Friday, January 29, 2016

இறுதிச் சுற்று - திரை விமர்சனம்


அதாகப்பட்டது..:
மன்மதன் அம்பு, வேட்டைக்குப் பிறகு, நான்கு வருடங்கள் கழித்து மாதவன் நடிக்கும் படம் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த படத்தைப் பார்க்க நினைத்தேன். இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகும் படம் என்றாலே நமக்கு அலர்ஜி. இரண்டுங்கெட்டானாக படத்தை எடுத்து, நம்மை கதற விட்டுவிடுவார்கள். பெண் இயக்குநர் வேறு. பெண்ணியம், புர்ச்சி என்று சுற்றிச் சுற்றி அடிப்பார்களோ எனும் பயம் வேறு. 
ஆனாலும் சி.வி.குமார் தயாரிப்பு என்பதால் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. கூடவே முன்னாபாய், 3 இடியட்ஸ் போன்ற அற்புதமான ஹிந்திப் படங்களைக் கொடுத்த ராஜ்குமார் ஹிரானி, இந்த படத்தின் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார் என்றதும், இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கப்போகிறது என்று பட்சி கூறியது. எதிர்பார்த்த மாதிரியே, இன்னொரு பொன் (காக்கா) முட்டை!


ஒரு ஊர்ல :
ஒரு தோற்றுப்போன குத்துச்சண்டை வீரன்&பயிற்சியாளன், ஒரு குப்பத்துப் பெண்ணை உலக சாம்பியனாக ஆக்குவதே கதை.


உரிச்சா:

இந்தக் கதையில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது? ஹீரோவின் சோகக்கதை, ஹீரோயினின் வறுமை+லட்சியம், ஹீரோ உதவுவது, சோதனைகள், அதிகாரிகளின் பாலிடிக்ஸ், இறுதியில் வெற்றி என்பது தான் இவ்வகைக் கதைகளின் டெம்ப்ளேட். ஆனால் இந்த படத்தில் இவை எல்லாமே இருக்கின்றன, ஆனால் புதிதாக. இதுவரை பார்த்திராத வகையில், படத்தைக் கொண்டுபோகிறார்கள். ஹிரோவின் கதையை ஜஸ்ட் லைக் தட் வசனத்தில் கடந்துபோகிறார்கள். ஹீரோயினுக்கு லட்சியம் இல்லை, அக்காவுக்குத் தான் லட்சியம். பாலிடிக்ஸ் சீன்கள் யதார்த்தத்தின் உச்சமாக இருக்கின்றன. திரைக்கதையை இன்ச் பை இன்ச் செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு சீனும், கதை நகரும் விதமும் அட்டகாசம்.

1990களில் அஸ்வினி நாச்சப்பா எனும் ஓட்டப்பந்தய வீராங்கனையின் வாழ்க்கையை மையப்படுத்தி, அஸ்வினி எனும் படம் வந்து சூப்பர்ஹிட் ஆனது. அதற்குப் பிறகு, இவ்வகை விளையாட்டு படங்கள் தமிழில் வெற்றி பெறவில்லை. அதிலும் பாக்ஸிங் என்றால் சுத்தம். சமீபத்தில் மான் கராத்தே, பூலோகம் போன்றவை சுமாரான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, இறுதிச் சுற்று களமிறங்கியுள்ளது.

மாதவன் ஒரு திமிர்பிடித்த கோச் என்றால், அவரை விடவும் திமிர் பிடித்த, தைரியசாலியாக ஹீரோயின். இருவரும் மோதிக்கொள்ளும்போது, செம ரகளையாக இருக்கிறது. மாதவன் பற்றி அறிந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர் காதலில் விழுவது கவிதை. அக்காவின் கனவு ஒரு பக்கம், ஹீரோவின் கனவு இன்னொரு பக்கம். நடுவே ஹீரோயின் என கதைக்களம் போகப் போக சூடாகிக்கொண்டே செல்கிறது.

இது பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பதால், காட்சிகள் எதையும் விவரிக்க விரும்பவில்லை. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை நம்மை படத்துடன் ஒன்ற வைத்து, ஆனந்தக் கண்ணீருடன் கண்கலங்க வைத்து படத்தை முடிக்கிறார்கள்.

பெண் இயக்குநர்கள் மீதான பயத்தைப் போக்கி, நம்மை அசரவைக்கும் படத்தைக் கொடுத்த இயக்குநர் சுதா கொங்குராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!


