Sunday, February 23, 2014

ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
தெலுங்கு நடிகர்களின் முகம், ஹிந்திப்படம் போன்ற போஸ்டர் டிசைன் கூடவே சப்பையான படப்பெயர் ஆகிய காரணங்களால் மிரண்டுபோய் பார்க்காமல் தவிர்த்த படம். ஆனாலும் படம் பார்த்த நண்பர்கள் நல்ல படம் என்று பாராட்டித் தள்ளியதால் துணிந்து நேற்றுப் போய் பார்த்துவிட்டேன். மொக்கைப் படத்தையே அசராமல் பார்க்கிற நாமே இவ்வளவு யோசித்தால், நல்ல படமா என்று நாலு இடத்தில் கேட்டுவிட்டு பின் திருட்டு விசிடி/நெட்டில் பார்க்கும் மக்கள் எப்படி தியேட்டருக்கு வருவார்கள்? தெலுங்கில் மட்டும் ஓடினால் போதும் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ? விருந்தாளி இல்லாமல் வீணான நல்ல விருந்து என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு ஊர்ல..:
ஒரு பெரிய வெட்டிங் ப்ளான்னராக வரவேண்டும், காதல் கசமுசாவையெல்லாம் நினைக்ககூட நேரமில்லை என்று இருக்கிறார் நாயகி. காதல் தான் மெயின் என்ற குறிக்கோளுடன் நாயகி கூடவே இருக்க, பார்ட்னராக ஒட்டிக்கொள்கிறார் ஹீரோ. கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோயின் காதலுக்கும் மனதில் இடம் கொடுக்க, ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக நாயகியின் லட்சியத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறார். நிலைமை தலைகீழ் ஆகும்போது, இருவரும் (+நாமும்) உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்தில் கசமுசா ஆகிவிடுகிறது. மேட்டர் முடிஞ்சதால் தான் நாயகன் ஒதுங்குகிறான் என நாயகி நினைக்கத் துவங்க, லட்சியத்துக்குப் பிறகே காதல் என நாயகன் இருக்க, ரிலேசன்ஷிப்பும் பார்ட்னர்ஷிப்பும் டமார் ஆகிறது. அப்புறம் எப்படி சேர்கிறார்கள் என்பதே கதை.

உரிச்சா....:
குஷி மாதிரி ஈகோவை பேஸ் பண்ணிய கதை. கல்லூரி முடிந்து ஹீரோயின் பிஸினஸ் கற்றுக்கொள்ள ஆரம்பிக்க, கூடவே ஒட்டிக்கொள்ளும் ஹீரோ காதலுடன் அவரையே சுற்றிச் சுற்றி வர செம ஜாலியாகவே படம் ஆரம்பிக்கிறது. இயல்பான நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் எளிமையான திரைக்கதை நம்மை எளிதாக வசீகரிக்கிறது. ஒரு ஈகோயிஸ்ட் மற்றும் தன்னம்பிக்கையான ஹீரோயினும், எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் ஹீரோவும் சீக்கிரமே நமக்கு பிடித்துப்போகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாணி கபூர், நானியை விரும்ப ஆரம்பிப்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள். 

