Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்...20மேல்முறையீடுக்குப் போய் என்னய்யா செய்யப் போறீங்க? அதான் எல்லாக் கணக்கும் க்ளியரா இருக்கே...
1991ல் பதவியேற்கும்போது, சொத்து மதிப்பு = 2.1 கோடி
1991-1996 வருமானம் -மாதம் ஒரு ரூபாய் (1*12*5)=60 ரூபாய்
மொத்தம் = 2.1+60= 62.1 கோடி
1996ல் சொத்துமதிப்பு = 66 கோடி
அதிகம் = 66-62.1= 3.90 ரூபாய்.
அபிஷ்டு..அபிஷ்டு...வெறும் மூணு ரூபாய் 90 பைசா பிரச்சினைக்கா இவ்ளோ தூரம் வந்தேள்?
# சுப்ரீம் நாட்டாமை
---------------
என்கிட்டே பத்தாயிரம் ரூபாய் இருக்கு. ஏதாவது இன்வெஸ்ட் பண்ணலாம்ன்னு 'எம்.பி.' படித்து, ஃபினான்ஸில் பெரும் அனுபவம் உள்ள நண்பரிடம் ஐடியா கேட்டேன். 'ஷேர் மார்க்கெட்ல போடுங்க. எப்படியும் வருசம் 14% வருமானம் வரும். எந்த பேங்க்லயும் இவ்வளவு இன்டரஸ்ட் கிடைக்காது' என்றார்.
பிறகு ஊரில் படிக்காமல் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு நண்பனிடம் இதைச் சொன்னேன். அதற்கு அவன் சொன்னான்: 'மாப்ளை, பத்தாயிரம் ரூபாய்க்கு குறைஞ்சது மூணு ஆட்டுக்குட்டி வாங்கலாம். அது எட்டு மாசத்துல ஆவரேஜா இரண்டு குட்டி போடும். இப்போ மொத்தம் மூணு ஆடு, ஆறு குட்டி. அடுத்த எட்டு மாசத்தில் மூணு ஆடும் இன்னொரு ஆறு குட்டி போட்டிடும். இப்போ முதல்ல பிறந்த ஆறு குட்டிகளும் சினைக்கு ரெடியாகியிருக்கும். இப்போ உன் கையில் ஒன்பது ஆடும், ஆறு குட்டியும் இருக்கும். எனக்கு பெர்சன்டேசு கணக்கு எல்லாம் தெரியாதுப்பா. உன் படிச்ச பிரெண்ட்கிட்டெயே கோட்டுக்கோ'ன்னு சொல்லிட்டான்!
நான் எம்.பி.. ஃப்ரெண்ட்கிட்டே ஒன்னும் கேட்கலை. ஏன்னா, அநியாயமா அவர் தற்கொலைக்கு நாம காரணம் ஆகிடக்கூடாது, இல்லீங்களா!!!
-----------------------------------
'மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பீங்க..புது வளர்ச்சித்திட்டங்களைக் கொண்டு வருவீங்க..கொஞ்சமாவது பெட்டரா இருக்கும்'ன்னு நம்பித்தானே ஆயிரம் ரூபா வாங்கிக்கிட்டு உங்களுக்கு ஓட்டுப் போட்டோம்..இப்படி ஏமாத்திட்டீங்களேம்மா!
செல்லாது...செல்லாது..அடுத்த தேர்தல்ல ஓட்டுப் போட, அஞ்சாயிரத்துக்கு அஞ்சு பைசா குறைஞ்சாலும் ஒத்துக்க மாட்டோம்...ஒத்துக்கவே மாட்டோம்!!!
- மகாஜனம்.
------------------------------------
// மே 21- ஜெயலலிதா சிலைகளின் பீடத்திற்கு கீழே இருந்த படங்களுக்குதான் மலர் தூவினார். படம் அமைக்கப்பட்ட இடத்தில் ரோட்டை அடைத்து கூரை போட்டிருந்தார்கள். ஆனாலும் பக்கவாட்டு வழியாக வெயில் கொஞ்சம் எட்டி பார்த்ததால் அதுவும் ஜெயலலிதா மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கூடாரத்துக்குள்ளேயே குடை பிடித்தது போலீஸ்.- இந்த வார ஜூனியர் விகடன் //
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே வெயில் மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. விரைவிலேயே அரபுநாடுகள் போன்றே தமிழகமும் ஆகிவிடுமோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. பெரியவர்களான நம்மாலேயே இந்த வெயிலைத் தாங்க முடியவில்லை எனும்போது, குழந்தைகளை இந்த வெயிலில் பள்ளிக்கு வரவழைப்பது என்பது கொடுமையான விஷயம்.
அரபு நாடுகளில் கோடைகாலமான ஜூன், ஜீலை, ஆகஸ்ட் மூன்று மாதமும் பள்ளிகளுக்கு விடுமுறை தான். எனவே நாமும் இத்தகைய முறையைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பது நல்லது. தேவைப்பட்டால் காலாண்டு/அரையாண்டு விடுமுறைகளைக்கூட குறைத்துக்கொள்ளலாம்.
