Monday, January 18, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 68


68. ஜெனர் - நகைச்சுவைப் படங்கள்

ஜெனர்களிலேயே கஷ்டமானது, இந்த நகைச்சுவை ஜெனர் தான். த்ரில், சோகம் போன்ற விஷயங்களைக்கூட எளிதில் ஆடியன்ஸிடம் தூண்டிவிடலாம்; ஆனால் சிரிக்க வைப்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம். நகைச்சுவை என்பதற்கான வரையறையும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வருகின்றன. ஆரம்ப காலப் படங்களில் அஷ்டகோணல் சேட்டைகளுக்குக்கூட நம் ஆட்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். 90% பழைய படங்களின் நகைச்சுவைகள் தற்போது சிரிப்பை வரவழைப்பதில்லை. பழைய காதல், சோக காவியங்களின் டெம்ப்ளேட்கூட இப்போதும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஆனால் நகைச்சுவையைப் பொறுத்தவரை, காலப்போக்கில் வரும் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மற்ற ஜெனர்களை விட, இந்த ஜெனருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது, நடிகர்களின் பங்களிப்பு தான் நகைச்சுவை ஜெனர் மாற்றங்களுக்கு அடிப்படையாக உள்ளது. சமீப காலத்தில் நோக்கினால் கவுண்டமணி, விவேக், வடிவேலுவின் வருகையால் புதுவிதமான காமெடிகள் உருவானதை நாம் உணர முடியும். ஒரு நல்ல நகைச்சுவைக் கலைஞனால், இந்த ஜெனரை புதிய திசையில் மாற்றிவிட முடியும். நகைச்சுவை நடிகர்களை மூன்று வகையாக நாம் பிரித்துவிட முடியும். ஒன்று, காளி என். ரத்தினம், நாகேஷ், செந்தில், வடிவேலு போன்ற முட்டாள் கேரக்டர் வகையினர்; மற்றொன்று என்.எஸ்.கே,விவேக், கவுண்டமணி போன்ற அறிவாளி கேரக்டர் வகையினர். மூன்றாவது, ஒய்.ஜி.மகேந்திரன், ஜனகராஜ், சந்தானம் போன்ற நண்பேன்டா வகையினர்.


ஒவ்வொரு காலகட்டத்திலும், இதில் ஏதேனும் ஒருவகையினரின் ஆதிக்கத்தின் கீழ் நகைச்சுவை ஜெனர் வரும். அந்த காலகட்ட நகைச்சுவைப் படங்கள், இந்த கேரக்டர்களை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்படும். அதாவது, நீங்கள் புத்திசாலி காமெடியனை மனதில் வைத்து திரைக்கதை உருவாக்கியிருக்கலாம். அது படமாக்கப்படும்போது, புத்திசாலி கேரக்டர் நடிகர் கிடைக்கவில்லையென்றால் அல்லது முட்டாள் கேரக்டர் நடிகருக்கு மார்க்கெட் கூடிவிட்டால், திரைக்கதையை அதற்கேற்ப மாற்ற வேண்டியிருக்கும். வின்னர் திரைக்கதை கவுண்டமணியை மனதில் வைத்து எழுதப்பட்டது. ஆனால் வடிவேலு கமிட் ஆனதும், மொத்த திரைக்கதையும் அதற்கேற்ப மாற்றப்பட்டதை இதற்கு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். எனவே இந்த மூன்றுவகை கேரக்டர்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. முட்டாள் காமெடியன்:

இந்த வகையைத் துவக்கி வைத்தவராக, காளி என்.ரத்தினத்தைச் சொல்லலாம். சபாபதி (1941)-ல் அவர் நடித்த முட்டாள் வேலைக்காரன் கதாபாத்திரம் இன்றுவரை பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த வகை நடிகர்கள் ஈகோவை சுத்தமாக விட்டுவிட்டு, கலைக்காக நம்மை மகிழ்விப்பதற்காக தன்னையே தாழ்த்திக்கொள்ளும் உன்னதமான நடிகர்கள் என்றே சொல்ல வேண்டும். தற்போதைய நகைச்சுவை நடிகர்களின் செயல்படுகளைப் பார்க்கும்போது, இது எவ்வளவு கடினமான பணி என்பது புரியும். தன்னைத் தாழ்த்தி புகழ்பெற்றவர்கள்கூட, ஒரு கட்டத்தில் ஈகோவால் அப்படி நடிக்க முடியாமல் அழிவதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். உண்மையில், மக்களிடம் இவ்வகை காமெடியன்களுக்கு நல்ல மரியாதையும், பெரும் ஆதரவும் கிடைப்பது வழக்கம்.

