Sunday, August 24, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-22)

22.நண்பன் எனும் மனசாட்சியும் கேரக்டர்களும்

கதைக்கு திரைக்கதைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், காட்சிப்படுத்துவது தான். ‘அவன் நினைத்தான்என்று சிந்திப்பதை இரண்டு பக்கங்களுக்குக்கூட கதையில் எழுதிவிட முடியும். ஆனால் அதை விஷுவலாக, காட்சிப்படுத்துவது எப்படி என்பதில் தான் சிக்கல் ஆரம்பிக்கும். வாய்ஸ் ஓவரில் ஒரு அளவுக்கு மேல் சொல்ல முடியாது, போரடிக்க ஆரம்பித்துவிடும். தனியாகப் பேசிக்கொள்வது போல் காட்ட முடியாது, ’லூஸா அவன்?’ எனும் கேள்வி வரும்.

இதற்கு நம் ஆட்கள் கண்டுபிடித்திருக்கும் அருமருந்து, நண்பன் கேரக்டர். சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு காதலியை விடவும் நண்பன் முக்கியம் என்று கண்டுபிடித்தவர்கள் நம் ஆட்கள்.
’அவளோ சிகப்பு. நாம் கருப்பாக இருக்கிறோம். ஏழை வேறு. அவள் பணக்காரி. நம்மையெல்லாம் காதலிப்பாளா அவள்?’ என்று ஹீரோ சிந்திப்பதை ஹீரோ-நண்பனுக்கு இடையே நடக்கும் உரையாடலாக மாற்றிவிட முடியும். ‘மச்சி, அவள் என்னை லவ் பண்ணுவாளாடா?’ என்று ஆரம்பித்து இந்த முரண்பாடுகளை நகைச்சுவையாகவே சொல்லிவிட முடியும். இது க்ளிஷே தான் என்றாலும், நகைச்சுவை என்பதால் போரடிப்பதில்லை.

ஹீரோவுக்கு உதவும் நண்பன் அல்லது ஹீரோயினை ஒருதலையாக காதலிக்கும் காமெடியன் போன்ற கேரக்டர்கள், ஹீரோ காதல் பற்றியும் படத்தின் முக்கிய (கதை)பிரச்சினை பற்றியும் சிந்திப்பதை நமக்கு விஷுவலாகக் காட்ட உதவுவார்கள். இதே போன்றே எங்கெல்லாம் இந்த விஷுவலாகக் காட்டும் பிரச்சினை வருகிறதோ, அங்கெல்லாம் ஒரு சுவாரஸ்யமான கேரக்டரை உருவாக்கி உரையாட விடலாம். ஆம், அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதே கண்டிசன்!

காமெடி நடிகர் வயதானவர் என்றால், இந்த நண்பன் கேரக்டரை ஹீரோவுக்கு மாமா(!)வாக ஆக்கிவிடுவதும் வழக்கம். கவுண்டமணி, வடிவேலுவை அது போன்ற கேரக்டர்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். (இந்த நண்பன் கேரக்டரால் இன்னொரு உபயோகம் உண்டு. அதைப் பற்றி பின்னால் பார்ப்போம்)

நண்பன் போன்றே வேறுபல முக்கியக் கேரக்டர்களும் உங்கள் கதையில் வரும். அவற்றை உருவாக்கும்போது (அல்லது உருவாக்கியபின்) கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவற்றைப் பற்றி Lajos Egri, அவர் எழுதிய Art of Dramatic Writing புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

ஹீரோ, வில்லன், ஹீரோயின் போன்ற கதையின் முக்கிய கேரக்டர்களை உருவாக்கும்போது, அந்த கேரக்டர் எபடிப்பட்டது என்பது பற்றி மூன்று கோணங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

உடலியல் (Physiology) : அந்த கேரக்டரின் பாலினம், உடல்வாகு(ஒல்லி, குண்டு, பயில்வான், மெல்லிடை), வயது, நிறம், உடல் குறைபாடு போன்ற தோற்றம் சார்ந்த விஷயங்கள்.

