Friday, June 15, 2012

முருக வேட்டை_14


“ஹே..என்ன இது?”

“இதாங்க பாண்டியன் கொடுத்த கிஃப்ட்”

சரவணன் பாய்ந்து போய், அந்த கிஃப்ட் பார்சலைப் பிடுங்கினான்.



”என்ன அவசரம்?” என்றாள் கவிதா.

சரவணன் அதைக் கவனிக்காமல், வேக வேகமாக பார்சலுக்கு உள்ளே பார்த்தான்.

உள்ளே சின்ன வால்கிளாக் இருந்தது.

10:22 என்று பீப்..பீப் என்ற மெல்லிய ஒலியுடன் டைம் காட்டியது.

சரவணன் வேகமாக திருப்பிப் பார்த்தான். பின்பக்கம் சின்ன கறுப்புக்கலர் பிளாஸ்டிக் பாக்ஸ் போன்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தது. பின்பக்க பிளாஸ்டிக் மூடியைப் பிரித்தான்.

உள்ளே சிவப்பு, பச்சை வயர்களுடன் டைம் பாம் மின்னியது. சரவணன் முன்பு பெற்ற பயிற்சியை நினைத்துக்கொண்டபடி, சிவப்பு வயரை அறுத்தான்.

கடிகாரம் பீப் என்ற ஒலியுடன் நின்றது.

கவிதா” என்னங்க இது? என்ன நடக்குது?” என்றாள்.

“ஒன்னுமில்லைம்மா..சும்மா..பாண்டியன் ஒரு போட்டி வச்சான்..ஒரு விளையாட்டு..நீ வீட்டுக்குப் போ..நான் அப்புறம் சொல்றேன்” என்று அவளை அனுப்பி விட்டு, அந்த கிஃப்ட் பார்சலுடன் ஆஃபீஸ் நோக்கி விரைந்தான்.

ஆஃபீசில் நுழைந்ததும் பாண்டியனின் இடத்தை நோக்கி ஓடினான் சரவணன்.

தன் சீட்டில் அமர்ந்திருந்த பாண்டியன் வேகமாக வரும் சரவணனைப் பார்த்து, எழுந்து நின்றான்.

சரவணன் வரும்போதே அந்த கிஃப்ட் பார்சலை பாண்டியனின் முகத்தில் எறிந்தான். பாண்டியன் நிலைதடுமாறும்போது, ஓடி வந்து பாண்டியன் மீது பாய்ந்தான்.

இருவரும் கட்டி உருள, ஆபீஸே ரணகளமானது. ரங்கசாமியும் பிறரும் ஓடி வந்து இருவரையும் பிரித்துவிட்டனர்.

அகிலா தன் ரூமில் இருந்து ஓடி வந்தாள்.

“என்னாச்சு? என்னாச்சு?” என்றாள்.

சரவணன் மூச்சிறைத்தபடி, “மேம், இவன் என் வைய்ஃபை டைம் பாம் வச்சு கொல்லப் பாத்திருக்கிறான் மேம்..இவனை முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க” என்ரான்.

அகிலா “டைம் பாமா?” என்றபடி பாண்டியனைப் பார்த்தாள்.

அவன் அமைதியாகச் சிரித்தபடி “அப்படியெல்லாம் ஒன்னுமில்லை மேம், “என்றான்.

“ஒன்னுமில்லையா...மேம், இதோ பாருங்க” என்றபடி சரவணன் அந்த கிஃப்ட் பார்சலைக் கொடுத்தான்.

”அவர் ஏதோ உளறுதார் மேம்..அவன் ஒய்ஃபுக்கு இன்னிக்கு பர்த் டே இல்லியா? அதனால சின்னதா ஒரு வால் கிளாக் கிஃப்ட்டா வாங்கினேன்..அப்படியே கொடுத்தா சப்பையா இருக்குமேன்னு சும்மா டம்மி டைம் பாம் மாதிரி நாலஞ்சு ஒயரைச் சுத்திக் கொடுத்தேன்..அதை பிரிச்சுப் பார்த்தாலே, அது டம்மின்னு தெரியும்..ஒரு கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வைய்ஃபுக்கு கொஞ்சம் டெக்னிகலா கிஃப்ட் கொடுப்போம்னு நினைச்சேன்..இது தப்பா? அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற மாதிரி, அவருக்கு நான் எது பண்ணாலும் தப்பாத் தெரியுது. கவிதா என் தங்கச்சி மாதிரி..அவங்களுக்கு ஏன் நான் டைம் பாம் கொடுக்கப் போறேன்?”

அகிலா கீழே கிடந்த அந்த கிஃப்ட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அருகில் இருந்தோரும் வாங்கிப் பார்த்தனர். அழகாக பேக் செய்யப்பட்ட, சின்ன வால் கிளாக்..அதன் பின்னால் டம்மியாக டைம் பாம் போன்ற வேலைப்பாடுடன் கூடிய பிளாஸ்டிக் பாக்ஸ்.

