Monday, August 15, 2011

ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் டைரியில் இருந்து...(சுதந்திர தின ஸ்பெஷல்)

எனக்கு இன்று திரு. முத்துக்கிருஷ்ணன் (லால்குடி) அவர்களிடம் இருந்து சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வந்து சேர்ந்தது. அதனைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். காரணம், அன்னாரின் தந்தையார் ஒரு காந்தியவாதி என்பதும், சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதுமே. அடிப்படையில் காந்திய வாதியான எனக்கு சுதந்திர தினப் போனஸாக அவரது தந்தையின் போராட்ட அனுபவம் பற்றிய நாட்குறிப்பை அனுப்பி இருந்தார்கள். 


அந்தப் போராட்ட நாட்களில் சாதிமத வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையாகக் கட்டுப் பாட்டுடன் காந்தியடிகளின் தலைமையின் கீழ் எவ்வாறு இயங்கினர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அதுவே நமக்கு வழிகாட்டியும் ஆகும்..எனது தள வாசகர்களும் அறியும் வண்ணம் ஐயாவின் அனுமதியுடன் இங்கே அதைப் பிரசுரிக்கின்றேன்...

திரு.காந்திஆசிரமம் கிருஷ்ணன் அவர்களின் நாட்குறிப்பில் இருந்து...

 நான் காந்தி ஆசிரமத்தில் சேர முடிவு செய்ததே அதன் மூலம் சத்தியாக் கிரகம் செய்து சிறை செல்வது என்ற எண்ணத்தில்தான். உப்பு சத்தியாக்கிரக காலத்தில் 1930 - 31 இல் எனக்கு சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1932ம் வருட இயக்கத்தில் ஆங்காங்கே பலர் சிறை சென்று கொண்டிருந்தனர். ஆசிரம ஊழியர்கள் சிலரும் சிறை சென்று விட்டனர்.

திரு.கே.மாரப்ப கவுண்டர் நாமக்கல்லில் காந்தி ஆசிரம கதர் விற்பனை ஏஜன்டாக இருந்தார். அவருடன்தான் நான் தங்கியிருந்தேன். இயக்கத்தை மேற்கொண்டு எப்படித் தொடர்ந்து நடத்துவது என்று அங்குள்ள தேச பக்தர்கள் ஆலோசித்து வந்தார்கள். நாமக்கல் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே காங்கிரஸ் ஆபீஸ். அங்கு தினமும் கூடி ஆலோசித்தோம்.

ஒரு குறிப்பிட்ட நாளில் சில பேர் சேர்ந்து தேசியப் பாடல்களைப் பாடிக் கொண்டு ஊர்வலமாகச் சென்று கடை வீதியில் அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வதெனத் தீர்மானித்து, மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரி, நாமக்கல் இன்ஸ்பெக்டர் முதலியோருக்கு தேதி, இடம், நேரம் எல்லாம் குறிப்பிட்டுக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்தோம். 1932 பிப்ரவரி மாதம் முதல் அல்லது இரண்டாவது சனிக்கிழமை  பிற்பகல் 3 30 மணிக்கு மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்படுவதாக அறிவிப்பு செய்திருந்தோம்.

எங்கள் குழுவுக்குத் தலைவர் 1) திரு. வரதராஜ முதலியார். இவர் நாமக்கல்லில் யூனியன் பிரஸ் என்ற அச்சகத்தின் உரிமையாளர்.2)திரு.சந்தான முதலியார் - இவர் சில தறிகள் வைத்து நடத்தி வந்தார்.3)திரு.கணபதி முதலியார்- இவர் தவில் வித்வான்.உலகப்புகழ் பெற்ற‌  நாகஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் தாய் மாமன். 4)அடியேன் அ. கிருஷ்ணன் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்.)5) திரு.அப்துல் கஃபார் - இவர் முகம்மது ஊஸ்மானின் (ஏற்கனவே சிறை சென்றவர்) இளையவர்.6) திரு. அனுமந்த ராவ்.(ஹனுமி என்று அழைக்கப்பட்டவர்), பின்னாட்களில் லாரி புரோக்கராகவும், லாரி டிரைவராகவும் வேலை பார்த்தவர். 7) திரு.என் ஏ. கிருஷ்ணமூர்த்தி - இவர் பின்னாட்களில் எல்.ஐ.சி ஏஜன்டாக இருந்தார். 8) திரு.காசி விஸ்வநாதப் பண்டாரம் - (இவர் பின்னாட்களில் திராவிட கழகத்தில் சேர்ந்தார்).  முதல் மூன்று பேர்களும் அந்நாளிலேயே நாற்பது வயதைத் தாண்டியவர்கள். குடும்பஸ்தர்கள். மற்றவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

