Sunday, September 2, 2012

முருக வேட்டை_30

நாளென் செய்யும்வினை தானென் செய்யுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடுனே! 
– (கந்தர் அனுபூதி)

"லகம் முழுதும் உள்ள மனிதர்களின் உடல், வாழ்க்கை முறை வேறுபட்டாலும் சிந்திக்கும் முறை ஒன்றுதான். அறிவுத்தேடல் உள்ள அனைத்து மனங்களும் ஒன்றுபோலவே சிந்திக்கின்றன. வழிமுறைகள் வேறாயினும், சிந்தனையின் உச்சத்தில் ஒரே முடிவையே அடைகின்றன. இந்திய ஞானியானாலும், கிரேக்க ஞானியானாலும் அவர்களால் வெவ்வேறு முடிவை அடைய முடியாது. காரணம், உண்மை ஒன்றே!..நாம் வைசேஷிகம் என்று சொன்னால் அவர்கள் வேறு பெயர் சொல்வார்கள். நாம் முருகன் என்றால் அதையும் அவர்கள் வேறு பெயரில் அழைப்பார்கள். எல்லா ஆறுகளும் கடலையே அடைகின்றன-ன்னு சும்மாவா கீதை சொல்லுது?”

“என்ன சார்..என்னென்னமோ சொல்றீங்க..மூடநம்பிக்கைகளின் குப்பை தான் நம்ம மதம்னு தான் இத்தனை நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்”

“அதைத் தான் நாங்களும் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம்..நாம் அறிய வேண்டிய விஷயங்கள் பல இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சுக்காம ஒரு முடிவுக்கு வரக்கூடாது.”

“இவ்ளோ சிறப்பா இருந்த நம்ம மதத்துல எப்படி சார் மூடநம்பிக்கைகளும் சேர்ந்துச்சு?”

“ஒருத்தருக்கு நம்பிக்கையாத் தெரியற விஷயம் தான் இன்னொருத்தருக்கு மூடநம்பிக்கையாத் தெரியும். அது அவங்கவங்க நம்பிக்கை சார்ந்த விஷயம். கண்ணேறு பொல்லாததுன்னு சொல்வாங்க. அதை அனுபவப்பூர்வமா உணர்ந்தவங்க பலபேரு இங்கே உண்டு இல்லியா? கண் போட்டாங்கன்னு சொல்றது மூடநம்பிக்கை தான்..நமக்கு அது அனுபவப்பூர்வமா உறைக்காதவரை!...நாம அடுத்துப் பார்க்கப்போற தரிசனம் அந்த மாதிரியான ஒன்னு தான்”

“என்னது சார் அது?”

“மீமாம்சை..பூர்வமீமாம்சைன்னும் சொல்வாங்க..இந்து மத மரபில் கொஞ்சம் வித்தியாசமானது இந்தத் தரிசனம். பொதுவா ஆபிரஹாமிய மதங்களுக்குத் தான் மூலநூல்கள் உண்டு. இந்து மதத்திற்கோ, புத்த சமண மதங்களுக்கோ மூல நூல் என்று எதுவும் கிடையாது. ஆனால் இந்து மதத்தின் ஒருதரப்பான மீமாம்சை நான்கு வேதங்களை மூலநூல்களாக முன்வைக்குது..இதை புரோகித மரபுன்னும் சொல்லலாம்.”

வேதங்கள் என்றதும் சரவணன் சூடானான். அவற்றைப் பற்றி மோசமான அபிப்ராயமே அவனுக்கு இருந்தது. அவர் என்ன சொல்கிறார் பார்ப்போம் என உன்னிப்பாகக் கவனித்தான்.

“பொதுவாக மூலநூல்கள்னு சொல்லப்படும் நூல்களுக்கிடையே சில ஒற்றுமைகள் உண்டு..முதல்ல அது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய விஷயம்னு அந்தத் தரப்பு அடிச்சுச் சொல்லும். அடுத்து அவை அனைத்தும் கடவுளின் வார்த்தைகள், எனவே ஒரு வார்த்தையைக்கூட மாற்றக்கூடாது என்று அடம்பிடிக்கும். அடுத்து, மிக முக்கியமாக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாமே இதில் இருக்கிறது என்று வாதிடும். இந்த மீமாம்சைத் தரப்பும் வேதங்களை அப்படியே நம்புகிறது. இது ரிஷிகள் கடவுளிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, எழுதப்பட்டவையே வேதங்கள் என்று இந்தத் தரப்பு உறுதியாகச் சொல்கிறது. ஆறு தரிசங்களில் வலுவான தரப்பாக எஞ்சி நிற்பது, இந்த மீமாம்சை தான்.”

“அவர்கள் சொல்கிறபடி வேதங்களில் எல்லாமே இருக்கிறதா சார்?” என்றான்

“வேதங்களில் உள்ளவற்றை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று வேள்விக்குரிய துதிப்பாடல்கள். இரண்டாவது, ஞானத் தேடல் கொண்ட பாடல்கள். வேள்விச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாமல், வேதத்தைப் படிப்போர்க்குச் சலிப்பே மிஞ்சும். அதில் உள்ள ஞானத்தைப் பற்றி மீமாம்சை கவலைப்படுவதில்லை. அவற்றின் மையமே வேள்விகள் தான். இன்ன பலனிற்கு, இன்ன மந்திரத்தை, இப்படிச் சொன்னாலே போதும். இவை மந்திர ஒலிகள்.இந்திரன் போன்ற கடவுள்களும், தேவர்களும் இந்த மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். எனவே வேள்விச் சடங்கில் கேட்கப்படுவதை நிறைவேற்றுவது கடவுளின் கடமை.”