“நைஸ் கிஃப்ட்” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

அகிலா சரவணன் மேல் கோபமானாள்.

“சரவணன்..திஸ் இஸ் டூ மச்..ஒன்னுமில்லாத விஷயத்துக்கு ஆஃபீஸ்ல இவ்ளோ ரகளை பண்ணியிருக்கீங்க”

“பரவாயில்லை மேம்” என்றான் பாண்டியன் அப்பாவியாக!

“பாண்டியன். நீங்க வேணா உங்க ஃப்ரெண்டாச்சேன்னு சும்மா விடலாம். ஆனா, ஒரு ஹையர் அஃபிசியலா இதை நான் பொறுத்துக்க முடியாது. ஆஃபீஸ்ல இண்டீசண்டா நடந்துக்கிட்டதுக்காக சரவணனை ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்றேன். நீங்க கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா, சரவணன் மேல கேஸ் ஃபைல் பண்ணச் சொல்றேன்”

“அய்யோ..அதெல்லாம் வேண்டாம் மேம்..இவருக்காக இல்லேன்னாலும் கவிதாவுக்காகவாவது நாம விட்டுடுவோம்”

அகிலா சரவணன் பக்கம் திரும்பினாள். “ஓகே, சரவணன்..நீங்க கிளம்பலாம்..இனிமே நீங்க முத்துராமன் சார் கொலைக்கேஸை டீல் பண்ண வேண்டாம். அந்த கேஸ்ல இருந்து பெர்மனெண்ட்டா உங்களை தூக்கறேன். பாண்டியன் பார்த்துப்பார், அந்தக் கேஸை!”

சரவணன் பாண்டியனைப் பார்த்தான்.

பாண்டியன் நக்கலாகச் சிரித்தான்.

சரவணன் அவமானத்துடன் தலை குனிந்தபடி கீழே இறங்கினான்.


(வேட்டை...தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_14"

Thursday, June 14, 2012

குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

பொதுவாகவே நமது பிரதமர் மன்மோகன்சிங்கின் மத்திய அரசு, அடிப்படை மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பாடாத, ஷேர் மார்க்கெட் இண்டெக்ஸ் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம் என்று செயல்படும் அரசு. ஆனால் பல மாநிலங்களின் விவசாயிகளின் தற்கொலைகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நூறு நாட்கள்-ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற நல்ல திட்டத்தை அதிசயமாக அறிமுகப்படுத்தியது மன்மோகன் அரசு.

விவசாயக் கூலிகளுக்கு வருடத்தில் எல்லா நாட்களுமே வேலை இருப்பதில்லை. இடையில் வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு மத்திய அரசே வேலை கொடுக்கும் திட்டம் இது. கிராமப்புற நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை மேம்படுத்தல் போன்ற பணிகளை பொதுவாக தனியாருக்கு காண்ட்ராக் விடுவது வழக்கம். அவர்கள் லஞ்சம்/ஊழல் போக, மீதிப் பணத்தில் ஏதோ கொஞ்சம் வேலையை முடிப்பார்கள். எனவே அதற்குப் பதிலாக அந்தப் பகுதி மக்களிடமே அந்த வேலையைக் கொடுத்துவிட்டால், தன் சொந்த ஊரின் நலனுக்காக அக்கறையுடன் வேலை செய்வர். ’வேலையற்ற விவசாயிகளுக்கு வேலை கொடுத்த மாதிரியும் ஆச்சு, காண்ட்ராக்ட்டில் நடக்கும் தில்லுமுல்லுகளை ஒழித்த மாதிரியும் ஆச்சு’ என்ற நல்ல சிந்தனையுடன் கொண்டுவரப்பட்டது இந்தத் திட்டம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?


ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், 100 ரூபாய் கூலி தர வேண்டும். நேர்மையின் சிகரமான நம் அதிகாரிகளும் பஞ்சாயத்து தலைவர்/உறுப்பினர்களும், மக்களுக்கு அருமையான ஆஃபர் வழங்கினார்கள். ‘நீங்கள் வேலையே செய்ய வேண்டாம். 70 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.மீதியை நாங்கள் பங்கிட்டுக்கொள்கிறோம்’ என்பதே அந்த ஆஃபர். அதைக்கேட்டு நம் மக்கள் கொதித்தெழுந்தார்கள். ‘வேலையே செய்ய வேண்டாம் என்பது சரி.ஆனால் 30ரூபாயை எடுத்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்?’ என்று கேட்டு எங்கள் பகுதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்பின் அதிகாரிகள் இறங்கி வந்தார்கள். 80 ரூபாயில் பேரம் படிந்தது.

