Sunday, October 11, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 58


பகுதி 58 : திரைக்கதைக்காக ஒரு கதை

’புக் படிச்சா, திரைக்கதை எழுதிடலாமா? ஏன்யா இப்படி ஊரை ஏமாத்துறீங்க?’
- உலகத்தில் யார் திரைக்கதை பற்றி எழுதினாலும், இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை எதிர்கொள்ளாமல் தப்பிக்க முடியாது; நான் உட்பட. அறியாமையால் எழுகிற, நியாயமான கேள்வி அது.


அந்தக் கேள்வியின் பொருள், கதை எழுதுவதை எப்படி சொல்லித் தர முடியும் என்பதே! கதை எழுதுவது என்பது முழுக்க, முழுக்க படைப்புத்திறன் சார்ந்த, கற்பனையும் சிந்தனையும் கலந்த ஒரு காரியம். ஒரு சூழ்நிலையில் எப்படி சிந்தித்து, கதையை எந்தத் திசையில் திருப்ப வேண்டும் என்று எப்படி சொல்லித் தருவது இயலாத காரியம்.

தமிழில் சுஜாதா, ஜெயமோகன் போன்றோர் இதுபற்றி கொஞ்சம் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் நூல்களே கிடைக்கின்றன. எல்லோரும் கதை வடிவம் என்பதைத் தான் விவரிப்பார்களே ஒழிய, கதையை ‘எழுதுவது’ என்பதற்குள் ஓரளவுக்கு மேல் போக மாட்டார்கள்.
ஒரு தற்கொலை நிகழ்கிறது. இந்த ஒரு சம்பவத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வளர்த்தெடுக்கலாம். தற்கொலையின் காரணம் பற்றிய த்ரில்லராக கொண்டு செல்லலாம். அல்லது, தற்கொலையால் ஏற்படும் இழப்பு பற்றிய செண்டிமெண்ட் டிராமாவாக கொண்டு செல்லலாம். அல்லது, மரணம் என்றால் என்ன என்று தத்துவத்தில் மூழ்கலாம். இது எல்லாமே உங்களில் சிந்திக்கும் திறன் சார்ந்த விஷயம். 

சிந்திக்கும் திறன் என்பது நீங்கள் வளர்ந்த சூழல், வாழ்க்கை அனுபவங்கள், கல்வி(பள்ளி/கல்லூரிக்கல்வி அல்ல!) போன்ற விஷயங்களால் உருவாகி வருவது. எனவே நீங்கள் யோசிப்பது போல் நானும், என்னைப் போல் நீங்களும் யோசித்துவிட முடியாது.
எனவே தான் ஒரே ஒன்லைனைக் கொண்டு பல படங்கள் வருகின்றன. சென்ற கட்டுரையில் சொன்னபடி, நீங்களும் சில ஒன்லைன்களை எழுதியிருப்பீர்கள். அவை போன்ற கதைகள் ஏற்கனவே வந்திருக்கும். கவலை வேண்டாம், யாரும் சொல்லாத கதை என்று இங்கே ஏதுமில்லை. யாரும் சொல்லாத முறை தான் இன்னும் இங்கே உண்டு,அது தான் திரைக்கதை!
ஒரு கதையை சிறுகதையாகவோ, குறுநாவலாகவோ அல்லது நாவலாகவோ எழுதும் சுதந்திரம் கதாசிரியருக்கு உண்டு. ஹீரோவின் பிறப்பு முதல் இன்றைய நிலைவரை நூறு பக்கங்களுக்கு விவரித்துவிட்டு, பிறகு நிதானமாக மேட்டருக்கு வரலாம். நாவல் நன்றாக இருந்தால், இருநூறு பேர் படிப்பார்கள். இல்லையென்றால், நூறு பேர் படிப்பார்கள். பெரிய நட்டமில்லை! எனவே நம் இஷ்டம் தான். 

பக்கங்களை மாற்றி, மாற்றி வைத்து பைண்டிங் செய்து வெளியிட்டால், பின்நவீனத்துவம் என்று நம்பிவிடுவார்கள். ’கிறுக்குப்பய’ என்று சொல்லவே அஞ்சுவார்கள், தானும் அறிவுஜீவி முகமூடியுடன் ‘இதெல்லாம் ஈஸியா புரியாது. மறுபடி படிங்க, புது உலகம் விரியும்’ என்று மிரட்டுவார்கள். கதை எனும் வடிவத்தில் இப்படி பல அனுகூலங்கள் உண்டு. வணிக சினிமாவில் அதற்கு இடமே கிடையாது, குப்பை என்றால் குப்பை தான். 


’கதை எழுதுவதெல்லாம் தவம் மாதிரி’ என்று கேள்விப்பட்டே வளர்ந்த மனிதர்களுக்கு, ’திடீரென திரைக்கதை எழுதுவது எப்படி?’ எனும் தலைப்பே அதிர்ச்சியைக் கொடுக்கும். 