“அப்படியா அவங்க சொல்றாங்க?”

“அதுவே அவர்களின் உறுதியான நம்பிக்கை. ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு. அந்த ஒலிகளை சரியான வடிவில் உச்சரித்தால், அவை மந்திர சக்தி பெறும். இந்த பிரபஞ்சத்தையே அது கட்டுப்படுத்தும் என்று மீமாம்சை நம்புகிறது. ஞானத்தேடல் என்பது அறிவுசார்ந்த விஷயம். ஆனால் புரோகிதர்கள் மூலம் வேள்வி செய்வது எல்லாராலுமே முடியும் காரியம் என்பதால், மீமாம்சை மக்களிடையே அதிக செல்வாக்குப் பெற்றது. இன்னிக்கு இந்து மததில் செல்வாக்கு பெற்றிருக்கும் விதி-மறுபிறப்பு கொள்கையை உருவாக்குனதும் மீமாம்சை தான். அது தான் பிரபஞ்சக் கொள்கையில் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளுக்கு, தெளிவான விடையை அளித்தது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. எனவே நாம் இப்பிறவியில் செய்யும் செயல்களுக்கான விளைவாக மறுபிறவியும், அந்த வாழ்க்கையும் அமையும்னு மீமாம்சை சொல்லுச்சு. மேலும் அது ஒரு விஷயத்தின் மூலம் சமூகத்திற்கு ஒரே நேரத்தில் நன்மையையும் தீமையையும் செய்தது”

“அது என்ன சார் ஒரே விஷயம்?”

“ஜாதி” என்றார் விஸ்வநாதன்.

“அப்போ ஜாதியை உண்டாக்கியது மீமாம்சை தானா?” என்று கேட்டான் சரவணன்.

“இல்லை. ஜாதி என்பது பழங்குடி வம்சங்களின் நீட்சி. உலகின் எல்லாப் பழங்குடி இனங்களிலும் ஜாதி உண்டு. பழங்குடி இனமாக இருந்து வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம்..எனவே ஜாதியின் தொடக்கம் பழங்குடி மரபு. ஆனால் ஜாதிக்கு தத்துவ, மத பாதுகாப்பு கொடுத்தது மீமாம்சை தான். பழங்குடிகளாக பிரிந்து கிடந்த சமூகத்தை, ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்தது. எனவே சிறுசிறுகுழுக்களை ஜாதிகளாகத் தொகுத்து, அவற்றுக்கு ஆன்மீகப் பின்புலத்தையும் அளித்து அரசாட்சியின் கீழ் கொண்டுவர மீமாம்சை உதவியது. எனவே மன்னர்களின் பேராதரவும் இந்தத் தரப்பிற்குக் கிடைத்தது. முன்பு ஒருங்கிணைப்பிற்கு உதவிய ஜாதிமுறை, தற்போதைய நவீன காலகட்டத்தில் வேண்டாத பொருளாக ஆகியுள்ளது. உலகமே ஒரே கிராமமாகச் சுறுங்கிவிட்ட நிலையில், ஜாதிக்கான அவசியம் நீங்கிவிட்டது. எனவே ஜாதியும், அதனை உயர்த்திப்பிடிக்கும் விஷயங்களும் தற்போது பிற்போக்குத்தனமானவையாக, தேவையற்ற விஷயங்களாக ஆகிவிட்டன.”

“ஜாதியால் விளைந்த சமூகக்கொடுமைகளையும் பார்க்கும்போது, இனி ஜாதிக்கான ஆதரவை இந்து மதம் விலக்குவது காலத்தின் கட்டாயம், இல்லையா சார்?” என்றான் சரவணன்.

 (தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

 1. விடுபட்ட எல்லா பாகங்களையும் இப்பதான் படிச்சு முடிச்சேன்..... நல்லா போயிட்டு இருக்கு, பட் மறுபடியும் படிக்கனும், அப்போதான் இன்னும் புரியும்.......!

  ReplyDelete
 2. இனி ஜாதிக்கான ஆதரவை இந்து மதம் விலக்குவது காலத்தின் கட்டாயம் இல்லையா?////அது நாம் தானே??????

  ReplyDelete
 3. இன்னிக்கு இந்து மததில் செல்வாக்கு பெற்றிருக்கும் விதி-மறுபிறப்பு கொள்கையை உருவாக்குனதும் மீமாம்சை தான். //அருமையான விளக்கம் செங்கோவியாரே!

  ReplyDelete
 4. “ஜாதியால் விளைந்த சமூகக்கொடுமைகளையும் பார்க்கும்போது, இனி ஜாதிக்கான ஆதரவை இந்து மதம் விலக்குவது காலத்தின் கட்டாயம், இல்லையா சார்?” என்றான் சரவணன்.
  //சாத்தியம் குறைவு தான் அரசியல் கட்சிகள் இருக்கும் வரை!ம்ம்

  ReplyDelete
 5. இந்த வாரம் ஜாதி பற்றிய கருத்துக்களோடு முருகவேட்டை போயிருச்சு. அடுத்த வாரம் கதைக்குள் போயிடுமா...

  ReplyDelete
 6. மிகவும் அருமையாக செல்கிறது! நல்லதொரு விளக்கங்கள்! தொடர்கிறேன்!

  இன்று என் தளத்தில்
  தளிர்ஹைக்கூ கவிதைகள்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

  ReplyDelete
 7. அருமை உங்கள் தேடல் எங்களுடைய நிறைய கேள்விகளுக்கு விடையாகிறது

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.