Saturday, June 30, 2012

முருக வேட்டை_17


மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்ற!
 

தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களுக்கு இப்போது எந்த மரியாதையும் இல்லை. பெரும் தலைவர்கள் வந்தாலன்றி, மக்கள் பொதுக்கூட்டங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 

சரவணன் மீட்டிங் நடக்கும் இடத்துக்குச் சென்றபோது, கூட்டத்தில் ஐம்பது பேர்கூட இல்லை. ஆனாலும் ஒரு தோழர் உணர்ச்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் வரிசையாக சிறு பேச்சாளர்கள் பேசி முடித்த பின், நிகழ்ச்சிக்கு தலைமையுரை ஆற்ற வந்திருந்த தலைவர் பேச ஆரம்பித்தார்.

வணக்கத்துடன் ஆரம்பித்த உரை, ‘அவர்களே’ போட்டு மெயின் டாபிக்குக்கு வந்தபோது, அரை மணிநேரம் ஆகியிருந்தது. 

“நாமளும் இந்த மக்கள் திருந்தணும்னு பல வருஷமா பேசிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் இவங்க திருந்தற மாதிரித் தெரியலியே? திடீர்னு ஒரு சாமியார் கிளம்பி வர்றான். நான் தான் கடவுள்ங்கிறான். அடுத்து கொஞ்சநாள்ல அவன் ஜெயிலுக்குப் போயிடறான். அதைப் பார்த்தாவது திருந்தறாங்களா? இல்லை. உடனே அடுத்த சாமியாரைப் பார்த்து ஓடுறாங்க. நாம பலவருஷமா பல தடவை சொல்லிட்டோம். சாமி-ங்கிறதெல்லாம் கட்டுக்கதைன்னு. உன் துட்டை ஏமாத்திப் புடுங்க கண்டுபிடிச்ச சதி தான் மதம்னு சொல்றோம். எவனும் கேட்க மாட்டேங்கிறான்.

இந்த புராணஙக்ள்னு குப்பைகள் சில உண்டாக்கியிருக்காஙக் பாருங்க..படிச்சா கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் நம்பிக்கை போயிடும். எல்லாமே ஆபாசக் குப்பைங்க. சரி, இத்தனை கடவுள்களை உண்டாக்குனாங்களே, அதையாவது சொந்தமா உண்டாக்குனாங்களான்னு அதுவும் இல்லை. எல்லாமே கிரேக்க, ரோமக் கடவுள்களோட காப்பி. 

நம்மாளுக அப்பவே காப்பி அடிக்கிறதுல பெரியாளா இருந்துருக்கான். இதை நான் சொல்லலைங்க. அய்யாவே ஆதாரப்பூர்வமா பல விஷயங்களைச் சொல்லிட்டுப் போயிருக்காங்க. சிவனும் இந்திரனும் யாரு? ஜூபிடர்ங்கிற கிரேக்கத் தெய்வத்தோட காப்பி. அந்த பிரம்மா யாருன்னு பார்த்தா, சாட்டர்னஸ்ங்கிற தெய்வத்தோட காப்பி. இவங்கள்லாம் முருகன்னு சொல்றாங்களே, அது யாரு தெரியுமா? மார்ஸுங்கிற ரோமானியக் கடவுளோட காப்பி. சரஸ்வதி மினர்வாங்கிற தெய்வத்தோட காப்பி. அய்யா தெளிவா எல்லாத்தையும் சொல்லியிருக்காங்க.

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சு. ’என்னடா இது..சின்ன ஒரு கூட்டம் வந்து இவ்ளோ மக்களை முட்டாளாக்கிடுச்சே.எப்படி, அவங்க என்ன அவ்ளோ புத்திசாலிகளா’ன்னு. ஆனால் உண்மை என்னன்னா அவங்களே கிரேக்க, ரோமானியக் கடவுள்களை காப்பி அடிச்சு, அதே கதையை நம்மகிட்டச் சொல்லித் தான் அடிமையாக்கியிருக்காங்க.”

தலைவர் பேசிக்கொண்டே போனார். ஆனால் சரவணன் காதில் அதன்பிறகு பேசிய எதுவுமே விழவில்லை.

மார்ஸ்...MARS 1024!

‘ங்கிறது ரோமானியக் கடவுளோட காப்பியா?..காலையில்கூட கவிதா ஏதோ சொன்னாளே..அதிபதி முருகன் என்று..’சரவணன் உடனே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இவர்கள் சொல்வது உண்மை தானா? நமது கடவுள்கள் எல்லாம் கிரேக்க, ரோமானியை இறக்குமதிகள் தானா? முருகரும் அப்படியா? அது தெரிந்து தான் பாண்டியன் MARS என்று எழுதி வைத்தானா? கேள்விகள் மண்டையைக் குடைய, வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.