மாதவன்:

‘இந்த படத்துக்காக உடம்பை ஏற்றினேன், அதற்கு இரண்டு வருடம் உழைத்தேன்’ என்றெல்லாம் மாதவன் பேட்டி கொடுத்தபோது, அது வழக்கமான க்ளிஷே பில்டப்பாகத்தான் தோன்றியது. ஆனால் படத்தைப் பார்க்கும்போது, மாதவனின் கடும் உழைப்பு தெரிகிறது. அவர் வரும் ஒவ்வொரு சீனிலும் நடிப்பு ராட்சசனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தம்பி படத்திற்குப் பிறகு, அதே மாதவன் வெற்றிகரமாகத் திரும்பி வந்திருக்கிறார். தனு வெட்ஸ் மனு போன்ற படங்களின் மூலம் ஹிந்தியில் தொடர்ந்து வெற்றிகரமான ஆளாக இருந்தாலும், தமிழில் விழுந்துவிட்ட கேப்பை இந்த அருமையான படத்தின் மூலம் ஈடு செய்திருக்கிறார். திரைக்கதை உதவி என்று மாதவன் பெயர் வருகிறது. இந்த படத்தின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்புக்கு ஏற்ற வெற்றியை அவர் பெற்றிருக்கிறார்.


படத்தில் ‘வயசாகிடுச்சு’ எனும் வசனம் அடிக்கடி வந்தாலும், தாடி-மீசையை எடுத்துவிட்டால் மேடி இப்போதும் ஹேண்ட்சம் யூத் தான்!


ரித்திகா சிங்:

உண்மையிலேயே பாக்சர். ஆனால் சிம்பிளான அழகி. அதைவிட ஆச்சரியம், நடிப்பில் பின்னுவது. ஒரு குப்பத்துப் பெண்ணாக துடுக்குத்தனம் காட்டுவதும், அக்காவின் கனவுக்கு உதவுவதும், அதிகார வர்க்கத்தின் பாலிடிக்ஸில் சிக்கி சின்னாபின்னமாவதுமாக எல்லா சீனிலும் நம்மை நடிப்பால் நாக்-அவுட் செய்கிறார். மாதவன், நாசரையே சில சீன்களில் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார். அதிலும் கிளைமாக்ஸில் ஓடிவந்து, மாதவன் மேல் தாவுவது சூப்பர்.

சொந்த பந்தங்கள்:

நாசருக்கு இதுவொரு முக்கியமான படம். அப்படியே அந்த கேஷுவல் கோச்சிங் கேரக்டரை ஸ்க்ரீனில் கொண்டுவந்திருக்கிறார். ராதாரவியிடம் மாதவனின் ஓடிப்போன மனைவி பற்றி கமெண்ட் அடிக்கும் இடம் அதகளம். வில்லனாக வரும் ஹிந்தி நடிகர் ஜாகீர் உசேனும் மிரட்டியிருக்கிறார்.

ஹீரோயினின் அக்காவாக நடித்திருப்பவர், மும்தாஜ் சர்க்கார். பி.சி.சர்க்கார் எனும் பிரபல மேஜிக் நிபுணர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரின் மகள் இவர். மிகவும் நுணுக்கமான நடிப்பாற்றலும், அந்த அக்கா கேரக்டரை வாழ்ந்து காட்டியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் ஹீரோயினுக்கும் இவருக்கும் நடக்கும் மௌனயுத்தத்தில், இவரின் நடிப்பு தான் டாப்.

 நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- மாதவன் தவிர்த்து, வேறு அட்ராக்சன் எதுவும் விளம்பரத்தில் இல்லாதது. ஹிந்தியிலாவது நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கினார்கள். தமிழில் மாதவனின் கம் பேக் மட்டும் தான் ஒரே விளம்பரம். மக்கள் எல்லாம் அரண்மனை-2 எனும் குடிசைப் பக்கம் தான் ஒதுங்குகிறார்கள்.

 பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- திரைக்கதை
- மாதவன் & ரித்திகாசிங்
- சந்தோஷ் நாராயணனின் ’கதையை நகர்த்தும்’அருமையான பாடல்கள்
- பாக்ஸிங் படங்களில் முக்கியம், எடிட்டிங் தான். பெர்ஃபெக்ட் எடிட்டிங்!
- ஆரஞ்சு டோனில் யதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவு
- ஒரு நல்ல இயக்குநருக்கான அடிப்படை அடையாளம், வாய்ஸ் சின்க் தான். ஹீரோயினுக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது. ஆனால் படத்தில் பெர்ஃபெக்ட்டாக வாயசைத்திருக்கிறார். அதில் ஆரம்பித்து, எல்லா விஷயத்திலும் பக்கா டைரக்சன்.

பார்க்கலாமா?
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. அழகான விமர்சனம்........எனக்குப் பிடிக்கவில்லை,படம்.........

    ReplyDelete
  2. விமர்சனம் நன்று நண்பரே...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.