எனவே தமிழக அரசு, எப்படி மாநில முதல்வரை வெயில் படாமல் பூ போல் பாதுகாக்கிறதோ, அதே போன்றே எம் வீட்டுப் பிள்ளைகளையும் பாதுகாக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கறோம் சாமியோவ்!!!!!!!!
-------------------------------------
புறம்போக்கு படத்திற்கு விமர்சனம் எழுதவில்லையே என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். வேண்டுமென்றே தான், அந்தப் படத்தைத் தவிர்க்கிறேன். இங்கே ஒருநாள் தாமதமாகத்தான் படம் ரிலீஸ் ஆகியது. அதற்குள் நெட்டில் விமர்சனங்கள் வந்துவிட்டன. அதில் நான் புரிந்துகொண்டது, இந்தப் படம் இரு விஷயங்களை ஆதரிக்கிறது:
1. நக்ஸலைட்களின் வன்முறைப் பாதை
2, மரண தண்டனைகளை விலக்குவது.
தனிப்பட்டரீதியில் இந்த இரண்டுக்குமே எதிரானவன் நான். எனவே இந்தப் படத்தைப் பார்த்து, உடலைப் புண்ணாக்கிக்கொள்ள நான் தயாரில்லை!
ஒரு பக்கம் நக்ஸலைட்கள் செய்யும் கொலையை நியாயப்ப்டுத்திக்கொண்டே, இன்னொரு பக்கம் 'மரண தண்டனை கூடாது' என்று கருணைமழை பொழிவது தான் போலி முற்போக்குவாதம். அதை இந்தப் படமும் செவ்வனே செய்திருப்பதாக அறிகிறேன்.
கமர்சியல் குப்பைகளுக்கு நடுவே இது போன்ற நல்ல படங்களை ஆதரிக்க வேண்டாமா எனும் அறச்சீற்றங்களையும் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை, கமர்சியல் படங்களைவிட, இத்தகைய போலி புரட்சிவாதம் பேசும் படங்களே அதிக ஆபத்தானவை...டாட்!
--------------------------
ஒரு பக்கம் மீசையை முறுக்கிக்கிட்டு, மானம்-மருவாதின்னு டயலாக் பேசுறாங்க. அவனுகளே இன்னொரு பக்கம் பொத்துப் பொத்துன்னு கால்ல விழுறானுக. இந்த ஆண்ட பரம்பரை அட்ராசிட்டியைப் புரிஞ்சிக்கவே முடியலியே!!!!!!!!!!!!!
-------------------------------------
நம்முடைய பொருளாதரச் சிக்கல்களுக்கு மூல காரணமே நமக்கு பொருளாதாரம் பற்றி எதுவுமே சொல்லித் தரப்படாதது தான். நம்மில் பலருக்கும் காலேஜ் முடியும்வரை, பணம் என்பது அப்பா பாக்கெட்டில் காய்க்கின்ற விஷயமாகவே இருந்துவருகிறது.
பிள்ளைகளின் சந்தோசத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பெற்றோரும், பொருளாதாரப் பிரச்சினைகளை குழந்தைகள் முன் பேசுவதேயில்லை. பள்ளியில் நீதி போதனை வகுப்புகளே இல்லாமல் போய்விட்ட சூழலில், பெர்சனல் ஃபினான்ஸ் பற்றியெல்லாம் அங்கே எதிர்பார்க்க முடியாது.
இப்படிஉலகம் தெரியாமல்வளர்ந்துவிட்டு, பிறகு திடீரென உண்மையான உலகத்தில் தூக்கி போடப்படும்போது முதலில் நமக்கு அதிர்ச்சியே ஏற்படுகிறது. நம்மில் பெரும்பாலானோருக்கு பொருளாதார அறிவு புகட்டிய புண்ணியவான்கள் யார் என்றால், நம்மிடம் கடன் வாங்கி நம்மை ஏமாற்றியவர்கள் தான். முதல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து, குறைந்தது ஒரு நபரிடமாவது ஏமாறாதவர்கள் சொற்பமே!
வேலைக்குப் போறோம்-சம்பாதிக்கிறோம்-செலவளிக்கிறோம்-திரும்ப வேலைக்குப் போறோம்எனும் இந்த எலி ஓட்டம் பற்றி முதலில் எனக்கு விழிப்புணர்வு ஊட்டியது Rich Dad - Poor Dad புத்தகம் தான்...27 வயதில்!
எனவே குழந்தைகளுக்கு கொஞ்சம், கொஞ்சமாக பணம் பற்றியும், அதுவரும் வழிமுறைகள் பற்றியும், முக்கியமாக அது போகும் வழிகள் பற்றியும் கற்றுத்தருவது அவசியம்.