இப்போது தினமும் காலையில் 150க்கும் மேற்பட்ட மக்கள் சரியான நேரத்தில் ஆஜராகிறார்கள். அவர்கள் வேலை செய்ய வேண்டிய பகுதி நிலத்தில் கோடு போட்டு பிரித்துக் கொடுக்கப்படுகிறது.  அதை கொஞ்ச நேரம் சும்மா கொத்த வேண்டும்..இரண்டு சட்டி மண்ணை அள்ளி பக்கத்தில் எங்கேயோ போட வேண்டும். (அதை ரோடு ஓரம் போட்டு, மழை நேரத்தில் மினி பஸ் சேற்றில் சிக்கிய கூத்தும் நடந்தது). அவ்வளவு தான் வேலை. பிறகு அருகில் இருக்கும் மரத்தடியில் உட்கார்ந்து கொள்ளலாம். வீட்டிற்கும் போய்க்கொள்ளலாம். இன்ஸ்பெக்சனுக்கு மேல்அதிகாரிகள் வரும்போது மட்டும் அனைவரும் சின்சியராக நடிக்க வேண்டும். இதுவே திட்டம் செயல்படுத்தப்படும் முறை.

’தன் சொந்த மண்ணாயிற்றே..அதனை மேம்படுத்துவது நம் பணியாயிற்றே’ என்ற அக்கறையோ புரிதலோ இந்த மக்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. மக்களே ஊழல்வாதிகள் ஆகிப்போன கொடுமை தான் தாங்க முடியாததாக உள்ளது. ‘கவர்மெண்ட் காசு தானே..காவ்ர்மெண்ட் வேலை தானே’ என்ற அலட்சிய மனோபாவம் அடித்தட்டு மக்கள் வரை பரவியுள்ளது. இவர்களைப் பார்க்கும் இவர்களது குழந்தைகளின் மனதிலும் ‘நாளைக்கு படித்துவிட்டு, அரசு வேலைகளுக்குப் போனாலோ, படிக்காமல் அரசியல்வாதியாகப் போனாலோ இப்படித் தான் நடந்து கொள்ளவேண்டும்’ என்றல்லவா பதிந்து விடும்? ‘அன்னிக்கு திடீர்னு செக் பண்ண ஆபீசருங்க வந்துட்டாங்க மாமா..அம்மா வீட்டுல இருந்து திடுதிடுன்னு ஓடுனா..ஹா..ஹா’ என்று ஒரு பிள்ளை சொல்வதைக் கேட்டபோது கஷ்டமாக இருந்தது. லட்சக்கணக்கான கோடிகளில் நடக்கும் ஊழல்களைவிட, இந்த 30 ரூபாய் ஊழல் விளைவிக்கும் சமூகக்கேடு அதிகம்.

சொந்த மக்களின் முன், சொந்தக் குழந்தைகளின் முன் திருடர்களாக வாழ்வதும், அதைப் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் நம் மக்களுக்கு இல்லாமல் போனதும் தான் கொடுமை. சமூகரீதில் இத்தகைய பாதிப்பு என்றால், தொழில்ரீதியில் இந்தத் திட்டம் கொடுக்கும் பாதிப்பு மிகமிக அதிகம். வருடத்திற்கு 100 நாள் மட்டுமே என்று இருந்த இந்தத் திட்டம், திடீரென வருடம் முழுமைக்கும் விரிவுபடுத்தப் பட்டது. 


என் மாமா ஒருவர் விவசாயி. நெல் பயிரிட்டு விட்டார். நெல் விளைந்ததும் அறுக்க வேண்டும். வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டால், யாரும் வரத் தயாரில்லை. (விவசாய வேலைகள் இல்லாத நேரம் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது விதி...ஆனால் நம் விதி?) ‘சும்மா உட்கார்றதுக்கே 80 ரூபாய் தர்றாங்க..நாங்க எதுக்கு வேலைக்கு வரணும்?’ என்று மக்களே கேட்டபோது மாமா நொந்து போனார். பிறகு பஞ்சாயத்து தலைவரைப் பார்த்து கெஞ்சி ‘அய்யா..ஏதாவது வேணும்னா வாங்கிக்கோங்க..ரெண்டு நாளைக்கு உங்க திட்டத்தை நிறுத்தி வைங்க’ என்று சொன்னபிறகு, அந்த அருமையான திட்டம் இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது இந்தத் திட்டம். விவசாயிகள் நலனுக்கு என்று கொண்டு வரப்பட்ட திட்டம், விவசாயத்திற்கே ஆபத்தாக ஆனதை என்னவென்பது? எங்கள் பகுதியில் உள்ள தீப்பெட்டி/பட்டாசுத் தொழில்களும் இதனால் நசித்துப்போகும் நிலைமை.