திரைக்கதை என்பது திரைவடிவத்திற்கு கதையை மாற்றுவது. எனவே திரைக்கதை எழுதுவது எப்படி என்பது கதையை எப்படி திரைவடிவத்திற்குள் கொண்டு வரலாம் என்று தான் சொல்கிறதே ஒழிய, கதை எழுதுவது எப்படி என்று அல்ல! உங்களுக்கு கதை எழுதுவதற்கான கற்பனாசக்தி இல்லையென்றால், இந்தத் தொடர் படித்து நீங்கள் கதை எழுத முடியாது. ஆனால் நல்ல ஒரு கதையை வாங்கி, அதை திரைக்கதையாக மாற்ற இத்தகைய தொடர்களும் புத்தகங்களும் உதவும்.
ஒரு கதையை 600 பக்கங்களுக்குக்கூட நீங்கள் எழுதலாம். ஆனால் திரைக்கதை 120 பக்கங்களுக்கு மேல் போனால், தயாரிப்பாளர் யோசிப்பார். திரைக்கதை பேப்பரிலேயே இருக்க வேண்டியது தான். எனவே ஒன்லைனுக்கு அடுத்த நிலையான, கதை எழுதுவது எப்படி என்று எதுவும் இங்கே சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் எழுதிய கதை, திரைக்கதைக்கு ஏற்றதா என்று தெரிந்துகொள்ள, இதில் வந்த/வருகின்ற விஷயங்கள் உதவும்.


சென்ற பகுதியில் பார்த்த ஒன்லைன்கள் உங்கள் மனதிற்குள் சில காலம் ஓடிக்கொண்டே இருக்கட்டும். அதில் சில மட்டும், கதையாக உருப்பெறும். ஒருவேளை உங்களிடம் ஒன்லைனுக்குப் பதிலாக, ஒரு கதையே திடீரென தோன்றியிருக்கலாம். அந்தக் கதையில் நான்கு விஷயங்கள் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்:
1. ஹீரோ அல்லது ஹீரோயின் : சுருக்கமாக கதையின் நாயகர். ’யார் அவன், என்ன வேலை செய்கிறான், எப்படிப்பட்டவன், குடும்பச் சூழல் என்ன?’ போன்ற அடிப்படை
விஷயங்கள் உங்கள் கதையில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
2. பிரச்சினை: அப்படி இயல்பாக இருக்கும் அவன் வாழ்வில், ஏதோவொரு பிரச்சினை வருகிறது. அது என்ன?

3. விளைவு: அந்தப் பிரச்சினை ஹீரோவை எப்படிப் பாதிக்கிறது? அதற்கு அவனது ரியாக்சன் என்ன?

4. ஆபத்து : அந்த பிரச்சினையை தீர்க்கவில்லையென்றால், என்ன ஆகும்?

5. முடிவு : பிரச்சினை எப்படித் தீர்கிறது? கதையின் முடிவு என்ன?


உங்கள் கதை நான்கு பக்கமாகவும் இருக்கலாம் அல்லது நானூறு பக்கங்களாகவும் இருக்கலாம்.அதில் இந்த ஐந்து விஷயங்கள் இல்லையன்றால், கதையை மாற்றுங்கள். கதையே உங்களிடம் இல்லை, ஒன்லைன் தான் இருக்கிறது என்றால் இன்னும் நல்லது.


ஒன்லைனில் ஒரு கேரக்டர்(#1) உங்களுக்கு தோன்றியிருக்கலாம். அதற்கு ஒரு பிரச்சினையை உண்டாக்குங்கள். அல்லது, ஒரு பிரச்சினை சிக்கியிருக்கலாம். அதற்கு ஏற்ற ஒரு கேரக்டரை உண்டாக்குங்கள். சிலர் அதிசயமாக கிளைமாக்ஸில் இருந்து, ரிவர்ஸில் கதையை உண்டாக்குவர். இந்த ஐந்து புள்ளிகளில், ஒன்றில் இருந்து மற்றவற்றை யோசித்துப் பிடித்துவிடலாம்.