அதை என் மகன் பாலாவிற்கு இப்போதிருந்தே செய்துவருகிறோம். தனியே ஒரு உண்டியல் வாங்கிக்கொடுத்து, சேமிப்பிலும் இறங்கிவிட்டான். (சமீபத்தில் நேபாள பூகம்ப நிதிக்கு பள்ளியில் நிவாரண நிதி வசூலித்தபோது, எங்கள் பங்கு பணத்துடன் அவன் உண்டியலில் இருந்தும் காசு கொடுத்துஇதையும் கொடுங்க..நானும் கொடுக்கணும்என்றபோது உண்மையில் பெருமைப்பட்டோம்!)
ஆனாலும் அவ்வப்போது நம்மை அதிர வைப்பதும் அவன் வழக்கம். வேலை, சம்பளம், செலவு, சேமிப்பு பற்றி நாங்கள் பேசுவதைக் கவனித்துவிட்டு, தீவிர யோசனைக்குப் பின் கேட்டான் : ‘எதுக்கு இவ்வளவு கஷ்டம்..ஒரு பேப்பரை எடுத்து ரூபாய் மாதிரியே வரைஞ்சு கடையில் கொடுத்தால் போதாதா?’
அடேய்..அதுக்குப் பேர் கள்ள நோட்டுட்டா!’ என்று பதறிச் சிரித்தோம்!
இன்று தன் ஆறாம் வயதில் அடியெடுத்து வைக்கும் பால முருகனுக்கு, உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி..
------------------------
//இந்தியாவின் அரசியல் அகராதியில் இருந்து ஊழலை நீக்கிவிட்டோம் - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி//
அந்த சூப்பர் கால்குலேட்டர் உதவியுடன் தானே...???
------------------------------
சகாப்தம் - A Sucide Point.

ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஒரு ஹீரோ, தன் மகனை இப்படி ஒரு படத்தில் களமிறக்குவார் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
வீராசாமிக்குப் பிறகு ரசித்துப் பார்த்த திரைப்படம் இது. முரட்டுத்தனமான முட்டாள்தனமும், முட்டாள்தனமான வெறித்தனமும் கொண்ட ஒருவரால் தான் இப்படி ஒரு படைப்பைப் படைக்க முடியும்.
ஹீரோவின் நடிப்பை விட நம்மை அதிகம் கவர்ந்தது அவரது காஸ்ட்யூம் தான். பிச்சைக்காரர்களை மையப்படுத்தி வந்த நான் கடவுள் படத்தில்கூட இப்படி ஒரு பொருத்தமான காஸ்ட்யூம் வந்ததில்லை. கோவில் கோவிலாகச் சென்று, கள் ஆய்வு செய்து தான் இப்படி ஹீரோவுக்கு காஸ்ட்யூம்ஸை வடிவமைத்திருக்க வேண்டும். ஹீரோ சம்மூ உடனடியாக ஒரு நல்ல டைரக்டரைப் பிடிக்க வேண்டும். அதற்கும் முன் உடம்பை இன்னும் பாதியாகக் குறைக்க வேண்டும். கொஞ்சம் தட்டி, நெளித்துச் சரி செய்தால் ஆக்சன் ஹீரோவாக வலம் வரலாம்!
ஹீரோயின்கள் இருவருமே அட்சரசுத்தமாக தமிழ் பேசுவது கொள்ளை அழகு. லிப் சின்க் என்றால் ஃப்ரெஞ்ச் கிஸ் மட்டுமே என்று உணர்ந்த இயக்குநரால்தான் இப்படிப் பேச வைக்க முடியும். வாய் ஒரு பக்கமும், வார்த்தை ஒரு பக்கமும் கோணிக்கொண்டு செல்ல, தமிழே நாணுகிறது.
திரைக்கதையிலும் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார்கள். 'அத்துவிட்ட காளை' என்பதற்கிணங்க, குறிக்கோளே இல்லாதவராக ஹீரோவைப் படைத்து பல திரைக்கதை விதிகளை உடைத்து, மேய்ந்திருக்கிறார்கள். அடிப்படைத் தேவையே இல்லாமல் மலேசியா கிளம்பிப் போகிறார், திடீரென சி..டி.சகுந்தலா..சாரி, சி..டி சங்கர் ஆகிறார். திடீரென ரஞ்சித்தைப் பார்க்கிறார். எல்லாமே திடீர் தான்..தற்செயல் தான். ஒரு ஆக்சன் ஹீரோவை இப்படிப் படைக்க, செம தில் வேண்டும்.
இந்தப் படத்தில் பணியாற்றிய கதாசிரியர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின்ஸ் அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நீங்க கூட இந்தப் படத்தைப் பார்த்திராதீங்க. இருக்கிற கொஞ்சநஞ்ச தன்னம்பிக்கையும் இழந்துடுவீங்க.
எத்தனை குறைகள் இருந்தாலும் இந்தப் படத்தினை டெலீட் செய்யாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வேண்டாத விருந்தாளி வரும்போது, தெறித்து ஓட வைக்க யூஸ் ஆகும்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.