பொதுவாக நாட்டில் நடக்கும் ஊழலை வெளிக்கொண்டுவரும் சில கட்சிகளும் அமைப்புகளும் மீடியாக்களும் இதைப் பற்றிப் பேசுவதேயில்லை. சென்ற மாதம் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ‘தமிழகத்தில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு 2500 கோடி ரூபாய் ஒதுக்கினோம். இந்த ஆண்டு 5000 கோடி ரூபாய் ஒதுக்கவுள்ளோம்’ என்று சொல்லியுள்ளார். ’விவசாயம்னு ஒன்னு இருந்தாத் தானே விவசாயக்கூலிகள் பிரச்சினை வரும்? எப்படியாவது விவசாயத்தை ஒழிச்சிடுவோம்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்களோ என்று தோன்றுகிறது.

பொதுநல அமைப்புகள் யாராவது இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி, விவசாயிகளைக் காப்பது அவசியம். இல்லையென்றால் தக்காளி கிலோ 200 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை வருவது நிச்சயம்.

மேலும் வாசிக்க... "குரங்கு கையில் சிக்கிய பூமாலை - ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்"

Tuesday, June 12, 2012

முருக வேட்டை_13


அப்போது சரவணனின் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். கவிதாவின் நம்பர். 

“ஹலோ” 

“குட் மார்னிங் சரவணன்..” என்றது பாண்டியனின் குரல்.

"பா...பாண்டியன்..நீ என்ன பண்றே, அங்கே?”

“சாரி மேன்..நான் கொடுத்த டயத்தையெல்லாம் வேஸ்ட் ஆக்கிட்டே..!” 

சரவணன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் “என்ன சொல்றே?’ என்றான்.

“ஹா..ஹா..உன் பொண்டாட்டிக்கு பர்த் டே கிஃப்ட்டுன்னு ஒரு டைம்-பாம் கொடுத்திருக்கேன்.அது சரியா 10:24க்கு வெடிக்கும். முடிஞ்சா காப்பாத்திக்க..பை!” என்று சொன்னதுடன் எதிர்முனை கட் ஆனது.

சரவணன் மணியைப் பார்த்தான். பத்து மணி..இன்னும் 24 நிமிடங்கள்..கிண்டி டூ எம் எம் டிஏ காலனி..ட்ராஃபிக் இல்லையென்றால் போய் விடலாம். எழுந்து லிஃப்ட்டை நோக்கி ஓடினான் சரவணன்.

MARS....

M - முத்துராமன் என்றால் A எப்படி கவிதா வரும்?

அச்சு!

மை காட்..நான் கவிதாவை அச்சு என்று அழைப்பேன் என்று ஆபீசில் அகிலாவிற்கும் பாண்டியனுக்கும் மட்டுமே தெரியும். ச்சே...இதை எப்படிக் கவனிக்காமல் போனோம்? இன்று அச்சுக்குப் பிறந்த நாள் வேறு..அதையும் மறந்து தொலைத்தோம்..

பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தான் சரவணன். பைக் காசி தியேட்டர் தாண்டிப் பறந்தது. அசோக் பில்லர் சிக்னலில் டிராஃபிக் ஜாம் ஆகியிருந்தது.

‘என்ன செய்வது..கவிதா கர்ப்பிணி வேறு..திடீரென்று எதுவும் சொல்லவும் முடியாது’ யோசித்தபடியே மொபைலை எடுத்து கவிதாவுக்கு ஃபோன் செய்தான்.

“அச்சு..?” என்றான்.

“சொல்லுங்க..இப்போத் தான் பாண்டியன் வந்திட்டுப் போறார்..ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு அண்ணன் வந்திட்டார்” என்றபடி சிரித்தாள் கவிதா.

“எ..எதுக்கு வந்தான்?”

“எதுக்கா? என் பர்த் டே உங்களைத் தவிர எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு..வந்து ஒரு கிஃப்ட் கொடுத்துட்டுப் போறார்”

“என்ன கிஃப்ட்?”

“இன்னும் பிரிக்கலை” என்றாள்.

“கொஞ்ச நேரம் முன்ன உன் மொபைல்ல இருந்து பேசினான்”

“ஆமா, வந்ததை உங்ககிட்ட சொல்லணும்னார்..அவர் மொபைல்ல பேலன்ஸ் இல்லையாம்..அதான் என் மொபைல்ல இருந்து பேசினார்.”

“அப்போ அவன் பேசும்போது கூட இருந்தியா?”

“இல்லையே..கிச்சன்ல காஃபி போட்டுக்கிட்டிருந்தேன்..ஏன்?”

“இல்லை..சும்மா கேட்டேன்.அச்சு, நான் சொல்றதைக் கேளு..நான் இப்போ அசோக் பில்லர்கிட்ட நிக்குறேன்..இன்னும் அஞ்சே நிமிசத்துல அங்கே வந்திடுவேன்..நாம அர்ஜெண்டா ஒரு இடத்துக்குப் போறோம். அதனால உடனே நீ கீழே இறங்கி வந்திடு..ரமணாஸ் கார்னருக்கு வந்திரு”

“நான் எங்கேயும் வர மாட்டேன்..காலையில ஞாபகம் இல்லியாம்..இப்போ வெளில கூட்டிட்டுப் போறாராம்..ஒழுங்கா திரும்பி ஆபீசுக்குப் போங்க”

”ஏ லூசு..நான் ஒன்னும் உன் பர்த் டேக்கு வெளில கூப்பிடலை”

“அப்புறம் எதுக்காம்?’