கதவைத் திறந்த கவிதா ‘என்னங்க வந்துட்டீங்க? இன்னும் மீட்டிங்ல யாரோ பேசறது கேட்குதே?” என்றாள்.

”ஆமா..அதிருக்கட்டும், நான் கேட்கிறதுகு பதில் சொல்லு. முருகர் ரோமனியக் கடவுள் மார்ஸோட காப்பியா?” 

அதைக் கேட்ட கவிதா சிரித்தாள். “காப்பியா? என்னங்க பேசறீங்க?”

“சரி..முருகரும் மார்ஸும் ஒன்னா?”

“செவ்வாய்க்கிழமைக்கு மார்ஸோட பேரை வச்சிருக்காங்கன்னு படிச்சிருக்கேன். ஆனா ரெண்டும் ஒன்னுன்னு யாரும் சொன்னதில்லையே..ஏன் கேட்கறீங்க?”

“இன்னிக்கு மீட்டிங்ல ஒருத்தர் சொன்னாரு..”

“அதை சீரியஸா எடுத்துக்கிட்டா கேட்கிறீங்க?”

“ஆமா..பாண்டியன் அதை தெரிஞ்சுக்கிட்டுத் தான் மார்ஸ்-ன்னு எழுதியிருப்பானோ?”

“எந்த முருக பக்தனும் இந்தக் கதையை நம்ப மாட்டான்..முதல்ல இந்த மார்ஸை விடுங்க..நான் சொல்றதைக் கேளுங்க. சிவநேசன் மாமாகிட்ட இருந்து மெயில் வந்திருக்கு. நம்மளை கென்யாக்கு வரச்சொல்லியிருக்காரு. ஒரு வாரம் ஜாலியா கென்யா டூர் போவோம்”

“கென்யாவா? அங்கே என்ன இருக்கு?”

“அங்க தானே என் மாமா இருக்கார்...வேற என்ன இருக்கோ, தெரியாது. ஆள் இருக்கிற இடத்துக்குத் தானே போக முடியும்?”

“எதுக்கு திடீர்னு கூப்பிடறார்?”

“நான் தான் மெயில் அனுப்பிக் கேட்டேன். சும்மா..ஒரு சேஞ்சுக்காக.”

“ஃபாரின் போகணும்னா ஆபீஸ்ல பெர்மிசன் வேற வாங்கணுமே?”

“அகிலாக்காகிட்ட நான் வாங்கிக்கிறேன். மார்ஸைத் தூக்கி பரண்ல போடுங்க. கென்யா பத்தி மட்டுமே யோசிப்போம்’.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_17"

Friday, June 29, 2012

முருக வேட்டை_16


முருக வேட்டை_இரண்டாம் பாகம்

உருவாய் அருவாய் உளவாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் ஒளியாய்
கருவய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்! அருள்வாய் குகனே! 


- கந்தர் அனுபூதி


பூஜை ரூமிலிருந்து கவிதா வெளியே வந்தாள். சரவணன் லேப்டாபுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள்.

நான்கு நாட்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே சரவணன் முடங்கிக் கிடப்பது கஷ்டமாக இருந்தது. இதற்காகவே அவனை எங்காவது வெளியே கூட்டிப் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். எனவே கென்யாவில் இருக்கும் தன் தாய்மாமாவிற்கு மெயிலும் அனுப்பியிருந்தாள்.

”என்னங்க..என்ன செய்றீங்க?’

நாலுநாள் தாடியுடன் அமர்ந்திருந்த சரவணன் திரும்பிப் பார்த்தான். “சும்மா..கூகுள்ல MARS-ன்னு போட்டு தேடிக்கிட்டு இருக்கேன்.”

“ப்ச்..கொஞ்சநாளைக்கு அதை மறந்துட்டு ரிலாக்ஸா இருக்கலாம்ல?”

“நீ இருப்பியா?”

கவிதா சிரித்தாள்.

“சரி. கூகுள் என்ன சொல்லுது?”

“புதுசா ஒன்னும் சொல்லலை..சூரிய மண்டலத்தில் சூரியனிடமிருந்து நான்காவது இருக்கும் கிரகம். ரோமன் கடவுள் ‘மார்ஸ்’ பெயர் தான் இந்த கிரகத்துக்கு சூட்டப்பட்டிருக்கு. அதோட சர்ஃபேஸைச் சுத்தி அயன் ஆக்சைடு ஃபார்ம் ஆகியிருக்கிறதால, பார்க்கிறதுக்கு ரத்தக்கலர்ல சிவப்பா இருக்கும். அதனால ரத்த கிரகம்-ன்னும் இதைச் சொல்றாங்க. பூமியோட அளவுல பாதி தான் செவ்வாய் இருக்கும். செவ்வாய்க்கு இரண்டு நிலாக்கள் உண்டு.”

