Tuesday, October 20, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 60

60. Beat It..Beat It.

ஒன்லைனில் ஆரம்பித்து, ஒரு கதைச்சுருக்கத்தை எழுதிவிட்டீர்கள். எல்லாக் கதைகளும் சுவாரஸ்யமான சினிமாவாக ஆகிவிடாது. சில கதைகள் இலக்கியத்திற்கு மட்டுமே சரிவரும், சில கதைகள் டிவி சீரியலுக்கு மட்டுமே பொருந்தும். வணிக சினிமாவிற்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்குமா என்று சரிபார்க்க உதவுவது, ப்ளேக் ஸ்னிடரின் இந்த பீட் ஷீட்.

'படம் சுவாரஸ்யமாகவே இல்லை, ரொம்ப ஃப்ளாட்டா மூவ் ஆகுது,முதல்பாதி சுமார்' என்றெல்லாம் ஒரு படத்தைப் பார்க்கும்போது ஆடியன்ஸிற்குத் தோன்றுகிறது. ஏனென்றால், ஒரு படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு ஆடியன்ஸ் மனதில் இருக்கிறது. அது என்ன என்று கேட்டால் 'நல்லா இருக்கணும்' என்பதைத் தாண்டி அவர்களால் சொல்ல முடியாது.

அதைத்தான் ப்ளேக் ஸ்னிடர் வெற்றி பெற்ற படங்களை வைத்து, ஆராய்ந்தார். ஆடியன்ஸின் உள்மனது, திரைக்கதை வடிவத்தில் ஒரு தாள லயத்தை எதிர்பார்ப்பதைக் கண்டுணர்ந்தார். இதை 'வடிவ க்ளிஷே' என்று சொல்லலாம். 'செட்டப்பில் இருந்து ஆக்ட்-2வுக்கு ஒரு கதை நகர வேண்டும் என்றால், அதற்கு ஒரு கேடலிஸ்ட் சம்பவம் தேவை. அந்த சீன் வந்தால்தான் ஆடியன்ஸ் திருப்தியாகி, ஆக்ட்-2விற்கு தயாராவார்கள். ஆக்ட்-2 முடிந்து,  ஆல் இஸ் லாஸ்ட் சீனில் ஹீரோ கீழே விழுந்து எழுந்தால் தான் ஆக்ட்-3 விறுவிறுப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்கும்.' போன்றவற்றை சிட் ஃபீல்டை அடியொற்றி அவர் டெவலப் செய்தார். இதைப் பற்றி விரிவாக நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

ஒரு உதாரணத்திற்காக, கதைச்சுருக்க நிலையில் துப்பாக்கி படத்தின் பீ ஷீட் எப்படி இருந்திருக்கும் என்று பார்ப்போம். ஏற்கனவே துப்பாக்கி படத்தில் வந்த சீன்களுக்கு பீட் ஷீட் நான் எழுதியிருக்கிறேன். அந்த சீன்களை டெவலப் செய்யும் முன், பீட் ஷீட் கீழே வருவது போல் இருந்திருக்கலாம் :



துப்பாக்கி - Beat Sheet

1. Opening Scene :

படத்தின் டொன், மூடு, ஜெனர் என்னவகையாக இருக்கலாம் என்று ஒரு குறிப்பை ஆடியன்ஸிற்குத் தருவது ஓப்பனிங் சீன். படத்தின் கான்செப்ட் என்ன என்றும் சில படங்கள் சொல்லும்.

// ஹீரோ ஒரு ராணுவ வீரன். லீவில் ஊருக்கு வந்துகொண்டிருக்கிறான். ரயில்வே ஸ்டேசனில் அவன் குடும்பம் அவனுக்காக காத்திருக்கிறது//


2. Theme stated:

படத்தின் தீம் அல்லது கான்செப்ட் பற்றி ஒரு வசனமோ அல்லது கேள்வியோ ஏதோ ஒரு கேரக்டரால் பேசப்படும்.

//லீவில் வரும்போதெல்லாம் நியாயத்தை நிலைநாட்டுகிறேன் என்று ஏதாவது வம்பில் மாட்டுகிறாய். இந்தமுறையாவது ஒழுங்காக இரு - இப்படி ஒரு வசனத்தை

அம்மா/அப்பா/நண்பன் யாராவது சொல்லட்டும்//

3. Set-Up:

படத்தின் முக்கிய கேரக்டர்களும், ஹீரோவைப் பற்றிய விபரங்களும் இதில் சொல்லப்படும்.

//ஹீரோ ஒரு ராணுவ வீரன். அம்மா-அப்பா-தங்கை என அழகான குடும்பம். ஹீரோவுக்கு கல்யாண ஏற்பாடு. ஹீரோயினைப் பெண் பார்க்கிறார்கள்.//

4. Catalyst:

Call for Adventure..இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் ஹீரோ வாழ்வில், ஒரு கீ இன்சிடென்ட் நடக்கிறது. அது ஹீரோவின் இயல்பு வாழ்க்கையை கலைத்துப் போடுகிறது.