சரவணன் முழித்தான். 

‘என்ன சொல்லி இவளை கீழே இறக்குவது?’ 

சட்டென்று அகிலாவின் அப்பா விஸ்வநாதன் ஞாபகம் வந்தார்.

“அகிலா மேம் அப்பா இருக்கிறாரில்லை..அவர் உன்னைப் பார்க்க வர்றேன்னார்..உனக்கு சஸ்பென்சா இருக்கட்டும்னு சொல்ல வேண்டாம்னார்..அகிலா மேம்க்குகூடத் தெரியாது..அவரால ஸ்டெப்ஸ் ஏற முடியாது இல்லியா?..அதனால அவர் கார்ல ரமணாஸ்கிட்ட வெயிட் பண்ணச் சொல்லியிருக்கேன்..நான் வரவும் மூணு பேரும் வெளில போறோம்..ஓகே?”

“ஓ...அப்போச் சரி”

“உடனே கீழ வா..வீட்டுக்கிட்ட நிக்க வேண்டாம்..நேரா ரமணாஸ் வந்திரு”

“சரி..சரி”

நிமதிப் பெருமூச்சுடன் கால்-ஐ கட் செய்தான் சரவணன். 

‘செந்தில் பாண்டியன்...என் கண்ணுல விரலை விட்டு ஆட்டறே, இல்லே? வர்றேன்..திரும்பி வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்’ 

டிராஃபிக் ஒரு வழியாய் கிளியர் ஆனது. சரவணன் பைக்கை விரட்டினான்.

வல்லவன் ஹோட்டல் வழியே எம்.எம்.டி.ஏ.காலனிக்குள் நுழைந்தான். ரமணாஸ் ஹோட்டலை நெருங்கும்போது கவிதா காத்திருப்பது தெரிந்தது. மணியைப் பார்த்தான். 

10:20

’நல்லவேளை கவிதா வெளியே வந்துவிட்டாள்’ என்று சந்தோசப்பட்டபடியே, பைக்கை ஹோட்டல் அருகே நிறுத்தினான்.

நிறுத்திவிட்டு கவிதாவைப் பார்த்தவன் அதிர்ந்தான் சரவணன்.

கையில் ஒரு கிஃப்ட் பார்சலுடன் நின்றுகொண்டிருந்தாள் கவிதா.

“ஹே..என்ன இது?”

“இதாங்க பாண்டியன் கொடுத்த கிஃப்ட்”

(வேட்டை...தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_13"

Monday, June 11, 2012

தமிழ்வாசியுடன் ஒரு சந்திப்பு..

எனக்கு தமிழ்வாசியை மிகவும் பிடிக்கும். ‘இலக்கியம் கிலக்கியமெல்லாம் நமக்குத் தெரியாதுங்க..ஏதோ மனசுல பட்டதை எழுதறேன்’ என்று வெளிப்படையாகப் பேசுபவர். இந்த விடுமுறையில் வெகுசில நண்பர்களை சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்தேன். ஆனாலும் நேரமின்மையால் முடியவில்லை. ஆனாலும் தமிழ்வாசியிடம் முன்பே மதுரை வருவதாக வாக்கு கொடுத்துவிட்டதால் எப்படியும் ஒருநாள் அவரைச் சந்திப்பது என்று முடிவு செய்தேன்.

கோவில்பட்டியில் ஒருநாள் நில விஷயமாக காலை முதல் வேகாத வெயிலில் அலைந்து கொண்டிருந்தேன். மூன்று மணிக்கு மேல் வருவதாகச் சொன்ன ஒரு பார்ட்டி, திடீரென்று இன்று வர முடியாது என்று சொல்லிவிட, இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் வராது என உடனே மதுரைக்குப் பஸ் ஏறினேன். காலை முதல் அலைந்ததில் பார்ப்பதற்கு பரதேசி மாதிரி ஆகியிருந்தேன். ஆனாலும் ‘நாம் என்ன தமிழ்வாசியை பொண்ணா பார்க்கப் போறோம்?’ என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். (இல்லேன்னாலும்..)

