Saturday, August 9, 2014

ஜிகர்தண்டா - ஒரு அலசல்

இணையத்தில் பெரும் பிரளயத்தையே உண்டுசெய்திருக்கும் படம், ஜிகர்தண்டா. நல்லாயிருக்கு..நல்லாயில்லை என பலவித அபிப்ராயங்கள் படம் பற்றி. ஆனாலும் இந்தப் படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், ஒரு வாரம் கழித்து இங்கே ரிலீஸ் ஆனதும் பார்த்தாகிவிட்டது. நெட்டில் தியேட்டர் ப்ரிண்ட் ரிலீஸ் ஆகியிருந்தாலும், தியேட்டர் ஹவுஸ்ஃபுல் என்பது பெரும் ஆச்சரியம் தான். 
படத்தைப் பார்த்ததுமே, ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என்று விளங்கிவிட்டது. இது இன்னவகைப் படம் என்று சொல்லிவிட முடியாத, நம்மை தலைசுற்ற வைக்கும் ஒரு படம், ஜிகர்தண்டா. ஒளிப்பதிவு, இசை, சிம்ஹாவின் நடிப்பு, ’தேவையற்ற’ நகைச்சுவை ஒரு லெவலிலும் மற்ற விஷயங்கள் இன்னொரு லெவலிலும் இருக்கின்றன. முந்தையதை வைத்துப் பார்த்தால், நல்ல படம் என்று தான் சொல்ல வேண்டும். பிந்தையதை வைத்துப் பார்த்தால், ப்ர்ர்.

பீட்சா என்ற தரமான படத்தைக் கொடுத்த இயக்குநரின் படம் வேறு. யாரோ குவாண்டின் டராண்டிவோவாம். அவர் படம் மாதிரி இருக்கிறது என்று ட்ரெய்லர் வரவுமே சொல்லிவிட்டார்கள். படமோ இன்னவகையென்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. எனவே எதற்கு வம்பு என்று ஒரு குரூப், ‘ஆஹா..இதுவல்லவோ உலக சினிமா. ஆரண்ய காண்டம் எட்டு குட்டி போட்டது. இந்தப் படம் பதினாறு குட்டி போட்டுவிட்டது. இயக்குநர் கடுமையாக வேலை செய்திருக்கிறார்’ என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். 

அது தான் பிரச்சினைக்குக் காரணம். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு ஆவரேஜ் வணிகப் படம். டெக்னிகலாக படத்தை வித்தியாசமாகத் தர முயன்றிருக்கிறார்கள். மேலே சொன்ன சிம்ஹாவின் நடிப்பு போன்றவற்றிற்காக, இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். பார்க்கக்கூடிய படம் தான். பீட்சா தந்த திருப்தியை இந்தப் படம் தரவில்லை என்பதைத் தாண்டி, ஒரு பொழுதுபோக்குப் படம் எனும் அளவில் ஒருமுறை பார்க்கலாம். இது ஒரு நல்ல முயற்சி; நல்ல படைப்பு வேறு, நல்ல முயற்சி வேறு!

வேலையில்லாப் பட்டதாரியே ஹிட் ஆகும்போது, இத்தகைய நல்ல முயற்சிகளும் கண்டிப்பாக ஹிட் ஆக வேண்டும். ஆகியிருக்கிறது. அதில் நமக்கும் சந்தோசமே. ‘ஒழக சின்மா’ குரூப் இத்துடன் கிளம்பிக்கொள்ளலாம்.

இந்தப் படத்தை தமிழ் சினிமாவைப் புரட்டிப்போடும் உலக சினிமா எனும் ரேஞ்சில் சிலர் பில்டப் செய்ததில் தான் நமக்கு வருத்தமேயொழிய, படத்தை பார்க்க முடியாத குப்பை என்று நான் நினைக்கவில்லை. இந்தப் படத்தைப் பற்றி ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். ஒரு நண்பர் ‘ஒரு இயக்குநரின் உழைப்பை ஒருவரியில் ஒதுக்கித்தள்ளுவது நியாயமா?’ என்று பொங்கியதால், படத்தில் என்னைத் தொந்தரவு செய்த விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். 

