Friday, October 23, 2015

குறும்படம் எனும் சோதனை முயற்சி - ஒரு அலசல்

சினிமா என்பது வணிகமாக இருக்கும்நிலையில், அதற்கான மாற்று சினிமாவாக உருவானது தான் குறும்படம் என்பது. வணிக சினிமா பேசாத, கருத்துச்செறிவான விஷயங்களை அலசுவதற்கு குறும்படம் ஒரு சிறந்த வழி. அத்தகைய படங்கள் இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த பதிவில் அப்படிப்பட்ட, சமூக அக்கறை கொண்ட சீரியஸ் குறும்படங்களைத் தவிர்த்துவிட்டு, மற்றவை பற்றிப் பார்ப்போம்.

பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாகச் சேர்வதற்கு ஒரு வழியாக மட்டுமே முன்பு (இப்போதும்) 'பொழுதுபோக்கு குறும்படங்கள்' இருந்துவந்தன. நல்ல கதை எழுதும் ஆற்றல் உள்ளவர்களைப் போன்றே, நல்ல ஷார்ட் ஃபிலிம் எடுப்போரையும் சினிமா அரவணைத்தது.

டிஜிட்டல் புரட்சிக்குப் பின் குறும்படம் எடுப்பது என்பது சாம்பார் வைப்பதைவிடவும் சாதாரணமான விஷயமாக ஆகிவிட்டது. சினிமாவிற்கு உள்ளே இருப்பவர்கள் மட்டுமல்லாது, வெளியே இருப்போரும் இதனை கோடம்பாக்க கதவைத் திறக்கும் சாவியாக புரிந்து வைத்திருக்கிறார்கள், அதில் ஜெயிக்கவும் செய்கிறார்கள்.

இந்தப் பதிவில் நான் பேச விரும்புவது, ஷார்ட் ஃபிலிம்களின் தரத்தைப் பற்றியும், அதை எடுப்போரின் மனநிலை பற்றியும் தான்.

ஏன் குறும்படங்கள் எடுக்கப்படுகின்றன?

1. கற்றுக்கொள்வதற்கு!
2. கற்றுத்தேர்ந்து, ஒரு நல்ல குறும்படம் கொடுப்பதற்கு.
3. அதன் மூலமாக, சினிமா வாய்ப்புகளைப் பெறுவதற்கு.

'பொண்ணு பார்க்கப்போவது கல்யாணம் செய்யத்தான்' என்பது மாதிரி ஷார்ட் ஃபிலிமின் அல்டிமேட் குறிக்கோள், சினிமா வாய்ப்பு தான்.

உண்மையிலேயே நம் மக்கள் அக்கறையுடனும் கடும் உழைப்புடனும் குறும்படங்களை எடுக்கிறார்கள். குறும்படமே கற்றுக்கொள்ளத்தான் என்பதால், தரம் பற்றியும் பெரிய பிரச்சினையில்லை. 'நாலஞ்சு ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறோம். கத்துக்கறோம். குறைகளை எல்லாம் சரிபண்றோம். அடுத்து, ஸ்ட் ரெய்ட்டா சினிமா தான்' என்று தெளிவான திட்டத்துடன் ஆரம்பிக்கிறார்கள். முதல் படம் எடுத்து முடிக்கும்வரை எல்லாம் சரியாகத்தான் போகிறது.

பிரச்சினை, குறும்படத்தின் விமர்சனத்தை எதிர்கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது. 90% பேருக்கு நெகடிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வது/எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. முதல்கட்ட குறும்படங்களின் நோக்கமே, 'நமக்கு என்ன தெரிகிறது? எங்கே தப்பு செய்கிறோம்?' என்று தெரிந்துகொள்வது தான். நம்முடைய படைப்பில் இருக்கும் எல்லாத் தவறும் நமக்குத் தெரியாது. அதை மற்றவர்கள் பார்த்துவிட்டுச் சொல்லட்டும் என்பது தான் அதை பொதுவில் வைக்கும் நோக்கம். அந்த நோக்கம் சரியாக நிறைவேறும்போது, சொதப்பிவிடுகிறார்கள் இந்த 'குழந்தை' படைப்பாளிகள்.

இந்த வாரம் என்ன படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது என்று எதிர்ப்பார்ப்பது போல், இந்த வாரம் என்ன குறும்படம் ரிலீஸ் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. உண்மையில் நண்பர்களும் சொந்தங்களும் தாண்டி, யாருக்கும் உங்கள் குறும்படங்கள் பற்றித் தெரிவதும் இல்லை. எனவே உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் இல்லாத ஒருவர், உங்கள் குறும்படத்தைப் பார்க்கிறார் என்பதே பெரிய விஷயம். அடுத்து அவர் தன் பொன்னான நேரத்தைச் செல்வழித்து 'மொக்கைப் படம்..கொன்னுட்டான்' என்று சொல்கிறார் என்றால், அவரை கோவில்கட்டிக் கும்பிட வேண்டும்!

ஒரு குறும்படம் ரிலீஸ் ஆனதும் நமக்கு வருவது, மூன்றுவகையான விமர்சனங்கள் தான்.

1. நண்பர்களின் 'சூப்பர் மச்சி' விமர்சனம்
2. நெகடிவ் விமர்சனங்கள்
3. காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள். (என்ன குறை என்று கேட்டால் சொல்லத்தெரியாது. இத்தகைய நெகடிவ் ஆசாமிகளின் கருத்தை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.)