“முருகர்க்கு இரண்டு பொண்டாட்டி இருக்கிற மாதிரியா?”என்று சிரித்தாள் கவிதா.

“இப்போ ஏன் முருகரை இழுக்கறே?”

“இல்லீங்க..ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு அதிபதி உண்டுன்னு முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. அந்தவகையில செவ்வாய்க்கு அதிபதி முருகர்”

“அதிபதி-ன்னா?”

“ஓனர்”

“ஓஹோ..அப்போ மனுசன் செவ்வாய்ல குடியேறனும்னா முருகருக்குத் தான் வாடகை கொடுக்கணுமோ? ஏன் இப்படி அதிபதி, ஓனர்னு உளறிக்கிட்டு இருக்கிறே? எவனோ உங்களையெல்லாம் முட்டாளாக்கி, சம்பாதிக்க சொன்ன பொய்களை நம்பி இன்னும் எத்தனை நாளைக்கு வாழப் போறீங்களோ?”

கவிதாவின் முகம் வடிப்போயிற்று. இதற்காகத் தான் சரவணனிடம் அவள் ஆன்மீகம் பற்றிப் பேசுவதேயில்லை. என்ன பேசினாலும் ‘நீங்கள் எல்லோரும் முட்டாள்கள். நான் எல்லாம் அறிந்த புத்திசாலி’ என்ற தொனியிலேயே பதில் வரும். கவிதாவிற்கு சட்டென்று இன்று நடக்க இருக்கும் மீட்டிங் ஞாபகம் வந்தது.

“ஏங்க, இன்னிக்குத் தானே உங்க கட்சிக்காரங்க மீட்டிங்?”

“ஆமா..ஆனால் அது கட்சி இல்லை, இயக்கம். ரெண்டாவது அது ‘என்’ கட்சி இல்லை. நான் அதில் மெம்பர் இல்லை. அவங்க சொல்றது நியாயம் தானேன்னு ஃபாலோ பண்றவன். அவ்ளோ தான்."

“சரி..சரி..மீட்டிங்க்கு நீங்க போகலியா?”

“போகணும்”

சரவணன் மீட்டிங்கிற்குப் போனால், இந்த ‘மார்ஸ்-1024’ தொல்லையில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நேரம் நிம்மதியாக இருப்பானே என்று தோன்றியது. சஸ்பெண்ட் ஆனபின் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

“போய்ட்டு வாங்க”

“ஹே..நீயே ஒரு முருகர் பைத்தியம். ஆனாலும் அந்த நாத்திக பர்ட்டி வந்தாலும், சகஜமாப் பேசுறே..நான் மீட்டிங் போனாலும் ஒன்னும் சொல்றதில்லை, ஏன்?”

“அவங்க மேல நான் கோபப்பட என்ன இருக்கு? இந்து மதத்தில் விமர்சனத்துக்கு இடம் உண்டு. உங்களுக்குத் தெரியாததில்லை. இந்து மதத்துக்குன்னு, அதை நிர்வகிக்கன்னு தனி தலைமைப்பீடம் கிடையாது. இது ஒட்டு மொத்த மக்களால், அவங்களோட நம்பிக்கைகளால் நடத்தப்படும் ஒரு வாழ்க்கை முறை. இதுல மாற்றம் எப்படி வரும்? மக்களோட சிந்தனைகள்ல மாற்றம் வந்தாத் தான் மத ஆச்சாரங்கள் மாறும். அந்த மாற்றத்துக்கான குரல், மதத்துக்கு உள்ளே இருக்கிறவங்ககிட்ட இருந்து வரணும். அப்படி வராத பட்சத்தில் வெளில இருக்கிறவங்க அதுக்காக குரல் கொடுக்கிறது தப்புன்னு நான் நினைக்கலை. அவங்க அதைச் சொல்றமுறை ஹார்ஷா இருந்தாலும், இந்த ஒட்டு மொத்த மக்களோட சிந்தனைகளை கலைச்சுக்கிட்டே இருக்கிறது நல்லது தான். புத்தர் சொல்லலியா? காலப்போக்கில் அவர் சொன்னதில் பலவும் இந்து மத ஆச்சாரங்களுள் ஒன்னா ஆகலியா என்ன?”

”அப்போ அவங்க பேசறது சரி தான்னு ஒத்துக்கறீங்களா?”