இன்ஸ்பிரேசன்: 
இந்தப் படம் A Dirty Carnival என்ற கொரியப் படத்தின் காப்பி என்று செய்தி வெளியானபோது, அதிர்ச்சியாக இருந்தது. பீட்சா எனும் ஒரிஜினல் பெஸ்ட் ஸ்க்ரிப்ட் எழுதிய கார்த்திக் சுப்பராஜ் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்றே நம்பினேன். அவரும் ‘டாய்..ரெண்டாவது படத்துக்கே காப்பி அடிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் டொக் ஆகிடலைடா’ என்று சொன்னார். ஒரு நேர்மையான மனிதனால் தான் அப்படி துணுச்சலாகப் பதில் சொல்ல முடியும் என்று நம்பினேன். ஆனால் படம் பார்த்தபோது, என் நம்பிக்கை சுக்குநூறானது. 

A Dirty Carnival படத்தில் ஹீரோ ஒரு ரவுடி. இயக்குநர் ஆகும் ஆசையில் உள்ள அவனது நண்பன் ஒருவன், ரவுடிகளைப் பற்றி படம் எடுக்க நினைக்கிறான். எனவே ஹீரோ இருக்கும் இடத்திற்கே வந்து, ஹீரோவுடன் தங்கி ரவுடி வாழ்க்கையை ஸ்டடி செய்கிறான். ஹீரோ தான் செய்த ஒரு முக்கியமான கொலையை குடிபோதையில் விவரிக்க, அதை தன் படத்தில் அப்படியே காட்சியாக வைக்கிறான் நண்பன். படம் வெளியாகி ஹிட் ஆகிறது; கூடவே அந்த கொலைக் காட்சியும் ஹீரோ ரவுடியின் பாஸ்க்கு கடுப்பைக் கிளப்புகிறது. இறுதியில் தாதாவும் இயக்குநரும் கூட்டணி வைக்க, ரகசியத்தை உளறிய ஹீரோ கொல்லப்படுகிறான்.

ஒரு ரவுடியின் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைப்பட்டு, ரவுடியுடன் பழகி படம் எடுக்கும் இயக்குநர் எனும் படத்தின் தீம் அப்படியே இங்கே எடுத்தாளப்பட்டிருக்கிறது. ‘ஆம்..A Dirty Carnival படத்தின் இன்ஸ்பிரேசன் தான் இந்தப் படம்’ என்று கார்த்திக் சொல்லியிருந்தால், அதை யாரும் பெரும் குற்றமாக நினைக்கப்போவதில்லை. டைட்டிலில் ஒரு நன்றி கார்டு போட்டால், போதும். (Rough Cut என்று இன்னொரு கொரியப்படம். சினிமாவில் நடிக்கும் ஆசையுள்ள ஒரு ரவுடிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும்போது நடக்கும் சம்பவங்களை ஆக்சன் காட்சிகளாக விவரிக்கிறதாம். ஜிகர்தண்டாவின் இரண்டாம்பகுதி, ரவுடி நடிகன் ஆவதை காமெடியாக விவரிக்கிறது. Rough Cut படத்தின் சில காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக...மன்னிக்கவும்..எடுத்தாளப்பட்டிருப்பதாக, படம் பார்த்த கருந்தேள் எழுதியிருக்கிறார். நான் படம் பார்க்கவில்லை, ஆனால் அவரை நம்புகிறேன்.)

இரண்டு கொரியப் படங்களின் தீமை மிக்ஸ் செய்து, புதிய கதையையும் காட்சிகளையும் உருவாக்குவது தவறில்லை. ஒரிஜினலுக்கு கிரெடிட் கொடுப்பதை எது தடுக்கிறது என்று தெரியவில்லை. பேராண்மை, ஆடுகளம் போன்ற படங்களில் ‘இன்ஸ்பிரேசன்’ படங்களின் லிஸ்ட்டை டைட்டிலேயே போட்டார்களே? அந்த இயக்குநர்களை நாம் மரியாதையுடன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறோமே? அப்படி இருக்கும்போது, படம் வெளியாகும் முன்பே கொரியப் பட மேட்டர் லீக் ஆகிவிட்ட நிலையில், இன்ஸ்பிரேசனுக்கு ஒரு டைட்டில் கார்டு போட்டிருக்கலாம். படம் பார்ப்போரை முட்டாளாக எண்ணுகிறார்களோ எனும் நினைப்பு படம் பார்க்கும்போது வருவதை தவிர்க்க முடியவில்லை. (மேலும் படிக்க: ஜிகர்தண்டாவை சுட்ட கொரியர்கள்)