ஒன்லைனுக்கு அடுத்த படியாக, நீங்கள் எழுதிவைக்க வேண்டிய அடுத்த விஷயம் : கதைச் சுருக்கம் எனப்படும் சினாப்ஸிஸ்.
ஒரு பக்கம் முதல் நான்கு பக்கங்களுக்குள் இது எழுதப்பட வேண்டும். சீன்களோ, வசனங்களோ அவசியமில்லை. மேலே குறிப்பிட்ட ஐந்து விஷயங்களை சற்று விவரித்து எழுதினாலே போதும். இது மறைமுகமாக திரைக்கதை வடிவத்தைச் சொல்லும். அதாவது,
ஆக்ட்-1 - செட்டப் : ஹீரோவும் அவன் சுற்றுச்சூழலும் (#1)

கேட்டலிஸ்ட்/கீ இன்சிடெண்ட்: ஹீரோவின் இயல்பு வாழ்வைக் கலைத்துப்போடும் ஒரு சம்பவமும், வில்லனும் (#2)

ஆக்ட்-2: அந்த சம்பவம், ஹீரோவையும் சுற்றி இருப்போரையும் எப்படிப் பாதிக்கிறது?

மிட் பாயிண்ட் : ’பிரச்சினையைத் தீர்த்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை, இனி அதைத் தீர்க்காமல் பழைய வாழ்க்கைக்கு திரும்பிப்போக முடியாது’ எனும் நிலை ஏற்படுவது. (#4)

ஆக்ட்-3: முடிவு : பிரச்சினை எப்படி தீர்க்கப்படுகிறது? கிளைமாக்ஸ். (#5)
ஐந்து புள்ளிகளை வைத்து, கதை எனும் அழகான ஒரு கோலத்தைப் போடுங்கள்.

இந்த ஐந்து விஷயங்களில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்துகொள்ளலாம். திரைக்கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டும் விஷயம், முரண்பாடு தான்.

ஒரு பிரச்சினையில் ஹீரோ சிக்குகிறான் என்றால், அந்தப் பிரச்சினையும் ஹீரோ யார் என்பதும் முரண்பாட்டையும் சிக்கலையும் கூட்டுவதாக இருக்க வேண்டும். போலீஸ் உடன் ஒரு பிரச்சினையில் சிக்கும் இளைஞன், போலீஸ் வேலையில் சேர வேண்டும் எனும் கனவுடன் இருப்பவன் (தில்) - எனும் உதாரணத்தை முன்பே பார்த்திருக்கிறோம்.

மேலே உள்ள ஐந்து அடிப்படை விஷயங்களும், முடிந்தவரை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு நிற்க வேண்டும். அது தான் அடுத்து என்ன எனும் சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்.

ஒரு அழகான, வசதியான ஹீரோவுக்கு அழகான, வசதியான ஹீரோ மேல் காதல் என்பதில் என்ன சுவாரஸ்யம் வந்துவிட முடியும்? ஒரு கிராமத்து அப்பாவி அல்லது இருவருக்கும் குணநலன் வெவ்வேறு என்று ஆக்கும்போது தான், கதை சுவராஸ்யம் ஆகும். 'மோதல்..பிறகு காதல் - என்னய்யா இது, இதே கதை தானா?' என்று படங்களுக்கு வரும் விமர்சனத்தை நம்பாதீர்கள். மோதல்/முரண்பாடு இல்லாமல் ஒரு கதையை அவர்களிடம் சொன்னால், அவர்களே 'ஒன்னும் சுவாரஸ்யமா இல்லையே!' என்பார்கள்.


இப்போது ஒரு ஒன்லைனை எடுத்துக்கொள்வோம்:

'தீவிரவாதிகள் நாட்டில் குண்டுவைக்கிறார்கள். ஹீரோ அதை தடுத்து நிறுத்தி, அவர்களை அழிக்கிறான்.'



விஜயகாந்த், அர்ஜூன் என பலரும் அடித்துத் துவைத்த ஒன்லைன் தான். பரவாயில்லை, இருக்கட்டும்.

1. ஹீரோ : சாமானியன் அல்லது போலீஸ். எது சரியாக இருக்கும்? நாம் அட்வென்ச்சர் கதையையே எடுத்துக்கொள்வோம். எனவே, ஹீரோ ஒரு போலீஸ்.

2. தீவிரவாதிகள் குண்டு வைக்கிறார்கள். வைக்கிறார்களா? வைக்கப் போகிறார்களா? முதலில் சிறியதாக ஒன்று வைக்கிறார்கள். ஹீரோவுக்கு தெரிய வருகிறது. பெரிய அளவில் குண்டுகள் வைக்கும் முன் தடுக்க வேண்டும். ம்ஹூம்..எதற்கு சிறியதாக வைக்க வேண்டும்? டெஸ்ட் பண்ணிப் பார்க்கவா? அப்படிப் பார்த்தால், போலீஸிற்கு தெரிந்துவிடாதா?..ஓகே, தவறுதலாக குண்டு வெடிக்கிறது. அது ஹீரோவின் கவனத்திற்கு வருகிறது. பெரிய அளவில் குண்டு வெடிக்கும் முன், ஹீரோ தடுத்து நிறுத்த வேண்டும். அந்த கும்பலையும் பிடிக்க வேண்டும். குறிக்கோள் சிக்கிவிட்டது.