பஸ் மதுரையை நெருங்கும்போது தான் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது.  “செங்கோவி, நான் நேத்துப் போட்ட பதிவு படிச்சீங்களா? எப்படி இருந்துச்சு? மூணாவது பாரால நாலாவது வரில அந்தப் பதிவருக்கு ஒரு உள்குத்து வச்சிருந்தேனே, கவனிச்சீங்களா? என்னது கவனிக்கலையா? என்னங்க இது, யாருமே கவனிக்க மாட்டேங்கிறீங்க..அப்புறம் அந்த பெண் பதிவர் பத்தி.................................”-இப்படி தமிழ்வாசியிடம் சேட்டில் மாட்டினாலே நோண்டி நோண்டி கேள்வி கேட்பாரே...’நாம வேற ஒரு வாரமாப் பதிவே படிக்கலியே..என்னெல்லாம் கேட்கப் போறாரோ?..இப்படி திடீர்னு பேக்கு மாதிரிக் கிளம்பிட்டமே’ன்னு யோசிச்சுக்கிட்டே பெரியார் பஸ் ஸ்டாண்ட் போய் இறங்குனேன். (ஃபாரின் பதிவர்னா இடையில் திருமங்கலத்தில் இறங்கி பிஸ்ஸி விட்டு கூல் ட்ரிங்ஸ் சாப்பிட்டதையும் டீடெய்லா எழுதணும்னு சொல்றாங்களே, அப்படியாங்க?)

பெரியார் அருகே காத்திருந்த போது தமிழ்வாசி வந்து சேர்ந்தார். பார்ப்பதற்கு அமுல்பேபி போன்று இருந்தார். சிவப்பாக, ஹேண்ட்சமாக இருக்கும் நபர்களையெல்லாம் உத்து உத்துப் பார்த்தார். இனியும் பொறுக்கக்கூடாது என்று அவரைப் பார்த்து கையசைத்தேன். “செங்கோவி” என்றேன்.

ஒரே நேரத்தில் இடியும் மின்னலும் தங்கமணியும் தாக்கினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு அதிர்ச்சிக்கு ஆளானார் தமிழ்வாசி. “என்னங்க இது..பார்க்கறதுக்கு எப்படியோ இருப்பீங்கன்னு பார்த்தா இப்படி சின்னப்பையனா, யங்கா, யூத்தா இருக்கிறீங்க?” என்ற கேள்வியை மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கேட்டார்.

“உங்க சைஸுக்கு ஷகீலாவே சின்னப் பொண்ணாத் தான் தெரியும்” என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த கரும்புச் சாறு கடைக்கு அழைத்துச் சென்றேன். கரும்புச் சாறு குடிக்கவும் அவர் முகம் இன்னும் அஷ்டகோணலானது.

சப்புக்கொட்டிக் குடித்தபடியே “என்னாச்சு?” என்றேன்

“நல்லாவே இல்லை” என்றார். ’அடப்பாவி மனுசா..ஒருத்தன் ரசிச்சுக் குடிக்கிறானே..அதுக்காகவாவது சும்மா இருக்கக்கூடாதா’ன்னு நினைச்சுக்கிட்டு “ஓ..ஆமா..கொஞ்சம் டேஸ்ட் கம்மி தான்” என்றேன்.

“புதூர்ல தாங்க நல்லா இருக்கும்.” என்று தன் ஜீகேயைக் காட்டினார்.

“ஓஹோ” என்று சொல்லிவிட்டு மீதி இருப்பதைக் குடிக்க விடுவாரா..மாட்டாரா என்று யோசித்தேன்.

“இன்னும் கொஞ்ச தூரம் போனா ரெண்டு ஆண்ட்டிங்க கரும்புச்சாறு விக்காங்க..நல்லாவே இருக்காது” என்றார்.

நான் புரியாமல் “ஆண்டிங்களா? ஜீஸா?” என்றேன்.

“ரெண்டும் தான்” என்றார் சோகத்துடன்....ப்ச்..ப்ச்..ஒரு மனுசனுக்குத் தான் எத்தனை கஷ்டம்.

பிறகு நண்பர் என்னை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பைக்கை எடுக்கச் சென்றார். என்ன இடம் என்று திரும்பிப் பார்த்தால்....தங்க ரீகல் தியேட்டர்.

தந்தன..தந்தன..-ன்னு பழைய ஞாபகங்கள் பீறிக்கிட்டு கிளம்புச்சு. சினிமா அறிவை வளர்க்கும்பொருட்டு எத்தனையோ உலகப் படங்களைப் பார்த்த இடமல்லவா அது!

மடோனாவின் பாடி ஆஃப் தெ எவிடன்ஸ் பார்த்ததெல்லாம் நினைவில் வந்தபோது “என்னாங்க..தனியா சிரிச்சுக்கிட்டு நிக்கிறீங்க?” என்றார் தமிழ்வாசி.

”ஹி..ஹி..தங்க ரீகல்” என்றேன்.

“பழைய ஞாபகமா? இப்போ நல்ல படங்கள் மட்டும் தாங்க ஓடுது” என்றார்.