திரைக்கதை: 
இவ்வளவு மோசமான திரைக்கதையை நிச்சயம் நான் பீட்சா இயக்குநரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு ஒழுங்கே இல்லாமல் நீளும் காட்சிகள், லாஜிக்கே இல்லாமல் ஒரு கிளைமாக்ஸ், கதை முடிந்தபின்னும் ஓடும் படம் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. குவாண்டின் டரண்டினோ பாணி என்று ஜல்லியடிக்கிறார்கள். திரைக்கதை விதிகளை கலைத்துப்போட்டு, ஒரு ஒழுங்கற்ற தோற்றத்தை உருவாக்குவதில் அவர் ஜித்தர். ஆனாலும் அதில் ஒரு லயம் இருக்கும். 

வழ வழா கொழ கொழா-விற்கும் அந்த ஒழுங்கற்ற காட்சிகளின் லயத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. கத்தரிக்க வேண்டிய இடத்தில் கத்தரிக்காமல் படத்தை எடுத்துவிட்டு, இசை மற்றும் ஒளிப்பதிவு எனும் இரு ஆயுதங்களைக் காட்டி ‘இது உலக சினிமா தானே?’ என்று மிரட்டுவது நியாயமே அல்ல.

சித்தார்த்தின் இயக்குநர் ஆகும் கதை, சிம்ஹாவின் கதை, விஜய் சேதுபதியின் சினிமா என மூன்று அம்சங்களையும் வைத்து, முழுக்க நான் - லீனியரில் தெளிவாக ஒரு திரைக்கதையை எழுதியிருந்தால், டரண்டினோ பாணி என்று சொல்லியிருக்கலாம். அதற்கும் வழியில்லை. கதை யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூ, யாருடன் ஆடியன்ஸ் ஐக்கியம் ஆவார்கள் என்று எந்தப் புரிதலும் இல்லாமல் காட்சிகள் வருகின்றன. சிம்ஹா எனும் மகாநடிகன், தன் நடிப்பால் இது என் படம் என்று உணர்த்தியதால், படம் தப்பிக்கிறது.

சிம்ஹா கதைக்காக ரோடு ரோடாக அலையும் சித்தார்த்திடம், ஒரு அடியாள் ‘நான் சொல்றேன் பாஸ்’ என்று கதை சொல்ல ஆரம்பிக்கிறான். நாம் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்கிறோம். சட்டென்று ஒரு டூயட் பாடல். என்ன அக்கிரம் ஐயா, இது! ஒரு படம் நீள்கிறதென்றால், அதற்கு ஒரு காரணம் வேண்டும். சிம்ஹா திருந்தியதுமே படம் முடிந்துவிட்டது. 

அப்புறம் சித்தார்த் தாதா மாதிரி ஆவதும் விஜய் சேதுபதியிடம் பேசுவதும் சகிக்க முடியாத காமெடி அல்லவா? லூஸ் மோசன் மாதிரி க்ரிப்பே இல்லாமல், நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதற்குப் பெயரா திரைக்கதை?

தெய்வீகக் காதல்: 
இந்தப் படத்தின் தரத்தை காலி செய்தது, சித்தார்த் - லட்சுமி மேனன் இடையிலான காதல் எபிசோட் தான். ஒரு புடவை திருடியின் மனதை சித்தார்த்(ஹீரோ அல்ல!) திருடினால்? - என்று ரைமிங்காக யோசித்திருப்பார்கள் போலும். சிம்ஹா கதையைத் தெரிந்துகொள்வதற்காக லட்சுமி மேனனை காதலிப்பதாக நடிக்கிறார் சித்தார்த். சிம்ஹாவே தன் கதையைச் சொல்ல முன் வந்தவுடன், சும்மா தான் நடிச்சேன் என்று உண்மையைச் சொல்லிவிட்டு லட்சுமியிடம் இருந்து விலகுகிறார் சித்தார்த். ஹீரோயின் கடுப்பாகிறார்.