ஹிந்திப்படங்களில் வரும் பிரம்மாண்ட கலர்ஃபுல் கல்யாண காட்சிகளைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகவே இருக்கும். இதில் அவற்றை அப்படியே கலர்ஃபுல்லாக கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். படத்தின் ஒவ்வொரு சீனும் தமிழ்ப்படம் அல்ல என்று கட்டியம் கூறுகிறது. தமிழக கல்யாணத்தில் நார்த் இண்டியன் ட்ரெஸ் போட்டு பலே பலே என்று ஆடும்போது, நமக்கு கண்ணைக் கட்டி விடுகிறது.(அதற்குக் காரணம், வாணி கபூரும் தான்!) தமிழில் தான் எல்லோரும் பேசுகிறார்கள், சென்னையில் தான் கதை நடப்பதாக வருகிறது. ஆனாலும் நேட்டிவிட்டி என்பது சுத்தமாக எங்குமே இல்லை. ஹீரோவோ தெலுங்கு உச்சரிப்பில் தமிழைப் பேசுகிறார். வாணி கபூரோ ஹிந்திப்பட ஹீரோயின் மாதிரி தான் இருக்கிறாரே ஒழிய தமிழ்நாட்டு பிராமணப்பெண் என்று நம்பவே முடியவில்லை. (Highயங்கார் பெண்மணியின் பிண்ணனி குரலில் மட்டும் அவ்வப்போது பிராமண பாஷை வருகிறது)
உண்மையில் குஷி மாதிரி சூப்பர் ஹிட் ஆகி இருக்க வேண்டிய படம். புலிவால் படம் பற்றிய பதிவில் சொன்னது போல், தமிழுக்காக எதையும் மாற்றாமல் அப்படியே சீன் பை சீன் கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஹீரோயினும் ஹீரோவும் சேரும் அந்த காட்சியில்கூட, ஹீரோயின் தண்ணி அடித்துவிட்டு, ஹீரோவுடனே படுப்பதாகக் காட்டுகிறார்கள். சென்னை வாழ் தமிழனே இதை ஜீரணிப்பது கஷ்டமாயிற்றே, எப்படி ஐயா மற்ற ஏரியாக்களில் ஏற்றுக்கொள்வார்கள்? இருவரும் சேர காதல் மட்டுமே போதாதா? சென்னையில் குடும்பத்துடன் வாழும் பெண், ஏன் ஹீரோவுடன் அடிக்கடி தங்குகிறார் என்றுகூட லாஜிக்கலாக ஒரு காரணம் சொல்லக்கூடாதா?

படத்தின் சூழல், நடிகர்கள், உச்சரிப்பு எல்லாமே அந்நியமாக போய்க்கொண்டு இருக்கும்போது, காட்சிகளும் அடுத்து அப்படியே அரங்கேறுகின்றன. செக்ஸ் முடிந்தபின், ‘சரி..விடு’ என்று கேஷுவலாக ஹீரோ கடந்துபோகிறார். ஹீரோயின் கண்ணீரை கண்ணுக்குள் அடக்கிக்கொண்டு நிற்கிறார். ’ங்கொய்யால..’ என்று ஆரம்பித்து பிரித்து மேய்ந்திருக்க வேண்டாமா? இதையெல்லாம் பார்க்கிற அளவுக்கு நம்ம ரசிகர்கள் இன்னும் டெவலப் ஆகலை, ஆகவும் வேண்டாம்யா! ஹிந்தியில் வேண்டுமானால், இதெல்லாம் சகஜம் ஆகியிருக்கலாம். அவர்கள் டெல்லி பெல்லி கொண்டவர்கள். நமக்கு அந்த மாதிரி சேட்டையே ஆகாது இல்லியா?

நல்ல கதை, அருமையான திரைக்கதை. ஜாலியாகவே நகரும் படம் என எல்லாம் இருந்தும், கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று இறங்கி, ஹிந்தி டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஏதோ சில ஹிந்திப்படங்களைப் பார்த்திருப்பதால், ஏன் இப்படி பிஹேவ் பண்றாங்கன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது. மத்தவங்க பாடு கஷ்டம் தான்!

நானி:
கேஷுவல் பார்ட்டியாக, ஹீரோயினிடன் அடி வாங்குபவராக ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். அவரது தெலுங்கு முகமும், தமிழ் உச்சரிப்பும் பெரிய உறுத்தல். படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்கு, ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. அப்புறம் ரொம்ப நேரத்திற்கு, கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது. மற்றபடி, நல்ல நடிப்பு. 