”அவங்க சொல்றது சரியாயிருந்தா, காலப்போக்கில் இந்து மதம் அதை ஏத்துக்கும். தப்பா இருந்தா, வெட்டிக் கூச்சலா அதை ஒதுக்கித் தள்ளும். எவ்வளவோ எதிர்ப்புகளை இந்து மதம் தாண்டி வந்திருக்கு. இவங்க விமர்சனத்தால மட்டுமே ஒன்னும் ஆகிடப் போறதில்லை. இப்படி கூட்டம் இருக்கக்கூடாதுன்னு நான் நினைக்கலை. இந்தக் கூட்டத்துல ஒரு ஆளா நான் இருந்திடக்கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன்”

”ஏன்..அந்தக் கூட்டத்துல ஒரு ஆளா இருக்கிறதுல என்ன தப்பு?”

“தப்புன்னு ஒன்னுமில்லை..எதிர்மறைச் சிந்தனை மட்டுமே வாழ்க்கை முறையா ஆகிடும் அபாயம் அங்கே உண்டு. அதுல போன பலரும் அப்படித் தான் ஆகியிருக்காங்க...சரி, நேரம் ஆகுது..விட்டா, நான் பேசிக்கிட்டே இருப்பேன். நீங்க போய்ட்டு வாங்க”

சரவணன் அந்த மீட்டிங்கிற்கு கிளம்பினான்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_16"

Tuesday, June 26, 2012

நித்தியானந்தாவிற்கு நன்றி!


இந்து மதத்தில் துறவிகளுக்கு எப்போதுமே சிறப்பு மரியாதை உண்டு. திருவோடு, காவி உடையுடன் ஒருவர் வீட்டின் முன் வந்து நின்றுவிட்டால், அவருக்கு உணவளிப்பது நம் கடமைகளுள் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் எங்கள் பகுதியில் சிலர் அவ்வாறு வரும்போது ‘அவர் உண்மையோ போலியோ...அது அவன்பாடு..உணவளிப்பது/காசு கொடுப்பது நம் கடமை’ என்று அந்த காவி உடைக்குரிய மரியாதையைச் செய்துவிடுவது வழக்கம்.

மனித மனங்கள் அனைத்துமே ஒரே அலைவரிசையில் சிந்திப்பவை அல்ல. சிலருக்கு பக்தி மார்க்கம் மட்டுமே போதுமானதாக இருப்பதும் இல்லை. எனவே ஞான மார்க்கத்தில் சுகபோகங்களைத் துறந்து இறை சிந்தனை ஒன்றே தொழிலாக உள்ள அடியோரைப் பேணுவது இல்லற வாழ்வில் உள்ள இந்துக்களின் கடமையாகச் சொல்லப்பட்டது. ‘அன்பர்பணி செய்ய எனை ஆட்கொண்டுவிட்டால், இன்பநிலை தானே வந்தெய்தும் பாராபரமே’ என்று தாயுமானவர் பாடியதும் அதைத் தான்.

எல்லாமே நவீனமயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில், முற்றும் துறக்க வேண்டிய துறவிகளில் சிலரும் நவீனமாகி ‘கார்ப்போரேட் சாமியார்’களாக வலம் வர ஆரம்பித்தனர். முன்பிருந்த சமூகக் கட்டமைப்பில் உண்மையான துறவிகளை இனம் காணுவதும், பேணுவதும் எளிதாக இருந்தது. ஆனால் தற்போது இரண்டுமே சராசரி இந்துக்களுக்கு கடினமானதாக ஆகிவிட்டிருக்கிறது. எனவே எளிதான வழியாக கார்ப்போரேட் சாமியார்களை நம் மக்கள் நாட ஆரம்பித்தனர். தங்கள் சொந்தப்பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளவரே ஞானி என்ற தவறான புரிதலே, எல்லா தவறுகளுக்கும் அடிப்படை ஆனது.

இந்து மதத்தில் உள்ள நல்ல மற்றும் கெட்ட விஷயம், சுதந்திரப் பெருவெளியாக இருப்பதும் இதற்கென்று தனிப்பட்ட தலைமைப்பீடம் இல்லாததும் தான். அதனால் விளைகின்ற நன்மைகள் பலவாயினும், சில தீமைகளும் விளையாமல் இல்லை. அத்தகைய தீமைகளுள் ஒன்று தான் நித்தியானந்தா என்ற பீடை.

ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகள் வெளிப்பட்ட உடனே அவரை நம்பியிருந்த சராசரி இந்துக்கள் அதிர்ச்சியடைந்து விலகிவிட்டனர் என்பதே உண்மை. தற்போது ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களும், அதை நிர்வகிக்கும் (அனுபவிக்கும்) சிஷ்யகோடிகளுமே துணை என்ற நிலையில், நித்தி பாதுகாப்பு வேண்டி செய்த பெரும் தவறு மதுரை ஆதீனத்தை கைப்பற்றியது.