 நாங்கள் அறிவிப்பு அனுப்பியதின் பேரில், அந்த மூன்று பெரியவர்களையும் தனித் தனியாக அவர்களின் வீடுகளில் சென்று, காவல் துறையினர் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இனி யாராயிருந்தாலும் கைது செய்ய வேண்டாமென்றும் அவர்களை அடித்துத் துரத்த வேண்டுமென்றும் மேலிடத்து உத்திரவு வந்திருப்பதாகவும், ஆகவே தங்களுக்குத் தர்மசங்கடமான நிலை இருப்பதாகவும், சத்தியாக்கிரகம் செய்ய வேண்டாமென்றும், இன்ஸ்பெக்டர் சொல்லி அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார், என்னை மாரப்ப கவுண்டர் வீட்டில் சந்தித்து 'ஏம்ப்பா! எங்க கழுத்தை அறுக்கிறே!, திருச்செங்கோட்டிலே சத்தியாக்கிரகம் பண்ணுவதுதானே, இங்கு ஏன் வந்து தொந்தரவு கொடுக்கிறே? உன் பிடிவாதத்தால்தானே அந்த மூன்று முதலியார்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள்!உங்களையெல்லாம் அடித்துத் துரத்தும்படி சர்க்கார் உத்திரவு. இன்ஸ்பெக்டரும் தெய்வ பக்தி உடையவர்; சங்கடப்படுகிறார். எனக்கோ ஒரே பிள்ளை. உங்களையெல்லாம் எப்படி நானடிப்பேன்? ஆகையினால் அந்த முதலியார்களிடமும் சொல்லி திட்டமிட்ட சத்தியாக்கிரகத்தைக் கைவிடுங்கள்' என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டார்.

நாங்கள் முன் வைத்த காலைப் பின் வாங்குவ தில்லையென்று தீர்மானித்து விட்டோம்.  நாமக்கல் ஊரில், சனிக்கிழமை வாராந்திர சந்தை தினம். நாங்கள் திட்டமிட்டபடி பிற்பகல் மூன்றரை மணிக்கு 8 பேர்களும், 'வந்தே மாதரம்!' 'அல்லாஹூஅக்பர்' 'மகாதமா காந்திஜிக்கு ஜே!' என்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு, மாரியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டோம். அதற்கடுத்த பத்து கஜ தூரத்தில், கிராம முன்சீஃப் சாவடி, PWD Section Office, Girls High School போன்றவை இருந்தன. அன்பர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் கூடியிருந்து எங்களை உற்சாகப்படுத்தி, வழியனுப்பி வைத்தனர். ஆனால், PWD Section Office முன்னிலையில், ஒரு மேஜை போட்டு அதன் மேல் ஒரு நாற்காலியில், சப் மாஜிஸ்ட்ரேட் திரு ராமஸ்வாமி நாயுடு உடகார்ந்திருந்தார்.

