அகிலா ஆர்வத்துடன் “யார் அது..இப்போ எங்கே இருப்பான்னு தெரியுமா?” என்றாள்.
“அது நம்ம கடவுள் முருகன் தான் மேம்.”
ரங்கராஜன் அந்த ஃபைல்களுக்குள் தேடி, சித்தர் மலை கேஸ் பற்றிய விவரங்களை எடுத்து கவிதாவிடம் நீட்டினார்.
அதை வாங்கியபடியே “என்ன கேஸ் இது?” என்று கேட்டாள் அகிலா.
“தேவையில்லாம பெருசான விஷயம் மேம் இது..மேற்குத்தொடர்ச்சி மலையில சித்தர்மலைன்னு ஒரு பகுதி. அந்த மலை அடிவாரத்துல சில பழங்குடி மக்கள் வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்காங்க..அப்போ 30 வருசம் முன்ன..நம்ம உலகத்துக்கும் அவங்களுக்கும் இடையில தொடர்பே இல்லை. காட்டுக்குள்ளேயே வேட்டையாடி சாப்பிட்டிக்கிட்டு இருந்திருக்காங்க..அந்த காட்டுக்குள்ளேயே ஒரு சாமி சிலையும் வச்சு கும்பிட்டுக்கிட்டு வந்திருக்காங்க. அந்த நேரம், நம்ம அறநிலையத்துறை எந்தெந்தக் கோவில்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம்னு தீவிரமா ஆய்வு செஞ்சுக்கிட்டிருந்த நேரம். அப்போ இந்தக் கோவில் பத்திக் கேள்விப்பட்டு, காட்டுக்குள்ளே போயிருக்காங்க. அங்கே போனா, கோவணாண்டியா முருகர் நிற்கிற பழங்கால கல்சிலை ஒன்னு இருந்திருக்கு.”
“சரி..நம்ம சட்டப்படி அதையெல்லாம் அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்க முடியாதே?”
“ஆமாம் மேம்..அங்கயும் ஒன்னுமேயில்லை. அந்த ஜனங்களுக்கு இவங்க வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு ஒரே அடிதடி ஆகிருச்சு. ஜனங்களோட பயம், இனிமே இங்கே சாமி கும்பிட விடமாட்டோங்களோன்னு..இதெல்லாம் காட்டுக்குள்ள நடந்ததால யாருக்கும் முதல்ல ஒன்னும் தெரியலை. திடீர்னு ஒருநாள் அந்த ஜனங்கள்லாம் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து அந்த அதிகாரிங்க மேல ஒரு புகார் சொன்னாங்க. அதுதான் பெரிய பிரச்சினையைக் கிளப்பிடுச்சு”
“ஏன்..என்ன புகார்?”
“அது ஒரு காமெடி மேம்..அவங்ககிட்ட தங்கம், வைரமா நகைங்க கொட்டிக்கிடந்ததாம்..தங்கத்தாலேயே ஒரு வேல் செஞ்சு வச்சிருந்தாங்களாம்..அது எல்லாத்தையும் இந்த அதிகாரிங்க திருடிட்டாங்கன்னு புகார்”
“பத்மநாபபுரம் கோவில்ல கிடைச்ச மாதிரியா?”
“ஆமா..பத்மநாபபுரம் மன்னர்கள் கட்டுப்பாட்டுல இருந்த பகுதி..அதனால அவங்க படையெடுத்து சேர்த்து வச்சிருக்காங்க..ஆனால் இந்த பஞ்சப்பராரிகள்கிட்ட ஏது மேம் அவ்வளவு தங்கம்?”
“கரெக்ட் தான்..அப்புறம் என்ன ஆச்சு?”
“விஷயம் எதிர்க்கட்சிகள் காதுக்குப் போய் அறநிலையத்துறை அமைச்சரையும் இதுல இழுத்துவிட்டுட்டாங்க.அவர் பதவியே பறிபோற நிலை. இல்லாத தங்க வேலை திருப்பிக்கொடு-ன்னா அவர் என்ன செய்வாரு பாவம்? அதனால அப்போதைய சி.எம்.கேஸை சிபிசிஐடிக்கு மாத்தி விசாரிக்கச் சொன்னாரு”
“அதைத் தான் சார் விசாரிச்சாரா?”