ஹீரோ என்றால் எல்லா விஷயத்திலும் நேர்மையானவனாகத் தான் இருக்க வேண்டும், ஹீரோயின் என்றால் ஹீரோவுக்காக உயிரையே கொடுக்க வேண்டும் எனும் வழக்கமான படங்களைப் போன்று அல்லாமல், ஒரு யதார்த்தமான ஜோடியையும் காதல் என்பது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதையும் முதல்பாதியில் காட்டுகிறது படம். சித்தார்த் கழட்டி விட்டதால் கடுப்பான லட்சுமி மேனன், சிம்ஹாவே ஹீரோவாக நடித்தால் என்ன என்று ஏற்றிவிடுகிறார். ‘சூப்பரப்பு..வந்தாச்சு femme fatale’  என்று ஆர்வமாகிறோம். ஆனால் அந்த பாழாய்ப் போன தெய்வீகக் காதல் விடுமா? மீண்டும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்துகிறார்கள்.

சிம்ஹாவுடன் கூட்டணி அமைத்து, ’அவனை கட்டிக்கொள்ளவும் தயார்..ஆனால் சித்தார்த்தை விட மாட்டேன்’ என்று நயவஞ்சமாக ஹீரோயின் கேரக்டர் இறங்கி அடித்திருந்தால், படத்தின் தரம் எங்கேயோ போய் இருக்கும். அப்போது நாமும் இது வழக்கமான படமல்ல என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம். அந்த மாதிரிக் கேரக்டர்கள் ஒன்றும் நமக்குப் புதிதில்லயே. சுப்ரமணியபுரம் படத்தை உலக சினிமாவாக ஆக்கியது, அந்த ஸ்வாதி கேரக்டர் தானே? Film Noir-ன் ஒரு அடிப்படை அம்சத்தில் புகுந்து விளையாட வாய்ப்புக் கிடைத்தும் தவறவிட்ட படத்தை, எப்படி ஐயா உலக சினிமா என்று கொண்டாடுவது? கடைசிவரை பாடல்காட்சிளுக்கு உதவும் ஊறுகாயாக மட்டுமே ஹீரோயினை உபயோக்கபடுத்தும் ஒரு சராசரிப் படம் எனும் தோற்றத்தை அல்லவா அந்த தெய்வீகக் காதல் கொடுத்துவிட்டது.

ட்விஸ்டோ ட்விஸ்ட்:
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பாணி உருவாகி வரும். அதைத் தவிர்க்க முடியாது. அந்த வகையில் கார்த்திக் இந்தப் படத்திலும் பீட்சாவிலும் முயற்சிப்பது ‘ட்விஸ்ட்’ எனும் பெயரில் படத்தின் டோனையே மாற்றும் சர்ப்ரைஸ் பாணி. பீட்சா படத்தில் என்ன நடந்தது? இண்டர்வெல் விட்டபோது, அய்யோ அம்மா என பயந்து பாத்ரூமுக்கு ஓடியவர்கள் ஏராளம். முக்கால்வாசிப் படம் வரை பயந்து நடுங்க வைத்துவிட்டு, ‘பயந்துட்டீங்களா? சும்மா லுல்லுல்லாயி’ என்று சொன்னபோது, நிஜமாகவே மிகவும் ரிலீஃபாக இருந்தது. அது சந்தோசத்தைக் கொடுத்தது. பின்னீட்டான்யா என்று சொல்ல வைத்தது. அதாவது முதல்பாதியில் பேய்க்கதை, இரண்டாம்பாதியில் த்ரில்லர்.

படத்தின் தொனி மாறினாலும், அது சுவாரஸ்யத்தையும் தரத்தையும் கூட்டியது. இந்தப் படத்திலும் அதே பாணியைப் பின்பற்றியிருக்கிறார் கார்த்திக். படத்தின் முதல்பாதி, ஒரு தரமான கேங்க்ஸ்டர் மூவியாக இருக்கிறது. இரண்டாம்பாதியில் காமெடிப் படமாக மாறுகிறது. ஒரு நல்ல விஷயத்தில் இருந்து இன்னொரு மிகநல்ல விஷயத்திற்கு மாறலாம். அது கேரக்டர்களையும் இம்ப்ரூவ் செய்யும். ஆனால் இங்கே ஒரு நல்ல படம், கிக்கிரித்தனமான படமாக ஆகியிருக்கிறது. ‘கேங்ஸ்டர் படம்ன்னு நினைச்சுட்டீங்களா?..சும்மா லுல்லுல்லாயி’ எனும்போது, நமக்கு வரும் கடுப்பு கொஞ்சநஞ்சம் அல்ல.