அவருக்கு இடப்புறமும், வலப்புறமுமாக போலீஸ் இன்ஸ்பெக்டரும், சப் இன்ஸ்பெக்டரும் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தனர். 16 போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில், ரோட்டை மறித்து சுவர் வைத்தாற் போல் கையில் அரை அங்குல விட்டமும் நாலடி நீளமும் உள்ள பிரம்புகள் கையில் தாங்கி நின்று கொண்டிருந்தனர். சாதாரண உடையில் சி.ஐ.டி. போலீஸ்காரர்கள் சிலர் கூட்டத்தினிடையே கலந்து நின்றனர். போலீஸ் ரைட்டர், சப்மாஜிஸ்ட்ரேட் ஆபீஸ் குமாஸ்தாக்கள் இருவர், கையில் நோட்டுப்புஸ்தகங்களுடன் நின்று கொண்டிருந்தனர். எங்களை மேலே செல்லவொட்டாமல், 16 போலீசாரும், நின்று கொண்டனர். அவர்களை நெருங்கியதும் ஒரு போலீஸ் விசில் பெரிய சத்தத்துடன் கேட்டது. உடனே சப் இன்ஸ்பெக்டர், “இது சட்ட விரோதமான செயல். 144 சட்டத்தை மீறுகிறீர்கள். ஐந்து நிமிடத்தில் நீங்கள் கலைந்து செல்லாவிடில், உங்களை அடித்துத் துரத்துவோம்.” என்று உரத்த குரலில் கூறினார்.

“சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்; இனி அஞ்சிடோம்!” என்ற பாரதி பாடலை மிக ஆவேச உணர்ச்சியுடன் நான் பாடினேன். எல்லோரும் சேர்ந்து 'அச்சமில்லை! அச்ச மில்லை' என்ற பாடலை பாடிக் கொண்டும், கோஷங்கள் இட்டுக் கொண்டும், நின்றிருந்தோம். ஐந்து நிமிடங்கள் சென்றதும், மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்றார். உடனே 16 போலீஸ்காரர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் எட்டு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித்தார்கள்.

நாங்கள் நின்று கொண்டே அடிகளை வாங்கிக்கொண்டு, கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தோம். என்னைத் தவிர மற்ற ஏழு பேர்களும், உள்ளூர்வாசிகள். ஆகவே அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்து அவர்களை இழுத்துச் சென்றார்கள். ஆனால் முதல் மூன்று பெரியவர்கள் மட்டும் “செத்தாலும் திரும்ப மாட்டோம்.” என்று உறுதியாகக் கூறி விட்டனர். 15 நிமிடங்கள் ஆனதும், சப் இன்ஸ்பெக்டர் 'ஸ்டாப்' என்று சத்தம் கொடுத்தார். உடனே 16 போலீஸ்காரர்களும் அடிப்பதை நிறுத்தி விட்டு, முன் போல் வழி மறித்து சுவர் வைத்தால் போல் நின்று கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் 'கலைந்து போகும்படி' சொன்னார். 15 நிமிடங்கள் இடைவெளிக்குப் பின், மீண்டும் மாஜிஸ்ட்ரேட், 'சார்ஜ்' என்று குரல் கொடுத்தார்.

16 போலீஸ்காரர்களும் மீண்டும் தங்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளால் நான்கு பேர்களையும் கண்மண் தெரியாமல் அடித் தார்கள். உடனே நாங்கள் தரையை முத்தமிட்டவாறு ரோட்டில் படுத்துக் கொண்டோம். முதல் தடவை, தலை, கண், காது, உடல் முன் பின் பக்கங்கள், எல்லாப் பகுதிகளிலும் அடிகள் விழுந்தன. இத்தடவை உடலின் பின் பகுதி களில மட்டுமே அடிகள் விழுந்தன, அது திருச்சி - சேலம் நெடுஞ்சாலை; திருச்செங்கோடு - நாமக்கல் ரோடு. ஆகவே, அங்கங்கே பஸ்கள், வண்டிகள், தட்டாரத் தெரு வழியாகத் திருப்பி யனுப்பப்பட்டன.

சந்தை தினமானதால், 5 மணி யளவில், 5000க்கும் மேறபட்ட கிராமத்து மக்கள், ஆண் பெண்கள் கூடிவிட்டனர். ”முதலியாரே! உத்தரவு கொடு! - இவங்கள் என்ன, முப்பது நாப்பது பேர்கள் தானே, நாங்கள் நினைத்தால் இவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடுகிறோம். இந்தக் கணறாவியைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருப்பதா?” என்று கூச்சல் போட்டனர். வரதராஜ முதலியார் கையெடுத்துக் கும்பிட்டபடியே, ஆத்திரமடைந்துள்ள மக்களைப் பார்த்து, “அப்படி ஏதும் அசம்பாவிதமாகச் செய்து விடாதீர்கள். இது சத்தியாக்கிரகம். நீங்கள் பலாத்காரத்தில் இறங்கினால் காந்தியடிகள் மிகுந்த வேதனைப் படுவார். ஆகவே இந்த சத்தியாக்கிரகம் வெற்றி பெற,நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று உரத்த குரலில் கூறினார். மாஜிஸ்ட்ரேட், போலீஸ்காரர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடமான நிலை உண்டாகி விட்டது. மீண்டும் இரண்டு முறை 'சார்ஜ்' சொல்லி  விட்டு, எங்கள் நால்வரையும் அப்படி அப்படியே விட்டு விட்டு அரசு உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

