Friday, September 7, 2012

முருக வேட்டை_31

எனது கண்கள் ஆறுமுகக் கடவுளான
உன்னையே காணட்டும்!
எனது காதுகள் உயிர்களுக்கு நன்மைசெய்யும்
உனது பெருமையையே கேட்கட்டும்!
உன் அவதார லீலைகளையே –என்
நாவானது எப்போதும் சொல்லட்டும்! – ( சுப்ரமண்ய புஜங்கம் )

நீங்கள் சொல்றது உண்மை. அதில் சிறு திருத்தம். இனி’-ன்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே மீமாம்சைக்கு எதிரா, உயர்ந்த தத்துவம் ஒன்னு இந்து மதத்தில் பின்னால உருவாகி வந்துச்சு. அது தான் ஆறாவது தரிசனமான வேதாந்தம். வேதாந்தம்னா வேதங்களின் முடிவுன்னு சொல்லலாம். வேதங்களின் கடைசிக் காலகட்டத்தில் பல உபநிடதங்கள் உருவாகி வந்துச்சு. அந்த உபநிடத சிந்தனைகளின் தொகுப்பு தான் வேதாந்தம். இதில் பல தரப்புகள் உண்டு. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம்னு..வேதாந்தம் வேதங்களை ஏற்றுக்கொள்ளும். ஆனால் அதில் உள்ள வேள்விப்பாடல்களையோ, சடங்குகளையோ கண்டுக்காது. சாங்கியத்தில் ஆரம்பித்து மீமாம்சை வரை ஆதி இயற்கை, புருஷன், ஆத்மான்னு பல பெயர்களில் அழைக்கப்பட்ட விஷயத்தை, வேதாந்தம் பிரம்மம்-ங்கிற ஒரே வார்த்தையில் அடக்கியது.

பிரம்மம் பத்தி கவிதாவும் நிறையச் சொன்னா சார்

ம்..இன்றைய இந்து மதத்தின் மையம் இந்த பிரம்மக்கொள்கை தான். பிரம்மம்-ங்கிறதை ஞானநிலையில், நம் ஞானிகள் பிரபஞ்சத்தை ஒட்டுமொத்த உருவமாகப் பார்த்து, வகுத்த கொள்கைன்னு சொல்லலாம். இந்தியால மட்டுமில்லாம சீனா, ஜப்பான்லயும் பிரம்ம தத்துவத்தின் தாக்கம் உண்டு.

ஆனால் இது எப்படி சார் ஜாதிக்கு எதிரானதுன்னு சொல்றீங்க?”

வேதாந்ததின் பிரம்மக் கொள்கை என்ன சொல்லுதுன்னா, மாபெரும் பிரம்மத்தின் துளிகளே நாம். தியானம், யோகம் போன்ற வழிமுறைகள் மூலமா ஒருவன் ஞானம் அடைந்தால், அவனால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். இதன்படி பார்த்தால், நீங்களும் பிரம்மத்தின் துளியே, நானும் பிரம்மத்தின் துளியே. எனவே ஆட்டோமேடிக்கா, இருவரும் சமம்னு ஆகிடுது. அதனால்தான் பாரதி போன்ற வேதாந்திகளால் ஜாதியை விட்டு வெளியே வர முடிஞ்சது. தன்னோட ஜாதிக்கு எதிராவே குரல் எழுப்ப முடிஞ்சது. வர்ண அமைப்பை வலியுறுத்திய ஆரிய சமாஜம் போன்ற இந்து அமைப்புகளுக்கு எதிரா, இந்த வேதாந்தத் தரப்பு தான் தத்துவரீதியாப் போராடியது.

எனக்கு இப்போக் கொஞ்சம் புரியுது சார். உனக்குள் உறையும் தெய்வமே பிறருக்குள்ளும் உறையுது-ன்னு சொல்றாங்க. அதே நேரம் வர்ணக்கொள்கையும் இருக்குது. என்ன மதம் இதுன்னு குழம்பியிருக்கேன். நீங்க சொல்றபடி பார்த்தா, மீமாம்சையை ஃபாலோ பண்றவங்க தான் ஜாதியை கட்டிக்காக்கிறாங்கன்னு வச்சிக்கலாமா சார்?”