திருஞான சம்பந்தர் போன்ற மகான்களால் நடத்தப்பட்ட ஆதீனத்தை கைப்பற்றியதோடு, ஆகம விதிகளை காற்றில் பறக்கவிட்டபடி மனம்போன போக்கில் ஆட ஆரம்பித்தார் நித்தி. ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலையான ‘தலையை மழித்தல்’-ஐக் கூட செய்ய நித்தி தயாராக இல்லை என்பதிலேயே அவரது நோக்கம் ஆதீனத்தை கேடயமாக பயன்படுத்துவது தான் என்று தெளிவாகத் தெரிந்து போயிற்று. தற்போது ஆர்த்தி ராவின் கடுமையான பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பிடதி ஆசிரமமே அரசின் பிடியில் சென்றுள்ளது. 

கார்ப்போராட் சாமியார்களின் பின்னால் கண்மூடித்தனாமான நம்பிக்கையுடன் சென்ற மக்கள், தங்கள் நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. முற்றும் துறந்த துறவிக்கு ஏன் ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகள் என்ற எளிய வினாவில் நம் மறுபரிசீலனையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு வழிவகை செய்த நித்தியானந்தாவிற்கு நாம் எல்லோரும் கடமைப்பட்டவர்களே!

எந்தவொரு விஷயமானாலும் ஒரு நிலைப்பாட்டிலிருந்து நேர் எதிரான நிலைப்பாட்டுக்கு நகர்வதே சராசரி மனிதர்களின் வழக்கம். அதன்படி, இனி சாமியார்களையே தூக்கி எறிந்திடலாமா என்ற சிந்தனையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இந்து மதம் என்ற பண்பாட்டுத் தொகுப்பை புரிந்துகொண்டவர்களும், முன்பிருந்த துறவிகள் இந்து மதத்திற்கு ஆற்றிய பங்களிப்பையும் கவனத்தில் கொண்டால், அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய தரப்பல்ல என்று நமக்குப் புரியும்.


இந்தப் பிரச்சினையில் இன்னொரு சிக்கலும் உண்டு. நித்தியானந்தாவிடன் யோகா பயின்று பல வியாதிகளை தீர்த்துக்கொண்ட மக்களும் இங்கே உண்டு. அதுவே நித்திக்கு பெயரினைப் பெற்றுத் தந்தது. அங்கே நம் மக்கள் செய்த தவறு நித்தியை ஒரு நல்ல யோகா மாஸ்டராக மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகக் குருவாகவும் நினைக்கத் தொடங்கியது தான். 

எனவே ஆன்மீகத்தை ஒரு பிஸினஸாக நடத்துபவர், யோகா போன்ற பிற விஷயங்களில் தேர்ந்தவராக இருந்தாலும்,அவர்களை ஆன்மீகக் குருவாக ஏற்றுக்கொள்வதை நிறுத்துவோம்.
நவீனமயமாகிவிட்ட சூழலிலும், தனக்கென்று சொத்துக்கள் சேர்க்காமல், ஆன்மவிடுதலை ஒன்றையே நோக்கமாகக் கொண்ட துறவிகளை இனம் காண முடிந்தால், அவர் முன் அடிபணிவோம். இல்லையேல் கார்ப்போரேட் புரோக்கர்களை புறம்தள்ளி, இறையே சரணம் என்று நம் ஆன்மீகத் தேடலைத் தொடர்வோம்.

மதுரை ஆதீனத்தையே ஸ்வாஹா செய்யத் துணிந்த நித்தியானந்தாவிற்கென்று, புதிதாக நாம் சொல்ல வேண்டியது ஏதுமில்லை. 

சிவன் சொத்து குல நாசம்.


மேலும் வாசிக்க... "நித்தியானந்தாவிற்கு நன்றி!"

Monday, June 25, 2012

தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?


சமீபகாலமாக பொருளாதாரக் காரணங்களாலும், தாம்பத்தியப் பிரச்சினையினாலும் விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக ஒரு செய்தித் தொகுப்பை பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பியதைப் பார்த்தேன். ஏதாவது உருப்படியாக தகவல்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. கருத்துச் சொன்ன சமூக ஆர்வலர்களும் மொன்னையாகப் பேசினார்களேயொழிய, பிரச்சினையின் மையத்தைத் தொட்டதாகத் தெரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும் ஈகோ என்ற ஒற்றை வார்த்தையுடன் அதைக் கடந்து சென்றார். இந்தியாவில் 15-25% திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாகச் சொல்லப்பட்டது. சமீபகாலமாக அதிகரிக்கும் விவாகரத்திற்குக் காரணங்கள் என்ன?