கூட்டத்தினர் ஓடி வந்து டாக்டர்கள் சாம்பசிவ அய்யர், சௌந்தர ராஜன் இருவரையும் அழைத்து வந்து, அவர்களின் மருத்துவ மனைகளுக்கு எங்களை வண்டிகளில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். குண்டாந்தடிகளால் தாக்கியிருந்தால் திருப்பூர் குமரனுக்குக் கிடைத்த அமரத்துவம் எங்களுக்கும் கிடைத்திருக்கும். பிரம்புகளால் அடித்ததால், உடல் முழுவதும், பெருமளவு உடலின் பின் பகுதியில், தடித்த காயங்களும், ரத்தக் கசிவுகளும் ஏற்பட்டிருந்தன.

ரோட்டு மண்ணில் நாங்கள் படுத்துக்கொண்டதால், காயங்களிலெல்லாம் ரோட்டுப் புழுதி மண் ஒட்டிக்கொண்டிருந்ததால், ஒவ்வொரு காயமும் தனித் தனியாகக் கழுவி, பஞ்சு வைத்துக் கட்ட வேண்டியதாயிற்று. நான் 24 வயது வாலிபன். வரதராஜ முதலியாரும், கணபதி முதலியாரும், சதைப்பற்றுள்ள தேக முடையவர்கள். சந்தான முதலியார் மெலிந்த உடல்வாகு உடையவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த மூவருக்கும், அவரவர்கள் வீட்டிலேயே சிகிச்சை நடந்தது. எனக்கு கே. மாரப்ப கவுண்டர் வீட்டில் டாக்டர் வந்து புண்களுக்கு மருந்து போட்டார். ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களில், நாங்கள் ஓரளவு குண மடைந்து வந்தோம். சி.ஐ.டி. போலீசார் வந்து, எங்கள் நிலைமைகளை விசாரித்து அறிந்து சென்றார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை, நான் இருக்குமிடத்துக்கு, சப்இன்ஸ்பெக்டர் ரங்கசாமி அய்யங்கார் வந்து, "மேற்கொண்டு என்ன செய்ய உத்தேசம்" என்று கேட்டார். இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்வேன் என்றேன்.  அன்று மாலையில், திரு கே. மாரப்ப கவுண்டர் வீட்டுக்கு ஒரு குதிரை வண்டி வந்தது. ஒரு போலீஸ்காரர் வந்து 'உங்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச்சொன்னார்.' என்றார்.

நான் உடனே புறப்பட்டு குதிரை வண்டியில் சென்றடைந்தேன்.அங்கு ஏற்கனவே மூன்று முதலியார்களும் அவரவர் வீடுகளிலிருந்து தனித்தனி குதிரை வண்டிகளில், வந்து சேர்ந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் சாமி. சிதம்பரனார் எங்களைப் பார்த்து, "மேற் கொண்டு என்ன செய்ய உத்தேசம்?" என்று கேட்டார். "புண் ஆறியபின், மீண்டும் அதே இடத்திலிருந்து 144 தடை உத்த‌ரவை மீறி அன்னிய துணிக்கடைகளின் முன் சாத்விக மறியல் செய்வோம்" என்றோம். "அப்படி யானால் உங்களைக் கைது செய்வேன்" என்றார். நாங்கள் மீண்டும் சத்தியாக்கிரகம் செய்யத்தான் போகிறோம்" என்றோம். "உங்களை அரெஸ்டு செய்திருக்கிறேன். " என்றார். நாங்கள் கைதானோம். ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும் எதிர்ப்புறம் உள்ள சப்ஜெயிலில் எங்களை அடைத்தார்கள்.