முதல்பாதியில் ஒரு தொனியிலும் இரண்டாம்பாதியில் வேறொரு வகைக்கும் மாறுவது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. பார்த்திபன் நடித்த வாய்மையே வெல்லும் படமும், சசிகுமாரின் ஈசன் படமும் இந்த முறையைப் பின்பற்றிய படங்கள் தான். அவை இரண்டுமே கமர்சியலாகத் தோற்ற படங்கள். அதே பாணியில் வந்து பீட்சா வெற்றி பெற்றதற்குக் காரணம், மேலே சொன்ன ‘பெட்டர் டோன்’-க்கு படம் மாறியது தான். ஜிகர்தண்டா கமர்சியலாக வெற்றி பெற்றுவிட்டது ஏன் என்பதைக் கீழே பார்ப்போம். ஆனால் ஒரு இயக்குநராக கார்த்திக்கு இது வீழ்ச்சி தான். இது கொஞ்சம் ரிஸ்க்கான பாணி. இதைச் செய்யும்போது, படம் பெட்டராக மாறுகிறதா என்று பார்த்துக்கொள்வது நல்லது.

வெற்றி..வெற்றி: 
1980களில் சில்க் ஸ்மிதா இருந்தால் போதும், படம் வெற்றி எனும் நிலை சகலகலா வல்லவனுக்குப் பிறகு உருவானது. சில்க் ஸ்மிதாவின் இடத்தை இப்போது பிடித்திருப்பது நகைச்சுவை. ஒழுங்கான திரைக்கதை-இயக்கம் இல்லாத படங்கள்கூட நகைச்சுவை இருந்தால், வெற்றிவாகை சூடுகின்றன. வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் இதை ஆரம்பித்து வைத்ததாக ஞாபகம். 
தொடர்ந்து இ.ஆ.பாலகுமாரா, ராஜாராணி, வேலையில்லாப் பட்டதாரி என பல படங்கள், சிரிக்க வைத்தே காசு பார்க்கின்றன. ‘படம்ன்னா ஜாலியா இருக்கணும் பாஸ்..இது படம்’ என வி.ஐ.பி. பற்றி ஒரு நண்பர் சொன்னார். டைம் பாஸ் ஆனால் போதும் எனும் மனநிலைக்கு ரசிகனை கொண்டுசெல்வதையே இந்தப் படங்கள் சொல்கின்றன. இது சினிமாவுக்கு நல்லதல்ல. வி.ஐ.பி ஸ்டைல் வெற்றியை ஜிகர்தண்டா அடைவது, பீட்சா இயக்குநருக்கும் நல்லதல்ல.

பிரச்சினை: 
வி.ஐ.பி. படத்தை ஒரு ஆவரேஜ் படமாகத் தான் விமர்சனங்கள்; குறிப்பாக ஆரம்ப இணைய விமர்சனங்கள் சொல்லின. ஆனால் படம் ஹிட் ஆன பின் எழுதியவர்கள், இந்தப் படத்துக்கு என்னய்யா குறை? என்று எழுதினார்கள். அவர்களிடம் யாரும் இந்தளவுக்கு விவாதிக்கவில்லை. காரணம்,அதை ஒரு தரமான படமாக யாரும் நினைக்கவில்லை. சின்னத்தம்பி, கரகாட்டக்காரன் மாதிரி ஒரு பொழுதுபோக்குப் படம் எனும் அளவில் அதை எடுத்துக்கொண்டோம். ஜிகர்தண்டாவையும் அப்படி எடுத்துக்கொள்ள முடியாததற்குக் காரணம், இயக்குநர் மீதும் இந்தப் படக்குழு மீதும் நாம் வைத்திருந்த நம்பிக்கை. பீட்சாவின் சுவையை இன்னும் நாங்கள் மறக்கவில்லை. இது ஒரு திறமையான இளைஞர் பட்டாளம் என்பதை அறிந்ததாலேயே, கடுமையான விமர்சனங்களை வைக்கிறோம். இந்தப் படத்துடன் ரிலீஸ் ஆன சரபம் ஒரு அட்டக்காப்பி என்று தெரிந்தும், அதை பெரிதாக யாரும் விவாதிக்கவில்லை. பேரரசு படமோ, பொன்ராஜ் படமோ வெளியாகும்போது, இப்படி வேலைமெனக்கெட்டு நாங்கள் விவாதிப்பதில்லை.

