Wednesday, October 14, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 59


59. திரைக்கதை எழுதாமல் இருப்பது எப்படி?


கதைச் சுருக்கம் எனும் சினாப்ஸிஸ் எழுதிவிட்டீர்கள். இப்போது திரைக்கதை எழுத கை பரபரக்கும். " FADE IN....SCENE 1: INT.BEDROOM-NIGHT (!) " என்று எழுதிவிடலாமா? என்று மனது ஆசையைத் தூண்டும்..பலரும் செய்யும் அதே தவறைச் செய்யாதீர்கள்..கண்ட்ரோல்!

கதையை யோசித்தபோதே பல நல்ல சீன்கள் தோன்றியிருக்கும். உலக சினிமாவிலேயே வராத ஒரு கிளைமாக்ஸ்கூட சிக்கியிருக்கலாம்..செட்டப்பில் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் ரேஸ் சீன் வேறு. ’இதை எழுதாமல் இருப்பதா? உடனே எழுத ஆரம்பி’ என்று உள்மனது சொல்லும். ஆனாலும் நீங்கள் திரைக்கதை எழுத ஆரம்பிக்ககூடாது.

'Notes' என்ற பெயரில் ஒரு வேர்டு ஃபைல் ஓப்பன் செய்து, அதில் இந்த சீன்களை ஒரு வரி குறிப்பாக எழுதி வையுங்கள். உதாரணமாக 'ஹீரோயின் குதவளையை ஹீரோ கடிக்கிறான்' என்றோ 'மாமியார் தலையில் கல்லைப்போட்ட மருமகன்' என்றோ எழுதிக்கொள்ளுங்கள். அதன் டீடெய்ல் கண்றாவி நமக்கு மட்டும் புரிந்தால் போதும். ஒரு நினைவுக்குக் குறிப்பாக இவை இருக்கட்டும். இந்த சீன்கள் தானாகவே உங்கள் மனதில் பலமுறை ஓடும். இப்படி எழுதி வைத்தால், ஓட்டம் கொஞ்சம் மட்டுப்படும்!

ஏன் திரைக்கதை எழுதக்கூடாது?

நான் என் வலைப்பூவிற்காக சென்ற வாரம் ஒரு பதிவு எழுதினேன், 'வருமானவரியும் அயோக்கியர்களும்' என்று. வருமானவரி என்பதே எப்படிப்பட்ட அயோக்கியத்தனம், அது மிடில் கிளாஸ் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி, நசுக்கிறது என்பது கான்செப்ட். பொருளாதாரப் போராளியாக ஆறு பக்கங்களுக்கு மேல் பொங்கியபோது, புஸ்ஸ்க்! லேப்டாப் ஆஃப் ஆகிவிட்டது. லேப்டாப்பில் பவர் குறைந்ததைக்கூட கவனிக்காமல், பொங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். அய்யகோ, எழுதியதை 'சேவ்' பண்ணவும் இல்லை!

கோபம், ஏமாற்றம், ஆத்திரம், ரௌத்திரம், கவலை, கண்ணீர் என எல்லாமும் ஒருசேரத் தாக்க, ஓ!!!! அத்தனையும் மறுபடியும் எழுத வேண்டும் என்றால், ரொம்ப ரொம்பக் கஷ்டம். அதே போன்ற வாக்கியங்கள் அமையும் என்று கூடச் சொல்ல முடியாது. கதை, கட்டுரை எழுதும் எல்லோருமே இந்த அசம்பாவிதத்தை அனுபவித்திருப்பீர்கள். 'திரும்ப எழுதுவது' என்பதைவிடக் கொடுமையான விஷயம் வேறு இல்லை. அதே போன்ற இன்னொரு கொடுமையான விஷயம், திருத்தி எழுதுவது.