தலையணை, போர்வை ஏதும் இல்லாமல், வெறும் கல் தரையில் படுத்தது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.  எங்கள் நால்வரைத் தவிர, வேறு குற்றங்கள் புரிந்த காவற்கைதிகளும், அந்த 15 X 10 அடி அறையில் ஆறு பேர்கள் இருந்தார்கள். அவர்களில் ஆஸ்துமா நோயாளி இரவு முழுவதும் இழுப்பு வேதனையில் இருந்தார்.

மற்றவர்கள் நிலையோ விரும்பத் தக்கதாய் இல்லை. ஆகவே, நாங்கள் நால் வரும் எங்கள் கதைகளைப் பேசிக்கொண்டே தூங்காமல் இரவைக் கழித்தோம் உடம்பில் அடிபட்ட காயங்கள் பல இன்னும் குணமாகவில்லை. ஆகவே, அந்த கரடுமுரடான‌ கல் தரையில் புரண்டு படுக்கும் போது, நாங்கள் பட்ட வேதனை சொல்லி முடியாது. மறுநாட் காலை ஆறு மணிக்கு இரும்புக் கதவுகளைத் திறந்தார்கள். இரண்டிரண்டு பேர்களாக சுமார் முப்பது கைதிகளை நிறுத்தி வைத்து, எண்ணிப் பார்த்து கழிவறைக்கு 'மார்க்' செய்யப் பட்டோம்.

அதைப் பற்றி (சுகாதாரத்தைப் பற்றி,) சொல்லாமல் விடுவது நல்லது. ஏதோ நரகம் எனகிறார்களே அது இதுதானோ என எண்ணிக் கொண்டோம். பல் துலக்கி முகம் கை கால் கழுவிக் கொண்ட பின் எங்கள் முப்பது பேர்களையும், (நாங்கள் நான்கு பேர்கள் மட்டுமே அரசியல் கைதிகள்). ஒரு இடத்தில் மண் தரையில் உட்கார வைத்து எத்தனையோ பேர்கள் மாறி மாறி உபயோகித்த நசுங்கி உருக் குலைந்த அலுமினியத் தட்டுகளில், அரிசிக் கஞ்சியை ஊற்றி அனைவரிடமும் ஒவ்வொரு தட்டாகக் கொடுத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிறிது சாப்பிட் டோம் மீதியை அங்குள்ள தொட்டியில் கொட்டினோம். பத்து மணியளவில் எங்கள் நால்வரையும் சப்டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு நான்கு போலீஸ் ஜவான்கள் இட்டுச் சென்றனர்.

எங்களை விசாரித்த சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட், என் பெயரில் - தொழில் என்ற இடத்தில், vagrant என்று போட்டிருந்ததைப் பார்த்து, "What do you mean by this?" என்று சற்றுக்கோபமாக ஹெட் கிளார்க்கைப் பார்த்துக் கேட்டார். " He is not employed, Sir!" என்றார். என்னைப் பார்த்து 'நீங்கள் ஏதாவது வேலை பார்த்தீர்களா?' என்றார். 'நான் இரண்டு ஆண்டுகளாக திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வேலை பார்த்து வருகிறேன். சத்தியாக்கிரகம் செய்வதற்காக,ராஜினாமா செய்தேன். ஆசிரமத்தில் சேருவதற்கு முன்பு திருநெல்வேலி ஜில்லா போர்டிலும், அதற்கு முன்பு, தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்தேன்.' என்றேன்.

 "You see! you change it as at present unemployed." இவ்வளவுக்கும் ஹெட்கிளார்க் ராமஸ்வாமி அய்யங்கார் என்னை நனகு அறிந்தவர்.வக்கீல்கள், சப்டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டின் நேர்மையையும் அந்த சூழ்நிலையில் அவர் காட்டிய தைரியத்தையும் பாராட்டினர்.  மேற்கொண்டு அவர் வழக்கை விசாரித்தார். "நாங்கள் சத்தியாக்கிரகிகள்; ஆகவே எதிர் வழக்காட மாட்டோம். 144 தடை யுத்தரவை மீறித்தான் அன்னியத் துணிக் கடை மறியலுக்குப் புறப்பட்டோம்", என்றோம்.

