Sunday, August 31, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-23)

23. Plant & Pay-off (நட்டு வச்ச ரோஜாச் செடி..)
சினிமாவிற்கென்றே ஒரு சிறப்பம்சம் உண்டு. இந்தக் கலையைத் தேடி மக்கள் வருகிறார்கள். தங்கள் பணத்தையும் நேரத்தையும் இந்தக் கலைக்காக செலவளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, படம் ஆரம்பிக்கும்போது தன்னையே அந்த படத்திடம் ஒப்படைக்கிறார்கள். என்னை சந்தோசப்படுத்து, திருப்திப்படுத்து என்று சரண்டர் ஆகிக் கேட்கிறார்கள்.
இவையெல்லாம் முதல் இருபது நிமிடங்களுக்குத் தான். அதற்குள் அவர்கள் கதையில் ஐக்கியம் ஆகிவிட வேண்டும். இல்லையென்றால், இன்ஸ்பெக்டராக மாறி படத்தை சோதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ‘இப்போ ஒரு பாட்டு வருமே? வந்திடிச்சா? இவன் ஓவரா செண்டிமெண்ட்டைப் புழியறானே..சாகப்போறானோ? செத்துட்டான்..ஏண்டா, டேய்எனும் க்ளிஷே புலம்பல் ஆரம்பித்துவிடும்.

கலகலப்பு படத்தில் வரும் நாய், யார் எதைத் தூக்கிப்போட்டாலும் எடுத்துக்கொண்டு வந்து ஹீரோவிடம் கொடுத்துவிடும். இந்த தகவல் நம் மனதில் முதலில் நடப்படுகிறது. ‘சரி..அதுக்கென்ன?’ என்று நாமும் அசுவாரஸ்யமாய் கண்டுகொள்ளாமல் ஓரத்தில் அதைப் போட்டு வைக்கிறோம். பின்னர் வைரத்திற்காக சண்டை போடும் காட்சியில், இன்ஸ்பெக்டர் தூக்கிப் போடப்பட்ட வைரத்தை தன் அண்டர்வேயரில் வைக்கவும், நமக்கு நாயின் குணாதிசயம் ஞாபகம் வந்துவிடுகிறது. அங்கே இருக்கும் மற்ற கேரக்டர்களுக்கும் ஞாபகம் வர, இன்ஸ்பெக்டர் முழிக்க, நமக்கு சிரிப்பு தாங்கவில்லை. படத்தின் ஆரம்பத்தில் நட்டுவைத்த தகவல், இப்பொழுது சிரிப்பாக பூத்துவிடுகிறது. இது Plant & Payoff-க்கு ஒரு எளிய உதாரணம்.

ஒரு படம் ஆரம்பிக்கும்போது, ஏகப்பட்ட தகவல்கள் விஷுவலாகவும் வசனமாகவும் ஆடியன்ஸ் முன் கொட்டப்படுகின்றன. அவை சுவாரஸ்யமாக கதையை நகர்த்த உதவ வேண்டும். இல்லையென்றால், ஆடியன்ஸுக்கு கடுப்பாகிவிடும்.

அப்படி கொட்டப்படும் சில விஷயங்கள் முதலில் தேவையற்றதாகத் தெரியும். படத்தின் பிற்பாதியிலேயே அதன் மகத்துவம் புரியும். அதற்குப் பெயர் தான்நட்டு வச்ச ரோஜாச் செடிஎன்று நான் செல்லமாகச் சொல்லும் Plant & Pay-off.
நாயகன் படத்தில் வரும் வேலு நாயக்கர் பெரிய தாதா. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே சாவு, வயதும் ஆகிவிட்டது. எனவே வேலு நாயக்கர் சாகப்போகிறார் என்பது உறுதியாக நமக்குத் தெரிகிறது. ஆனால் யாரால், எப்படி? அசிஸ்டெண்ட் கமிசனர் சுட்டுக்கொல்வாரா அல்லது கோர்ட் தூக்கில் போடுமா அல்லது வேறு எதிர்குரூப் வந்து கொல்லுமா என யோசித்தபடியே படம் பார்க்கிறோம்.

ஆனால் ஏற்கனவே அந்தகொலைகாரகேரக்டருக்கான செடி நடப்பட்டுவிட்டது. அது படம் முழுக்க வேலுநாயக்கர் கூடவே வளர்கிறது. பழிக்குப் பழி எனும் வன்மப்பூ பூக்கும்போது தான், நமக்குஅடஇதை யோசிக்கவே இல்லையேஎன்று தோன்றுகிறது. அந்த கணம் தான், ஒரு படத்தினைநல்லா எடுத்திருக்கான்யாஎன்று நாம் ஒத்துக்கொள்ளும் தருணம்.