ஹீரோவுடன் இருந்தாலும் சரி, வேறு காமெடியனுடன் இருந்தாலும் சரி; இவ்வகை கேரக்டர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் தவறாகவே முடிந்து ஆடியன்ஸுக்கு சிரிப்பை வரவழைக்கும். ஹீரோவின் காதல் ஆனாலும், பழி வாங்கல் ஆனாலும் ஹீரோவுக்கு துணையாக இருந்து, மிகச்சரியாக சொதப்புவது இந்த கேரக்டர்களின் தனித்திறமை. இவர்களுக்கு உடல்மொழி ஒரு முக்கிய ஆயுதமாக இருக்கும். அங்க சேஷ்டைகள் மூலம், திரையில் வந்தாலே சிரிக்க வைத்துவிடுவார்கள். நாகேஷ் நுணுக்கமான அங்க அசைவுகள்/பார்வைகள் மூலம் இதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவார். இந்த தலைமுறையில், வடிவேலு அதில் வித்தகர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. தனது நடிப்புத்திறமையால், ஒரு ஆவரேஜ் நகைச்சுவையைக்கூட சிறப்பானதாக இவர்களால் ஆக்க முடியும்.

2. அறிவாளி காமெடியன்:

சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டுவதும், ஹீரோ உட்பட சக கதாபாத்திரங்களை டர்ர் ஆக்குவதும் இவ்வகை காமெடி கேரக்டர்களின் அடிப்படை இயல்பு. இதைத் துவக்கி வைத்தவராக, என்.எஸ்.கிருஷ்ணன் எனும் கலைவாணரைச் சொல்லலாம். அதை இன்னும் முன்னெடுத்துச் சென்றவராக எம்.ஆர்.ராதாவைக் குறிப்பிடலாம். மக்களின் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்கள், ஹீரோ துதி என எல்லாவற்றையும் ரவுண்டி கட்டி அடிக்கும் வல்லமை கொண்டவர்கள் இவ்வகையினர். உண்மையிலேயே தனக்கென்று சில கொள்கைகளை வைத்திருக்கும் அறிவுஜீவிகளே இவ்வகை நடிகர்களாக ஆரம்ப காலத்தில் வந்தனர். திரைப்படங்களில் நேரடி அறிவுரை/பிரச்சாரம் தேய்ந்து போய், 1970களில் திரைமொழி மூலம் கதை சொல்லுதல் நடைமுறைக்கு வந்தது. அது இத்தகைய நேரடிப் பிரச்சார காமெடியை மறைமுகமாகப் பாதித்தது எனலாம்.

அதையும் மீறி, மேலே வந்தவர் என்று கவுண்டமணியைச் சொல்லலாம். என்.எஸ்.கே அல்லது எ.ஆர்.ராதா போன்று திரைக்கு அப்பால், கவுண்டமணி சமூக அக்கறையோ அல்லது தனிப்பட்ட கொள்கைகளோ கொனடவர் அல்ல. எகத்தாளம், ஹீரோ உட்பட அருகில் இருப்போரை வாரி விடுவது, கேலி, கிண்டல் தான் அவரது காமெடிக்கு அடிப்படை. எதையும் போட்டுத் தாக்குவது தான் அவரது பாணி. இன்றைக்கு அவரது ரசிகர்கள் மிகக் கவனமாக ‘எம்.ஆர்.ராதா பாணி’க்கு ஒத்துவரும் கவுண்டமணி காமெடிகளை மட்டும் பொறுக்கியெடுத்து, அவரை அறிவுஜீவி காமெடியனாக முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவரது படைப்புகளும், அப்போதைய அவரது நடவடிக்கைகளும் உண்மை அப்படி அல்ல என்றே சொல்கின்றன. இருப்பினும், அவரைத் தவிர்த்துவிட்டு இந்த அறிவாளி வகையைப் பற்றி எழுத முடியாது என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவருக்குப் பின், இதை வெற்றிகரமாகச் செய்தவர் விவேக். திரைக்கு அப்பாலும் தன்னை சமூக அக்கறை கொண்டவராக நிலைநிறுத்தியபடி, இந்த அறிவாளி வகையில் வெற்றிவாகை சூடினார்.