இரண்டு செக்ஷ‌ன்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையளித்து இரண்டும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார். அவரவர் வீடுகளிலிருந்து தனித் தனியாக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டதால், கையில் பணமோ மாற்று உடையோ எடுத்து வரவில்லை. நண்பர்களும் உறவினர்களும் கூட, பயத்தால் எங்களை வந்து பார்க்கவுமில்லை....
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

  1. மிகவும் சிலிர்ப்பான அனுபவம்.... !

    ReplyDelete
  2. ஒரு பொக்கிஷம் போன்ற நாட்குறிப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதில் மற்ற அனுபவக் குறிப்புகள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அவற்றையும் அவ்வப்போது பதிவிடலாமே?

    ReplyDelete
  3. சுகந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    மிகவும் சிலிர்ப்பான அனுபவம்.... ! //

    ஆமாம் பாஸ்..இது மாதிரிப் பலர் சிந்திய ரத்தமே நம்மை இன்று சுதந்திர மனிதர்களாக உலவ விட்டுள்ளது..

    ReplyDelete
  5. // FARHAN said...
    சுதந்திர தின வாழ்த்துக்கள் //

    நன்றி ஃபர்ஹான்!

    ReplyDelete
  6. என் அன்புத் தந்தையாரின் நாட்குறிப்பில் இருந்து சிறை சென்ற அனுபவத்தை
    வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி.தங்களுக்கும்,வாசகர்களுக்கும்
    சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    அந்தப் போராட்டக் காலத்தில் இருந்த சமூக ஒற்றுமை மீண்டும் வர பாரதத் தாயை வேண்டுவோம்.

    ReplyDelete
  7. சமூக ஒற்றுமை ஓங்கட்டும் ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  8. 'லேட்டஸ்ட்' திகார் சிறைவாசிகளுக்கு இப்பதிவை பரிந்துரை செய்கிறேன்!!

    ReplyDelete
  9. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஒரு பொக்கிஷம் போன்ற நாட்குறிப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதில் மற்ற அனுபவக் குறிப்புகள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அவற்றையும் அவ்வப்போது பதிவிடலாமே? //

    இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமே அதில் இருந்தது..மேலும் விவரம் கிடைத்தால் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. எத்தனையோ தியாகிகள் உருவாகிய மண்.
    சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா ...

    ReplyDelete
  12. காலத்துக்கேற்ற பதிவு!இந்தக் காலத்தில் வாய் திறக்கவே முடியாதே?புதிது,புதிதாக ஏதேதோ சட்டமெல்லாம் வரைந்திருக்கிறார்களே?

    ReplyDelete
  13. // மாய உலகம் said...
    சமூக ஒற்றுமை ஓங்கட்டும் ஜெய்ஹிந்த்! //

    ஒற்றுமையே பலம் என்பதை நாம் உணர்ந்தால் அனைவருக்கும் நல்லது.

    ReplyDelete
  14. // ! சிவகுமார் ! said...
    'லேட்டஸ்ட்' திகார் சிறைவாசிகளுக்கு இப்பதிவை பரிந்துரை செய்கிறேன்!! //

    ஹா.ஹா..அவங்களுக்கு இதெல்லாம் புரியாது பாஸ்.

    ReplyDelete
  15. // kmr.krishnan said...
    என் அன்புத் தந்தையாரின் நாட்குறிப்பில் இருந்து சிறை சென்ற அனுபவத்தை வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி. //

    உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  16. // விக்கியுலகம் said...
    பகிர்வுக்கு நன்றி! //

    ஓகே பாஸ்!

    ReplyDelete
  17. // கந்தசாமி. said...
    எத்தனையோ தியாகிகள் உருவாகிய மண்.
    சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா ...//

    நன்றி கந்தசாமி!