வரதட்சணைக் கொடுமை என்பது தொடர்ந்து ஒரு முக்கியக் காரணியாக இருந்து வருகிறது, பல நேரங்களில் தவறாக குற்றம் சாட்டப்பட்டாலும்!(பார்க்க: பிரசாந்த் கல்யாணமும் சில பிற்போக்குச் சிந்தனைகளும்...). அதையடுத்து வேறு என்ன பிரச்சினை என்றால், கணவன் மனைவிக்கு இடையே வரும் ஈகோ பிரச்சினை. அதை அலசுவதற்கு என் தம்பி ஒருவரின் வாழ்க்கையையே எடுத்துக்கொள்வோம்.

தம்பி நல்ல பையன். ஐ.டி.துறையில் நல்ல வேலை. பேங்க் அக்கவுண்ட் நிறைய சம்பளம்.பிரச்சினை இல்லாத குடும்பம் என்பதால் பெண் கொடுக்க பலரும் போட்டி போட்டனர். தம்பியும் ஏறக்குறைய இதே பண்புகளைக் கொண்ட பெண்ணாகத் தேர்வு செய்தார். தம்பியின் குணநலன்கள் எனக்குத் தெரியும் என்பதால், அப்போதே எனக்கு டவுட்டாகிக் கேட்டேன் ‘தம்பி,இது உனக்குச் சரிப்பட்டு வருமா?’என்று. அதற்குத் தம்பியும் நீண்ட விளக்கம் கொடுத்தார். “அண்ணே, இந்தக் காலத்துல ஒரு ஆள் வேலை செஞ்சு குடும்பத்தை ஓட்ட முடியாது. நான் ஃபிஃப்ட்டி தவுசண்ட் வாங்குறேன். அந்தப் பொண்ணு இப்பவே தேர்ட்டி தவுசண்ட் வாங்குது. இந்தியாலயே எயிட்டித் தவுசண்ட்ஸ்..இதை விட வேற என்ன வேணும்?” என்றார். இதைவிடவும் வேறு சில விஷயங்கள் வேண்டுமே என்று தோன்றினாலும், தம்பியின் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை. தம்பியும் நான் சொன்னால் கேட்கக்கூடியவரும் இல்லை.

அதன்பின் திருமணமாகி, இரண்டாண்டுகள் கழித்து இப்போது விவாகரத்தும் ஆகிவிட்டது. சென்ற இந்தியப் பயணத்தில் தம்பியைப் பார்த்தபோது ‘என்னா பொம்பளைண்ணே அது...என்னை பாத்திரம் கழுவச் சொல்றா..வீட்டுவேலை செய்யிங்கிறா..லீவுநாள்னா பத்துமணி வரைக்கும் தூங்குறா..வீட்டுல விளக்குப் பொருத்தறதே கிடையாது. எப்பவும் செல்ஃபோனை நோண்டிக்கிட்டு....எங்க ஊருக்கு வர்றதேயில்லை..அய்யய்யோ..ஒரு ஸ்டேஜுக்கு மேல சமாளிக்க முடியலை..’ என்று ஒரே புலம்பல். 

தற்கால இளைஞர்களிடம் உள்ள சிக்கலே இது தான். என்ன தான் படித்து, நல்ல வேளையில் இருந்தாலும் பல ஆண்கள் மனதளவில் சென்ற தலைமுறைச் சிந்தனையிலேயே தேங்கிவிட்டவர்கள். மிகப் பெரும்பாலான ஆண்கள், தன் அம்மா போன்றே குணநலன்கள் உள்ள பெண்ணைத் தேடுபவர்கள் தான். ‘தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பின் தூங்கி முன் எழ வேண்டும். சமையல் வேலை, வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்ள வேண்டும்’ எனும் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் காட்டுவது அவர்களது ‘சென்ற தலைமுறை அம்மா’ போன்ற பெண்ணையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆழ்மன ஆசையைவே!

ஆனால் நம் அம்மாக்களுக்கு ‘புராஜக்ட் டென்சன்’ கிடையாது. காலையில் எழுந்ததும் போக்குவரத்து நெரிசலில் பஸ்/ஸ்கூட்டி பயணம் செய்யும் அவஸ்தை கிடையாது. கொஞ்சம் சிரித்துப் பேசினாலே எழும் ‘புரபோசல்கள்’ கிடையாது. பல்வேறு கலாச்சாரங்கள் ஒரே இடத்தில் குவிவதால் அடையும் மன மாறுதல்களும் கிடையாது. அவர்களது வாழ்க்கை முறை எளிமையானது. 

