Sunday, December 26, 2010

வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)

1991ல் எங்கள் ஊரில் தம்பி வைகோ எனது போர்வாள்என கலைஞர் மேடையில் பேசியபோது கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அதிலிருந்து சரியாக இரு வருடங்கள் கழித்துவைகோ என்னைக் கொல்ல சதி செய்கிறார்என்று குற்றம் சாட்டினார் கலைஞர். வைகோவிற்கு ஆதரவாக 5 தொண்டர்கள் தீக்குளித்ததைத் தொடர்ந்து கலைஞரின் கதை-வசனத்தில் பொதுக்குழு நாடகங்கள் அரங்கேற, வைகோவும் அவரது ஆதரவாளர்களும் திமுகவிலிருந்து வெளியேற்றப் பட்டனர். 1994ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது.
மற்றொரு எம்.ஜி.ஆரை கலைஞர் உருவாக்கிவிட்டார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர். ஏனென்றால் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையானவர் வைகோ. அவரது வீட்டிற்கு எந்தவொரு அப்பாயிண்மெண்டும் இல்லாமலேயே சென்று, அவரைச் சந்திக்க முடியும்; இப்போதும். மேலும் அவர் செல்லும் வழியில் யாரும் அவரது காரை நிறுத்தி உதவி கேட்டாலோ அல்லது ஏதேனும் விபத்தில் அடிபட்டுக் கிடந்தாலோ நேரடியாக களத்தில் இறங்கி உதவக் கூடியவர் வைகோ.

அப்போதைய அதிமுகவின் மோசமான ஆட்சி மீதிருந்த அதிருப்தியால், வைகோ எங்கு சென்றாலும் மக்கள் ஆதரவு கிட்டியது, கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் தேர்தலைச் சந்திக்கத் தயாரானது மதிமுக. அப்போதுதான் விதி மூப்பனார் வடிவில் விளையாடியது. டெல்லி மேல் அதிருப்தியான மூப்பனார் காங்கிரஸை உடைக்க, தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்தது. ரஜினிகாந்த்தின் ஆதரவுடன் களமிறங்கியது.

தமாகா மதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், இரு பலம் பொருந்திய புதிய கட்சிகள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். ஆனால் இரு கட்சிகளும் இணைய முடியாமைக்குக் காரணம் ராஜீவ்காந்தி கொலையும், ஈழ விஷயத்தில் வைகோவின் நிலைப்பாடும். அந்தத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் இணைந்து போட்டியிட்ட மதிமுக கடும் தோல்வியைத் தழுவியது.

தனியே போட்டியிடுவது தற்கொலை முயற்சி எனப் புரிந்ததாலும், பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதற்காகவும், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் வைகோ. எந்த ஜெயலலிதாவை எதிர்த்து நடைப் பயணமெல்லாம் மேற்கொண்டாரோ அவருடனேயே பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை அமைந்தது துரதிர்ஷ்டமே. அப்போதிருந்து வைகோவின் வீழ்ச்சி ஆரம்பமானது.

தொடர்ந்து தேர்தல் அரசியலில் பிழைத்திருக்க வேண்டுமென்றால் ஏதோவொரு பெரிய கட்சியுடன் கூட்டணி என்பது மதிமுகவிற்கு அத்தியாவசியமானது. அடுத்த வந்த தேர்தலில் திமுகவுடனேயே கூட்டணி வைத்து, தான் இன்னொரு அதிமுக அல்ல பா.ம.க. மட்டுமே என வாக்காளப் பெருமக்களுக்கு மதிமுக தெளிவாக உணர்த்தியது. அதன்பிறகு மதிமுக ஒரு மாற்று சக்தி என்ற எண்ணமே மக்கள் மனதில் இருந்து அழிந்துபோனது.

தற்பொழுது மதிமுக அதிமுகவின் கூட்டணியில்.அதிமுகவிற்கு ஜெயலலிதாவை விட்டால் வேறு நல்ல பேச்சாளர் இல்லையென்பதால், வைகோ தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் உதவிகரமாக இருப்பார். இருந்தும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவை விட ராமதாஸிற்கே அதிக முக்கியத்துவமும் சீட்டும் கொடுத்தார் ஜெ. ஆனால் ஜெயித்ததென்னவோ மதிமுக தான்.


மதிமுகவிற்கு தற்போதைய சிக்கல் விஜயகாந்த் தான். மதிமுகவின் வாக்கு வங்கியான நாயக்கர் இன வோட்டுகளை விஜயகாந்த் பங்கு போடுகிறார். நாயக்கர் இன இளைஞர்கள் விஜயகாந்த் கொடுக்கும் ஆட்சிக் கனவால் அவர் பக்கம் ஈர்க்கப் படுகின்றனர்.கடந்த தேர்தலில் விஜயகாந்த் அதிமுக வோட்டுகள் அளவிற்கு மதிமுக ஓட்டுகளையும் பிரித்தார். அதனாலேயே இப்போது ஜெ. விஜயகாந்த்தை வளைக்கின்றார்.

அதிமுகவுடன் கூட்டணி சேர காங்கிரஸும் ஓரளவு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸும் தேமுதிகவும் ஜெ. பக்கம் வந்துவிட்டால், அங்கு வைகோவிற்கான தேவை இருக்குமா என்பதே சந்தேகம்.  வருகின்ற தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழலும், ஈழத் தமிழர் பிரச்சினையயும் பற்றியே வைகோ முழங்குவார். வைகோவின் இருப்பு காங்கிரஸை சங்கடப்படுத்தவே செய்யும்.