Plant & Pay-off- Foreshadowing என்றும் அழைப்பது வழக்கம். இதைப் பல வகைகளில் அமைக்கலாம். பின்னால் வரும் ஒரு காட்சியில் ஒரு துப்பாக்கி முக்கியப்பங்கு வகிக்கப்போகிறதென்றால், அதை முதலிலேயே கேஷுவலாகக் காட்டலாம். ஒரு வீட்டு டேபிள் டிராயரில் துப்பாக்கி இருக்கிறது என்று சாதாரணமாக வரும் காட்சி, பின்னால் வரும் காட்சியால் முக்கியத்துவம் பெறும். எந்த பூட்டு ஆனாலும் அதைத் திறப்பது போன்ற ஏதோவொரு திறமை ஹீரோ அல்லது ஒரு கேரக்டருக்கு இருப்பது போல் முதலில் காட்டிவிட்டு, ஒரு இக்கட்டான சூழலில் அது உதவுவது போல் காட்சி அமைத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

பொதுவாக பின்னால் வரும் காட்சியை எழுதும்போது தான் plant செய்வதற்கான ஐடியா கிடைக்கும். ரிவர்ஸில் வந்து, பொருத்தமான இடத்தில் அதை சேர்த்துவிட வேண்டும்.

சமீபத்தில் வெளியானஇருக்கு ஆனா இல்லைபடத்தின் கிளைமாக்ஸே இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தித் தான் அமைக்கப்பட்டிருந்தது. ஹீரோவுடனே தங்கியிருக்கும் பேய் தான் ஹீரோயின். பேய் என்றாலும் அதற்கு இருக்கும் திறமைகள் என்ன என்று பார்த்தால், ஹீரோவைத் தவிர யார் கண்ணிலும் படாமல் இருப்பது மற்றும் யார் உடம்பில் வேண்டுமானாலும் புகுந்து, அந்த உடம்பை தன் கண்ட்ரோலில் கொண்டு வருவது.
ஒரு பாடல் காட்சியில் ஹீரோ சிகரெட் பிடிப்பார். அது பிடிக்காத ஹீரோயின் பேய் அந்த ஹீரோவின் உடலில் புகுந்து கொள்ளும். ஹீரோவால் சிகரெட்டை தன் வாய்க்கு கொண்டுவர முடியாது. வெறுத்துப்போய் சிகரெட்டை கீழே போட்டுவிடுவார். காமெடியாக இந்தக் காட்சி வரும்.

ஹீரோயினின் அக்காவை ஒரு தனியார் ஹாஸ்பிடல் டாக்டர், ஆபரேசன் என்ற பெயரில் கொன்றுவிட்டு, அவர் உடலின் பாகங்களை விற்றுவிடத் திட்டமிடுவார். இது தெரிந்த ஹீரோவும் ஹீரோயினும் எவ்வளவு முயன்றும் அந்த ஆபரேசனைத் தடுக்க முடியாமல் போய்விடும். கிளைமாக்ஸ் ஆபரேசன் தியேட்டரில்.

ஹீரோவை அடித்து ஒரு ரூமில் அடைத்துவிடுவார்கள். உதவிக்கு வந்தோருக்கும் அதே நிலைமை. வேறு யாரும் இல்லாத சூழ்நிலை. அந்த வில்லன் டாக்டர் ஆபரேசன் செய்ய கத்தியை எடுக்கும்போது, ஹீரோயின் பேய் அவர் உடலில் புகுந்துவிடும். அவர் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியாமல், அவர் கழுத்தை அவர் கையாலேயே அறுத்துவிடும். ‘டாக்டர் சூசைடு செய்துவிட்டார்என்றே எல்லாரும் நினைப்பர்; சுபம்!

முதலில் வெறும் காமெடி என்று நாம் நினைத்த ஒரு விஷயம், கிளைமாக்ஸையே தீர்மானிப்பதாக அமைவதை நம்மால் ரசிக்க முடிகிறது. 


இதே போன்று உங்கள் கதையில் ரோஜாச் செடியை நட்டு வைக்க முடியுமா என்று பாருங்கள். இல்லையென்றால், அதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் ஒரு எளிய விஷயம், இந்த Plant & payoff. எனவே, இது ஒரு நல்ல திரைக்கதை ஆயுதம்!

ஏறக்குறைய திரைக்கதையின் அடிப்படைகளைப் பார்த்துவிட்டோம். அடுத்த பகுதியில் இதுவரை பார்த்ததை, ஒரு படத்தில் அப்ளை செய்து பார்ப்போம்!

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

 1. நன்று!////ம்....ம்.........அப்ளை செய்து பார்ப்போம்!

  ReplyDelete
 2. வாவ்.. அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்நோக்கியபடி காத்திருக்கிறேன்.. :)

  ReplyDelete
 3. நாயகன் படத்தின் முடிவை எப்படி கொண்டாந்து சேர்த்திருக்காங்க பார் என்று நான் படம் பார்க்கும் போதே ரசித்திருக்கிறேன்

  நீங்கள் ஆரம்பத்தில் ஆடியன்ஸ் பற்றி சொன்னது நிஜம்

  ReplyDelete
 4. Hello sir. Had been reading your blog for few days and being a movie buff i really love the way u have explained nuances technically. Good work from you!

  ReplyDelete
 5. அருமை! நிறைய விசயங்களை அறிய முடிகிறது! நன்றி!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.