அகிலாவின் அப்பா விஸ்வநாதனுக்கு கவிதா மேல் தனிப்பிரியம் உண்டு. அதற்கு அவளின் ஆன்மீக ஈடுபாடும் முக்கியக் காரணம். எப்போது அகிலாவின் வீட்டிற்கு சரவணன் அவளைக் கூட்டி வந்தாலும், சரவணனுக்குக் கொஞ்சமும் புரியாத பாஷையில் இருவரும் தீவிரமாக எதையாவது விவாதிப்பார்கள். எனவே அவன் அகிலாவுடன் அப்போதைய கேஸ் பற்றி விவாதிக்க ஒதுங்கி விடுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை அவர்கள் பேசுவதை அவனால் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது. கவிதாவுடன் இந்த கேஸ் பற்றி விவாதிக்கவும் அவன் விரும்பவில்லை என்பதால், இவர்களின் சத் சங்கத்தில் ஐக்கியமாகும் முடிவுடன் அகிலாவின் வீட்டிற்குள் கவிதாவுடன் நுழைந்தான்.
“வாம்மா...வாங்க சார்” என்று விஸ்வநாதன் சரவணனை கிண்டலாக வரவேற்றார்.
அகிலா சங்கோஜத்துடன் “வாங்க” என்றாள். சரவணன் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டான்.
ஹாலில் அமர்ந்ததும் கவிதா “அப்புறம், எப்படிப்பா இருக்கிறீங்க?” என்றாள்.
”நான் நல்லா இருக்கிறேன்மா..எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லதும் இருக்குன்னு சொல்வா..அது மாதிரி நடந்ததெல்லாம் டூர் அடிக்க யூஸ் ஆயிடுச்சு பார்த்தியா? கென்யா டூர் எப்படி இருந்துச்சு?”
“நல்ல எக்ஸ்பீரியன்ஸ்..ரொம்ப நல்ல இடம்..காடு, மலைகள்னு..பார்க்கவே ரம்மியமா இருந்துச்சு.”
“என்ன சரவணன்..பேச்சையோ காணோம்?” என்று கேட்டார் விஸ்வநாதன்.
“எப்படியும் கொஞ்ச நேரத்துல நீங்க ரெண்டு பேரும் அரோகரா-கோவிந்தான்னு ஆரம்பிக்கப் போறீங்க..அப்புறம் நான் வேற எதுக்கு ஒன்னும் தெரியாம வாயைத் திறக்கணும்னு உட்கார்ந்திருக்கேன்” என்றான் சரவணன் நக்கலுடன்.
“ஒன்னும் தெரியாமலா? நீங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரியில்ல பேசுவீங்க..” என்றார் விஸ்வநாதன்.
“இந்த கென்யா டூருக்கு அப்புறம், அவர் அப்படிப் பேசறதில்லை” என்றாள் கவிதா.
“ஏன் சரவணன்? என்னாச்சு?”
சரவணன் கென்யா டூரில் கவிதா மற்றும் கூகி பேசியதை சுருக்கமாகச் சொன்னான். தொடர்ந்து “நம்ம முன்னோர்கள் சொன்னதுலயும் ஏதோ விஷயம் இருக்குன்னு புரியுது. ஆனாலும் இன்னும் கடவுள் இருக்கார்னு நான் நம்பலை” என்றான்.
“ஏன் நம்பணும்? ஒரு இந்து அப்படி கண்மூடித்தனமா நம்பணும்னு அவசியம் கிடையாது. அப்படி நாத்திக இந்துவா இருக்கவும் இங்கே இடம் உண்டு. ஞானத் தேடல்ல இறங்குன எல்லாருமே கேட்கிறதை அப்படியே நம்பாமல், ஏன், எதற்கு, எப்படின்னு கேள்வி கேட்டவங்க தான். ஈகோ இருக்கிறவரை அவன் நாத்திகவாதி. ஈகோ அழிஞ்சால், அவன் ஆன்மீகத் தேடல் உள்ளவன். அவ்வளவு தான் வித்தியாசம்” என்றார் விஸ்வநாதன்.
சரவணன் “அப்போ நான் கோயிலுக்குப் போகணும்னு அவசியம் இல்லையா?” என்று கேட்டான்.
“நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்திரமேதடா?
நட்டகல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? - சொன்னது யாரு? நம்ம சித்தர் சிவவாக்கியர் தான்..ஆனால் இதுல முக்கியம் ‘நாதன் உள்ளிருக்கையில்’ தான்..அது புரிஞ்சப்புறம் நட்ட கல்லைத் தூக்கிப் போடலாம். ஆனால் அது புரியாமலேயே தூக்கிப் போட்டுட்டா, ஆணவம் தான் மிஞ்சும்” என்றார் விஸ்வநாதன்.