    ReplyDelete
  18. // Yoga.s.FR said...
    காலத்துக்கேற்ற பதிவு! இந்தக் காலத்தில் வாய் திறக்கவே முடியாதே?புதிது,புதிதாக ஏதேதோ சட்டமெல்லாம் வரைந்திருக்கிறார்களே? //

    ஆமாம்..நம் சொந்தங்களுக்காக அழக்கூட முடியாத நிலையும் இங்கு உண்டு.

    ReplyDelete
  19. மிக நீண்ட பகிர்வு கொஞ்சம் மனநிலை சரியில்ல.
    ஆறுதலாய்க் கருத்திடுகின்றேன்.சுதந்திர தின வாழ்த்துகள்
    சொல்லி இப்ப விடைபெறுகின்றேன்.நன்றி சகோ பகிர்வுக்கு.....

    ReplyDelete
  20. சிறந்த பதிவு அதிகமானவர்களை சென்றடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. //அம்பாளடியாள் said...
    மிக நீண்ட பகிர்வு கொஞ்சம் மனநிலை சரியில்ல.
    ஆறுதலாய்க் கருத்திடுகின்றேன்.சுதந்திர தின வாழ்த்துகள்
    சொல்லி இப்ப விடைபெறுகின்றேன்.நன்றி சகோ பகிர்வுக்கு.....//

    வாழ்த்துக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  22. // காட்டான் said...
    சிறந்த பதிவு அதிகமானவர்களை சென்றடைய வாழ்த்துக்கள்...//

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  23. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. அருமையான பதிவு.
    கண் கலங்குகிறது.
    மிக்க நன்றி நல்ல பதிவுக்கு.

    ReplyDelete
  25. அக்காலத்தில் நடந்த கொடுமைகளை கண்முன் காட்டுகிறது இந்த பதிவு, இதனை பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  26. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

    அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  28. எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் ^_^


    சுதந்திர தினத்துக்கு பெருமை சேர்க்கும் பதிவு, நல்ல பதிவு பாஸ்.

    ReplyDelete
  29. // M.R said...
    பகிர்வுக்கு நன்றி நண்பரே...சுதந்திர தின வாழ்த்துக்கள் //

    நன்றி ரமேஷ்!

    ReplyDelete
  30. // Rathnavel said...
    அருமையான பதிவு.
    கண் கலங்குகிறது.
    மிக்க நன்றி நல்ல பதிவுக்கு.//

    ஆமாம் ஐயா..எத்தனை எத்தனை தியாகங்கள்..போராட்டங்கள்..அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் செய்கிறோமா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்..அவர்களை நாம் மறந்தோம்..அதனாலேயே சுயத்தை இழக்கின்றோம்! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  31. // பாரத்... பாரதி... said...
    ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

    அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..//

    நன்றி பாரதி!

    ReplyDelete
  32. ஆஹா பொக்கிஷப்பதிவு. அடிச்சார்ய்யா அண்ணன்

    ReplyDelete
  33. //"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
    எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் ^_^


    சுதந்திர தினத்துக்கு பெருமை சேர்க்கும் பதிவு, நல்ல பதிவு பாஸ்.//

    வருக பிரபலப் பதிவர் துஷ்யந்த் அவர்களே!

    ReplyDelete
  34. // சி.பி.செந்தில்குமார் said...
    ஆஹா பொக்கிஷப்பதிவு. அடிச்சார்ய்யா அண்ணன் //

    புதையல் தேடி வந்ததுண்ணே!

    ReplyDelete
  35. அருமையான உணர்வுகள் தாங்கிய பதிவு தோழரே இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  36. கடந்த காலங்களில் வாழ்ந்து மறைந்த அ.கிருஷ்ணன் போன்ற
    எண்ணற்ற பெரியோர்
    இப்படி நிலைப்பாட்டை வெளிப்படுத்தி சுதந்திரம் வாங்கித்தந்திருக்கிறார்கள்..
    "எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் வெதைக்கறேன்.நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ..அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.
    இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!..."
    என்று 'தேவர் மகன்' சிவாஜிகணேசன் அவர்கள்
    பேசிச் சென்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது..
    பழத்தை மட்டும் சுவைத்துவிட்டு பறந்துவிடும் சுதந்திரப் பறவையாக வளரும்
    இன்றைய தலைமுறையாகவே இருந்துவிடாமல்
    நாளைய தலைமுறைக்கு விதையையும் விதைக்கவெண்டும் என்ற எண்ணம் இன்னாளிலாவது ஞாபகத்துக்கு வந்தால் நல்லது..