‘அடப்பாவிகளா..தங்க ரீகலை இப்படிப் பித்தளை ரீகல் ஆக்கிட்டாங்களே’ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே மதுரையில் கொஞ்ச நேரம் சுற்றினோம். மிக்சரும் அல்வாவும் பார்சல் வாங்கிக் கொடுத்தார் தமிழ்வாசி. கொடுத்துவிட்டு “இது உங்க பையனுக்கு..போற வழியிலேயே எல்லாத்தையும் சாப்ட்றாதீங்க” என்று அட்வைஸ் சொன்னார். 

அதன்பின் மீனாட்சி பவனில் டின்னர் முடித்துவிட்டு (உபயம்:தமிழ்வாசி), கிளம்பினேன். ‘நான் போய்க்கிறேன்’ என்று சொல்லியும் கேட்காமல் ஹெவி டிராஃபிக்கில் அவரே மாட்டுத்தாவணி வரை பைக்கில் கொண்டு வந்து விட்டார்.

பிரியும்போது நெஞ்சு அடைத்து, கண்ணீர் வரவில்லை. ’எப்படியும் வீடு போய்ச் சேரமுன்ன நாலு ஃபோன் பண்ணப்போறாரு..அப்புறம் என்ன..’ என்று நினைத்தபடியே விடைபெற்றேன்.


பஸ் ஏறியபிறகே தமிழ்வாசியிடம் கேட்க நினைத்த முக்கியமான அந்தக் கேள்வியை கேட்க மறந்தது ஞாபகம் வந்தது. கொஞ்சநாள் முன்பு, ஜவ்வுமிட்டாய் பற்றி அவர் ஒரு பதிவு எழுதியிருந்தார். கமெண்ட்டில் ‘ஜவ்வுமிட்டாயை எவ்வளவு தூரத்திற்கு பிய்யாமல் இழுக்கலாம்?’ என்று கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு மனுசன் பதில் சொல்லவில்லை. எனவே நேரிலாவது இதற்கு பதில் வாங்கி விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது மறந்துவிட்டேன்..ச்சே..
எனவே தமிழ்வாசி அவர்கள் இங்கே கமெண்ட்டில் அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக விவரங்களுக்கு : கண்டேன் செங்கோவியை! (தமிழ்வாசியின் பதிவை அவசியம் படித்துப் பயன்பெறுங்கள்)

மேலும் வாசிக்க... "தமிழ்வாசியுடன் ஒரு சந்திப்பு.."

முருக வேட்டை_12


காலையில் காலிங் பெல் சத்தம் கேட்டு, கவிதா கதவைத் திறந்தாள். கருப்புச் சட்டையுடன் நான்கு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். கடவுளே இல்லையென்பதில் தீவிரமாக இருப்பவர்கள்.

கவிதாவைப் பார்த்ததும் சிரித்தபடியே “வணக்கம்” என்றார்கள்.

கவிதா “வாங்க ஐயப்ப சாமீகளா...என்ன மீட்டிங்கா? ஊர்வலமா?’ என்றாள்.

“மீட்டிங் தான்க்கா..சார் இல்லியா?” என்றான் ஒருவன்.

“குளிச்சுக்கிட்டிருக்காங்க..டொனேசன் தானே?’ என்றாள்.

“ஆமா” என்றான் அசட்டுச் சிரிப்புடன்.

“உள்ளே வந்து உட்காருங்க” என்று சொல்லிவிட்டு கவிதா உள்ளே போய் பணம் எடுத்து வந்தாள். 

“நன்றி” என்றபடியே வாங்கிக்கொண்டார்கள்.

“வர்ற ஞாயிற்றுக்கிழமை மீட்டிங். எங்க கட்சித்தலைவரே வர்றார்..நீங்க வர மாட்டீங்க..சாரையாவது வரச்சொல்லுங்க” என்று சொன்னபடி கிளம்பினார்கள்.

“நான் சொல்லாமலே அவர் வந்திடுவார்..கவலைப்படாதீங்க” என்றபடியே அவர்களை வழியனுப்பி வைத்தாள் கவிதா.

சரவணன் சிறிது நேரம் கழித்து வந்து “யாரு?” என்றான்.

“உங்க கூட்டாளிங்க..பகுத்தறிவாதிங்க..வர்ற சண்டே ஏதோ மீட்டிங்காம்..டொனேசன் வாங்கிட்டுப் போறாங்க.” என்றாள்.

”ஆங்..அன்னிக்கே வழில பார்த்துச் சொன்னாங்க..சரி, லேட் ஆகிடுச்சு..நான் கிளம்பறேன்” என்ரான்.

கவிதா “எங்கே?’ என்றாள்.

சரவணன் ஆச்சரியத்துடன் “இதென்ன கேள்வி? ஆபீசுக்குத் தான்” என்றான்.

அவள் சிரித்தபடி “ஓ..ஓகே..ஓகே” என்றாள்.



மறுநாள் ஆபீஸ் வந்ததும், அகிலா முதல் வேலையாக கவிதாவிற்குப் போன் செய்தாள்.

