Monday, September 3, 2012

டிகிரி முடிக்கும் மாணவர்களுக்கும்..அவர்களின் பெற்றோருக்கும்!

பிரசவத்தின்போது ஒரு தாய் படும் வேதனையைப் பற்றி நாம் பேசுமளவிற்கு, அந்தக் குழந்தையின் வேதனையைப் பற்றி நாம் பேசுவதில்லை. கர்ப்பப்பையை முட்டித் திறப்பதும், அந்த சில மணிநேர பயம் கலந்த தவிப்பும் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை வாழ்ந்த சுக வாழ்வு பறிபோகிறதே இனி என்னாகுமோ என்ற குழந்தையின் பரிதவிப்பு, நீரில் அழுத மீனின் கண்ணீராக வெளியுலகிற்குத் தெரியாமலே கரைந்து போகிறது. ஆனால் கர்ப்பப்பை திறந்தபின், குழந்தை அடைவது பரந்து விரிந்த இந்த உலகத்தை!
ஏறக்குறைய டிகிரி முடிக்கும், குறிப்பாக கேம்பஸில் செலக்ட் ஆகாத மாணவர்கள் அடைவது இதே போன்ற பரிதவிப்பைத் தான். அதிலும் முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால், நிலைமை இன்னும் மோசம் தான். இதுவரை ஹாஸ்டல்/வீட்டில் வேளாவேளைக்குக் கிடைத்து வந்த சாப்பாடு பறிபோவது தலையாய கவலை. வருடத்தில் பாதிநாட்களை விடுமுறையிலே கழித்த சுகபோக வாழ்க்கையும் முடிந்தது என்பதை ஜீரணிக்கவே கஷ்டமாகத் தான் இருக்கும்.

எனவே உண்மையான உலகத்தை நேரடியாக எதிர்கொள்வது என்பது, மாணவர்களுக்கு கஷ்டமானதாகவே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள், இதை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பது எவ்வாறு என்ற சிந்தனைக்கு அவர்களையும் அறியாமலேயே சென்றுவிடுகிறார்கள்.

அத்தகைய முதல் தலைமுறை பட்டதாரிகள் பலரும் அப்போது எடுக்கும் முடிவு ’மேற்படிப்பு’ அல்லது ’அரசு வேலைக்கான தேர்வுக்கு படிப்பது’ தான். மேலும் இரண்டு வருடங்கள் வாழ்க்கை பிரச்சினையில்லாமல் ஓடும் என்பதே அதற்கு முக்கியக் காரணம். மீண்டும் சொல்கிறேன், இது அவர்கள் அறிந்து எடுக்கும் முடிவு அல்ல. உளவியல்ரீதியாக பின்வாங்கிக்கொண்டு, மேற்படிப்புக்கு பல காரணங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை வந்ததும், ‘இல்லையில்லை...நான் இப்போது வேலைக்குப் போனால் கம்மியாகத்தான் சம்பளம் கிடைக்கும்..எம்.காம். முடித்துவிட்டுப் போனால் நல்ல சம்பளம் கிடைக்கும்..மேலும், அரசு வேலைக்கான குரூப்-1/2 தேர்வுகளுக்கும் படிக்கப் போகிறேன்’ என்று பல காரணங்களை அடுக்குவர்.
சமீபத்தில் அப்படி ஒரு மாணவரைச் சந்தித்தேன். டிகிரி முடித்திருக்கும் அவருக்கு அப்பா கிடையாது. கொஞ்சம் சொத்து பத்து உண்டு என்பதால், அம்மா வழிகாட்டுதலில் படித்து முடித்தார். இவர் வேலைக்குப் போனால் நன்றாக இருக்கும் என்பதே அவர் வீட்டில் உள்ள எல்லோரின் விருப்பமும்..ஆனால் இப்போதும் என்ன செய்து பையனை வெளியேற்றுவது என்று குழம்பிப் போய் உள்ளனர்.

இந்த குரூப்-1/2 தேர்வு என்பது நடைமுறையில் பலரின் வாழ்க்கையையும் கெடுத்ததாகவே உள்ளது. அதை நம்பியே 5 வருடங்களுக்கும் மேலாக எந்த வேலைக்கும் போகாமல்’ பிரிப்பரேசனிலேயே’ காலத்தைக் கழித்துவிட்டு, அதன்பின் எந்த இண்டர்வியூவையும் க்ளியர் பண்ண முடியாத நிலைக்கு மாணவர்கள் ஆளாகிறார்கள். பெண்களாக இருந்தாலாவது பரவாயில்லை.(பெண்ணியவாதிகள் மன்னிக்கவும்..!!!). தென்மாவட்டங்களில் கிராமத்திற்கு குறைந்தது மூன்று பேராவது இப்படி சும்மா திரிவதைக் காணலாம்.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

பெரும்பாலான மாணவர்கள் நினைப்பது, கையில் டிகிரி சர்ட்டிஃபிகேட் இருந்தாலே போதும், வேலை கிடைத்துவிடும் என்று. இன்றைய போட்டி மிகுந்த சூழ்நிலையில் டிகிரி சர்ட்டிஃபிகேட் என்பது இண்டர்வியூ அறைக்குள் நுழைய உதவும் துருப்புச்சீட்டு மட்டுமே. இண்டர்வியூ அறைக்குள் நுழையும் அனைவருமே டிகிரி ஹோல்டர் என்பதால், உள்ளே நுழைந்தபின் டிகிரிக்கு தனி மரியாதை ஏதுமில்லை. எனவே கல்லூரியில் படிக்கும்போதே வேறு ஏதாவது சாஃப்ட்வேர் கோர்ஸ் சேருவது அல்லது (உண்மையான) இன்ஃப்ளாண்ட் ட்ரெய்னிங் செல்வது அவசியம். (இப்போதெல்லாம் பெங்களூர் போன்ற சிட்டிகளை சுற்றிப்பார்க்கவே பல காலேஜ்களில் இன்ஃப்ளாண்ட் ட்ரெய்னிங் உதவுகிறது!).