சமூகவியல் (Sociology): ஏழை அல்லது, பணக்காரன், மதம், ஜாதி, படிப்பு, வேலை, சம்பளம், வேலையில் அக்கறை, குடும்பப் பிண்ணனியும் உறுப்பினர்களும், நண்பர்கள், மதம், அரசியல் ஈடுபாடு போன்ற சமூகம் சார்ந்த விஷயங்கள்.

உளவியல் (Psychology): கோபக்காரனா ஜாலியான ஆசாமியா, கூச்ச சுபாவம் உள்ளனா? கலந்து பழகும் ஆளா? வேறு சைக்காலஜி பிரச்சினை உண்டா? லட்சியம் ஏதும் உள்ளவனா? என்னென மொழிகள் தெரியும்? வீரனா கோழையா? – போன்ற உளவியல் சார்ந்த விஷயங்கள்

இந்த மூன்று இயல்களிலும் கேரக்டர் பற்றிய தெளிவான ஐடியா உங்களுக்கு இருக்க வேண்டும். இவற்றை காட்சிகளில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எதற்கு?

திரைக்கதை என்பது பலமுறை திருத்தி எழுதப்படும் விஷயம். திருத்தம் என்பது உங்களால் மட்டுமல்ல இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பலதரப்பில் இருந்தும் செய்யவேண்டி வரும். அப்போது ஹீரோஇந்த இடத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வைக்கலாமே?’ என்றால், ‘அவன் இண்ட்ரோவெர்ட்..அந்த கேரக்டர் பஞ்ச் டயலாக் பேசினால் கேரக்டர் அடிவாங்கும்என்று லாஜிக்கலாக சொல்ல, கேரக்டர் பற்றிய தெளிவு உதவும்.

சமீபத்தில் நான் பார்த்தஇருக்கு ஆனால் இல்லைபடத்தில் காமெடியன் ஆதவன், ஹீரோவின் புராஜக்ட்டைத் திருடுவதாக இடைவேளைக்கு முன் காட்சி வரும். அதுவரை ஹீரோவுக்கு பல உதவிகளை அந்த கேரக்டர் செய்யும். கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்பு வந்து, அடியெல்லாம் வாங்கி ஹீரோவுக்கு உதவும் அந்த கேரக்டர். அப்படிப் பட்ட கேரக்டர், ஹீரோவுக்கு இடையில் துரோகம் செய்வதாகக் காட்டுவதற்குக் காரணம், திரைக்கதை எழுதியவர் Lajos Egri சொன்ன விஷயங்களைப் பின்பற்றாதது தான்.

ஒவ்வொரு கேரக்டருமே நம் குழந்தைகள் மாதிரி தான். என்ன செய்யும், செய்யாது எனும் தெளிவு அவசியம் நமக்கு இருக்க வேண்டும். ‘அவன் அப்படிச் செய்ய மாட்டான்என்றோஅவனா? செஞ்சிருப்பான்என்றோ சொல்லும் அளவுக்கு அந்த கேரக்டரின் குணாதிசயம் நமக்கு அத்துப்படியாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் படம் பார்ப்பவருக்கு கிர்ரென்று இருக்கும். ஒரு சீனில் எதையும் கண்டுகொள்ளாத ஆளாகவும், இன்னொரு சீனில் சமூக அக்கறை பொங்கும் ஆளாகவும் மாற்றி மாற்றிக் காட்டினால் படத்துடன் பார்வையாளர்களால் ஒன்ற முடியாது. நல்ல இயக்குநர் என்று பாராட்டப்படும் இயக்குநர்களின் படங்களை உற்றுக் கவனித்தீர்கள் என்றால், இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக் அவர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.
நடிகர் திலகம் வித்தியாசமான ஆட்களைப் பார்த்தால், அவர்களின் மேனரிசத்தை குறித்து வைத்துக்கொள்வார். பின்னர் அவரிடம் திரைக்கதை சொல்லப்படும்போது, இந்த பாடி லாங்குவேஜ் ஓகேவா என்று செய்து காட்டுவார். தெய்வமகனில் வந்தநாட்டி பாய்கேரக்டர், நவராத்திரியில் டாக்டர் என பலவிதங்களில் வித்தியாசம் காட்டி, அவர் புகழ் பெற்றதற்கு அது தான் காரணம். அப்படி கேரக்டர் செய்து குறித்து வைக்கும் நடிகர்கள் அபூர்வம் என்பதால், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