குறும்பட விமர்சனங்களிலேயே மோசமானது, சூப்பர் மச்சி விமர்சனம் தான். நண்பரின் நண்பர் ஒருவர் படு திராபையான குறும்படம் எடுத்திருந்தார். ஃபேஸ்புக்கில் என் நண்பர் ஒருவர் அதற்கு 'அருமையான படம்' என்று கமெண்ட் செய்திருந்தார். என் நண்பரிடம் சாட்டில் போய் 'யோவ், அந்த டைரக்டர்(!)கிட்டே பெர்சனலா பேசும்போதாவது உண்மையைச் சொல்வீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னது, 'நமக்கு எதுக்குய்யா வம்பு? ஏதோ முயற்சி பண்ரான், பாராட்டி வைப்போம்'.

எல்லாருமே காறித்துப்பினால், அடுத்த படத்தையே எடுக்க மாட்டீர்கள் தான். எனவே உங்களை ஊக்குவிக்கும் காரணியாக, நண்பர்களின் சூப்பர் மச்சி கமென்ட் இருக்கட்டும். ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. அதை உண்மையென்று நம்பிவிட்டீர்கள் என்றால், அங்கேயே தேங்கிப்போய்விடுவீர்கள்.

இன்னொரு குறும்படம் பார்த்துவிட்டு தற்கொலை மனநிலைக்கே போய்விட்டேன். குறைந்தது பத்து கெட்டவார்த்தைகளால் இயக்குநரை திட்டிவிட்டு, ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்தால் அவருக்கு ஒரு கமெண்ட் வந்திருந்தது : 'feeling proud to be your friend'. செத்தாண்டா சேகர் என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்து கிடைப்பது நெகடிவ் விமர்சனங்கள். குறும்படம் எடுப்பதன் முதல் நோக்கமே, நெகடிவ் விமர்சனங்களை வாங்குவது தான். அதில் தான் தன் குறை என்னவென்று தெரியவரும். அப்படி எதிர்பார்த்தது கிடைக்கும்போது, படைப்பாளிகளுக்கு கடும் கோபம் வந்துவிடுகிறது. 'இத்தனை பேர் சூப்பர் மச்சின்னு சொல்லும்போது, இவன் என்னமோ அறிவுஜீவி மாதிரிப் பேசுறானே' என்று கடுப்பாகிவிடுகிறார்கள். சிலர் சண்டைக்கே வந்துவிடுகிறார்கள். சென்ற வருடம் ஒரு ஈழத்து நண்பரின் பதிவில் பெரும் சண்டை. அவர் ஒரு மொக்கை குறும்படத்தை நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டது தான் பிரச்சினை.

நெகடிவ் விமர்சனம் வரும்போது வலிக்கும் தான். அவமானமாகவும் இருக்கும். ஆனால் அதையெல்லாம் எதிர்கொண்டு, அதில் உள்ள நியாயமான விஷயங்களை ஏற்றுக்கொண்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். பெரும்பாலானோர் உண்மையான/நெகடிவ் விமர்சனங்களைச் சொல்வதில்லை. எனவே உண்மையைச் சொல்கிற சிலரையும் விரட்டிவிட்டு, என்ன செய்யப் போகிறீர்கள்?

பெரும்பாலான குறும்பட இயக்குநர்களுக்கு விஷுவலாக கதை சொல்வது எப்படி என்றே தெரிவதில்லை. ஐந்து நிமிடங்களுக்கு அசையாத கேமிரா, ரியாக்சன் ஷாட்டே இல்லாத எடிட்டிங் என கூச்சப்படாமல் புரட்சி செய்கிறார்கள். நல்ல கதை(?) கிடைத்தால், ஷூட்டிங் கிளம்பிவிடுகிறார்கள். நல்ல கதை என்பது வேறு, நல்ல குறும்படம் என்பது வேறு.


கற்றுக்கொள்வது என்பது, படிப்பதும் படித்ததை அப்ளை செய்து படமாக்கிப் பார்ப்பதும், அதில் செய்த தவறுகளை விமர்சனங்கள் மூலம் தெரிந்து திருத்திக்கொள்வதும் தான். கற்றுக்கொள்ள படமெடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே தவறையே திரும்பத் திரும்ப செய்வது சரியான அணுகுமுறை அல்ல. குறைந்தபட்சம் The Five C's of Cinematography -புக்கையாவது ஒருமுறை வாசிக்கலாம்!

ஷார்ட் ஃபிலிம் எடுத்தவுடனே மணிரத்னம் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணாமல், கொஞ்சம் நிலத்தில் கால் ஊன்றி விமர்சனங்களைக் கவனியுங்கள். ஒருவர் த்ரில்லர் படம் எடுத்து அனுப்பியிருந்தார். ‘த்ரில்லருக்கான அம்சங்களே இல்லையே’ என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் , ‘தெரியும் பாஸ், த்ரில்லர் எல்லோருக்கும் பிடிக்காது.இப்படி நெகடிவ் விமர்சனம் வரும்ன்னு தெரியும்’. என்னத்தச் சொல்ல!!!

இப்போதெல்லாம் நான் குறும்படங்களுக்கு பொதுவில் விமர்சனம் எழுதுவதில்லை, படைப்பாளியின் சாட்டில் போய் சொல்வதோடு சரி. சினிமாவுக்குக்கூட எழுத முடிகிறது. குறும்படங்களுக்கு..அய்யய்யோ! நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது.
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.