“ஹலோ”

“கவிதா..மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தெ டே..ஹேப்பி பர்த்டே “

“தேங்க்ஸ்க்கா”
”அப்புறம், மூணு மாசம் முடிஞ்சிடுச்சு இல்லியா?”

”ஆமாக்கா..முதல் மூணு மாசம் ரொம்ப கேஃபுல்லா இருக்கணும்னு சொன்னீங்களே..”

“ஹா.ஹா..ஆமா, இனிமே ஒரே எஞ்சாய்மெண்ட் தானா?”

கவிதா சிரித்தாள். “அய்யோ..அக்கா நான் அதைச் சொல்லலைக்கா..என்ன இப்படில்லாம் பேசறீங்க?” 
“பேசுனா என்ன தப்பு? யாராவது பேசித் தானே ஆகணும்? நிதானமா, பார்த்து நடந்துக்கணும் சரியா?”

“அய்யோ, அந்தப் பேச்சை விடுங்கக்கா” என்றாள் கவிதா வெட்கத்துடன்.

“சீரியசாத் தான்டி சொல்றேன்...இப்போ சந்தோசமா இருக்கிறது நல்லது..அது சுகப்பிரசவத்துக்கும் ஹெல்ப் பண்ணும், புரியுதா?’ என்றாள் அகிலா.

கவிதா சிரிப்புடன் “ம்” என்றாள்.

“அப்புறம் டாக்டர் மூணு மாசத்துக்கு ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கச் சொன்னாருல்ல? இனிமே அது தேவையான்னு டாக்டர்கிட்ட கேட்டுக்கோ..அது குழந்தையோட நரம்பு வளர்ச்சிக்கு நல்லது..ஹே, குழந்தைங்கவும் தான் ஞாப்கம் வருது. கருவுக்கு கை, கால், முகம் எல்லாம் வளர்ந்து பார்க்கறதுக்கு இப்போத் தான் குழந்தை மாதிரி இருக்கும், தெரியுமா? “

“ஓ..அப்படியா?”

“ஆமா..இப்போ வாமிட்டும் குறைஞ்சிடுச்சுல்ல?”

“எங்கே குறைஞ்சிருக்கு...!”

“குறையும்..குறையும்..இனிமே நீ கொஞ்சம் கொஞ்சமா வாக்கிங் போகலாம்..எதுக்கும் டாக்டர்கிட்ட கேட்டுக்கோ..ரொம்ப நேரம் நிற்கவும் வேண்டாம், நடக்கவும் வேண்டாம். ரொம்ப நேரம் நின்ன, நடந்தா கருப்பைக்குப் போற ரத்த ஓட்டம் குறையும்..பார்த்துக்கோ”

“சரிக்கா”

“சரி, உன் பர்த் டே-க்கு என்ன ப்ளான்?”

“ப்ளான்லாம் ஒன்னுமில்லைக்கா”

“சரவணன் எங்கேயும் கூட்டிட்டுப் போகலையா?”

“அவருக்கு ஞாபகம் இருந்தாத் தானே கூட்டிட்டுப் போறதுக்கு?”

“என்னது உன் பர்த் டே ஞாபகம் இல்லியா?”

“ஆமா..அவர் காலைலயே ஆபீசுக்கு கிளம்பிப் போய்ட்டாரு..வந்திருப்பாரே, பார்க்கலியா?”

“கவனிக்கலை..சரி, நான் அனுப்பி வைக்கிறேன்”

“இருக்கட்டும்க்கா..பார்த்துக்கலாம்”

“நீ சும்மா இரு..” என்று சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தவள் இண்டர்காமில் சரவணனைக் கூப்பிட்டாள்.

"குட் மார்னிங் சரவணன்”

“மார்னிங் மேம்”

”சரவணன், இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் நாள்..என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்”

சரவணன் தன் டேபிளில் இருந்த காலண்டரைப் பார்த்தான்..அக்டோபர் 24..இன்னிக்கு என்ன..ஓ, மை காட்!

“மேம், கவி பர்த் டே”

“மறந்தாச்சா?”

“ஆமா..ஏதோ ஞாபகத்துல...”

“நேத்துப் பேசுனதை எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க..உங்ககிட்ட ஃப்ரான்க்கா பேசலாங்கிறதால தான் அப்படிப் பேசுனேன்..முதல்ல கிளம்புங்க”

“ஓகே, மேம்”

”ச்சே..எப்படி மறந்தோம்..’ என்று யோசித்தபடியே மறுபடியும் காலண்டரைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

10-24-2010------ செவ்வாய்க்கிழமை.

10-24-செவ்வாய்..மார்ஸ்!

MARS-1024 ஞாபகத்தில் வந்தது. 

அப்போது சரவணனின் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். கவிதாவின் நம்பர். 

“ஹலோ” 

“குட் மார்னிங் சரவணன்..” என்றது பாண்டியனின் குரல்.

(வேட்டை.....தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_12"