இத்தகைய கேரக்டர்களை எழுதும்போது, அவர்கள் மற்ற எல்லா கேரக்டர்களையும் டாமினேட் செய்யும் குணம் உள்ளவர்கள் என்பதையும் மனதில் வைத்தே எழுத வேண்டும். ஒரு அளவிற்கு மேல் இவர்களை முட்டாள் வகையாக காட்ட முடியாது. கவுண்டமணி சில காட்சிகளில் அப்படி வந்தாலும், ஒட்டுமொத்தத்தில் அவரது கை ‘ஓங்கியே’ இருக்கும்.

3. நண்பேன்டா:
என்னைப் பொறுத்தவரை, இந்தவகை நடிகர்கள் நம் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்பேன். நல்ல திறமைசாலிகளாகவும், சாதாரண வசனத்தைக்கூட சுவராஸ்யமானதாக ஆக்கும் வல்லை படைத்தவர்களாகவும், முழுப்படத்தையும் தாங்கும் நகைச்சுவைத் திறன் கொண்டவர்களாகவும் இவர்களைச் சொல்லலாம். ஆனால், காலப்போக்கில் இவர்களை மக்கள் மறந்துவிடுவது தான் கொடுமை. தங்கவேலு, சந்திரபாபு, ஜனகராஜ், சார்லி, ரமேஷ் கண்ணா, சந்தானம் போன்றோர் இவ்வகையில் தான் வருவார்கள்.

பூவே உனக்காக படத்தை சார்லி கேரக்டர் இல்லாமல் யோசிக்க முடியுமா? அல்லது ஓகேஓகே படத்தைத் தான் சந்தானம் கேரக்டர் இல்லாமல் பார்க்க முடியுமா? ஆனாலும் முந்தைய முட்டாள் & அறிவாளி வகையினர் அளவுக்கு இவர்களுக்கு திரை ஆயுளும் நீடித்த புகழும் கிடைப்பதில்லை. (சந்தானம் கவுண்டமணி பாணியைப் பின்பற்றினாலும், கவுண்டமணி செய்த ‘நண்பன்’ கதாபாத்திரங்களைத் தாண்டி சந்தானம் ஏதும் செய்துவிடவில்லை. சத்யராஜ்-கவுண்டமணி காம்பினேசனில் வரும் ’கவுண்டமணி கேரக்டர்’ மட்டும் தான் சந்தானம். கவுண்டமணி அதையும் தாண்டி பன்முகத்தன்மை கொண்டவர், அது சந்தானத்திடம் மிஸ்ஸிங்.)

பெரும்பாலும் ஹீரோவுக்கு நண்பனாக வருபவர்கள் இவ்வகையினர். நண்பன் கேரக்டர் என்பது ஹீரோவின் மனசாட்சி என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். படம் முழுக்க காமெடியை தொடரவும், ஹீரோ யோசிப்பதை வசன காட்சியாக்கவும் உதவுபவை இவ்வகைக் கேரக்டர்கள். மேலே பார்த்த முட்டாளாகவோ அல்லது அறிவாளியாகவோ இந்த நண்பேண்டா கேரக்டர் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

அடுத்து, நகைச்சுவைப் படங்களின் வகைகளைப் பார்ப்போம்.

1. ஆள் மாறாட்டக் கதை:

இரட்டை வேடப் படங்கள் பற்றி நாம் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். ஒரே உருவ ஒற்றுமை உள்ள இருவர் இடம் மாறுவதால், உருவாகும் குழப்பங்கள் இவ்வகைக் காமெடிக்கு நல்ல உதாரணம். அடுத்து, ஒரே ஆள் இருவேறு நபராக நடிக்கும் தில்லுமுல்லுக் கதைகளும் இந்த வகையில் தான் வரும். தற்போது வழக்கொழிந்து போன, வீரா போன்ற இரண்டு பொண்டாட்டிக் கதைகளும் இவ்வகை தான்.

இரு நேரெதிர் கதாபாத்திரங்கள் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்ளும்போது நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும், உண்மை வெளிப்பட்டுவிடுமோ எனும் சஸ்பென்ஸுமே இவ்வகைக் கதைகளின் அடிப்படை பலம். எங்க வீட்டுப்பிள்ளை, பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, தில்லுமுல்லு, சதி லீலாவதி, காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களை ஸ்டடி செய்தால், இவ்வகைப் படங்கள் பற்றி நிறையக் கற்றுக்கொள்ளலாம்.