அதையும் மீறி வைகோ அங்கு இருந்தாலும் சொற்ப சீட்டுகளைக் கொடுத்து அவமானப்படுத்தவும் ஜெ. தயங்க மாட்டார். காங்கிரஸ் வராமல் தேமுதிக மட்டும் வந்தால் ஓரளவு மரியாதையான சீட்டுகளை வைகோ எதிர்பார்க்கலாம். விஜயகாந்த்தை விட அதிக சீட்டுகளை ஜெ.யிடமிருந்து வைகோ பெற முடியுமா என்பதும் சந்தேகமே. இல்லையென்றால், இருக்கவே இருக்கிறார் ’அண்ணன்’ கலைஞர்(!). 


ஒரு மனித நேயமிக்க தலைவர் தேர்தல் அரசியலில் பகடைக் காயாய் ஆகிப்போனது மிகவும் கவலை தரக்கூடிய விஷயமே.

ஆட்சியைப் பிடிப்பதும் அதிகாரத்தில் அமர்வதுமே ஒரு கட்சியின்/தலைவரின் வெற்றி எனக் கொண்டால் வைகோவின் அரசியல் படு தோல்வியே. ஆனால், எத்தகு இடர்ப்பாடு வந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பதுதான் வெற்றி என்றால் வைகோ வெற்றியாளரே.


தொடர்வது :சீமானும் சீமானின் தாத்தாக்களும்(தேர்தல் ஸ்பெஷல்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

 1. >>> சிறந்த பாராளுமன்றவாதி வைகோ. ஆனால் இரு பெரும் கழகங்களுக்கும் அடிக்கடி மாறி மாறி செல்வது உறுத்தலாக உள்ளது. கடந்த தேர்தலில் பாராளுமன்றம் சென்றிருப்பின் அது தமிழக அரசியலில் திருப்புமுனையை உண்டாக்கி இருக்கும். பார்க்கலாம் சட்டமன்ற தேர்தலில் என்ன நடக்கிறதென்று....

  ReplyDelete
 2. @சிவகுமார்: சரியாகச் சொன்னீர்கள் நண்பரே..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 3. தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். ஜெயித்ததற்கும், வைகோ தோற்றதற்கும் ஒரே ஒரு காரணம்தான். அதாவது...- தலைவர்களை கலைஞரிடம் விட்டுவிட்டு தொண்டர்களை எம்.ஜி.ஆர் அழைத்து சென்றார். ஓட்டு வாங்கி ஜெயித்தார். ஆனால் வைகோவோ தொண்டர்களை கலைஞரிடம் விட்டுவிட்டு தலைவர்களை அழைத்து சென்றார். தோற்றார்.
  சரிதானே செங்கோவி நான் சொல்வது?

  ReplyDelete
 4. @ரஹீம் கஸாலி: தாமாக வைகோவுடன் இணைந்திருந்தால் அதிக திமுக தொண்டர்களை வைகோ தன் பக்கம் இழுத்திருக்கலாம்..ஜெ.வுக்கு எதிரான ஓட்டு சிதறக்கூடாது என்ற எண்ணத்தாலும் வைகோ தோற்றார் அப்போது..தங்கள் கருத்தும் சரியே.

  ReplyDelete
 5. சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 6. ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு வைகோ ஒரு அடையாளம் .. புழுத்துப்போனவர்களால் அவர் தனிமைபடுத்தப்பட்டாலும் அவருக்கென்று தனித்தன்மை உண்டு ...

  ReplyDelete
 7. @கே.ஆர்.பி.செந்தில்: உண்மைதான்..தற்பொழுதிருக்கும் அரசியல்வாதிகளில் தனித்தன்மை வாய்ந்தவர்தான் வைகோ.

  ReplyDelete
 8. வைகோ செல்வது சரியான பாதை; ஆனால்,சரியான திசையல்ல என்பதை பட்டவர்ததமாக சொல்லியிருக்கிறீர்கள்

  ReplyDelete
 9. @தாராபுரத்தான்: தங்கள் கருத்திற்கு நன்றி சார்..

  ReplyDelete
 10. @.....: தங்கள் பாராட்டிற்கு நன்றி.

  ReplyDelete
 11. Yes Vaiko is a good leader..who really cares about tamilians..and never cares about powerful posts..but unfortunately he is not so succesfull in politics bcos of M.K and his company.

  ReplyDelete
 12. @பொன்னியின் செல்வன்: மு.கவிற்கு பொழுதுபோக்கே மதிமுகவிலிருந்து தலைவர்களை இழுப்பதுதானே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொன்னியின் செல்வன்.

  ReplyDelete
 13. நானும் பலமுறை யோசித்துப் பார்த்தது.

  நல்ல தலைவரை தேர்தல் அரசியலில் இழந்து போனோம்.

  எனது எண்ணத்தில் இதுதான் ஓடிக்கொண்டிருந்தது.
  இப்போது காங்கிரஸ் அதிமுக வுடன் இணைந்தால் இவரது நிலைஎன்ன.

  ReplyDelete
 14. @அரைகிறுக்கன்: உண்மைதான் நண்பரே..நல்லவர்க்கு காலமில்லை.

  ReplyDelete
 15. நல்ல அரசியல் தலைவர். அவரை நிலை கொள்ளாமல் ஆக்கியதே நமது மக்கள் தான். இவரை போன்றோர்களை அரசியல் இருப்புக்காக இங்கும் அங்கும் ஓடவிட்டு வேடிக்கை பார்க்கிறோம்.

  ReplyDelete
 16. @VELAN: சரியாகச் சொன்னீர்கள் வேலன் சார்..

  ReplyDelete
 17. @கும்மிபாராட்டுக்கு நன்றி கும்மி அவர்களே!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.