முந்தைய தலைமுறை வரை சம்பாதிப்பது புருஷ லட்சணமாக மட்டுமே பார்க்கப்பட்டது. அது கணவர்களின் கடமையாகவே இருந்தது. தற்போது கணவனின் கடமையை சரிபாதியாக மனைவிக்குப் பிரித்துக் கொடுக்கும் தற்கால தம்பிகள், மனைவியின் கடமையையும் சரிபாதியாக பிரிக்க வேண்டும் என்ற வாதத்தை முழுமனதாக ஏற்பதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் அதுவே பிரச்சினைக்கு மூல காரணமாக ஆகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் மெயில் குரூப்பில் நண்பர் ஒருவர் ‘நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்கப்பா’ என்று மெயில் போட்டார். மற்றொரு நண்பர் ‘*** கம்பெனியில் ஒரு பெண் இருக்கு’ என்று பதில் போட்டார். அதற்கு நம்மாளு போட்ட பதில்: ‘அய்யய்யோ..அந்தத் துறையா? ஆளை விடுங்கடா சாமீ!”. அப்படிப் பதில் போட்ட நண்பரின் சொம்பு எங்களால் நெளிக்கப்பட்டது, எப்படி சிலரின் தவறை பொதுமைப்படுத்தலாம் என்று! அப்போது நடந்த விவாதங்களின் முடிவில் அந்த ஆணாதிக்கவாதி(!) ‘சரிப்பா..அந்தப் பெண்களை கட்டிக்கும் தகுதி எனக்குக் கிடையாது..என்னை விட்டுடுங்க’ என்று சரணடைந்தார்.

பெரும்பாலான ஆண்கள் என்ன தான் பெரிய படிப்பு, எம்.என்.சி.கம்பெனியில் வேலை என்று பெற்றிருந்தாலும், உண்மையில் உள்ளுக்குள் 30 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறார்கள் என்பதே உண்மை.

 ஜாதிகளின் அவசியம் இனிமேல் உண்டா என்ற சிந்தனை, டாக்டர்-இஞ்சினியர் என நவீன ஜாதிகள் உருவாகியிருப்பதை உணர்வதில் தான் முடியும். ஒவ்வொரு துறையுமே தனக்கென்று தனிப்பட்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கின்றன. இன்னும் நுணுக்கமாக ஆராயுமிடத்தில், ஒவ்வொரு பதவியுமே (ஜூனியர் இஞ்சினியர்-இஞ்சினியர்-புராஜக்ட் லீடு-மேனேஜர்) தனிப்பட்ட குணநலன்களைக் கொண்டிருக்கின்றன. சில கலாச்சாரங்கள்/குணநலன்கள் எவ்வித கவனிப்பையும் ஏற்படுத்தாதவை.சில தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. ’தாய்மை என்பது பெண்களை அடிமையாக வைத்திருக்க ஆண்களால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பண்பு’ என்பது போன்ற நவீன கருத்துக்கள் ஒரு சாராரால் முன்வைக்கப்படும் நிலையில், ஆண்கள் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

பாலியல் வறட்சி நிரம்பிய நம் நாட்டில், திருமணம் என்பது அடிப்படையில் ஒரு இளைஞனுக்கு கிளுகிளுப்பான சமாச்சாரமாக மட்டுமே இருப்பது நம் துரதிர்ஷ்டம் தான். அதற்கு அடுத்தபடியாக திருமணம் என்பது வாழ்க்கையை வளப்படுத்த வரும் வாய்ப்பாக (வரதட்சணை, பெண்ணின் சம்பளம்..) பார்க்கப் படுகிறது. இதற்கும் அப்பால் ’தன் தேவை என்ன? வாழ்க்கைத் துணையிடம் நாம் எதிர்பார்ப்பது என்ன? அதற்காக நாம் இழக்கப்போவது எதை? நமக்கு எது முக்கியம்?’ என ஒரு ஆணும், ஆணைப் பெற்றோரும் சிந்திக்க வேண்டியது அவசியம். உங்களுக்குத் தேவை இன்னொரு தாய் தான் என்றால், அதற்கேற்றாற் போன்று பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் செல்வது நல்லது.

’கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசை’ என்பது நடைமுறையில் ஒத்துவராத ஒரு விஷயம். எனவே பொண்ணு பார்க்கக் கிளம்பும் தம்பிமார்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து ‘என்னவெல்லாம் வாங்கலாம்?’ என்று மட்டுமே யோசிக்காமல், ’ அதற்கு பிரதிபலனாக என்னவெல்லாம் கொடுக்க வேண்டி வரும்?’ என்றும் யோசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் உங்கள் வாழ்க்கையை மட்டுமல்லாது மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்த பாவத்திற்கே நீங்கள் ஆளாக நேரிடும்.

எனவே பரந்த மனதுடன் வாழ்க்கையை அணுகுங்கள். All the best!


மேலும் வாசிக்க... "தம்பி, பொண்ணு பார்க்கவா போறீங்க?"