நாங்கள் கன்சிடர் செய்வதற்கும் ஒரு தகுதி வேண்டும், அது இந்த டீமிற்கு இருப்பதாலேயே இவ்வளவு எதிர்விமர்சனங்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் வந்தபோதும், இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் செல்வாவின் விசிறிகள் வீறுகொண்டு எழுந்து ‘உங்களுக்குப் படம் பார்க்கத் தெரியலை..ஒழக சின்மா தெரியுமா உனக்கு?’ எனும் ரேஞ்சில் பதிலடி கொடுத்தார்கள். இன்றைக்கு செல்வா எனும் அற்புதக்கலைஞனை மூலையில் உட்கார வைத்திருக்கிறார்கள். டரண்டினோ, ஆரண்யகாண்டம், மணிரத்னம் என்று அள்ளிவிடுபவர்களிடம், ஜிகர்தண்டா டீம் கவனமாக இருப்பது அவசியம். 
 படத்தின் குறைகளைச் சொன்னால் ‘உனக்கு என்ன சினிமா அறிவு இருக்கிறது?’ என்று லுச்சாத்தனமாகப் பேசாதீர்கள். இதே அறிவுகெட்ட கூட்டம் தான் பீட்சாவையும், சூது கவ்வும் படத்தையும் போற்றிப் புகழ்ந்து தள்ளியது. பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் படத்தைப் பாருங்கள் என்று சொன்னது. அன்று ஈ என்று இளித்தபடி பாராட்டுகளை வாங்கிவிட்டு, இன்று வந்து ;உனக்கு அறிவில்லை’ என்று சொல்வது அயோக்கியத்தனம். அன்றே ‘நீ ஒரு முட்டாள். நீ என் படத்தைப் பற்றிப் பேசாதே’ என்று சொல்லியிருந்தால், அது நேர்மை. இணையக் கூட்டமும் மக்களில் ஒரு பகுதி தான். மக்களை முட்டாள் என்று நினைப்பதை விடவும் கெடுதல் வேறில்லை. 

இந்த விமர்சனங்களுக்குக் காரணமே, உங்கள் மேல் இருக்கும் மரியாதை தான். ‘பிசிறு தட்டுகிறது.சுதி சேரவில்லை’ என்று சொல்கிறோம். அதை பரந்த மனதுடன் ஆராயுங்கள். அது உங்களுக்கும் உங்களிடம் நல்ல படைப்பை எதிர்பார்க்கும் எங்களுக்கும் நல்லது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

 1. நான் இன்னைக்கு தான்ணா போய் பாக்கனும்!! பாத்துட்டு வந்து இவரு டோரன்டினோவா இல்ல துறந்தவேனா னு சொல்றேன்!!! :-)

  ReplyDelete
  Replies
  1. பாருங்கள்..நல்ல படம் தான்.

   Delete
 2. ஐந்தாவது பத்தியில் இரண்டாவது வரியின் ஏழாவது வார்த்தையை சரியாக எழுதவும். மனசு தப்பு தப்பா வாசிக்குது.

  ReplyDelete
  Replies
  1. தப்பை தப்பா வாசிக்கிறது தப்பே இல்லைன்னு குவாண்டின் டரண்டினோவின் மச்சான் சொல்லியிருக்கார் சேக்காளி.

   Delete
 3. நல்லா எழுதி இருக்கீங்க அண்ணே... இந்தக் குழு மீது ஏன் இவ்வளவு விமர்சனம் வைக்கபடுகிறது என்பதற்கான விளக்கம் காட்டமாய் இருந்ததாலும் கரெக்ட்டா தான் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. புரிந்தால் சரி தான் சீனு.

   Delete
 4. //ஆரண்ய காண்டம் எட்டு குட்டி போட்டது. இந்தப் படம் பதினாறு குட்டி போட்டுவிட்டது.//

  அண்ணே... எனக்கான ஆப்பா இது ? ;) ஆனா நான் பீட்ஸாவை இல்ல சொன்னேன்...