இல்லை..அப்படி ஒரேயடியாச் சொல்லிட முடியாது. இப்போ உள்ள சிக்கல் என்னன்னா, அந்த ஆறு தரிசனங்களும், அதை ஃபாலோ பண்றவங்களும் ஒன்னா கலந்தாச்சு. தனியா பிரிச்சுப் பார்க்க முடியாது. ஒரு இந்து சிவனைக் கும்பிட்டுக்கிட்டே, கணபதி யோகம் பண்றான்னா, அங்கே சைவம்-கணாபத்யம்-மீமாம்சம்னு மூணு தரப்பு மிங்கிள் ஆகுதுன்னு அர்த்தம். அவனே மறுநாள் யோகா க்ளாஸ் போய், யோகத்தையும் ஃபாலோ பண்ணுவான். யோகா முடிச்சு, தியானத்துல உட்கார்ந்து அஹம் பிரம்மாஸ்மின்னு வேதாந்தத்தையும் ஃபாலோ பண்ணுவான். இந்து மதத்தை தாக்க நினைக்கிறவங்களுக்கு இதுதான் பெரிய வசதியாப் போயிடுது. எல்லாமே குப்பைன்னு சொல்லி முடிச்சுடுறாங்க.

அப்போ என்ன பண்றது?” என்றான் சரவணன் கவலையுடன்.

நாத்திகவாதியின் நிலையில் இருந்து சரவணன் இறங்கிவிட்டதை விஸ்வநாதன் புரிந்துகொண்டார். அதைக் கவனிக்காதது போல், “சாங்கியம், நியாயம் எல்லாம் இப்போ வழக்கொழிஞ்சு போச்சு, இல்லியா? அதே போல காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை இந்து மதம், இந்து உதறணும். அது திட்டம் போட்டுச் செய்ற வேலை இல்லை. கால ஓட்டத்தில் அதுவா மாறும். எந்தவொரு மாற்றத்துக்கும் பின்னால ஒரு ஆன்மீக, தத்துவக் காரணம் இருக்கும். நவீன இந்து மதத்திற்கு வேதாந்தமே முக்கியத் தரப்பா இருக்கும். சமூக விடுதலைக்கான காரணியா அதுவே பின்னாளில் ஆகும்னு நம்புறேன்.
அப்போ இன்றைய இந்துங்கறவன் ஆறு மதங்களையும், ஆறு தரிசனங்களையும் கலந்துகட்டி ஃபாலோ பண்றவன்னு சொல்லலாமா?”

ஆமா..மொத்தத்தில் இந்து மதம் என்பது பலவகைப்பட்ட ஆன்மீக வழிமுறைகளின் தொகுப்பு என்று சொல்லலாம். அதனாலேயே ஒரு புனித நூலையோ, ஒரே ஒரு ஞானியையோ, ஒரே ஒரு வழிமுறையையோ அதனால் நமக்குக் கொடுக்க முடிவதில்லை. இதுவே இறுதியானது என்று எதுவும் இல்லை. பிரபஞ்சம் என்பது மாறிக்கொண்டேயிருப்பது. எனவே பிரபஞ்சம் பற்றிய அறிதலும். அதற்கான வழிமுறைகளும் மாறுதலுக்கு உட்பட்டவை என்று இந்து மதம் நம்புகிறது. எனவே ஆன்மீகத் தேடலின் மூலமே ஒருவன் பிரபஞ்சத்தையும் இந்த வாழ்க்கையின் பொருளையும் கண்டறிய முடியும். அதற்கு சுதந்திரம் அவசியத் தேவையாகிறது. அதனாலேயே இந்து மதத்தின் எதுவும் கட்டாயம் கிடையாது. கீதையில் கண்ணன்கூட எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அர்ச்சுனனிடன் நான் அறிந்ததைச் சொன்னேன். ஆனாலும் உனக்கு எது சரியென தீர்க்க யோசித்து முடிவெடுஎன்கிறான். இந்து மதம் ஒரு மதமாக மட்டும் இருக்குமென்றால், அதனால் கட்டளைகளை அளிக்க முடியும். அது ஆன்மீகத் தேடலுக்கும் இடம் கொடுப்பதாலேயே, இந்து மதம் சுதந்திரப் பெருவெளியாக இருப்பது அவசியம் ஆகிறது