அதே நடிகர் திலகம் முதல் மரியாதை கதையைக் கேட்டுவிட்டு, அவராகவே ஒரு கெட்டப் போட்டுவிட்டு முதல்நாள் ஷூட்டிங் வந்தார். அதைப் பார்த்த பாரதிராஜா பதறிப்போய், ’இந்த கேரக்டர்ல நீங்க சிவாஜியா வந்தாலே போதும்என்று வற்புறுத்தி நடிக்க வைத்தார். காரணம், அந்த மலைச்சாமி கேரக்டரை ரத்தமும் சதையுமாக பாரதிராஜா மனதிற்குள் உருவாக்கி வைத்திருந்தார்.

உடலியல், சமூகவியல், உளவியல் ரீதியில் மலைச்சாமி கேரக்டர் பற்றிய தெளிவான ஐடியா இருப்பதை படத்திலேயே பார்க்க முடியும். பாதிப்படத்திற்குப் பின், நம்மாலும்அவர் இதைச் செய்வார், செய்ய மாட்டார்என்று சொல்ல முடியும். காரணம், தெளிவான கேரக்டர் ஸ்கெட்ச். மேலே Lajos Egri சொன்ன விஷயங்களை ஸ்டடி செய்யவும், ஒப்பிடவும் முதல் மரியாதை சிறந்த படம். ராதா, வடிவுக்கரசி, ஜனகராஜ் என எல்லா கேரக்டர்களையும் தெளிவாக நம்மால் உணர முடியும். அந்த படத்தை மீண்டும் பாருங்கள்.

ஒரு கேரக்டரை உருவாக்குவது பற்றி Lajos Egri தன் Art of Dramatic Writing புத்தகத்தில் 90 பக்கங்களுக்கு விரிவாக விளக்குகிறார். அந்த புத்தகம், நாடக ஆசிரியர்களுக்காக எழுதப்பட்டது. இருப்பினும் அதில் உள்ள விஷயங்கள் அனைத்து கதை வடிவங்களுக்கும் பொருந்துபவை. எனவே அனைவரும் அந்த புத்தகத்தை படிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.


(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

 1. நடிகர் திலகம் வித்தியாசமான ஆட்களைப் பார்த்தால், அவர்களின் மேனரிசத்தை குறித்து வைத்துக்கொள்வார்.//

  இந்த காலத்து நடிகர்களை கேக்கவா வேண்டும் ?

  ReplyDelete
  Replies
  1. விக்ரம் அதைச் செய்கிறார் அண்ணே.

   Delete
 2. நல்ல பதிவு. தொடர்கிறேன்...

  ReplyDelete
 3. முதல் மரியாதை...........ஏனைய சிவாஜி படங்களை விடவும்,மீண்டும்,மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் அது!இங்கே,அதனை மேம்படுத்திய உங்களுக்கு நன்றி!!///அந்த கெட்டப் விஷயம்,'மாஸ்ய்ட்ரோ'முன்பு ஒரு தடவை சொல்லியிருக்கிறார்.(பாரதிராஜா:"சும்மா" இப்புடியே வந்து நில்லுங்கண்ணே!)

  ReplyDelete
  Replies
  1. தமிழ் சினிமாவின் மகுடம், அந்தப் படம்.

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அட்டகாசம். செங்கோவி... என்ன ஒரு எளிமையான் புரிந்துக்கொள்ளும் தன்மை கொண்ட எழுத்து...

  ReplyDelete
 6. வாழ்த்துகள்... by ஹரி பிரசாத்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.