    ReplyDelete
  37. சுதந்திர தினத்திற்கு மிகப் பொருத்தமான பதிவு ........சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  38. //கவி அழகன் said... [Reply]
    அருமையான உணர்வுகள் தாங்கிய பதிவு தோழரே இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..//

    நன்றி கவி!

    ReplyDelete
  39. //minorwall said... [Reply]
    கடந்த காலங்களில் வாழ்ந்து மறைந்த அ.கிருஷ்ணன் போன்ற
    எண்ணற்ற பெரியோர்
    இப்படி நிலைப்பாட்டை வெளிப்படுத்தி சுதந்திரம் வாங்கித்தந்திருக்கிறார்கள்..
    "எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் வெதைக்கறேன்.நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ..அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.
    இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!..."
    என்று 'தேவர் மகன்' சிவாஜிகணேசன் அவர்கள்
    பேசிச் சென்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.//

    அந்த அருமையான வசனத்தை சரியான இடத்தில் நினைவூட்டியதற்கு நன்றி மைனர்வாள்!

    ReplyDelete
  40. //koodal bala said... [Reply]
    சுதந்திர தினத்திற்கு மிகப் பொருத்தமான பதிவு ........சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !//

    நன்றி பாலா!

    ReplyDelete
  41. காலத்துக்கு ஏற்ற அழகான பகிர்வு.

    ReplyDelete
  42. //முனைவர்.இரா.குணசீலன் said... [Reply]
    காலத்துக்கு ஏற்ற அழகான பகிர்வு.//

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  43. //Heart Rider said...
    அக்காலத்தில் நடந்த கொடுமைகளை கண்முன் காட்டுகிறது இந்த பதிவு, இதனை பகிர்ந்தமைக்கு நன்றி.//

    நன்றி தகவல் தந்துதவிய முத்துக்கிருஷ்ணன் ஐயாவைச் சேரட்டும்.

    ReplyDelete
  44. Although I have already read the entire diary of your father with regard to his participation in freedom struggle, it gives me immense pleasure to read it again in this Sengovi blog. I thank you and the blog owner for publishing it.

    ReplyDelete
  45. @Thanjavooraan இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது என் பாக்கியம் ஐயா!

    ReplyDelete
  46. காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்... செங்கோவி

    ReplyDelete
  47. 'தேவர் மகன்' சிவாஜிகணேசன் அவர்கள்
    பேசிச் சென்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.////அவரும் பாவம்!உண்மையான காங்கிரஸ்காரனாகவே வாழ்ந்து,இழந்து அமரராகிப் போனார்!

    ReplyDelete
  48. எத்தனையோ தியாகிகள் உருவாகிய மண்.
    சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  49. கிருஷ்ணன் சார், இன்னும் இதுபோன்ற அரிய அடுத்தடுத்த தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

    ReplyDelete
  50. "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" -இந்தியாவின் தற்போதைய அரசியல்வியாதிகளையும், ம[மா]க்களையும் நினைத்தால் இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு பிரஜையும் நாட்டுக்காக உயிர் உட்பட எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்த நிலை போய், தன் சுயநலத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் நாட்டை அடகு வைக்கவும், காட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்ற நிலைக்கு நாட்டை ஆள்பவர்களும், மாக்களும் வந்துவிட்டார்களே?? எப்படி நடந்தது இது? எங்கே போயிற்று தேச பக்தி? யாருக்கும் தேசத்தைப் பற்றி அக்கறையில்லாத நிலை எப்படி வந்தது? விடை எங்கே?

    ReplyDelete
  51. நல்ல தகவல்.
    நன்றி,கண்ணன் http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  52. சூப்பர்.. நங்கள் இது போன்று நிறைய பதிவுகளை எதிர் பார்க்கிறோம் ... நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி உண்டாகி உள்ளது. நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.