// ஒரு பஸ்ஸில் பாம் ப்ளாஸ்ட் நடக்கிறது. ஹீரோ, பாம் வைத்த தீவிரவாதியைப் பிடிக்கிறான்.//

5. Debate:

'நாங்கள்லாம் பிரச்சினையைப் போர்த்திக்கிட்டு தூங்குறவங்க' என வலிய பொதுப் பிரச்சினையைத் தேடிப் போகும் ஹீரோக்களை மக்கள் ரசிப்பதில்லை. கொஞ்சம் அறிவுள்ள மனிதனாக(!), ஹீரோ அதில் இறங்க தயக்கம் காட்ட வேண்டும். சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஹீரோ அதில் இறங்க ஒரு நிமிடமாவது யோசிக்க வேண்டும்.

// ஹீரோ தீவிரவாதியை போலீஸில் ஒப்படைக்கிறான். ஆனாலும் ஹீரோ போலீஸை முழுக்க நம்பவில்லை. //

6. Break Inti Act-2 (ப்ளாட் பாயிண்ட்):

இயல்பான பழைய உலகத்தை விட்டு, புது உலகத்திற்குள் ஹீரோ நுழையும் நேரம் இது. அந்த முடிவை ஹீரோவே எடுப்பது தான் நன்றாக எடுபடும். (எச்சரிக்கை: சில கதைகளில் மிட் பாயிண்ட்டில் தான் இந்த ப்ளாட் பாயிண்ட் வரும். அதுவரை ஹீரோவை பிரச்சினைக்கு உள்ளே இழுக்கும் விஷயங்கள் தான் நடக்கும்.)

//தீவிரவாதி தப்பிக்கிறான். ஹீரோ அவனைக் கடத்தி தன் கஸ்டடியில் வைக்கிறான்.//

7. பி ஸ்டோரி:

பெரும்பாலும் காதல் கதை. 4,5,6வது பீட்ஸ் கொஞ்சம் டென்சனாகவே போய்விட்டதால் ஆடியன்ஸைக் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் இடம் இது. (தமிழில் இந்த பி ஸ்டோரி படம் முழுக்க விரவி வரும்!)

//ஹீரோயினைப் பெண் பார்க்க ஹீரோ போனான். அதில் ஏதோ பிரச்சினை. ஹீரோயின் பின்னால் ஹீரோ அலைகிறான் அல்லது தலைகீழாகவும் இருக்கலாம்//


8. Fun & Games:

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் மோதல். இதை ஏன் கேம் என்கிறோம் என்றால், ஹீரோ நினைத்தால் இதிலிருந்து பின்வாங்கிவிட முடியும்; இன்னும் நிலைமை மோசம் ஆகிவிடவில்லை. மேலும், இதில் காமெடி சீன்களையும் வைக்கலாம்.

// ஹீரோ 12 ஸ்லீப்பர் செல்களை ஒரே நேரத்தில் போட்டுத்தள்ளும் ஹை-கான்செப்ட் //

9. Mid Point:

ஹீரோ வில்லனுக்கு எதிராக ஏதோ செய்து தற்காலிக வெற்றி அடைந்திருக்கிறான். இப்போது வில்லன் ஹீரோ மேல் கடும் கோபத்தில் இருப்பான். எனவே ஹீரோ இனி ஒதுங்கினாலும், வில்லன் விட மாட்டான். சமாதானத்திற்கான எல்லா வழிகளும் அடையும் இடம் இது.

// ஹீரோவும் வில்லனும் சவால் விட்டு பேசிக்கொள்ளுதல்...ஐ ஆம் வெயிட்டிங்! //

10. Bad Guys Close In:
Bad Guys என்பது கெட்ட ஆட்களாக மட்டுமின்றி கெட்ட சம்பவமாகவும் இருக்கலாம். வில்லன் அல்லது விதி தன் பதிலடியை ஆரம்பிக்கும் இடம் இது. பெரும்பாலும் ஹீரோவைச் சுற்றி இருப்போருக்கு ஏற்படும் பாதிப்பு இங்கே காட்டப்படும். அது ஹீரோவுக்கு ஒரு வார்னிங்காக அமையும். ஆனாலும் ஹீரோவை ஆல் இஸ் லாஸ்ட்டை நோக்கி, இதில் வரும் சம்பவங்கள் தள்ளும்.

// வில்லன் ஏதோ ஒரு க்ளூ மூலம், ஹீரோவின் நண்பர்களை கண்டுபிடித்தல்..ஹீரோ அதைத் தடுக்க முடியாமல் திணறுதல். //

11. All is Lost:

ஹீரோவுக்கு சாதகமான எல்லா அம்சங்களும் கைநழுவிப் போன சுழ்நிலை. மிட் பாயிண்ட்டிற்கு நேரெதிரான இடம் இது. இங்கே வில்லனுக்கு வெற்றி. இது ஒரு நிமிடமாகக்கூட இருக்கலாம்.