“ஆமாம் மேம்..ஜனங்க சொன்னதுக்கு எந்த ஆதாரமும் இல்லை..வேற யாரும் அந்த காட்டுக்குள்ள போனதேயில்லைங்கிறதால வேற சாட்சியும் அவங்களுக்கு இல்லை..சோ, அவங்க சும்மா பொய் சொல்றாங்கன்னு முடிவு பண்றதைத் தவிர வேற வழியில்லை”
”அதனால கேஸை பாதில நிறுத்த முடியாதே?”
“அப்போ இன்னொரு பூதம் கிளம்புச்சு மேம்..அந்தக் காடும் மலையும் வனத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரவேண்டியது. எப்படி அங்கே மக்களும், கோவிலும் இருக்கலாம்?-னு வனத்துறை களத்துல இறங்கிடுச்சு. பாவம் அந்த ஜனங்க..ஏதோ ஒரு சிலையை வச்சாவது கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க..எதிர்க்கட்சிக்காரங்களோட சேர்ந்து ஆடுனதுல, இருக்கிற இடமும், கோவிலும் போச்சு. அந்த ஜனங்களும் வெவ்வேறா இடத்துக்கு வாழப்போயிட்டாங்க. அந்தக் கூட்டத்துக்கு தலைவரா இருந்த ஆளும் கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டாரு. அதோட அந்தக் கேஸும் முடிஞ்சு போச்சு மேம்”
“அப்போ அந்தக் கூட்டத்துல இருந்து யாராவது வந்து, இந்தக் கொலையைப் பண்ணியிருக்கலாமோ?”
“என்ன மேம்..அந்த அமைச்சர்களையெல்லாம் விட்டுட்டு, நம்ம சாரை ஏன் கொல்லணும்?”
அகிலாவிற்கும் அந்தக் கேள்வி நியாயமானதாகத் தெரிந்தது. சிறுது நேர யோசனைக்குப் பின் “அந்த புகார் கொடுத்தது-வாபஸ் வாங்குனது யாரு? அவர் பேரென்ன?” என்று கேட்டாள்.
ரங்கராஜன் ஃபைலில் தேடிப்பார்த்துவிட்டு, “முத்துச்சாமிங்கிறவரும், செங்கோடன்னு ஒருத்தரும் சேர்ந்து தான் புகார் கொடுத்திருக்காங்க. செங்கோடன் தான் அந்தக் கோவில் பூசாரி..முத்துச்சாமி அந்த கூட்டத்துக்கு தலைவரு..”
“சரி..சரவணன் ஏன் செந்தில் பாண்டியன்மேல சந்தேகப்பட்டாரு? அதுக்குக் காரணம் வெறும் முன்பகை தானா?..ம்.....இந்த கேஸுக்கும் பாண்டியனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?” என்று கேட்டாள் அகிலா.
“மேம்..பாண்டியன் ST..”
“அப்படியா?” என்று கேட்ட அகிலா, சடாரென எழுந்தாள்.
“வாங்க..போய் பாண்டியனோட பெர்சனல் ஃபைலை நாமளும் பார்க்கலாம்” என்றாள்.
(தொடரும்)
இரவு வணக்கம்,செங்கோவி!இன்னும் எத்தனை திருப்பங்களோ?அருமையாக,சுவாரஸ்யமாக நகர்கிறது வேட்டை!
ReplyDeleteசுவராஸ்யமாக நகர்கிறது வேட்டை...
ReplyDeleteசித்தர்மலைக்குள் தங்க வேல் !ம்ம் சுவாரசியம் தொடருங்கள்!
ReplyDeleteசுவராஸ்யமான பகிர்வு......உங்கள் பகிர்வுக்கு நன்றி......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)