  ReplyDelete
  Replies
  1. இல்லைய்யா..நீங்க எழுதுனதே எனக்கு ஞாபகம் இல்லையே..பொதுவாச் சொன்னேன்.

   Delete
 5. செங்கோவி கோபமான மன நிலையில் எழுதி இருக்கிறீர்கள் போல :-) சில மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் நீங்கள் கூறிய மையக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

  "சிம்ஹாவுடன் கூட்டணி அமைத்து, ’அவனை கட்டிக்கொள்ளவும் தயார்..ஆனால் சித்தார்த்தை விட மாட்டேன்’ என்று நயவஞ்சமாக ஹீரோயின் கேரக்டர் இறங்கி அடித்திருந்தால்"

  இது நானும் நினைத்தேன். இறுதியில் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கக் கூடாது. லஷ்மி மேனன் சித்தார்த்தை மாட்டி விடுவதை அப்படியே தொடர்ந்து சித்தார்த் லஷ்மி மேனனை மாட்டி விடுவதை அப்படியே தொடர்ந்து இருக்கலாம். கமர்ஷியலுக்காக!! மாற்றி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  படையப்பா இன்று வரை க்ளைமாக்ஸ் ரசிக்கப்பட காரணம்.. நீலாம்பரி தன்னை கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே தனது குணத்தை காட்டியது தான். மாற்றி இருந்தால் வழக்கமான படமாக இருந்து இருக்கும்.

  நீங்கள் கூறியபடி விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். இவர்கள் தவறு செய்யவில்லை என்றால் கூட கூறுவதில் ஒரு நியாயம்! இருக்கு.. கதையின் மூலத்தை எடுத்து பயன்படுத்தி விட்டு தற்போது ஒன்றுமே தெரியாதது போல கூறுவது தவறு. குறிப்பிட்டது போல ஆடுகளம் படத்தில் செய்தது போல இவர்கள் செய்து இருந்தால், இவர்கள் மீது ஒரு மரியாதை வந்து இருக்கும்.. எதுவுமே செய்யாமல் கதையையும் காட்சிகளையும் எடுத்து பயன்படுத்தி விட்டு தற்போது குதிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

  சும்மா இல்லாம நலன் உதவி செய்கிறேன் பரிந்து பேசுறேன் என்று கார்த்திக்கை எக்கச்சக்கமாக மாட்டி விட்டுட்டார் :-)

  இதில் ஒரு சிலர் இவர்கள் இது போல எடுத்த காட்சிகளையும் நியாயப்படுத்துகிறார்கள்! நாளை உலகம் தமிழ் திரையுலகை காபி அடிப்பவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறது.. அழிக்க முடியாத கறையாக மாறப் போகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஆவரேஜ் வணிகப்படம், உலக சினிமா என சிலாகிக்கப்படும்போது கோபம் வருவது இயல்பு தானே தலைவரே. (உங்களையே கமெண்ட் போட வச்சிட்டாங்களே!!!! )

   Delete
 6. ஒவ்வொரு இயக்குனரும் தனக்கென்று ஒரு கொள்கை(?!)வகுத்து வைத்திருக்கலாம்,அல்லது தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கு தலை சாய்க்கலாம்!///எதிர்மறை விமர்சனங்கள்,வர்த்தகத்துக்குப் பெரும் பணி ஆற்றுகின்றன என்பதும் உண்மையே!///நான் எல்லாம் படம் பார்த்து விட்டு 'உணர்ச்சி' (ஒழ்க சின்மா)வேகத்தில் கமெண்டுபவன் மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. உலக சினிமா தெரியாதவரைக்கும் நிம்மதி தான் ஐயா.

   Delete
 7. லூஸ் மோசன் மாதிரி க்ரிப்பே இல்லாமல், நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதற்குப் பெயரா திரைக்கதை?// ஹஹஹா செங்கோவி டச்..

  ReplyDelete
 8. நண்பா. நல்ல அலசல்.. கார்த்திக் என்னும் இயக்குனரிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்து ஏமாந்து போன கோபம் கூட காரணம் தான்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். இது தான் அவர் எடுக்க விரும்பிய முதல் படம் என்று சொன்னதால், நிறையவே எதிர்பார்த்துவிட்டேன்!

   Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.