// வில்லன் ஹீரோவின் ஒரு நண்பனைக் கொல்கிறான். தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அனைவரையும் கொல்வேன் என்கிறான். ஹீரோ அடிபணிதல் //

12. Dark Night of the Soul:
All is Lost ஹீரோவுக்கு கொடுத்த விளைவு & ஃபீலிங் என்ன என்று காட்டும் இடம். மிகவும் மோசமான நிலையில் ஹீரோ இருக்க வேண்டும், இனி என்ன செய்வான் என்று ஆடியன்ஸும் சேர்ந்து ஃபீல் செய்தால், வெற்றி நமதே!

// ஹீரோ வில்லன் சொல்லும் இடத்திற்கு வர ஒப்புக்கொள்கிறான்.//

13. Break Into Act-3:

ஹீரோவுக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது. அது ஏற்கனவே வந்த ஆக்ட்-1 & ஆக்ட்-2 சம்பவங்களில் இருந்து வந்தால் நம்பும்படியாகவும் எஃபக்ட்டாகவும் நட்டு வச்ச ரோஜாச் செடியாகவும் இருக்கும். 

// ஹீரோ ஆர்மியில் இருக்கும் ஏதோ ஒரு குரூப்பின் உதவியை நாடுகிறான். அவர்கள் ஹீரோவைவிட பவர்ஃபுல்லாக இருந்தால், ஹீரோ கேரக்டர் அடிவாங்கி விடும். எனவே.........யோசிக்க வேண்டும்! //

14. Finale:
ஹீரோ தன் பதிலடியை புத்திசாலித்தனமாகத் தரும் இடம் இது. இனியும் வில்லனை விட்டுவைக்காமல், ஹீரோ ஒழித்துக்கட்டும் நேரம் இது. வில்லன் இல்லாத படங்களில் ஈகோ போன்ற மோசமான குணம் அல்லது கெட்ட சூழ்நிலையை விட்டு ஒழிப்பது நடக்கும்.

//ஹீரோ புதிதாகக் கிடைத்த ஐடியாவின்படியும் கதைச்சுருக்கத்தில் முடிவு செய்திருந்தபடியும் தன்னையே தியாகம் செய்ய தயாராகிறான். ஆனாலும் அட்வென்ச்சர் ஹீரோ என்பதால், ஜெயிக்க வேண்டும். தன் புத்திசாலித்தனத்தால் ஜெயிக்கிறான். (ஜெனரின் உபயோகம் இது தான்!!) //

15. Final Image:
முதல் ஓப்பனிங் சீனிற்கு நேரெதிர் சீன். குணச்சித்திர வளைவு கொண்ட கதை என்றால், ஹீரோவின் மனமாற்றத்தை இந்த சீன் காட்ட வேண்டும்.

//அதே ரயில்வே ஸ்டேசன்...ஹீரோ லீவ் முடிந்து ஊருக்கு கிளம்புகிறான்.//

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மேலே உள்ள பீட் ஷீட்டைக் கவனித்தால், சில பீட்களுக்கு சீனே உருவாகவில்லை என்று தெரியும். அவற்றை எல்லாம் இனிமேல் தான் உருவாக்க வேண்டும். சத்யன் கேரக்டரோ, ஜெயராம் கேரக்டரோ மேலே உருவாகவே இல்லை என்பதைக் கவனியுங்கள். ஹீரோயின் கேரக்டரும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை என்பதும் இன்னும் தெளிவாகவில்லை. ஆனாலும் கதைச்சுருக்கம், பெரும்பாலான பீட்ஸை சரியாகத் தொட்டு நிற்கிறது.

உங்கள் கதையையும் இப்படி பீட் ஷீட்டில் போட்டுப்பாருங்கள். ஒரு திரைக்கதை வடிவத்திற்குத் தேவையான ஏற்ற, இறக்கங்களுடன் ப்ளேக் ஸ்னிடர் சொன்ன தாள லயத்துடன் இருக்கிறதா என்று பாருங்கள். எல்லா பீட்ஸும் இல்லாவிட்டாலும், பெரும்பாலும் இருக்க வேண்டியது அவசியம். ஒன்றிரண்டு மிஸ் ஆகலாம். ஆனாலும் அதையும் சேர்க்க முடியுமா என்று பாருங்கள். அதையும் சேர்த்துவிட்டீர்கள் என்றால், இதில் இருந்து குறைந்தது 30 சீன்களாவது உருவாக்க முடியும்.

அப்படியென்றால் மீதி?

சீன்கள் எழுதுவது எப்படி என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.