எழுதி முடித்ததில் ஒரு எழுத்தை மாற்ற வேண்டும் என்றாலும், உள்ளே இருக்கும் இலக்கியவாதிக்கு கடும் கோபமும் ஆற்றாமையும் வந்துவிடும். எழுதியதின் மேல் ஒரு பிடிப்பு நமக்கு வந்துவிடுகிறது. அதனால் தான் 'Rewrite is pain' என்று எல்லா திரைக்கதைப் புத்தகங்களும் சொல்கின்றன. 'நல்லாத் தானே இருக்கு? ஏன் மாற்றி எழுதணும்?' எனும் கேள்வி உள்ளிருந்து எழுந்து, நம்மை சோர்வடைய வைக்கும். முதன் முதலாக திரைக்கதை எழுதுவோர், தாண்டியாக வேண்டிய தடை இது. சில திரைக்கதைகள் எழுதியபின்பே, இந்த பிடிப்பு போகும்.

திரும்ப எழுதுதல் மட்டும் பிரச்சினை அல்ல. திரைக்கதை என்பது ஹீரோ கேரக்டர், கேடலிஸ்ட், ஹை கான்செப்ட் என பல செங்கற்கள் கொண்டு கட்டப்படும் கட்டடம். இரண்டாவது சீனில் வருகின்ற ஒரு விஷயம், 52வது சீனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஹீரோயினுக்கு இருக்கும் ஒரு குறை அல்லது திறமை, கிளைமாக்ஸிற்குக் காரணம் ஆகலாம். இந்த வகையான 'நட்டு வச்ச ரோஜாச்செடிகள்' பற்றிய தெளிவான ஐடியா நமக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், முக்கியமான ஒரே ஒரு செங்கலை திரும்ப எழுதும்போது உருவினால், திரைக்கதை மொத்தமும் விழுந்துவிடும்.

தயாரிப்பாளர் திடீரென 'அந்த 52வது சீன் வேண்டாம்ப்பா' என்று சொன்னால், 'அது இரண்டாவது சீனின் பே-ஆஃப்' என்று சொல்லி அவரை கன்வின்ஸ் செய்ய வேண்டிருக்கும். அல்லது 52 மட்டுமல்லாது 2வது சீனையும் மாற்ற வேண்டும். அதில் கோட்டை விட்டால், படம் பார்க்கும் ஆடியன்ஸ் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். 'லாஜிக் இல்லாத அரைவேக்காட்டுப் படம்' என்று மொத்த படத்தையும் அவர்கள் ஒதுக்கிவிடலாம்.

எனவே மனம் போன போக்கில், முதலிலேயே திரைக்கதையை எழுதிக்கொண்டு போனால் பெரும் சுழலில் சிக்கியது போல் ஆகும். ஏதாவது ஒரு மாறுதல் செய்ய வேண்டும் என்றால் பெரும் தலைவலியாகப் போய்விடும். "ஆக்ட்-2 மட்டும் சரியில்லாமல் இருக்கு. அதை மட்டும் மாத்திட்டேன்னா...' என்று சொல்லிக்கொண்டு, வருடக்கணக்கில் அதே ஸ்க்ரிப்ட்டுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும்.

கதைச்சுருக்கம் மற்றும் ஆக்ட் ப்ரேக்கில் தெளிவு தான் முதல் தேவை. அடுத்து குறைந்தது 40 சீன்கள் பற்றிய தெளிவான ஐடியா கிடைக்க வேண்டும். அதுவரை பொறுமை!

எனவே, இப்போது திரைக்கதை எழுதாதீர்கள். நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஆர்டர் இது:

  • ஒன்லைன் /ஹை கான்செப்ட்
  • கதைச்சுருக்கம்
  • பீட் ஷீட்
  • சீன் போர்டு
  • ஒன்லைன் ஆர்டர் / சீன் ஆர்டர்
  • திரைக்கதை - Rough Draft
  • திரைக்கதை - First Draft
  • திரைக்கதை - Rewrite (!)
  • திரைக்கதை - ஃபைனல்

இந்த ஒவ்வொரு ஸ்டெப்களிலும் போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். கதைச் சுருக்கம் எழுதிவிட்டீர்கள், இல்லையா? அதை மீண்டும் கையில் எடுங்கள்.