மேலும், ஒவ்வொரு துறையிலும் பல பிரிவுகள் இருக்கும். ஒருவர் பி.காம் படிக்கிறார் என்றால், படிக்கும்போதே அடுத்து நாம் செல்லப்போவது பங்குத்துறையிலா அல்லது வங்கித்துறையிலா அல்லது வேறு ஏதேனும் துறையில் ஆர்வமா என்று தெளிவாக முடிவு செய்து கொள்வது அவசியம். அவ்வாறு செய்யவில்லையென்றால், படித்து முடித்தபின் பயந்து பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை!


அதைவிட முக்கியமாக, படிக்கும்போதே மாணவர்கள் ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். படித்து முடிக்கும்வரையே பெற்றோரின் உழைப்பில் சாப்பிடுவது. அதன்பின் நம் சொந்தக்காலில் நிற்பது எனும் உறுதி மாணவர்க்கு அவசியம். உதாரணமாக என் நண்பர் ஒருவர் வசதியான வீட்டுப்பிள்ளை தான். ஆனாலும் தன் கரியரை இரண்டாயிரம் ரூபாயில் ஆரம்பித்தார். அதன்பின் வீட்டில் காச்சு வாங்குவதையே விட்டுவிட்டார். மாதக்கடைசியில் பட்டினிகூடக் கிடப்பாரேயொழிய, வீட்டில் காசு கேட்பதில்லை. அந்த வைராக்கியமே அவரை இன்று அசிஸ்டெண்ட் மேனேஜராக உயர்த்தியுள்ளது.

மேலும் பெற்றோர்களும் மாணவர்கள் உண்மையான உலகை எதிர்கொள்ள, உறுதுணையாக இருப்பது அவசியம். ’இப்போதைக்கு சம்பளம் முக்கியமல்ல. கரியரில் பிரேக் விழுந்துவிடாதபடி, வேலைக்குச் செல்வதே முக்கியம்’ என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவுடன், மகன்(ள்?) லட்ச லட்சமாக சம்பாதித்துக்கொட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, கேம்பஸில் செலக்ட் ஆனவர்களின் சம்பளத்துடன் ஒப்பிடுவதோ கூடாது. முதலில் வேலைக்குச் செல்லும் ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டியது வேலையைத் தான்.

ஒரு குறிப்பிட்ட துறையில் சகல அம்சங்களையும் கற்றுத் தேர்வதே அவனது குறிக்கோளாக இருக்க வேண்டும். பிறகு பணம் தன்னால் நம்மைப் பின் தொடரும். படித்து முடித்த பிறகும் அவன் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான உளவியல் ஒத்துழைப்பை அவர்களுக்குத் தர வேண்டியது அவசியம்.

இன்றைய போட்டி மிகுந்த உலகில் படித்து முடித்த பிள்ளையை ஒரு வேலைக்கு அனுப்புவதும் பிரசவ வேதனை போல் தான். அவர்களைப் பெற்றபோது, எப்படி அவர்களுக்காக எல்லாக் கஷ்டங்களையும் (இருதரப்பும்) சகித்துக்கொண்டீர்களோ, அதே போன்றே இப்போதும் இருதரப்பும் இணைந்து செயல்படுவது அவசியம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

  1. Intha unmaiyai ethanai pear aatharippaarkal.

    ReplyDelete
  2. உண்மைதான் படிக்கும் காலத்தில் மிகமுக்கியமான ஆதரவு பெற்றோரிடம் இருந்து கிடைக்கவேண்டும் மகன்/ள் இருவருக்கும் .சரியான தெளிவான பார்வை!

    ReplyDelete
  3. நல்ல அலசல் சார்... உண்மையான கருத்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. வணக்கம்,செங்கோவி!உண்மையான,யதார்த்தப் பகிர்வு.பெற்றோர் பிள்ளைகள் புரிதலில் தான் பிள்ளைகள் எதிர்காலம் தங்கியிருக்கிறது.வைராக்கியம் வேண்டும்!

    ReplyDelete
  5. Really true sengovi , it clearly shows my current status now , I finished my M.B.A but still I am uncomfortable in attending the interviews , still I am afraid to go to chennai ( I am from Madurai ) , I know I am wasting my time but still I am feeling very Afraid to go to places and meeting new peoples , but simply I am filling my mind with other thoughts and other things for compromising not going to work , but I hope after reading thz post , my urge for going to work is increased

    ReplyDelete
  6. அருமையான கட்டுரை...
    நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். இந்த கோணத்தில் யாரும் எழுதியதாய் நினைவில்லை.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.