“அவருக்கு ஆறு மதங்களைப் பத்திச் சொன்னேன்..அப்படியே ஆறு தரிசனங்களைப் பத்தியும் சொல்லுங்களேன்” என்று கேட்டாள் கவிதா.
“ஆமா.அதை நீ சொல்லவே இல்லியே” என்று ஞாபகம் வந்தவனாய்க் கேட்டான் சரவணன். விஸ்வநாதன் சொல்ல ஆரம்பித்தார்.
"முதல்ல நமக்கு இருக்க வேண்டிய தெளிவு என்னன்னா, ஆன்மீகம் வேறு..மதம் அதில் ஒரு பகுதி தான். வேறு.சடங்கு, சம்பிராதயங்களுடன்கூடிய ஒரு அமைப்பு மதம். அங்கே நம்பிக்கையே முக்கியம். அது மட்டுமே ஆன்மீகம் அல்ல. மதம் கோருவது நம்பிக்கையை, விசுவாசத்தை. ஆனால் ஆன்மீகம் என்பது நம்பிக்கை சார்ந்ததாய் இருக்க வேண்டியதில்லை. அது தேடல் சார்ந்தது. இந்த வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? இவற்றுக்கு ஏதாவது பொருள் உண்டா? இதை இயக்குவது யார்? இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது, இயங்குகிறது, முடிவுறும்? என்பது போன்ற வாழ்க்கை பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்புவது ஆன்மீகம்.
”அப்படி கேள்வி எழுப்புறது அவசியமா சார்?” என்று சந்தேகத்துடன் கேட்டான் சரவணன்.
”இது அவசியமா? என்று நினைப்போர்க்கு ஆன்மீகத் தேடல் தேவையில்லை. மதமே போதுமானது. ஆனால் வெறும் நம்பிக்கை மட்டுமே எல்லா மனிதருக்கும் போதுமானதல்ல. வாழ்க்கையில் அனைத்து நம்பிக்கைகளும் தகர்ந்து விழும் நேரமும் உண்டு. அந்த நேரத்தில் ஆன்மீகமே கை கொடுக்கும். மனித மனம் விசித்திரமானது. அது பலவகைகளில் இயங்கக்கூடியது. எனவே ஆன்மீக வழிமுறையும் பலவாக இருப்பது அவசியம் ஆகிறது”
“அப்படியென்றால் கடவுள் நம்பிக்கையற்றவனும் ஆன்மீகவாதியா?”
“ஆன்மீகவாதிக்கு கடவுள் அவசியம் அல்ல. அதற்கு பௌத்தமே உதாரணம். இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள ஆதி முதலே இந்த மண்ணில் நிலவிவரும் ஆறு தரிசனங்களைப் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். அவை ஆறு வகையான தத்துவங்கள். அவை இந்து மததின் அடிப்படைகளில் ஒன்று.”
“அந்த ஆறும் என்னென்ன சார்?” என்றான் சரவணன்.
“சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சம், பூர்வமீமாம்சம், வேதாந்தம் “
“யோகம், வேதாந்தம்னு ஏதோ கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் மற்றதை நான் கேள்விப்பட்டதே இல்லியே?” என்றான் சரவணன்.
“அதற்கு அடிப்படை நூல்கள் எதையாவது நீங்கள் வாசித்திருக்க வேண்டும் இல்லியா?” என்று சொல்லிச் சிரித்த விஸ்வநாதன், “இதில் சாங்கியம் பழங்குடி இயற்கை வழிபாட்டுடன் தொடர்புடையது. இந்தப் பிரபஞ்சம் முன்பு ஆதி இயற்கையாக இருந்தது. அது வடிவற்றதாக, அறிய முடியாததாக இருந்தது. இயற்கையின் சமநிலை குலைந்ததால், இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று சொன்னது சாங்கியம்”
“பிக் பேங் தியரி மாதிரியா?” என்றான் சரவணன் ஆச்சரியத்துடன்.
(தொடரும்)
ஆன்மிகம் கலந்த வேட்டை!சுவையாக,சுமையாக,சுகமாக இருக்கிறது,செங்கோவி!இந்தத் தொடர் ஆரம்பித்த பின்னர் தெளிவு பிறக்கிறது.(எனக்கு)
ReplyDeleteசுவையான தேடல்! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html
ஆன்மீகம் தேடல் மிக்கது அருமையான ஆறுதருசனங்கள்§ம்ம்ம் பிடித்த பதிவாகிப்போனது இந்த வேட்டை!
ReplyDeleteவணக்கம் ஐயா அடுத்தபாகம் படித்த வண்ணம்!ம்ம் இடையில்!
ReplyDeleteமொக்க...
ReplyDelete