வாணி கபூர்:
படத்தையே தாங்கிப் பிடிக்கும் கலர் தூண். என்ன ஒரு ஸ்க்ரீன் பிர்சன்ஸ், கரீஷ்மா. படம் முழுக்க குறையாத உற்சாகத்துடன் வருகிறார். பாடல் காட்சிகளில் இடுப்பை ஒடிப்பதில், படத்தில் இருக்கும் சிம்ரனே காணாமல் போகிறார். கீர்த்தி ரெட்டியைவும் ஷில்பா ஷெட்டியைவும் மிக்ஸ் பண்ணிய முக அமைப்பு. இதில் ஆச்சரியம், நடிப்பும் வருவது தான். தெலுங்கில் பெரிய ரவுண்டு வருவார். அப்போ தமிழில்? அம்மணி அரைப் பனைமர உயரம். நம்ம ஹீரோக்களுக்கு கஷ்டம் தான். மேலும், நம் மன்ற விதிகளை அப்ளை செய்தால், அம்மணி பெயில் தான்!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- நேட்டிவிட்டியே இல்லாமல் எடுத்தது
- தமிழனை கன்வின்ஸ் பண்ணும் லாஜிக்களே இல்லாமல், மாடர்ன் கல்ச்சரில் கதாபாத்திரங்கள் நடந்துகொள்வது. (உதாரணமாக..நிச்சயமான துபாய் மாப்பிள்ளையுடன் ஒன்றுமே நடக்காதது போல் ஹீரோயின் கடலை போடுவது, கிளைமாக்ஸில் ஜஸ்ட் லைக் தட் அவரை கழட்டி விடுவது என தமிழனை டெரர் ஆக்கும் காட்சிகள்)
- நானி ஏன் ஒதுங்கிப்போகிறார் என்பதை சொல்லாமல் மறைக்க, வலுவான காரணம் ஏதும் இல்லை
- படத்திற்கு கெட்டி மேளம் என்றுகூட பெயர் வைத்திருக்கலாம். ஆஹா கல்யாணம் என்ற பெயரும் போஸ்டர் டிசைனும் கொஞ்சமும் கவரவில்லை

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- வாயில் நீர் ஊற வைக்கும் வாணி கபூர் (கொடுத்த காசு அம்மணிக்கே சரியாப் போச்சு..படம் ஃப்ரீ தான்)
- படம் முழுக்க வரும் மெல்லிய புன்சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள் (உன்னை கெட்டவன்னு நினைச்சேன்..இப்போத்தான் தெரியுது, நீ ஒரு அறிவு கெட்டவன்னு!)
- கலர்ஃபுல்லான படம். ஜிகுஜிகுவென்று ஜொலிக்கிறது, ஒவ்வொரு சீனும்.
- பிருந்தாவின் நடனம் (நன்றி: வாணி கபூர்)
- தரண் குமாரின் இசை

பார்க்கலாமா? :

’ஹிந்திப் படம் தான். நமக்குப் புரியணுமேன்னு நல்லவங்க தமிழ்ல பேசுறாய்ங்க’ என்று மைண்ட்டை செட் செய்து உட்கார்ந்தால், கண்டிப்பாக பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

  1. இங்கேயும் இந்தப்படமும், பிரம்மனும் ஓடிட்டு இருக்கு பார்க்கணும்.

    ReplyDelete
  2. @MANO நாஞ்சில் மனோ உங்களுக்குத் தான் ஹிந்தி தெரியுமே? ஒரிஜினல் பாருங்க.

    ReplyDelete
  3. நீங்கள் பார்த்த பின் பார்க்காவிட்டால் வாணிகபூர் அழுதிடுவாங்க:)))

    ReplyDelete
  4. //இதையெல்லாம் பார்க்கிற அளவுக்கு நம்ம ரசிகர்கள் இன்னும் டெவலப் ஆகலை, ஆகவும் வேண்டாம்யா!//



    அடடே என்ன ஒரு சமூக சிந்தனை...

    ReplyDelete
  5. 1.மூணாவது படம் : பின் நவீனத்துவ குறியீடா ?

    2."ஹீரோயின் தண்ணி அடித்துவிட்டு, ஹீரோவுடனே படுப்பதாகக் காட்டுகிறார்கள்"
    "நிச்சயமான துபாய் மாப்பிள்ளையுடன் ஒன்றுமே நடக்காதது போல் ஹீரோயின் கடலை போடுவது"
    கொள்கை குன்று இதுகெல்லமா டப்பிங் கொடுக்குது.

    ReplyDelete
  6. ///ஏதோ சில ஹிந்திப்படங்களைப் பார்த்திருப்பதால், ஏன் இப்படி பிஹேவ் பண்றாங்கன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது. மத்தவங்க பாடு கஷ்டம் தான்!//

    இதுக்குதான் சமூகவலைதளங்களில் ஒரு ஆல் இன் ஆல் பதிவர் வேணுங்கிறது...

    ReplyDelete
  7. ட்ரெய்லர் பார்ததப்பவே இது நமக்கு பிடிக்க கூடிய படம்னு தெரிஞ்சிடுச்சு, இப்போ கன்பார்ம்.. கண்டிப்பா பார்க்கணும்,அந்த முதல் பாராவில சொன்னது போல..