2. Screwball காமெடிக் கதைகள்:

பாலியல் வேட்கை தான் இவ்வகைக் காமெடிக்கு அடிப்படை. ஹீரோவுக்கு காதலி கிடைப்பாளா, மாட்டாளா எனும் மையக் கதையுடன் நண்பேன்டா வகையும் இணையும்போது, இவ்வகை ரொமாண்டிக் காமெடிகள் கிடைக்கும். ஹீரோ கல்யாணம் ஆனவர் என்றால், முதலிரவு நடக்குமா, நடக்காதா எனும் கேள்வியை எழுப்பும் படங்களும் இவ்வகையில் தான் வரும். சபாபதி(1941) முதல் பல பாக்கியராஜ் படங்கள் வரை, இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்கலாம். முந்தனை முடிச்சு, இது நம்ம ஆளு என பல படங்களில் ‘அது நடக்குமா?’ தான் கதைக்களம். இதை ஆபாசமின்றிச் சொல்ல, தனித் திறமை வேண்டும்!

3. சூழ்நிலை காமெடிக் கதைகள்:

ஹீரோ தனக்குப் பொருந்தாத ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படும் கதைகள் இவ்வகையில் வரும். அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணம். மனைவி/குழந்தைக்காக பெண் வேடமிடும் ஹீரோ, மாமனார் முதல் ஹவுஸ் ஓனர் வரை பலராலும் காதலிக்கப்படும் ரகளையான சூழல் தான் கதைக்களம். ஹீரோவுக்கு ஒரு குறிக்கோள்; அதை அடைய வேண்டுமென்றால், தனக்குப் பொருந்தாத சூழலுக்கு அவன் போயே ஆக வேண்டும் என்பது தான் இவ்வகைப் படங்களின் ஒன் லைன்.

கலாட்டா கல்யாணம் படத்தையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஹீரோயினுக்கு மூன்று சகோதரிகள். ஹீரோவுக்கு கல்யாணம் ஆக வேண்டுமென்றால், ஹீரோயினின் சகோதரிகளுக்கு ஹீரோவே மாப்பிள்ளை பார்க்க வேண்டும். இப்படி ஒரு இக்கட்டில் ஹீரோ சிவாஜி சிக்கிக்கொள்ள, வயிறு வலிக்க நம்மை சிரிக்க வைத்த படம் கலாட்டா கல்யாணம்.

4. இரு துருவங்களின் கதைகள்:
இரண்டு நேரெதிர் இயல்புடைய கேரக்டர்களை மையப்படுத்தி வரும் காமெடிக்கதைகள் இவை. தெனாலியில் வந்த டாக்டர்-பேசண்ட் முதல், கலகலப்பில் வந்த நல்ல-கெட்ட சகோதரர்கள் வரை இதற்கு பல உதாரணங்கள் தமிழில் உண்டு. ஒரு கேரக்டரால் இன்னொரு கேரக்டர் சிக்கலில் மாட்டுவது அல்லது ஒரு கேரக்டர் போன்று ஒன்னொருவர் மாறும் கேரக்டர் ஆர்க் போன்றவை தான் இந்த வகைக் காமெடிக்கு அடிப்படை.


5. நண்பேன்டா கதைகள்
ஒரு மெல்லிய மெயின் கதையை எடுத்துக்கொண்டு, அத்துடன் கூடவே பயணிக்கும் ஒரு காமெடி கேரக்டரையும் உருவாக்கிவிட்டால், அது தான் நண்பேண்டா! வின்னர், உனக்காக எல்லாம் உனக்காக, விக்ரமனின் பல படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். நல்ல காமெடிக் காட்சிகளும், சிறந்த நகைச்சுவை நடிகரும் இவ்வகைக் கதைக்கு அவசியம்.

6. ப்ளாக் காமெடி:

சோகமான மற்றும் சீரியஸான விஷயங்களையும் காமெடியாகச் சொல்பவை இந்த வகைப் படங்கள். தமிழில் சூது கவ்வும், மூடர்கூடம் ஆகிய இர படங்கள் தான் இந்த வகையில் வந்திருக்கிறது. நானும் ரவுடி தான் படத்தில், வில்லன் போர்சன் மட்டும் ப்ளாக் காமெடியாக வரும். கொஞ்சம் அசந்தாலும் கோமாளித்தனமான படமாகப் போய்விடும் ஆபத்துள்ளவை ப்ளாக் காமெடிப் படங்கள்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. மூடர்கூடம் Black comedy வகையில் சேராதா ???

    ReplyDelete
    Replies
    1. சேரும். எனக்கு சுத்தமாக ஞாபகம் வரவில்லை. சேர்த்துவிடுகிறேன், நன்றி.

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.