ஹீரோ ஒரு போலீஸ். குண்டுவெடிப்பைத் தடுப்பது அவன் கடமை. இதில் என்ன முரண்பாடு? போலீஸ் உயரதிகாரிகளும் அரசியல்வாதிகளும் குண்டுவெடிப்பில் உடந்தை? ம்ஹூம்..ரொம்பப் பழசு. ஹீரோ கேரக்டரை சாமானியன்னு வைக்கலாமா? ரொம்ப சப்பையா இருக்கே? (இப்போது டேபிளில் ஓங்கிக் குத்துவது, சுவரில் நங்கு நங்கென்று முட்டுவது போன்ற செயல்களைச் செய்யவும்!!) ஆங், ஆர்மி.



போலீஸ்க்குப் பதிலாக, ராணுவ வீரன். 'தீவிரவாதிகளை அழிக்கும் ராணுவ வீரன்'. அய்யய்யோ, இது ரஜினி நடித்த ராணுவ வீரன் படத்தின் ஒன்லைன் ஆச்சே...ஙே!



ரஜினி அதில் வீ.ஆர்.எஸ்ஸில் வருவார் என்று ஞாபகம். இதில் ஹீரோ லீவில் வருவதாக வைப்போம். அதில் என்ன சுவாரஸ்யம்?

நாட்டிற்குள் ஒரு தவறு நடந்தால், அதைத் தடுத்து தண்டிக்கும் அதிகாரம் ஆர்மிமேனுக்கு கிடையாது. அவன் தப்பு செய்பவர்களைப் பிடித்து, போலீஸில் தான் ஒப்படைக்க வேண்டும். போலீஸ் அவர்களை பிரியாணி போட்டு, வழியனுப்பி வைக்கும்.



எனவே போலீஸ் உதவி இல்லாமல் ஹீரோ போராட வேண்டும். அதே சமயத்தில், இது ஒரு இல்லீகல் நடவடிக்கை. ஜெயித்தால்கூட, வெளியில் சொல்ல முடியாது. அமைதியாக இருந்தாக வேண்டும். விஷயம் வெளியில் தெரிந்தால், வேலையும் உயிரும் போகலாம். ஹீரோ உயிரைப் பணயம் வைத்து, ஒரு பிரச்சினையைத் தீர்த்து மக்களைக் காப்பாற்றுகிறான். ஆனால் அது மக்களுக்குக்கூட தெரியாது..தியாகம்..செம பாயின்ட்.

இப்போது #1.ஹீரோ பகுதியை அப்டேட் செய்துகொள்ளலாம். இனி, லீவில் வரும் மிலிட்டரி ஹீரோ - அவனுக்கு காதல் அல்லது கல்யாணம் - தீவிரவாதிகளின் திட்டம் என கதையை டெவலப் செய்துவிடலாம். ஒரு ஹை-கான்செப்ட் (ஸ்லீப்பர் செல்) மட்டும் சிக்கிவிட்டால், "துப்பாக்கி"யைப் பிடித்துவிடலாம்!

அம்புட்டுத்தேன்!

நீங்கள் என்ன ஜெனரில் திரைக்கதை எழுதப்போகிறீர்களோ, அதே போன்ற ஐந்து வெற்றிப் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மேலே சொன்ன ஐந்து விஷயங்களும் அதில் எப்படி சொல்லப்பட்டுள்ளது என்று பாருங்கள். இம்மாதிரி ஸ்டடி செய்வது, உங்கள் கதையை கூர்மையாக்க உதவும்.  (உணர்ச்சிவசப்பட்டு, அப்படியே சுட்டுவிடாதீர்கள்.!!) அந்தக் கதையில் வரும் ஐந்து அடிப்படை விஷயங்கள், ஆடியன்ஸை எப்படி ரசிக்க வைத்தது என்பதே இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

இங்கே, கதை என்பது திரைக்கதை முடியும்வரை மாறிக்கொண்டே இருக்கும். பாதி திரைக்கதையை யோசித்த பின் தான், ஹீரோ ஒரு போலீஸ் என்று வைத்தது தவறு என்று தெரிய வரலாம். முதல் விஷயத்தை மாற்ற வேண்டியிருக்கும். நாம் ஏற்கனவே சொன்னபடி, திரைக்கதை எழுதுவதில் எல்லாமே டிரையல் & எரர் மெத்தட் தான். ஒரு தேர்ந்த மெக்கானிக் மாதிரி, ஐந்து பாகங்களில் எதையும் கழற்றி வீசவும், புதியதைப் பொருத்தவும் தயாராக இருங்கள்.


இப்போது நீங்கள் உடனே எழுத வேண்டியது, நான்கு பக்கங்களுக்குள் ஒரு கதைச் சுருக்கம். 
(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.