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்.பார்க்கலாம் என்றே சிலரின் விமர்சனங்கள் வந்திருக்கிறது,பார்ப்போம்(ஓசியில்).

    ReplyDelete
  9. ஓகே, தமிழ்லயே பாத்த்துடுறேன், ரான்வீரை விட நானிய சகிச்சுக்கலாம்.

    ReplyDelete
  10. //கொஞ்ச நேரத்திற்கு, ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. அப்புறம் ரொம்ப நேரத்திற்கு, கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது//

    சூப்பர்.அற்புதம்.நச்..

    ReplyDelete
  11. //தனிமரம்said...
    நீங்கள் பார்த்த பின் பார்க்காவிட்டால் வாணிகபூர் அழுதிடுவாங்க:))) //

    எப்படி எல்லாம் காரணம் கண்டுபிடிக்கிறாங்க!!!

    ReplyDelete
  12. வானரம் .said...
    //1.மூணாவது படம் : பின் நவீனத்துவ குறியீடா ?//

    இல்லை, முன் நவீனத்துவம் தான்!

    //2."ஹீரோயின் தண்ணி அடித்துவிட்டு, ஹீரோவுடனே படுப்பதாகக் காட்டுகிறார்கள்"
    "நிச்சயமான துபாய் மாப்பிள்ளையுடன் ஒன்றுமே நடக்காதது போல் ஹீரோயின் கடலை போடுவது"
    கொள்கை குன்று இதுகெல்லமா டப்பிங் கொடுக்குது.//

    அந்த ஆண்ட்டி சிக்கன் விளம்பரத்துக்கே கொடுத்துச்சே!

    ReplyDelete
  13. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...

    இதுக்குதான் சமூகவலைதளங்களில் ஒரு ஆல் இன் ஆல் பதிவர் வேணுங்கிறது...//

    போதும்யா..போதும்..ஏற்கனவே இங்க குளிரு!

    ReplyDelete
  14. //Subramaniam Yogarasa said...
    நல்ல விமர்சனம்.பார்க்கலாம் என்றே சிலரின் விமர்சனங்கள் வந்திருக்கிறது,பார்ப்போம்(ஓசியில்).//

    பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  15. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
    ஓகே, தமிழ்லயே பாத்த்துடுறேன், ரான்வீரை விட நானிய சகிச்சுக்கலாம். //

    எனக்கென்னமோ ரன்வீர் பெட்டர்னு தோணுது!

    ReplyDelete
  16. //அமுதா கிருஷ்ணாsaid...
    //கொஞ்ச நேரத்திற்கு, ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. அப்புறம் ரொம்ப நேரத்திற்கு, கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது//

    சூப்பர்.அற்புதம்.நச்.. //

    நன்றி..தேங்ஸ்..சுக்ரியா!

    ReplyDelete
  17. நானா யோசிச்சேன். ((உன்னை கெட்டவன்னு நினைச்சேன்..இப்போத்தான் தெரியுது, நீ ஒரு அறிவு கெட்டவன்னு!)).

    ReplyDelete
  18. "மேலும், நம் மன்ற விதிகளை அப்ளை செய்தால், அம்மணி பெயில்"தான்!"

    மன்ற விதிகளை சேர்த்து சொல்லவும் .....ப்ளீஸ்

    ReplyDelete
  19. "கொஞ்ச நேரத்திற்கு, ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. அப்புறம் ரொம்ப நேரத்திற்கு, கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது"ஹா,ஹா,ஹா.....

    ReplyDelete
  20. அருமை!கிளு கிளுப்பூட்டும் காட்சிகள் மட்டுமல்ல,நெஞ்சை?!த் தொட்ட வசனங்கள்,கலர்புல் காட்சிகள் என்று............அடடா........தமிழில்? இப்படி ஒரு படம்...........சான்சே இல்லை!

    ReplyDelete
  21. @SK உங்களுக்கா தெரியாது?

    ReplyDelete
  22. //Subramaniam Yogarasa said...
    அருமை!கிளு கிளுப்பூட்டும் காட்சிகள் மட்டுமல்ல,நெஞ்சை?!த் தொட்ட வசனங்கள்,கலர்புல் காட்சிகள் என்று............அடடா........தமிழில்? இப்படி ஒரு படம்...........சான்சே இல்லை!//

    அதே...அதே. படத்தை ஒழுங்காக தமிழ்ப்படுத்தி இருந்தால், சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.