ஆறு மதங்களைச் சேர்த்தது பத்திக் கவிதா சொன்னா..என்று சரவணன் ஆரம்பிக்கும்போதே இடைமறித்த விஸ்வநாதன், “ஆறு மதம் தனித்தனி மதமா இருந்தத, நான் நினைக்கலை. ஆதிசங்கரர் தியரிட்டிக்கலா, அப்படிப் பிரிச்சார்ங்கிறது தான் என் நம்பிக்கை. ஒரு காலத்திலும் ஆறு மதங்களும் தனித்தனியா இருந்ததில்லை. ரொம்ப ஆதிக்காலத்துல அப்படி இருந்திருக்கலாம். இந்தியாவின் முதல் இலக்கியமான ராமயணத்துலேயே வைணவ ராமன், சிவனை கும்பிட்டதா சொல்லியிருக்கே? தமிழ்ல வந்த முதல் ஆன்மீக நூலான முருகாற்றுப்படையிலேயே எல்லா மதங்களையும் இணைச்சுத் தானே பாடியிருக்கு?” என்று கேட்டார் விஸ்வநாதன்.

இதுவரை அமைதியாக இருந்த கவிதா ஆமாம் சார்..முருகாற்றுப்படையிலேயே கணபதி, திருமால்னு எல்லா தெய்வங்களைப் பத்தியும் தான் பாடியிருக்காரு நக்கீரர்என்றாள்.

ம்..அவ்வளவு ஏன், பகவத் கீதையிலேயும் எல்லாத் தெய்வங்களும் குறிப்பிடப்படுது. கவிதாவின் ஃபேவரிட் முருகரைப் பத்தியும் கிருஷ்ணர் அதுல பேசத் தானே செய்றார்?”

முருகரைப் பத்தியா? எதுல சார் சொல்றார்? எனக்கு ஞாபகம் இல்லியே?” என்று ஆர்வமுடன் கேட்டாள் கவிதா.

பார்த்தா, புரோகிதர்களின் தலைவனாகிய பிரகஸ்பதி நான் என்று உணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர்நிலைகளில் நான் கடல்”- அப்படீன்னு பத்தாம் அத்தியாத்துல சொல்றாரே?” என்று கேட்டார் விஸ்வநாதன்.

ஓ..பத்தாவதுல வருதா? படிச்சிருக்கேன்..மறந்துட்டேன் சார்

முருக பக்தை மறக்கலாமா? 24-வது ஸ்லோகமா வரும் அது.

சரவணன் திடீரெனக் கத்தினான். சார்..24-ஆ சார்?”

கவிதாவே திடுக்கிட்டு ஏங்க, அதுக்கென்ன?” என்றாள்.

அச்சு, பத்தாவது அத்தியாயம்..இருபத்தி நாலாவது ஸ்லோகம்

ஆமா..அதனால என்ன?”

லூசு...10........24”

கவிதா திறந்த வாயை மூடாமல் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்.

இரண்டாம் பாகம் - முற்றும்.

 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

 1. விறுவிறுப்பு கூடுகிறது! தொடருங்கள்! காத்திருக்கிறேன்!

  இன்று என் தளத்தில்
  காசியும் ராமேஸ்வரமும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
  உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

  ReplyDelete
 2. ரொம்ப அருமையா கொண்டுபோறீங்க செங்கோவி, எப்போ அடுத்த அப்டேட் வரும்னு ரொம்ப எதிர் பார்க்க வைக்கறீங்க , வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அடுத்த அத்தியாயம் எப்போன்னு காக்க வச்சுட்டாரே??????

  ReplyDelete
 4. அட இப்படி நீங்களும் திடீர் திகில் கொடுத்தால்!ம்ம் அடுத்த அங்கம் எப்போது சார் !ஆவலுடன்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.