இந்த தொடரின் முதல் பாகத்தில் பல அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். கதை நாயகன், குறிக்கோள், வில்லன், லாஜிக், குணச்சித்திர வளைவு என எல்லாவற்றையும் உங்கள் கதைச் சுருக்கத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். புதிதாகத் தோன்றும் விஷயங்களை குறித்து வைக்கவும். அதற்கேற்ப மீண்டும் கதைச்சுருக்கத்தை திருத்தி எழுதுங்கள். அடிப்படையில் கதை வலுவாக இருக்கிறது எனும் நம்பிக்கை வந்த பின்பு அடுத்த ஸ்டெப்பிற்கு நகரலாம்.
-----------------------------

சினாப்ஸிஸ் என்ன ஃபார்மேட்டில் இருக்க வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அது பற்றி...

சினாப்ஸிஸ் என்பது வேலைக்காக நீங்கள் அனுப்பும் ரெசியூம் போன்றது. அது நன்றாக இருந்தால் தான் இண்டர்வியூவிற்கு அழைப்பு வருவது போல், ‘ஸ்க்ரிப்ட் அனுப்புங்க’ எனும் செய்தி வரும். இப்போதெல்லாம் பெரும்பாலான கம்பெனிகள் இதைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். முழு திரைக்கதை கேட்டு நேரத்தை வீணாக்குவதைவிட, இது பெட்டர் என்று நினைக்கிறார்கள். எனவே புரடியூசரைக் கவர்வது எப்படி எனும் நோக்கத்துடன் சினாப்ஸிஸ் எழுதப்பட வேண்டியது அவசியம்.

அதில் கீழ்க்கண்ட விஷயங்கள் இருப்பது அவசியம்:

1. தலைப்பு : படத்தின் தலைப்பையும் Synopsis By என்று உங்கள் பெயரையும் போட்டுக்கொள்ளுங்கள்.

2. அறிமுகம் : இது என்ன வகை ஜெனர், என்ன மாதிரியான கதை என்று ஓரிரு வரிகளில் சொல்லுங்கள்.

3. லாக் லைன் / ஒன் லைனர் : உங்கள் கதையின் ஒன் லைனை முடிந்தவரை சுருக்கமாக, நான்கு வரிகளுக்குள் இங்கே எழுதுங்கள். அடுத்து என்ன எனும் ஆர்வத்தை இது தூண்ட வேண்டியது அவசியம். http://sengovi.blogspot.com/2014/06/4.html (இந்த பகுதியில் இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.)

4.  கதை : ஹீரோ யார் என்பது பற்றிய சுருக்கத்துடன் ஆரம்பியுங்கள். அதில் இருந்து செட்டப் பற்றி சுருக்கமான விவரிப்பைக் கொடுத்து, கேட்டலிஸ்ட்/கீ இன்சிடெண்ட்டில் முடியுங்கள். கீ இன்சிடெண்ட்டைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லலாம். (ஆக்ட்-1)

சென்ற பகுதியில் பார்த்தது போல் பிரச்சினையையும் அதன் விளைவையும் சொல்லுங்கள். (ஆக்ட்-2)

ஹீரோ ஏன் அதைத் தீர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் என்று சொல்லுங்கள். (மிட் பாயிண்ட்)

எப்படி ஹீரோ அந்த பிரச்சினையைத் தீர்த்து வெளியே வருகிறான் என்று கூடுதல் விவரங்களுடன் சொல்லுங்கள். (ஆக்ட்-3)

இதில் ஹை-கான்செப்ட்டையும் சொல்ல வேண்டியது அவசியம். அது தான் உங்கள் கதையை புதுமையாக காட்டும்.
மிகவும் தேவைப்பட்டால் ஒழிய, வ்சனங்களை இதில் சொல்லாதீர்கள்.

கதையை படர்க்கை-ஒருமை (அதாங்க..Third Person Singular!)-ல் சொல்லுங்கள்.

இதைப் படித்தால், ‘நல்ல கான்செப்ட்..ஸ்க்ரிப்ட்டில் எப்படி எழுதியிருப்பார்’ என்று படிப்பவர் யோசிக்க வேண்டும். அப்படி இது இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே சொன்னபடி, திரைக்கதை எழுதி முடித்தபின் தான் கதைச் சுருக்கத்தை சரியாக எழுத முடியும். எனவே இப்போது ஒரு ஆரம்ப நிலை கதைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

(தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.