Friday, June 22, 2012

சகுனி - திரை விமர்சனம்


ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்...

காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.

கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்டோரி செலக்சன் தான். எப்போதும் காமெடி கலந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்வது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். இதிலும் சமீபகாலமாக யாருமே தொடாத அரசியல் கதையை தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஜாலியான இளைஞனாக, சந்தானத்தை கடுப்பேற்றுபவராக, ப்ரணீதாவை காதலிப்பவராக, அரசியல்வாதிகளின் ஆலோசகராக கலக்குகிறார் கார்த்தி. 
சந்தானம் வழக்கம்போல் ஒன் லைனரில் கலக்குகிறார். ரஜினி (அப்பாத்துரை)_ஆக சந்தானமும் ’கமல’(க்கண்ணன்)-ஆக கார்த்தியும் அறிமுகமாகி பேசிக்கொள்ளும் காட்சிகள் செம ரகளை. 

ட்ரெய்லரின் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி என பெரிய பில்டப் கொடுத்துவிட்டதால், அதை வைத்து இன்னும் நல்ல காமெடியைக் கொடுத்திருக்கலாம். அதில் ஏமாற்றமே! ஆனாலும் சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புகுப் பஞ்சமில்லை. ஒரு நடிகர் ஒரு ஹிட் கொடுத்துவிட்டால், அதை கம்பேர் செய்வது நம் வழக்கம் என்பதால்,........ஓகேஓகே அளவிற்கு இல்லை!

ப்ரணீதா.... பெரிதாக நடிக்க சான்ஸ் இல்லாவிட்டாலும் டூயட்களில் கல்ர்ஃபுல்லாக ஆடுகிறார், ஹீரோவைக் காதலிக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் காணாமல் போகிறார். படம் முடியும்போது கட்டிப் பிடிக்கிறார்(ஆடியன்ஸை இல்லீங்க..ஹீரோவைத் தான்!). தமிழில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் (ஹி..ஹி..ஹன்சி தவிர) பழசாகி விட்ட நிலையில் ப்ரணீதாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அழகான கண்களுடன் ப்ரணீதா பளபளப்பாக வலம்வருகிறார். 
வில்லன் முதல்வராக பிரகாஷ்ராஜ். நீண்ட நாளைக்கு அப்புறம் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். வழக்கம்போல் கேஷுவலாக கலக்கிச் செல்கிறார் மனிதர். கவுன்சிலர்-மேயராக ராதிகா, சாமியாராக நாசர், எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் பலமாக வசனங்களைச் சொல்லலாம். முடிந்தவரை திரைக்கதையை காமெடியாக அமைத்ததும் படத்தை ரசிக்க வைக்கிறது. 

கந்துவட்டி ராதிகாவை மேயராக ஆக்கும் கார்த்தியின் சகுனி வேலைகள் அட்டகாசம். ஆனால் அதே போன்றே கோட்டா ஸ்ரீனிவாசராவை கார்த்தி முதல்வர் ஆக்குவது ஒரு ரிப்பீட்னெஸைத் தருகிறது. பார்த்த காட்சிகளையே வேறு வடிவில் பார்க்கிறோம் என்ற சலிப்பு வரவே செய்கிறது. அதனாலேயே கடைசிக் காட்சிகளில் திரைக்கதையில் ஒரு தொய்வு விழுந்து விடுகிறது. 

முதல்பாதியில் அனுஷ்கா வரும் காட்சிகள் எவ்வித காமெடியைவும் உண்டாக்கவில்லை. அதைவிட ப்ரணீதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம். ’சந்தானத்திடம் கதை சொல்லும்’ திரைக்கதை உத்தி அருமை. அது இல்லையென்றால் முதல்பாதி மொக்கையாகவே ஆகியிருக்கும்.

வீடு மேல் கார்த்தி கொண்டிருக்கும் செண்டிமெண்ட்டைப் பற்றி விரிவான காட்சிகள் இல்லை. அரசியல் ஆலோசகராக ஆகும் கார்த்திக்கு அதற்குரிய பின்புலம் ஏதாவது இருப்பதுபோல் காட்டியிருக்கலாம். அதனாலேயே படத்தை முழுக்க ரசிக்க முடியவில்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. முத்தையாவின் ஒளிப்பதிவும் ஸ்ரீஇதர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்துக்கு பக்க பலம். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் அதிகம் எதிர்பார்த்தேன். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் என்பதால் படத்தோடும் ஒட்டவில்லை.

இருப்பினும் வித்தியாசமான கதைக்களனுடன், அரசியல் கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

சகுனி - ஓகே.

மேலும் வாசிக்க... "சகுனி - திரை விமர்சனம்"