படங்களுக்கு திரைக்கதை எழுதும்போது, அந்த அறிவுரையை இன்னும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டியதாகிறது. இனி, நியூ-நுஆர் திரைக்கதை எழுதும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.




மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.